Sunday 5 January 2020

யவன ராணி



                           யவன ராணி - சாண்டில்யன் 



சிறு வயதில் சாண்டில்யன் எழுதிய கடல் ராணி படித்து விட்டு, அவர் எழுதிய மற்ற நாவல்களையும் வாசிக்க நினைத்ததுண்டு. ஏன் சரித்திர கதைகளை எழுதுவதில் சிறந்தவர் கல்கியா அல்லது சாண்டில்யனா என எனது சகோதரர்களிடம் தர்க்கம் கூடச் செய்திருக்கிறேன். மீண்டும் அவரின் ஒரு நாவலை வாசிக்கலாம் என்று எண்ணிய போது எதைத் தேர்ந்தெடுக்க எனக் குழப்பம். மன்னன் மகள், கடல் புறா எனப் போய் கடைசியில் யவன ராணியைத் தேர்ந்தெடுத்தேன். 1960'ல் குமுதம் வாரஇதழில் தொடராக வந்த இரண்டு பாகங்களைக் கொண்ட பெரிய நாவல். 

யவனர்களின் (கிரேக்கர்கள்) ஆட்சியைத் தமிழ் நாட்டில் அமைக்க அவர்களில் போர் தலைவன் டைபீரியஸ் உதவியுடன் புகார் துறைமுகத்துக்கு வருகிறாள் யவன ராணி. மரக்கலம் தீப்பற்றியதால் கரையோரம்  மயக்க நிலையில் கிடக்கும் அவளைக் கதையின் நாயகன் படை உபதலைவன் இளஞ்செழியன் தூக்கிச் செல்கிறான்.  மயக்கம் தெளியும் ராணி அவன் மீது காதல் கொள்கிறாள். இளஞ்செழியனோ தன் முறைப்பெண்  பூவழகி மீது காதல் வயப்பட்டு பிறகு ஏற்பட்ட ஊடலால் அவளை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் யவன ராணி மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு (தடுமாற்றம்)  ஏற்படுகிறது. 

டைபீரியஸ் தமிழ்நாட்டில் நுழையும் நேரத்தில் இளங்கோவேள் என்பவன் சோழ மன்னன் இளஞ்சேட்சென்னியை கொன்றும், இளவரசன் திருமாவளவனைக் கைது செய்தும்  தான் மன்னனாகிறான். இந்த அரசியல் சதுரங்கத்தில் புகாரை ஆட்சி செய்யும் உரிமையை இளங்கோவேளிடமிருந்து பெறும் டைபீரியஸ் அதற்கு ராணியாக யவன ராணிக்கு முடிசூட்ட முயற்சி செய்கிறான். யவன ராணியோ  இளஞ்செழியன் மீது கொண்ட காதலால் அதற்கு உடன்பட மறுக்கிறாள். வஞ்சத்தால் இருவரையும் பிரிக்கும் டைபீரியஸ், இளஞ்செழியனுக்கு விஷம் கொடுத்து யவன நாடு செல்லும் கப்பலில் அனுப்பி விடுகிறான்.

அந்த பயணத்தில் பற்பல அனுபவங்களைப் பெறும் இளஞ்செழியன், அலீமா என்ற பெண்ணின் உதவியோடு தப்பித்து மீண்டும் தமிழ்நாடு திரும்ப முயற்சி செய்கிறான். இதனிடையே இளங்கோவேள், திருமாவளவனைத் தீயிட்டுக் கொல்ல முயற்சி செய்ய அதிலிருந்து காலில் காயங்களோடு தப்பிக்கிறான். காலில் ஏற்பட்ட தீக்காயம் காலை கருப்பாக்கி விட பூவழகியால் கரிகாலன் எனப் பெயர் பெறுகிறார். தமிழ் நாடு திரும்பும் இளஞ்செழியன், கரிகாலனோடு சேர்ந்து இளங்கோவேள் சேர, பாண்டியர்களின் பெரும்படையை தன் வியூகங்களால் எவ்வாறு   முறியடிக்கிறான்.  பின் யவன ராணி உதவியோடு எப்படி  டைபீரியசை வீழ்த்துகிறான்?  யவன ராணி, பூவழகி யாரை மனம் முடித்தான் என்பதுதான் நாவலின் முடிவு.. 


நாவல் முழுவதும் யவன ராணி என வருகிறதே தவிர அவளில் இயற்பெயர்  எங்கேயும் ஆசிரியரால் குறிப்பிடப்படவில்லை. சாண்டில்யன் நாவலுக்கே உரியப்  பெண்கள் மீதான வர்ணனைகள் நாவல் முழுவதும் நிரம்பி உள்ளது. அதுவும் யவன ராணி பற்றிய வர்ணனைகளைப் படிக்கும்போது எதாவது கால இயந்திர கடிகாரம் கிடைத்தால் உடனே சோழ நாட்டுக்குச் சென்று யவன ராணியைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று தோன்றியது. துறவி பிரம்மனந்தர், இளஞ்செழியனுடனே பயணிக்கும் யவன வீரன் ஹிப்பாலஸ், சோழ ராணி ஆகும் அல்லி என சில கதாபாத்திரங்கள்  கதையின் ஓட்டத்தைத் தீர்மானித்தாலும் இளஞ்செழியனின் ஹீரோயிசம் அவர்களை மறைத்து விடுகிறது. 


MGR திரைப்படங்களின் கதைகளுக்கு சாண்டில்யனின் நாவல்களும் ஊன்றுகோலாக இருந்திருக்கலாம். கதாநாயகனே  அனுமான்ய வீரன் எந்த சூழ்நிலைகளையும் தனியாகச் சமாளிப்பவன். பல அழகான பெண்கள் அவன் மீது ஆசை கொள்வதும் பின்பு  அதில் சிலரை தன் சகோதரி ஆக்கிக்கொள்வது என. தற்போதைய அஜித் திரைப்படங்களிலும் யவன ராணியின் பாதிப்பு உள்ளது. உப படைத்தலைவன் இளஞ்செழியனை, மற்ற கதாபாத்திரங்கள் உயர்த்தி (buildup) அவ்வப்போது பேசுவது. 😎

இறுதியாக :

சாண்டில்யன் மீது பொதுவாக ஒரு கருத்து உண்டு கதையினை வளவள என்று பக்கம் பக்கமாக எழுதுவார் என. என்னால் அதனை இந்த நாவலை வாசிக்கும் போது உணர முடிந்தது. இருபது வருடங்களுக்கு முன்பு வாசித்திருந்தால் அப்போது யவன ராணி நாவல் என்னை மிகவும் கவர்ந்திருக்கலாம்.