Saturday 15 December 2018

சிவகாமி மற்றும் ரோகிணியின் காதல் ....



            சிவகாமி மற்றும் ரோகிணியின் காதல் ....



 இந்த வாரம்தான் அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் கதையை வாசித்து முடித்தேன். 1963'ல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற நாவல். மிகவும் ஆர்வமாக வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று..

ஆனால் இக்கதையைப் பற்றி ஒருவர் எழுதிய விமர்சனத்தை என்னுடைய ஒரு சகோதரர் அனுப்பியிருந்தார் அதைப் படித்ததுடன் இந்தப் புத்தகத்தை படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது... ஆனால் ஒரு தடவை வாசிக்க ஆரம்பித்த உடன் அந்த நபர் எழுதிய விமர்சனம் தவறு எனப் புரிந்தது...

பொதுவாக எனக்குக் காதல் கதைகள் கொஞ்சம் பிடிக்கும்...

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மற்றும் பார்த்திபன் கனவு கதைகளில் காதல் இருந்தாலும் அதுவே கதையின் களமாக இருக்காது... ஆனால் சிவகாமியின் சபதத்தில்... சிவகாமி மற்றும் மாமல்லருக்கு இடையே உள்ள காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்... கதையே அந்தக் காதலில்தான் பிணைந்து இருக்கும்.

அவர் எழுதி,  நான் வாசித்த சமூககதைகளில் கள்வனின் காதலி மற்றும் அரும்பு அம்புகள் கதைகளில் காதலே பிரதானம்... அரும்பு அம்புகளே கல்கி எழுதிய கதைகளில் சிறந்த காதல் உள்ள கதை என்பேன்.

நீங்கள் நினைக்கலாம் காதலில் அது என்ன சிறந்தது... நல்லது...
யார் காதல் பெரியது எனப் பேசுவது எல்லாம் முட்டாள்தனமானது என...
அது சூழ்நிலைகளை பொறுத்தது... அவர்கள் எண்ணங்களை பொறுத்தது....

கண்டிப்பாக இது மாதிரி ஒப்பிட்டு பார்ப்பது சரியாக இருக்காது...

ஆனாலும் என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை... என் சகோதரருக்கு சிவகாமி , மாமல்லர் மீது வைத்த காதல் சிறந்தது என்ற எண்ணம் உண்டு. எனக்கு எப்பொழுதும் இதில் மாற்றுக் கருத்து உண்டு..

சிவகாமிக்கு எப்பொழுதுமே மாமல்லர் மீது ஒரு சந்தேகம் இருக்கும்... சந்தேகம் என்பதை விடச் சின்ன நம்பிக்கையின்மை இருந்து கொண்டே இருக்கும். அதை கல்கி மிகவும் அழகாக எழுதியிருப்பார் ... சிவகாமியோ ஒரு சிற்பியின் மகள்... மாமல்லரோ இளவரசர்...

நிறைய திரைப்படங்களில் இதுதான் கதையே... சாதாரண மனிதர்கள் இதைப் பொருந்தாத காதல் எனக் கூறுவார்கள்.. ஆனால் சிவகாமியின் சபதத்தில் பிரச்சினை என்னவேனில்... சிவகாமியே அப்படி நினைப்பதுதான்.

இதனால் அவள் பல சமயங்களில் மற்றவர்களின் சொல்லை கேட்டு விட்டு மாமல்லரை சந்தேகிப்பது மற்றும் சண்டையிடுவது... அவர்கள் காதல் மீது அவளுக்கு முழுமையான நம்பிக்கை இல்லையோ எனத் தோன்றுகிறது.பல நேரங்களில் வீணாக மிகவும் மனம் வருத்தம் அடைவது. அதனால் தவறான முடிவுகள் எடுப்பது.

சாதாரண சிற்பியின் மகள் இளவரசர் மீது ஆசைப் படலாமா என அடுத்தவர்கள் நினைக்கலாம் ஆனால் ஆசை வைத்தபின்பு மேலும் இளவரசரே அதை ஏற்றுக்கொண்ட பின் ... குழப்பத்திலே இருப்பது ஒருவித தாழ்வுமனப்பான்மையை சிவகாமி கொண்டிருப்பதை காட்டுகிறது..

நீங்கள் சொல்லலாம்.. சிவகாமியின் சூழ்நிலைதானே காரணம் என...
அதை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

இளவரசரை மணந்து பிற்காலத்தில் அரசியாகப் போகிறவர்களுக்கு மனதைரியம் இருக்க வேண்டும்.. என்னைப் பொறுத்தவரை நல்லவேளை மாமல்லர், சிவகாமியை மணக்கவில்லை (கதையை வாசித்தவர்களுக்கு மணக்காத காரணம் தெரிந்து இருக்கும்)

மணந்திருந்தாலும் சிவகாமி ஒருவித தாழ்வு மனநிலையோடவே வாழ்ந்திருப்பார்.. மாமல்லரின் மனம் மணக்காததால் வேதனைப் பட்டதை விட மணந்திருந்தால் அதிகம் வேதனை அடைந்திருக்கும் என்பது என் கருத்து....

சரி இப்பொழுது இளங்கோ ... ரோகிணி காதலுக்கு வருவோம்... என் சகோதரர் கேட்கிறார் ஏன் அவர்கள் இருவரும் சண்டையிட்டு கொள்ளவில்லையா... சந்தேகப் படவில்லையா என்று.

சிவகாமியின் காதலுக்கும், ரோகிணியின் காதலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ரோகிணியின் மனதில் நடப்பது பாசப்போராட்டம்.
அவள் காதலிப்பதோ எதிரி நாட்டு இளவரசனை. தன் தந்தையை போரில் தோற்க்கடித்தவனை . நன்றாகக் கவனித்தால் புரியும். இன்றும் நமது பெண்கள் சந்திக்கும் பிரச்சினைதான் ரோகிணிக்கும்..  பிறந்த வீடா... காதலனா (புகுந்த வீடா)...

அவளோ தன் காதல் மீது எப்பொழுதுமே சந்தேகப்படவேயில்லை.. அருள்மொழி மற்றும் இளங்கோ உறவு பற்றி அறிந்தாலும் அதையும் அவள் தன் காதலையும் குழப்பிக்கொள்ளவில்லை

அவள் தன் குடும்பத்திற்கும்... காதலுக்கும் இடையே மட்டும்தான் சிக்கிக்கொண்டு தவித்தாள். மேலும் அதனால் உணர்ச்சிவசப்பட்டுத் தவறு செய்தாலும் அதையும் தானே திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறாள்.

இறுதியாக :

கல்கியே சிவகாமியைப் பத்தி நன்றாகப் புரிந்து கொண்டதாலோ என்னவோ.. மாமல்லருடன் அவளைச் சேர்த்து வைக்கவில்லை
ஆனால் அகிலனோ, ரோகிணி மற்றும் அருள்மொழி இருவரையும் இளங்கோ திருமணம் செய்வதாகக் கதையை முடித்துள்ளார்.