Showing posts with label தி ஜானகிராமன். Show all posts
Showing posts with label தி ஜானகிராமன். Show all posts

Tuesday, 30 July 2019

மோக முள்



                               தி ஜானகிராமனின்  மோக முள்


    
 இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் என்னுள் சில ஆண்டுகளாக இருந்தது, ஆனால் அதற்கான வாய்ப்பு சமீபத்தில்தான் அமைந்தது. வாசித்து முடித்த உடன் எழுதப்பட்டு இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் பலரால் பேசப்படுகிறது, வாசிப்பவர்களை எல்லாம் ஏன் கவர்ந்திழுக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

தி ஜாவின் அம்மா வந்தாள் வாசிக்கும் பொழுது கதையில் வழக்காடப்பட்டுள்ள சொற்கள் (வட்டார நடை) எனக்கு அதிகம் பரிட்சியமானதாக இல்லை. அதனால் தொடக்கத்தில் சிறிது தடுமாற்றம் இருந்தது ஆனால் மோக முள்ளில் அந்த பிரச்சினை எழவில்லை. சொற்கள் மற்றும் தி.ஜா வின் நடை எனக்குக் கொஞ்சம் பழகிவிட்டது போல. 

சிறுவயது முதலே இசையில் ஈர்ப்பு ஏற்படுமாறு நாயகன் பாபு அவனுடைய தந்தையால் (வைத்தி)  வளர்க்கப்படுகிறான். யமுனா தமிழ் தந்தைக்கும், மராட்டிய    வம்சாவளி  தாயிக்கும்  (பார்வதி-  இரண்டாந்தாரம்) பிறந்தவள். யமுனா மிகவும் அழகான பெண்ணாக பாபுவின் பார்வையின் மூலமாக   விவரிக்கப் படுகிறாள். 

தன் சிறுவயதிலிருந்தே தன்னை விட பத்து வயது அதிகமான யமுனாவுடன் பழகி வரும் பாபு, மெல்ல மெல்ல அவள் அன்பில் கரைந்து, வாலிப பருவத்தில் அவளைத் தெய்வத்தின் உருவமாகப் பார்க்கிறான். பல்வேறு காரணங்களால் 30 வயது ஆகிய பின்பும்  தள்ளிப் போகும் அவளின் திருமணத்தை நடத்தவும் முயற்சி செய்கிறான் ஆனால் யமுனாவின் அழகும், இலட்சணமும் அவனுடைய மனதில் ஒருவித மோகத்தை எரியூட்டி ஒருதலைக் காதலாக உருமாறுகிறது. அதுவும் ஓர் வளர்சிதைப் பருவத்திலிருந்து இளைஞனாக மாறும் ஆணின் மனதில் தோன்றும் முதல் காதல். ஆனால் ஆரம்பத்தில் பாபுவால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் ஒரு நல்ல மற்றும் உயர்வான இடத்தில் இருக்க வேண்டியவள் என்று மட்டுமே நினைக்கும் பாபுவுக்கு, சமய சந்தர்ப்பத்தால் பக்கத்து வீட்டு வயதானவரின்  இளம் மனைவியுடன் (இரண்டாம்தாரம்)  கூடிய பின்தான் யமுனாவின் மீது உள்ள காதல் புலனாகிறது. ஆனால் பாபுவின் நண்பன் ராஜம் அதை முதலிலே புரிந்து கொள்கிறான். தங்கம்மா தற்கொலை செய்து விட  பாபு மயானத்தில் குற்றவுணர்வில் நிற்பதை வாசிக்கும் போது என் இதயம் கனமாகி விட்டது.

சற்றே வரம்பு மீறிய காதலை யமுனா நிராகரிப்பதால் ஏக்கம் மற்றும் வலியுடன்  இசைப் பயிற்றுவார் ரங்கண்ணாவிடம் முழு வீச்சில் கர்நாடக இசையைக் கற்றுக்கொள்கிறான்.  பின்னாளில் குரு ரங்கண்ணாவும் இறந்து விட  மெட்ராஸ் சென்று பணிபுரிந்து வரும் பாபுவை, சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகத் தேடிவரும் யமுனா இவ்வளவு வருடங்களுக்குப் பின்பும் பாபுவின் மனதில் தன் மீதிருக்கும் காதலில் எவ்வித மாற்றமும் இல்லாதது கண்டு மலைக்கிறாள்.

ஒரு கட்டத்தில்  தன் இளமையை, இத்தனை காலம் தனக்காக எவ்வளவோ செய்துவிட்டுக் காத்திருக்கும் பாபுவிற்குக் கொடுத்து விட்டு, இத்தனை நாளிலிருந்த தவிப்பும் காத்திருப்பும் ''இதற்குத்தானா'' என்று யமுனா, பாபுவிடம் கேட்பது என் மனதில் மிகப் பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. நாவலை முழுமையாக, உணர்வுப் பூர்வமாக வாசித்தால் மட்டுமே அந்த ஒரு வார்த்தையின் வலிமையைப்  புரிந்து கொள்ள முடியும். 

நாவல் முழுதும் வரும் உரையாடல்கள் மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றின் தேவைகளையும் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கின்றது. குறிப்பாக பாபு-வைத்தி (தந்தை மகன் உறவு), பாபு-ராஜம் (நட்பு).  அதே போல் ஆசிரியர் காமம் என்ற தணலைக் கதையில் கையாண்டிருக்கும் விதம் விரசமாகத் தோன்றாமல் மனிதனின் அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகத் தோன்றுகிறது. சுதந்திரத்துக்கும் முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையாக வருவதால் அக்கால சமுதாய சட்டங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகளை நாம் அறிய உதவுகிறது. 

பொதுவாக ஆண்களுக்கு, பெண்கள் மீது இருக்கும் ஈர்ப்பு இரு வகைப்படும். 
சிலரைப் பார்த்தால் காமுறுவர், சில பெண்களைப் பார்த்தால் பரவசம் கொள்வார்கள். ஆனால் அந்த பரவசத்துக்கும் அடித்தள அடிப்படை காமமே என்பதைச் சிலர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் அடிப்படை என்பதை பாபு மூலம் அழகாக தி ஜானகிராமன் உணர வைக்கிறார். 

இறுதியாக :

     அரு இராமநாதன் எழுதிய குண்டு மல்லிகை நாவலிலும் நாயகன் தன்னைவிட மூத்த பெண்ணை காதலிப்பதுதான் கரு. ஆனால் இரு கதைகளின் தளங்களும், எழுதப்பட்ட விதமும் முற்றிலும் வேறு . இருந்தாலும் என்னை இரண்டு பாத்திரங்களுமே (உமா மற்றும் யமுனா) கவர்ந்து விட்டது. இன்னொரு முறை கும்பகோணம் சென்றால் கட்டாயம் யமுனா வாழ்ந்த தூக்காம்பாளையத் தெருவில் கால்பதித்து விட்டு வர முடிவு செய்துவிட்டேன்.
 

Tuesday, 5 March 2019

அம்மா வந்தாள்



                       தி ஜானகிராமன் -    அம்மா வந்தாள் 




      பொதுவாக நாம் கதை புத்தகங்களை வாசிக்கத் தொடங்கும் பொழுது படக்கதைகளில் ஆரம்பிப்போம். அதன்பின்  சிறுவர் கதைகள், சிறு கதைகள், நாவல்கள் என படிப்படியாக முன்னேறுவோம்.

சில சமயம்  இறுதிக் கட்டமாக இலக்கிய நாவல்கள் பக்கம் ஒதுங்குவோம். இலக்கிய நாவல்களைப் படிக்கக் கொஞ்சம் பொறுமையும் மற்றும் ஆழ்ந்த ஈடுபாடும் தேவை... இல்லையெனில் மிகவும் கடினமான பயணமாக இருக்கும்.

 இலக்கியவாதிகள் பட்டியலில் உள்ள சிறந்த நாவல்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் எனக்கு உண்டு. ஆனால் அந்த நாவல்கள்    பொதுவாக வட்டார மொழியில் அல்லது கதாபாத்திரங்களின் சமூகத்தினர் பேசும் மொழியில் இருப்பதால் உரையாடல்கள் புரிவதுக்குக் கவனம் தேவை.. சில சமயங்களில் பல முறை வாசித்தால்தான் புரியும். (இது என் அனுபவம். சிலருக்கு எளிதாக இருக்கலாம்.) இந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்னாள் நான் வாசித்த முதல் நாவல்   சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை.  அது நாகர்கோவில் நடக்கும் கதை என்பதாலோ மற்றும் கதையின் களங்கள் எனக்குக் கொஞ்சம் பரிசம் ஆனதாலோ எளிதாக வாசித்து விட்டேன். ஆனால் அவர் எழுதிய மற்றொரு நாவலான ஜே ஜே சில குறிப்புகள்  நாவலைப் பாதி கூட தாண்ட முடியவில்லை. அதன் பின் அப்படிப்பட்ட இலக்கிய நாவல்களின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை கொஞ்சக் காலம்.

திடீரென மீண்டும் ஒரு ஆசை... புத்தக வாசிப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல.  சுமார் பத்து புத்தகங்களை வாங்கி விட்டேன் பலரின் சிறந்த நாவல்களின் முதல் பத்து பட்டியல்களை அலசி ஆராய்ந்து. அதில் வாசிக்க முதலில் தேர்ந்தெடுத்தது தி ஜானகி ராமன் எழுதிய அம்மா வந்தாள்.

தொடக்கத்தில் அம்மா வந்தாள் புத்தகத்தை வாசித்து, புரியக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஆனால் வாசிக்க, வாசிக்கக் கொஞ்சம் எளிமையாகப் போனது. 

அப்பு சிறுவயது முதல் வேத பாடசாலையில் வேதம் படிக்கிறான். அங்கு இருக்கும் கணவனை இழந்த இந்துவுக்கு, அப்புவின் மீது காதல். அப்புக்கும், இந்துவின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

பதினாறு வருடங்கள் கழித்து வீட்டிற்குத் திரும்பும் அப்பு தன் அம்மாவின் தவறான நடத்தைகளைப் பார்த்தும், கேட்டும் மீண்டும் வேதசாலைக்கே திரும்பி வந்தவன் இந்துவையும் மணம் செய்யும் மனநிலைக்கும் வந்துவிடுகிறான். அவனைக் காண வேதசாலைக்கு வரும் அம்மா இறுதியில் காசிக்குச் செல்ல முடிவு எடுப்பதுதான் நாவலின் கதை...

இது கத்தி மீது நடப்பது போன்ற மிகவும் சிக்கலான கதை . எளிதில் சறுக்கி விடும் சம்பவங்களின் தொகுப்பு. ஆனால் ஆசிரியர் மிகவும் சாமர்த்தியமாகக் கையாளுகிறார். கதையின் சிறப்பே உரையாடல்கள்தான்.

"அவன் குரல் கட்டையாக வறண்டு ஒலித்தது. அதிலே சாம்பல் பூத்தாற்போல்க் கிடந்த கோபம் " 

"கோவில் மணி டைங், டைங் என்று சளி பிடித்தாற்போன்று மூக்கடைப்பு குரலில் அடித்தது "

இதுபோன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.. 

அம்மா அலங்காரத்தின்  குணத்தை அப்பு மற்றும் தண்டபாணி இருவரின் கோணத்திலும் அழகாக அறிமுகம் செய்கிறார். தண்டபாணிக்கு, அலங்காரத்தின் மீது இருக்கும் பத்தி கலந்த மரியாதை அல்லது பயம், அவளுடன் சேர்ந்து வாழக் காரணமாகிறது.. ஆனால் குழந்தைகள் எப்படி இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது கொஞ்சம் குழப்பமாக உள்ளது.

இறுதியாக :

    இந்த கதை வெளிவந்த காலத்தில் பல விமர்சனங்களைச் சந்தித்து இருக்கும். பலருக்கு அதிர்ச்சி அளித்து இருக்கலாம். வேதங்களைப் பற்றிய விமர்சனங்கள் பலரைக் கோபப்படுத்திருக்கலாம். ஆனால் சிறந்த விமர்சனங்கள் பலரைக் கோபப்படுத்தியிருக்கலாம் ஆனால் சம்பாவனைகள் மூலமாக வெளிப்படையாகத் தெரியாமல் மறைமுகமாகப் பல விசயங்களைச் சொல்லுவதின் மூலம் தனித்தன்மை பெறுகிறது.