Wednesday 25 November 2020

சஞ்சாரம்

 

                   சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்


எஸ். ராமகிருஷ்ணனின் பல கட்டுரைகளை வாசித்து உள்ளேன். 2018'ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம் நாவலைப் பலமுறை வாசிக்க எண்ணியும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இறுதியில் இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். 

        ரத்தினத்தின்  குழுவினர் நாதஸ்வரம் வாசிக்கச் சென்ற கோவில் திருவிழாவில் இரண்டு ஊர்களுக்கிடையே நடக்கும் தகராற்றில் எதிர்பாராதவிதமாக  இவர்கள் இடையில் மாட்டிக்கொள்கிறார்கள். குழுவில் இணைந்து வாசிக்கும் மற்றொரு நாதஸ்வர  கலைஞரான பக்கிரி அதில் ஒருவனை அடித்து விட, ரத்தினம் மற்றும் பக்கிரியை அடித்துக் கட்டிப்போட்டு விடுகிறார்கள். இரவில் கோவில் பூசாரி அவர்களின் கட்டுகளை அவிழ்த்துப் போகச்சொல்ல பக்கிரியோ திரும்பிச் செல்லும்போது விழாப்பந்தலுக்கு தீ வைத்து விடுகிறான். அதனால் போலிஸ் தேட சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத சூழ்நிலையில் ஊர் ஊராகப் பயணம் செய்ய அவர்களின் நினைவுடாக சம்பவங்கள் கிளைக்கதைகளாக வருகிறது. இறுதியில் அவர்களுக்கு என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பு மனதில் நாவல் முடிந்தும் தொடர்கிறது.     

           "முதல் அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது"  என்று தொடங்கும்  முதல் பத்தியே மொத்த நாவலையும் சொல்லி விடுகிறது. சாதியக் கட்டமைப்புகள் ஏற்படுத்தும் வலி, அவலம், வேதனை, கோபம், அவமானம் போன்றவற்றைச் சகித்துக்கொண்டு, கலை மற்றும் கலைஞர்களுக்கான அங்கீகாரமும் சரிவர இல்லாமல், பொருளாதார சவால்களைச் சமாளித்து வாழ்க்கை முழுவதும் சொல்லாத் துயரத்தை அடைந்த நாதஸ்வர கலைஞர்களின் இன்னல்களைச் சஞ்சாரம் நாவல் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லுகிறது. 

       பல சுவாரஸ்யமான தகவல்கள், வாசிப்பவருக்கு மன மாற்றத்தை உண்டாக்கும் கருத்துக்கள், பல்வேறு காலகட்ட மக்களின் வாழ்வியல் பதிவுகள், அபூர்வமான, ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள், கேட்டறியா வரலாற்றுச் செய்திகள் என ஒவ்வொரு கிளைக் கதைகள் ஒரு சிறுகதையைப் போலச் சுவைப்பட நகர்கிறது.  லட்சய்யாவின் நாதஸ்வர இசைக்கு மயங்கிய மாலிக்காபூர், "மண்ணு வேணுமா" "பொன்னு வேணுமா" எனக் கேட்ட ஊரோடிப்பறவைகள், பொம்மக்காபுரத்தின் பாம்புக்கடி வைத்தியம், நூறு வயதைக்கடந்த கொண்டம்மாள் கிழவி திருடனுக்குக் கொடுத்த வித்தியாசமான தண்டனை என மக்களின் செவிவழிக் கதைகள் மூலமாக நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன். மேலும் கரிசல் மண்ணின் நாதஸ்வரக் கலைஞர்களின் அன்றைய வாழ்வையும் இன்றைய நிலைமையையும் ஒரே புனைவுக்குள் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். நாதஸ்வரம் கற்க வரும் வெளிநாட்டுக்காரர், நாதஸ்வர இசையால் ஈர்க்கப்படும் போலியோவால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியச் சிறுவன்  என நிகழ்காலச் சம்பவ கதைகளும் நிறைந்துள்ளது. 

        வட இந்தியாவில் நாதஸ்வரம் ஏன் வாசிக்கப்படுவதில்லை, இந்நாளில் நாதஸ்வர வித்துவான்கள், கரகாட்டக்காரர்கள் ஏன் நம் பாரம்பரிய கலைஞர் என்னன்ன மாதிரியான இன்னல்களைச் சந்திக்கிறார்கள், நாதஸ்வரம் எவ்வளவு புகழ் வாய்ந்தது, "இசை தான் கடவுளோடு பேசும் மொழி. அந்த இசைக்கு தாய்ப்பாலு நாதஸ்வரம்.." என்ற வரிகளால் நாதஸ்வரம் வாசிப்பவர்களுக்கு மட்டுமில்லாது அதனை ரசனையோடு கேட்பவருக்கும் மரியாதை செலுத்துகிறது இந்நாவல். கரிசல் காட்டு நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தும் விதமான மைய நோக்கத்தோடு எழுதப்பட்ட நாவலில் சில கிளைக் கதைகள் மையக்கதைக்குத் தொடர்பில்லாமல் வருவது நாவலை வாசிக்கும் பொழுது நூறு சதவீதம் உணர்வுப்பூர்வமாகக் கதையோடு சேர்ந்து பயணிக்க முடியவில்லை.

     ஆனால், நாவலை வாசித்து முடித்தபின் வாசித்த அனைவருக்கும் நமது பாரம்பரிய நாதஸ்வரத்தின் இனிமையான ஒலியை உடனே கேட்க வேண்டும், கேட்டு ரசித்து அதில் லயிக்க வேண்டும் எனும் ஆவல் கட்டாயம் தோன்றும் அதில் உள்ளது எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தின் வெற்றி. 

இறுதியாக :

          இசையைப்பற்றிப் பேசும் நாவலில் சீவாளி செய்யப்படுவதன் சுருக்கமான குறிப்பைத் தவிர வேறு எதுவுமே இல்லை. தவிலைப்பற்றி சுத்தமாக ஒருதகவலும் சொல்லப்படவில்லை. நாவல் வாசிக்கும்போது இது கரிசல் கிராமத்தைச் சேர்ந்த நாதஸ்வரக்குழுவைக் கொண்டு இசையைப்பற்றிப் பேசுகிறதா?? அல்லது ஜாதி வேறுபாடு இன்னல்களை மையமாக வெளிப்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. 

Monday 9 November 2020

அகல்விளக்கு

                        

               அகல்விளக்கு - மு. வரதராஜன்


மு. வரதராஜன் அவர்கள் எழுதிய அகல்விளக்கு நாவலை எனது கல்லூரி காலத்தில் வாசித்துள்ளேன். மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டியது 1961'ஆம் ஆண்டு நாவல் பெற்றிருந்த சாகித்ய அகாடமி விருது. 

     வேலய்யன் என்ற வேலுவின் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களின் கதைதான் அகல்விளக்கு. பெருங்காஞ்சி ஊரின் நிலக்கிழார் சாமண்ணா. அதிகம் படித்தால் தன் மகன் சந்திரன் கெட்டுப்போய் விடுவான் என்றெண்ணி மேல் வகுப்புக்கு அனுப்ப மறுக்கிறார். சந்திரனின் மதி நுட்பத்தைக் கண்ட பள்ளிக்கூடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் அவரது மனதை மாற்றுகிறார். அந்த ஊரில் எட்டாவது வகுப்பிற்கு மேல் இல்லாததால் வாலாசாப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் சேருகிறான் சந்திரன். அங்கு அவனுக்கு வேலுவின் அறிமுகம் கிடைக்க இருவரும் இணைபிரியாத நண்பர்கள் ஆகிறார்கள். படிப்பில் பின்தங்கியிருக்கும் வேலுவுக்குச் சந்திரன் பாடங்களை விளக்கி உதவுகிறான். சந்திரனின் தங்கை கற்பகத்தின் அழகுணர்ச்சி வேலுவை கவர்கிறது. பக்கத்து வீட்டுப் பாக்கியம் அம்மாள் வேலுவிடம் சிறுவயதிலிருந்தே அன்பு பாராட்டினாலும் அவள் சந்திரனிடம் செலுத்தும் அன்பு வேலுவுக்குக் கொஞ்சம் பொறாமை உணர்வைத் தூண்டுகிறது. இறுதித் தேர்வு சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்படும் வேலு தேர்வில் தோல்வி அடைகிறான். 

        தேர்ச்சி பெற்ற சந்திரன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்கிறான்.  அதன்பின் வேலுவிற்கு சந்திரன் அவனை விட்டு சிறிது விலகுவது போல் தோன்றுகிறது. அடுத்த ஆண்டு தேர்ச்சி அடைந்து அதே கல்லூரியில் சேரும் வேலுவிடம் முன்புபோல் நட்பு பாராட்டாமல் விலகியே செல்லுகிறான் சந்திரன். கல்லூரியில் வேலுவுக்கு மாலன் என்ற மாணவனுடன் நட்பு ஏற்படுகிறது. மாலனின் மூடநம்பிக்கைகள் சலிப்பைத் தந்தாலும் அவனுடன் மிகுந்த நட்புடன் பழகுகிறான். இமாவதி என்ற மாணவியின் நட்பைக் காதல் எனத் தவறாகப் புரிந்து அவளுக்கு நடக்கும் திருமண ஏற்பாட்டால் இறுதித்தேர்வுகளை எழுதாமல், யாரிடமும் சொல்லாமலும் கல்லூரியை விட்டுச் செல்கிறான் சந்திரன். சந்திரனை வெறுக்கும் மாலன் அவன் நினைவுகளைத் துறந்து தேர்வில் கவனம் செலுத்தும்படி வேலுவை அறிவுறுத்துகிறான். சில மாதங்கள் கழித்து சந்திரன் ஊட்டியில் இருப்பதாகத் தகவல் கிடைக்க சாமண்ணாவுடன் சென்று அவனை மீட்டு வந்து வள்ளி என்ற பெண்ணுடன் திருமணமும் செய்து வைக்கிறார்கள்.

         கற்பகத்திற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும் அவனைப் பற்றிய தகவல்களைக் கூறுமாறு சாமண்ணா, வேலுவுக்குக் கடிதம் எழுத, அந்த மாப்பிள்ளை மாலன்தான் எனத் தெரிந்து சந்தோசமும் கொஞ்சம் கவலையும் அடைகிறான். கல்லூரி படிப்பை முடிக்கும் வேலுவுக்குச் சர்வீஸ் கமிஷன் தேர்வின் மூலமாக நல்ல வேலையும் கிடைக்கிறது. இடையே அத்தை மகள் கயற்கண்ணியுடன் திருமணமும் நடைபெறுகிறது. சந்திரன் யாரையும் மதிக்காமல் பல பெண்களும் தொடர்பு எனச் சீரழிந்து போகிறான். மாலனோ ஜோசியங்களை நம்பி வேலைக்குப் போகாமல் சுயதொழில் தொடங்க தன் மாமனார் சாமண்ணாவிடம் பணம் கேட்டு மனைவியை விரட்டுகிறான். சந்திரனின் கொடுமைத் தாங்காமல் அவன் மனைவி தற்கொலை செய்துகொள்ளச் சந்திரன் ஊரை விட்டே ஓடுகிறான். காலமாற்றத்தில் மாலன் மனம் திருந்தினானா?? சந்திரனின் திரும்பி வந்தானா?? என்பதே நாவலின் முடிவு. 

             நண்பர்களின் வாழ்வில் நடக்கும் சமுதாய சிந்தனை மாற்றங்கள், அவர்களின் குணநலன்களால் வாழ்க்கையில் தோன்றும் மேடு பள்ளங்களை அலசுகிறார் ஆசிரியர் மு. வரதராஜன். பெரும்பாலும் பண்பாட்டுச் சிக்கல்களைக் கதைமாந்தர்களின் விவாதங்கள் மூலம் முன்னெடுத்துச் செல்கிறார். எளிதில் ஊகிக்கக்கூடிய முடிச்சுகளும், கொஞ்சம் செயற்கையான உணர்ச்சிகர தருணங்களும், மரபான தீர்வுகளையும் கொண்டிருந்தாலும் வாழ்க்கை நெறிமுறைகளை மட்டுமே பேசி அலுப்பைத் தராமல் பயணிப்பதால் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டிய நாவல்தான். அதுவும் மாணவப் பருவத்தினர் கட்டாயம் வாசிக்கப் பரிந்துரைப்பேன். அவர்களின் சிந்தனைகளைச் சீரமைக்க உதவலாம். சந்திரனைப் போல நல்ல அழகும், கூரிய அறிவும் பெற்று அதனால் செருக்கடைந்து சீரழிந்து போவதை விட வேலய்யன் போல் அறிவு குறைவாக இருந்தாலும் சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ்வதே உயர்வு என்பதை வாசிப்பவர்கள் உள்ளத்தில் உருவாக்குகிறார்.

இறுதியாக:

     கதையில் வரும் பாக்கியம் அம்மாள் கதாபாத்திரம் இதுவரை நான் எந்த நாவலிலும் பார்த்திராத தனித்துவமானது. பாக்கியம் வாயிலாக எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையும், ஞானமும் நம்மை நல்வழியில் கொண்டு செல்லும் என்பதை நமக்குப் புரியவைக்கிறார். சிறந்த நூல்களை வாசிப்பவர்களை, அவை எந்த அளவிற்கு ஒளிவிளக்காக மாற்றுகிறது என்பதற்குப் பாக்கியத்தைக் கொண்டு விளக்கியது அருமை. அதுவும் அந்த விளக்கின் ஒளிபட்ட (அறிவுக்கூர்மையான வாதங்களால்) கற்பகமும், கயற்கண்ணியும், மணிமேகலையும் நற்பண்புகள் பல பெற்று வாழ்க்கை சிக்கல்களிலிருந்து மீள்வதாக நகரும் விதம் அகல் விளக்காகப் பிரகாசிக்கிறது.