Monday 21 January 2019

பாவை விளக்கு


                                       அகிலன் - பாவை விளக்கு




சரித்திரக் கதைகளில் இருந்தது கொஞ்சம் விலகி சமுக நாவலில் நுழைந்தேன்.  பாவை விளக்கு -- தணிகாசலம் (கதைநாயகன்) தன் வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்தில் சந்திக்கும் நான்கு பெண்கள் பற்றிய கதை.

     இந்தக் கதை பல்வேறு தமிழ் படங்களுக்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம். எடுத்துக்காட்டாகச் சிந்துபைரவி, ஆட்டோகிராப்.. போன்றவை எனக்கு நினைவுக்கு வருகிறது. கெளரி மற்றும் உமா கதாப்பாத்திரங்கள்தான் பைரவி மற்றும் சிந்துவோ என யோசிக்க வைத்தது.

பாவை விளக்கு கதையே, சிவாஜி நடித்து திரைப்படமாக வந்துள்ளது. கதையை வாசித்தபின் அந்தத் திரைப்படத்தை பார்த்தேன். கதை தந்த உணர்வுகளைப் படம் முழுவதுமாக எனக்குத் தரவில்லை. கதை வாசிக்கும் பொழுது, அதில் வரும் பாத்திரங்களின் உருவங்களை நம் மனதில் ஆசிரியரின் வருணனைக்கு ஏற்ப உருவபடுத்தி வைத்திருப்போம் ஆனால் திரைப்படத்தில் நடித்து இருந்தவர்களின் உருவங்கள் அதற்குப் பொருந்திய மாதிரி தெரியவில்லை .  மேலும் அது பழைய திரைப்படம் என்பதால் அதன் காட்சி அமைப்புகள் என்னை ஈர்க்க வில்லையோ என்னமோ.

நாம் உருகி உருகி இப்போது பார்க்கும் காதல் திரைப்படங்கள் எல்லாம் இன்னும் 15-20 வருடங்களுக்குப் பின் இது போல் அப்போது காணுபவர்களை ஈர்க்காமல் போகலாம்.

தணிகாசலம் பாத்திரம் உணர்ச்சிகளை கட்டுப் படுத்தி, அறிவுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது. தணிகாசலம்  சந்திக்கும் பெண்கள் தேவகி, செங்கமங்கலம்,கௌரி மற்றும் உமா. ஆசிரியர் அகிலன் இந்த நான்கு பெண்களின் பாத்திரங்களையும் அவர்களின் தனித்தன்மை தெரியுமாறு வடிவமைத்து உள்ளார். ஒவ்வோருத்தரின் எண்ணங்களும், உணர்ச்சிகளும், வாழ்வு நிலைகளும் வேறுபட்டு இருப்பதை மிகவும் அழகாக எழுதியுள்ளார்.

பொதுவா நம்மை ஏதாவது ஒன்று அல்லது இரண்டு கதாப்பாத்திரங்கள்தான் நம்மைக் கவரும்.. ஆனால் இந்தக் கதையில் நான்கு பெண்களின் கதாப்பாத்திரமும் என்னைக் கவர்ந்து விட்டது.. எந்தப் பெண் பாத்திரம் சிறந்து என என்னால் பிரித்து சொல்ல முடியவில்லை.. உமா பாத்திரம் நிறைய உணர்ச்சி பிழம்பாக வடிவமைக்கப் பட்டிருப்பதால் சிலருக்குக் கொஞ்சம் போரடிகளாம்.

கதையும் வெவ்வேறு ஊர்களில் நடைபெறுவதாக இருப்பது நன்றாக இருக்கிறது. கண்ணபுரம், புதுப்பட்டி, குற்றாலம், சென்னை, டெல்லி மற்றும் மும்பை. குற்றாலத்தின் சாரல் காலத்தை  அழகாக நம் கண்முன்பே தெரியுமாறு விவரித்து உள்ளார்..

தணிகாசலம் தன் வாழ்கையில் ஒவ்வொரு பெண்களை சந்திக்கும் காலகட்டம் அப்போது அவர்களிடையே ஏற்படும் உணர்ச்சிகளுக்கும், அறிவிற்கும் இடையே ஏற்படும் போராட்டம்... அதனால் எடுக்கும் முடிவுகளால் அவர்தாம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்தான் நாவல்...

சில இடங்களில் தணிகாசலம் மற்றும் உமாவின் பகுதி (அடிக்கடி அவர்கள் இடையே வரும் பூசல்) கொஞ்சம் போரடித்தாலும்....  சுவாரசியமான கதைதான்.

இறுதியாக :

    உமாவின் முடிவை விடத் தேவகியின் நிலைமைதான் என்னைக் கலங்க செய்தது. என் நண்பன் ஒருவனுக்கு இது போல பல கதைகள் உள்ளது.. அதை அவன் அல்லது யாராவது எழுதினால் இதைவிட சுவாரசியமாக இருக்கலாம்.


Monday 7 January 2019

வீரபாண்டியன் மனைவி



                         அரு  இராமநாதன் - வீரபாண்டியன் மனைவி 





   எப்பொழுதும் நான் அடுத்துப் படிக்கவேண்டியது எனப் புத்தகங்கள் பட்டியல் வைத்திருப்பேன் (மனதில்தான்) .. ஆனால் அருராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி புத்தகம் எப்பொழுதுமே அந்த லிஸ்டில் இருந்ததில்லை..

அகிலனின் வேங்கையின் மைந்தன் முடிந்தும் பாவை விளக்குதான் அடுத்தது வாசிக்க வேண்டும் என இருந்தேன்... தொடங்கிக் கூட விட்டேன்... ஆனால் திடீர் மனமாற்றம்... வீரபாண்டியன் மனைவி புத்தகம் கிடைத்து....

 நான் பள்ளியில் படிக்கும்போதே எங்கள் வீட்டில் வீரபாண்டியன் மனைவி புத்தகம் இருந்தது ஆனால் அதன் மூன்றாவது பாகம் மட்டும் எப்படியோ தவறி விட அதை வாசிக்க வேண்டும் என எண்ணம் வந்ததேயில்லை.

குலோத்துங்க சோழன் (III) ...  பாண்டிய மன்னன் வீரபாண்டியனை வெற்றி கொண்டு விக்ரமபாண்டியனை அரியணையில் அமர்த்திய வரலாற்றைக் கற்பனை கலந்து எழுதியுள்ளார்.

கதையில் என்னை ஈர்த்த மற்றும் கவனிக்க வைத்த கதாப்பாத்திரம் ஜனநாதன் கச்சிராயன்... ஆசிரியர் ( ராமநாதன் = ஜனநாதன்) தன்னுடைய கருத்துகளைத்தான் அந்தக் கதாப்பாத்திரம் வழியாகச் சொல்லுகிறாரோ எனத் தோன்றியது. ஜனநாதன் கதாப்பாத்திரம்தான் முழு நாவலையும் தாங்கி நிற்பதுடன் மற்ற நாவல்களில் இருந்து வேறு படுத்திக்காட்டுகிறது. அக்கால அரசியலைச் சாடும்  அவனது கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் இந்தக் காலத்துக்கும் பொருந்தும் படி உள்ளது

தேசபக்தியை வைத்து அரசியல் செய்வது..

ஒருதேசம்... ஒரு கொடி... ஒரே கொள்கை... ஒரே மொழி....

ஆட்சியாளர்களின் புகழ் வேட்டை ....

     இது போன்றவற்றை பற்றி ஜனநாதன் கேலியாக சொல்லும் கருத்துக்கள் இரசிக்க வைக்கிறது.

ஜனநாதன் கதபர்த்திரத்தை நல்லவனா அல்லது கெட்டவனா எனக் கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் அந்த கதாப்பாத்திரம் சுவாரசியமாக படைக்கப் பட்டிருப்பது சிறப்பு.

சாமானியர்களையே கதையின் நாயர்களாக ஆக்கி இருப்பதும் மன்னர்களை வெகுவாக புகழ்ந்து, வீரதீரனாகக் காட்டாததும் மாறுபட்டு ரசிக்கும் படி இருக்கிறது.

இராமாயணம் காண்டங்கள் reverse ஆக வருவது... மற்றும் சில இடங்களில் இராமாயண கதாப்பாத்திரங்களை தொடர்புப் படுத்துவது.  எல்லா அத்தியாயங்களும் 'ம' தொடங்கும் வார்த்தைகளைக் கொண்டு ஆரம்பிப்பது போன்றவை கவனிக்கும் படி இருந்தாலும் ... பாலகாண்டம் ( மூன்றாவது காண்டம்) பேருக்கும் கதைக்கும் நிறைய தொடர்பு இல்லை.

சோழர்களால் சிறை வைக்கப்பட்ட தன் மனைவியைப் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் மீட்கச் செய்யும் முயற்சிகள்தான் கதை.

மீட்பு படலங்கள் மேலோட்டமாக இல்லாமல் விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லப்பட்டிருப்பதுதான் கதைக்கு நிறைய பலமும் கொஞ்சம் பலவீனமும்.

ஒரு கட்டத்தில் கொஞ்சம் அலுப்பூட்ட  ஆரம்பித்து விடுகிறது  ... அதற்கு கதையில் உள்ள காதலும் ஒரு காரணம்.

வீர பாண்டியன் மனைவி -  ஒரு சரித்திரக்காதல் கதை என்றுதான் முதலில் எனக்கு அறிமுகம் ஆனது ஆனால் கதையில் இருந்த காதல் என்னை ஈர்க்கவே இல்லை.

கதையின் நாயகன் வீர சேகரன் மற்றும் நாயகி  ஊர்மிளா இருவருக்கும் ஏற்கனவே மணமாகி அவர்களுக்கு மனைவி மற்றும் கணவன் இருக்கிறார்கள்.  என்னதான் ஆசிரியர் அவர்களின் திருமணங்கள் நடைபெற இக்கட்டான சூழ்நிலைகளையும்.. தவிர்க்க முடியாத நிகழ்வுகளையும் விளக்கிக் கூறினாலும்  என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .
மற்றும் அவர்கள் இருவரின் தங்கள் தனிப்பட்ட மணவாழ்க்கை  ஏன் இயல்பாகவும் , இன்பமாகவும் .. இல்லை என்பதையும் விளக்கியுள்ளார்.

ஆனாலும் ஏனோ அவர்களின் காதல் என் மனதை ஈர்க்கவில்லை.

அவர்கள் உருகி.. உருகிக் காதலித்தாலும் ..அதனால் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் அவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற பரிதவிப்பு எனக்குத் தோன்றவேயில்லை.

அவர்கள் இருவரும் கடைசியில் மரண தண்டனையில்  இறப்பது  மிகவும் சரியான முடிவாகவே தோன்றியது. அவர்களின் அந்தத் துயர முடிவு கூட  என் மனதில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

பொதுவாக ஒரு பெரிய நாவலை வாசித்தபின் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு கதாப்பாத்திரங்கள் என் மனதை விட்டு அகலாது குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்காவது. வீரபாண்டியன் மனைவியை வாசித்த பின் ஜனநாதன் தவிர எந்த ஒரு பாத்திரமும் மனதில் நிற்கவில்லை.. எந்தத்  தாக்கத்தையும் தரவில்லை.


இறுதியாக :

    ஜனநாதன் கதாப்பாத்திரத்தின் பேச்சுக்கள்  மற்றும் கதையில் வரும் பல புரட்சிகரமான கருத்துக்களை பார்க்கும் பொழுது ஆசிரியர் மறுமணத்தை ஆதரித்து வீரசேகரன் மற்றும் ஊர்மிளா கதாப்பாத்திரங்கள் படைத்தாரோ எனத் தோன்றுகிறது. கதை எழுதப்பட்ட காலகட்டமான 1950'ல் இந்த மாதிரி கருத்துக்களை சொல்லுவது மற்றும் எழுதுவது எளிதல்ல.. காரணம் அதுவாக இருந்திருந்தால் மிகவும் பாராட்ட பட வேண்டிய ஒன்று.