Wednesday 31 January 2024

நமக்கு நாமே 🚴🏃🚶‍♂️

 

                                          🏃 நமக்கு நாமே சவால் 🚴 


     உடலினை உறுதி செய்ய சிறிது நாள்களாக உடற்பயிற்சிகளை செய்கிறோம், சில போட்டிகளிலும் சென்று பங்கேற்கிறோம் அடுத்து என்ன? இந்த கேள்வி என் மனதில் தோன்றிய பொழுதுதான் உடலினை உறுதி செய் குழுவின் 100 நாட்கள் சவால் என் கண்ணில் பட்டது. இதுபோல் நாமும் நமக்கு நாமே ஒரு சவாலை ஏற்படுத்தி, அதனைச் செயல்படுத்தினால்  எப்படி இருக்கும். அடுத்த மாதம் முழுவதும் அதாவது ஜனவரி.2024'ல் அனைத்து நாட்களும், சைக்கிள் ஓட்டம், ஓட்டம் அல்லது நடை அப்படி என ஏதாவது ஒன்றைத் தினமும் செய்யவேண்டும். நடை, ஓட்டம் என்றால் 5 கிலோமீட்டர்களுக்குக்  குறையாமலும், சைக்கிள் ஓட்டமெனில் 40 கிலோமீட்டர்களுக்குக்  குறையாமலும் செய்ய வேண்டும் மேலும் மொத்தமாக 1000 கிலோமீட்டர்களுக்கு மேல் முடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். 


                முதல் நாளே வந்தது சோதனை.. பள்ளி நண்பர்கள்  மற்றும் அவர்களது  குடும்பத்தினரோடு சேர்ந்து புத்தாண்டை வரவேற்கக் குற்றாலத்தில் ரிசார்ட் போட்டாச்சு. டிசம்பர் 31- அன்று குளியலில் போட்ட ஆட்டத்தில் இடதுகால் சுண்டுவிரல் நகம் பெயர்ந்து ஒரே ரத்தம். ஹாஸ்பிடல் போய் TT எல்லாம் போட்டும், விரலை கட்டி விட்டார்கள். அது மட்டுமா? புத்தாண்டின் கொண்டாட்டங்கள் முடிந்து தூங்கவே மணி 3 (காலை) ஆகி விட்டது.  நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்த ஷூ எல்லாம் குற்றாலத்திற்குக் கொண்டு போயிருந்தேன். காலையில் ஆறு மணிக்கு எழுந்து ஓடலாம் என்று பார்த்தால் ஷூவுக்குள் இடது கால் போக மாட்டேங்குது. இது என்னடா சோதனை என்று சுண்டுவிரல் கட்டை அவிழ்த்து ஷூவுக்குள் பஞ்சு  எல்லாம் வைத்து மாட்டினேன். அருகிலிருந்த நண்பன் பயம் காட்டினான்  "டேய் இன்று ஒரு நாள் ஓட ஆசைப்பட்டு மீதி 364 நாள்கள் ஓட  முடியாமல் போய் விடப் போகிறது". ஆனாலும் நான் விடவில்லை செங்கோட்டையையே சுற்றி 7 கிலோமீட்டர் ஓடி முடித்தேன். ஷூக்குள் ரத்தம். முதல் நாளே ரத்தம் காட்டியாயிற்று இனி எல்லாமே  சுகம்தான் என்ற நம்பிக்கையோடு முதல்நாள் முடிந்தது.  

  அடுத்த மூன்று நாட்கள் சுமுகமாகப் போனதைத்  தடுக்க வந்தது அடுத்த செய்தி. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை பார்க்கப் போகவேண்டும். நாகர்கோவிலிருந்து ஆறுமுகநேரி போக வேண்டும். நமது சைக்கிளிலே  போய்விட்டால் என்ன? 110 கிலோமீட்டர்தானே. அதனைச் செயல்படுத்த சிவராமன் சாரிடம் கேட்க, அவரும் சம்மதித்தார். ஒரு பையில் துணிகளைப் போட்டுக் கொண்டு கிளம்பியாச்சு. வள்ளியூர் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது ஜெயசுதன் எங்களை தூரத்திப் பிடித்தது மறக்க முடியாதது. சிவராமன் சார் திருச்செந்தூரிலிருந்து அன்றே திரும்பி விட, நான் இரண்டு நாட்கள் கழித்து ஆறுமுகநேரியிலிருந்து சைக்கிளிலே நாகர்கோவில் கிளம்பினேன். 

          காலையிலே பொங்கல் விட வேண்டும் இன்று எங்கும் போகக் கூடாது என்று வீட்டுகாரம்மா  கறாராகச் சொல்லிவிட, யாரால் தான் மீற முடியும். ஆனாலும் ஆசை விடவில்லை சிவராமன் சாரை வரச்சொல்லிச் சாப்பிட்ட பொங்கல் செரிக்கச் சாயங்காலம் ஒரு ரைட் போய் விட்டோம். அதிகாலையில்  செய்த ஓட்டம் மற்றும் சைக்கிள் பயிற்சி வேலையைக் காட்டத் தொடங்கியது. சளி, இருமல் மற்றும் காய்சல்.. அது கொடுத்த உடல் வலியினை பொறுத்துக் கொண்டே பயிற்சிகளைத் தொடர்ந்தேன். இடையினில் ஒருநாள் அலுவலக பணி மற்றும் சொந்த வேலைகளின் காரணமாகக் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் நேரம் அமையவில்லை. விடாது கருப்பு என்று அன்றுதான் முதல் முறையாக இரவு ஓட்டம். வாகன நெரிசல் இல்லாத சாலையில் (தெருவிளக்கு) வெளிச்சம் இல்லை. இவன் யாருடா புதுசா என நாய்கள் என்னையே முறைத்துப் பார்த்தது வேறு வயிற்றினை கலங்கச் செய்தது. வித்தை காட்டும் இரு சக்கர வாகன ஓட்டிகளினிடையே எப்படியோ 10 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்தேன். 

        
      குடியரசு தினச் சிறப்பு நிகழச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தி
ல் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களுக்கும் ஒரு சைக்கிள் பயணம் அதுவும் சீதாராமன் தம்பதியினர் வழியெங்கும் அன்போடு கொடுத்த பானங்கள் மற்றும் பலகாரங்கள் இந்த பயணத்தை இதயத்தில் இடம்பெற செய்தது. சென்னையிலிருந்து வந்த குழுவினரோடு இரண்டு நாட்கள் சைக்கிள் பயணம், ஒரு அரை மாரத்தான் ஓட்டம், வேகமான 50 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டம், ஒரு நாளாவது காலையில் நிம்மதியாக தூங்க விடுகிறீர்களா - போன்ற வீட்டுகாரம்மாவின் முணுமுணுப்புக்கிடையே வாலானது விடாமுயற்சியால் நிறைவை நோக்கி நெகிழ்சியாய் நகர்ந்தது. அதற்குள் அதிர்ச்சி தரும் மற்றொரு அறிவிப்பு  50 நாள் சவால்.... 31 நாட்களுக்கே முக்கிக் கொண்டிருக்க.. 50 நாளா.. இருந்தாலும் ஆசை யாரைவிட்டது. உடலினை உறுதி செய் குழுவின் சவாலில் கலந்தது கொள்ளும் என் ஆர்வத்தைப் பதிவு செய்தேன்..  இறுதியில் இந்த  (ஜனவரி-2024) மாதத்தில் மொத்தம் 1330 கிலோமீட்டர்கள்.  நமக்கு நாமே சவாலைச் சிறப்பாக நிறைவு செய்தேன். இதனை சிறப்பாக முடிக்க உதவிய சிவராமன் சார், ஜெயசுதன் மற்றும் என் தொல்லையெல்லாம் பொறுத்துக் கொண்ட வீட்டுகாரம்மாவுக்கும் நன்றிகள் பல. 🤝

 🚴சைக்கிள் ஓட்டம் :  நாள் 14 -  தூரம் 1159 கிலோமீட்டர்கள். 

 🏃ஓட்டம் :  நாள் 10 -  தூரம் 116  கிலோமீட்டர்கள். 

 🚶‍♂️நடை    :  நாள் 7  -  தூரம்  52 கிலோமீட்டர்கள். 

இறுதியாக:

                நமக்கு நாமே சவாலை ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கினாலும், டிசம்பர் 16 முதலே தினமும் ஏதாவது ஒரு பயிற்சியைச் மேற்கொண்டுதான் வருகிறேன். பார்ப்போம் அது எதுவரை தொடர்கிறது என .. 😍  

Thursday 16 March 2023

நினைவினுள் தங்கியவன் - ஆனந்தராஜ்


                          நினைவினுள்  தங்கியவன்  - ஆனந்தராஜ் 



          நள்ளிரவில்  அலறிய செல்போனை எடுத்துப்  பேசிய பின் எனது இதயம் ஒரு நிமிடம் செயலிழந்து போய்விட்டது. அவனது மனைவியைத் தவிர வேறு யார் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன். மரணம் மட்டுமே இந்த பூலோக வாழ்வில் நிதர்சனமானது   என்று அறிவுக்குத் தெரிந்திருந்தாலும் உணர்வுகளின் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது போன்ற உணர்வினை சில வருடங்களுக்கு முன்பு எனது சித்தியின் மரணச்செய்தித் தந்திருந்தது. அதன்பின் வெறுமையான ஒரு வேதனையைக் கொடுத்த மரணம் நண்பன் ஆனந்தராஜின்  செய்திதான்.  நண்பா, உன்னுடன் பழகிய நாட்கள், நட்பில் நனைந்த நிமிடங்கள் என்றும்  எங்கள் இதயத்தில்  நிறைந்திருக்கும். நீ எங்களை விட்டுச் செல்லவில்லை, எங்கள் நினைவுகளில் தங்கிவிட்டாய். 

             பள்ளி காலத்தில் தொடங்கிய நட்பு ....  நிலையாய் என்றும் நிலைக்கும் என்று நினைத்த நட்பு..  ஆனால் பள்ளிப் படிப்பின் இறுதியில்  நாம் பிரிந்து சென்றோம். உடலால் மட்டும், மனதால் அல்ல... அது டெக்னாலஜி காலம் அல்ல, அப்பொழுது யாரின் வீட்டிலும் தொலைப்பேசி இணைப்பே கிடையாது. பருவங்கள் பல கடந்தது நாம் அனைவரும் மீண்டும் சந்தித்த பொழுது அதே உற்சாகம், அன்பு, குதூகலம்... நாம் மாறவில்லை, நமது மனம், நட்பு  மாறவில்லை. நமது நட்பைப் பார்த்து பலரும் வியந்தார்கள். பள்ளியில் படிக்கும் பொழுது எப்பொழுதும் முதலில்தான் இருக்க வேண்டும் என்ற வெறி, வேகம் படிப்பில் தெரியும். ஆனால் இதிலுமா நண்பா நீ முதலில்... 


                 நெஞ்சு அடைக்கிறது நண்பா, மாரடைப்பால் மரணிக்கும் வயதா உனக்கு, நீ அடைந்த வேதனையை உன் குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டாயே.. கடவுள் கயவானி விட்டானா??.. உன்னை எங்களிடமிருந்து பிரிக்க, உனது அன்பான குடும்பத்தை விட்டு உன்னை அழைத்துச்  செல்ல.. நண்பா நாம் சந்தித்தால், பேசினால் சிரிக்க மட்டுமே தெரிந்த உதடுகளை இன்று சிணுங்கச் செய்து விட்டாய். Smule ஆஃப்பில் நீ பாடி அனுப்பும் பாடல்களுக்கு மதிப்பெண்கள் அளித்து நாங்களும் ஜட்ஜ் ஆகியிருந்தோம். எங்களை பதவியிறக்கம் செய்ய உனக்கு எப்படியடா மனம் வந்தது. கள்ளமில்லா உன் முகத்தைப் பெட்டியிலே பார்த்த பொழுது உன் நினைவுகளின் நெருடல் நெருஞ்சியாய் தைத்தது. எழுந்து வா நண்பா.. நீ ஒருமுறை மரணித்தாய் ஆனால் இனி உன் நினைவுகள் வரும் பொழுதெல்லாம், நாங்கள் ஒவ்வொரு முறையும் மரணிப்போமே.. 

        அடே நண்பா, நிழல்போல் இருந்தவன், இன்று நினைவாய் மாறினாய்... கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர்த் துளியாக்கினாய்.. இதயங்கள் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய, எங்களைத் தவிக்கவிட்டு எங்கேடா நீ மட்டும் பயணமானாய்??. அன்பைப்  பகிர்ந்திருக்கிறோம்.. அறிவைப் பகிர்ந்திருக்கிறோம்.., உணவைப் பகிர்ந்திருக்கிறோம்.., இன்பத்தைப் பகிர்ந்திருக்கிறோம்.., துன்பத்தைப் பகிர்ந்திருக்கிறோம்.., மறந்தது விட்டாயா?? மரணப்படுக்கையை மட்டும்??... டேய்  நீ எங்கும் போகவில்லை, எங்கள் இதயத்தில் வாழ்கிறாய்.

இறுதியாக:

    ஆனந்த்,  நீ மடிந்தது போகவில்லை, எங்களது மனத்தில் படிந்து போயிருக்கிறாய்.  நீ மண்ணில் புதைக்கப் படவில்லை... எங்கள் மனத்தில் விதைக்கப் பட்டிருக்கிறாய்... என்றாவது ஒருநாள் எங்கோ ஓரிடத்தில் நாம் மீண்டும் சந்தித்துக் கொள்வோம்... நமது நட்புக்கு என்றும் மரணமில்லை.....


Sunday 11 December 2022

சொ. க - 3. பயணங்கள் தொடங்கியது...

 

                              பயணங்கள் தொடங்கியது...


             

        என்னையே நான் கிள்ளிப்பார்த்துக் கொள்ளுகிறேன். மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தேன்.  உண்மையிலே முடித்து விட்டேனா? கனவா? அல்லது நிஜமா? இந்த பயணம் எப்படி, எவ்வாறு தொடங்கியது..  

    வாட்ஸாப் குழுவில்  இந்த மிதிவண்டி பயணத்தைப் பற்றிய தகவல் வந்த பொழுது அதனை நான்   பெரிதாக எடுத்துக் கொள்ளவேயில்லை. நாம் எப்படியும் போகப்  போவதில்லை. போகாத பயணத்தைப்  பற்றி ஏன் யோசிக்க வேண்டும்?. ஒருநாள் சிவராமன் சாரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது 400 கிலோமீட்டர்ஸ் ரைட் போக வேண்டும், கூட சேர்ந்து போகச்  ஒருசிலரிடம் கேட்டிருப்பதாகக்  கூறினார்கள். நானும் சிலரின் பெயர்களைச்  சிபாரிசு செய்தேன். சில நாட்கள் கழித்து சிவராமன் சார், யாரும் செட் ஆகவில்லை, நாம் சேர்ந்து போகலாமா என்று கேட்டார்கள். நானூறு கிலோமீட்டரா?. நானா?? அதிர்ச்சி அடையாத குறைதான்.. இதுவரை 135 கிலோமீட்டர் தான் ஒருநாளின்  அதிகபட்ச தூரமே. என்னால் எப்படி? 

                       சில மாற்றங்கள் நம்மை அறியாமலே எப்படியோ, எங்கேயோ நடந்துவிடுகிறது. முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று தலைதூக்கிய நப்பாசை, ஓகே சொல்ல வைத்துவிட்டது. பயணத்திட்டத்தை வகுத்து சிவராமன் சாருக்கும், ஜெயசுதனுக்கும் அனுப்பி வைத்தேன். இரண்டாம் நாள் வழியில் பல ஏற்ற இறக்கச் சாலைகள் இருப்பதால் முதல்நாளில் முடிந்த வரை நிறையத்  தூரம் ஓட்டும் வகையிலும், சிவராம் சாரின் ஆசைக்காக  மதிய உணவு பாவூர்சத்திரம் சந்தை கடையில் சாப்பிடும் படியும் அமைத்தேன். இதனிடையே கங்காதரன் சாரும் பயணத்தில் கலந்து கொள்ள மிகவும் ஆசைப்பட்டார்கள், ஆனால் சில காரணங்களால் கடைசியில் நேரத்தில் வரமுடியாமல் போனாலும் பயணத்திற்கான பலச் சிறந்த  ஆலோசனைகளை அளித்தார்கள்.

                       திட்டமிட்ட நேரத்திற்கு ஒரு நிமிடம் முன்னாலே பயணம் அருமையாகத் தொடங்கிய பயணத்தை வருணபகவான்  சில இடங்களில் இளைப்பாற வைத்தார். கங்காதரன் சாரும் போன் செய்து பயணம் வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்களைத்  தெரிவித்தார்கள். கல்லிடைக்குறிச்சி வழியாக முதலில் மணிமுத்தாறு அணையைச் சென்றடைந்தோம். அங்கிருந்து அணையை ஒட்டியே பயணம் செய்து பாபநாசம் சென்றோம். பாபநாசத்திலிருந்து தொடங்கிய பயணத்தில் கடையத்தைத்  தாண்டி, பாவூர்சத்திரம் வரும் வரை அது ரோடு அல்ல.. ரோடு மாதிரி அதனால் ரோடு வண்டி வைத்திருந்த நம்ம ஜெயசுதன் படாதபாடு பட்டுவிட்டார். பயணத்தின் ஒரு (முக்கிய) நோக்கமான சந்தை கடை மட்டன் சாப்பாட்டை ஒரு பிடிப் பிடித்தோம். உண்ட மயக்கம் மற்றும் வருண பகவானின் ஜாலத்தால்  ஒரு மணித்துளிகள் ஓய்வு எடுத்தோம்.  ஓய்வு எங்கப்பா  எடுத்தோம் ஜூஸ் குடிக்க நடக்க வைத்து விட்டீர்களே என்பார் சுதன். 

                                      மட்டன் சாப்பாட்டைச் சாப்பிட்ட பின் நம்ம சிவராமன் சாரின் வண்டி எங்கேயும் நிற்கவே மாட்டேங்குது. மட்டன் சாப்பாட்டுக்கு அவ்வளவு பவரா?..  எப்படி இப்படிப் போகிறது???  அப்புறம்தான் தெரிந்தது வண்டியில் பிரேக் வேலை செய்யவில்லை. இந்த சமதள ரோட்டிலே இப்படியெனில் நாளைக்குத் தென்மலையில், சாரை பிடிக்கவே முடியாதே. இது சரிவராது எனச் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைகளை வழிநெடுக தேடினோம். பலரிடமும் விசாரித்தோம், சைக்கிளில் வந்த ரெண்டு (ரொம்ப) சின்ன பசங்களையும் விடவில்லை. அவர்கள், பக்கத்தில் ஒரு கடையிருப்பதாக சிவராமன் சாரை கூட்டிச்சென்றார்கள். அங்கே போய் கடைக்காரரைப் பார்த்து இந்த சைக்கிளுக்குக் காற்று அடைக்க வேண்டுமென்று சாரின்  சைக்கிளைக் காட்ட... முடியலயப்பா😂..  பாவூர்சத்திரத்தில் தொடங்கிய பயணம் சுரண்டை வழியாக சங்கரன்கோவிலைச் சென்றடைந்தது.  சங்கரன்கோவில் கோபுர தரிசனம் கோடி புண்ணியமோ இல்லையோ எங்களுக்குச் சைக்கிள் கடை கிடைத்து விட்டது. எப்பா கடைசியில் ஒருவழியாக சிவராமன் சாரின் வேகத்தைக் கட்டுப்படுத்தினோம். 

                                        சூரியபகவானை  பணியைச்  செய்யவிடாமல் தடுத்த சூல் கொண்ட மேகங்களால்  எங்களது பயணம் சாரலில் நனைந்த படியே இனிமையாக நகர்ந்தது. சங்கரன்கோவிலிருந்து, புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி வழியாகக் குற்றாலத்தைச் சென்றடைந்தோம். எந்தொரு  பயணமாக இருப்பினும் நம்மை வரவேற்க இன்முகத்துடன் ஒருவர் இருந்தால் அந்த பயணம் தந்த அலுப்பும், சலிப்பும் அப்படியே கரைந்து  போகும். நண்பன் பாபுவேலன் என்றும்  போல் அன்றும் தந்த உபசரிப்பால் உள்ளம் குளிர்ந்து போனோம். வெள்ளியை உருக்கி விட்டதுபோல் பொங்கி  விழுந்த அருவியைத் தூரத்தில் நின்றுதான் ரசிக்க முடிந்தது. வெள்ளம் அதிகமானதால் குளிக்கத் தடை. தடை அதை உடை என்றெல்லாம் முயலாமல் நமக்கு எப்பவும் போல பாத்ரூம் குளியல்தான் சரியெனக் குளித்து முடித்தோம். அதற்குள் எங்கள் மிதிவண்டியையெல்லாம் அழகாக, பத்திரமாக எடுத்து வைத்திருந்தனர் நண்பனின் குடும்பத்தினர். கொசுவின் ரீங்காரம்  தாலாட்டாக எனக்குக் கேட்க நான் நித்திரையில் ஆழ்ந்து போனேன். காலையில் தான் தெரிந்தது சுதனும், சிவராமன் சாரும் கொசு தாலாட்டு பாடினால் தூங்க மாட்டார்களாம். அப்போ யார் பாடினால் தூங்குவார்கள்??..😛 இன்னும் எனக்குப் புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் கருத்துரை பகுதியில் பதிவிடுங்கள். 

                                           ஆதவன்  தன் பணியை  ஆரம்பிப்பதற்குள் மீண்டும் எங்களது பயணத்தை ஆரம்பித்தோம். அதிகாலையிலே தேநீரெல்லாம் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள் பாபுவேலன் குடும்பத்தினர். அந்த அன்பு தந்த உற்சாகம் தென்மலையினை  எளிதாகக் கடக்க உதவியது.  பசுமை போர்த்திய மலைகள், மலை மேட்டில் காலூன்றப் பார்த்த மேகங்களை ரசித்த படியே, இதமான தென்றல் ஆரத்தழுவ எங்கள் பயணம் தென்மலை அணையைச் சென்றடைந்தது. மலைப்பாதையின் ஏற்ற இறக்கங்களைக் கடந்து தொடர்ந்த பயணத்தில் திடீரென உக்கிரமாக நுழைந்தான் சூரியன். அவன் எங்களிடமிருந்து உறிஞ்சிய நீரையெல்லாம் உடம்பில் மீட்டெடுக்க லெமன் வாட்டர், இளநீர், ஜூஸ் எனப்  போட்டிப் போட்டுக்கொண்டு குடித்து அவனுக்குச் சவால் விட்டுக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம். சில இடங்களில் கொஞ்சம் வழி தடுமாறக் கூகிளை உதவிக்கு  அழைத்துக்கொண்டோம்.  

                               

             நெய்யாற்றின்கரை வந்த உடனே ஒரு இனம்புரியாத உற்சாகம் தொற்றிக்கொண்டது, இனி நேர்வழிதான் வீட்டுக்குப் போகப்போகிறோம் என்ற உணர்வு தோன்றியவுடனே காலுக்கு ஒரு உத்வேகம்.. களியக்காவிளை, மார்த்தாண்டம் என நாகர்கோவிலை நோக்கி வண்டி வேகமாகப் பயணித்தது. நாங்கள் திட்டமிட்ட நேரத்திற்கு ரொம்ப முன்பாகவே அவரவர் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம்.  வீட்டிற்குப்  போய்ச் சேர்ந்தோம் என்பதை விட எங்களது 400 கிலோமீட்டர் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோம் என்பதே  பொருத்தமாக  இருக்கும். இந்தப் பயணம் எனக்கு அதிக  நம்பிக்கையை தந்தது. இதை விடப்  பெரிய பயணங்களையும் பயணிக்கலாம்  என்ற தன்னம்பிக்கையைக் கொடுத்தது. என்னுடன் பயணித்த சுதன் மற்றும் சிவராமன் சாருக்கு மிக்க நன்றிகள்👃.  அவர்களால்தான் இந்தப் பயணம் சாத்தியப்பட்டது.

இறுதியாக:

     பலர் இதைவிடப் பெரிய மிதிவண்டி பயணங்களை மேற்கொண்டிருக்கலாம். எனினும் முதல் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள் தான் நம்மை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். அந்த முதல் பயணத்தைப் பற்றியே அதிகம் சிகாலிப்பார்கள். பாவூர்சத்திரம் முதல் தென்காசி வரும் வரையில் வழிநெடுகிலும் பலரின் அன்பான விசாரிப்புக்கும், ஆச்சியத்துக்கும் உள்ளானோம். என்னுடன் பயணித்த, நாங்கள் வழியெங்கும் சந்தித்த மனிதர்களால் மீண்டும் ஒரு பயணம் எப்பொழுது என மனம் ஏங்குகிறது😍.  பயணங்கள் தொடங்கியது......