Sunday 15 September 2019

ஒரு புளியமரத்தின் கதை



                       ஒரு புளியமரத்தின் கதை - சு.ரா



சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை நாவல்தான் நான்  வாசித்த தமிழ் இலக்கியத் தரம் அளவுக்குள் வரும் முதல் நாவல். அது என்ன அளவுகோல் எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. ஒரு புளியமரத்தின் கதைதான் சு.ராவின் முதல் நாவல் கூட. இதனை சில வருடங்களுக்கு முன்பே வாசித்து விட்டேன். பொதுவாக கல்கியின் சரித்திர நாவல்களைத் தவிர எந்த நாவலையும் பலமுறை வாசித்தது கிடையாது. நாகர்கோயில் வேப்பமூடு ஜங்ஷன் கதை என்பதும் தற்போது மிகவும் பழக்கப்பட்ட இடமாக இருப்பதும் மற்றொருமுறை வாசிக்கத் தூண்டியது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்த போது நடக்கும் கதை. புளிக்குளத்தின் மத்தியில் நிற்கும் புளியமரத்தை மையப்படுத்தி, அதனின் வாழ்தலும், வீழ்ச்சியும்தான்  கதையின் களம். புளியமரம் தன்னை சுற்றியுள்ள மனிதர்களின் சூழ்ச்சிகளையும், சுயநல போக்குகளையும் எதுவும் செய்ய முடியாமல் மெளனசாட்சியாய் நின்று நோக்குகிறது. முதலில் புளியமரத்தின் பழங்கதையினை  தாமோதர ஆசான், ஆசிரியரிடம் கூறுவது போலவும் பின்பு பிற்கால கதையை, ஆசிரியர் அவரின் பார்வையில் கூறுவது போலவும் உள்ளதது. ஆசானின் ஆர்ப்பாட்டமாய் கதைசொல்லும் பாணி, செல்லத்தாயின் மரணம், ஆசான் தனது சமயோசித புத்தியால் மரத்தை வெட்டாமல் காப்பாற்றுவது  என இதர நாவல்களை விடத் தனித்துப் பயணிக்கும் கதைக் களம் பின்பு இரண்டு வியாபாரிகளின் தொழில் போட்டி, தகராறு எனக் கொஞ்சம் இயல்பான நடைக்கு வந்தது விட்டது போல் எனக்குத் தோன்றியது. இது என்னுடைய பிரத்தியேக அனுபவம்தான். ஏன் எனில் சிலர் சண்டைக்கு வந்து விடலாம் நாவல் தொட்டிருக்கும் இலக்கியச் சிகரங்களையும், அதனுள் விவரிக்கப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் ஆழம் பற்றி ஆராயும் தகுதி  உனக்கில்லை என.

புளியமர  ஜங்ஷனில் கடைகள் வைத்திருக்கும் தாமு மற்றும் அப்துல் காதருக்கும் சிறு சிறு பொறியாகக் கிளம்பும் பகை பின்பு சிலரின் தூண்டுதலால் பெரிதாகி எவ்வாறு அந்தப் பகுதியின் அமைதியின்மைக்கே காரணமாகிறதென்றும், இரு தனி மனிதர்களின் தொழில் போட்டிப் பொறாமை எவ்வளவு தூரம் மதப் பிரச்சினையாகவும், அரசியலாகவும் உருவாக்கப் படலாம் என்பதனைக் காண்கிறோம். இடையில் பத்திரிக்கைகளின் ஒரு சார்ப்புத் தன்மை, ஜாதி மற்றும் மத ஓட்டு வங்கி அரசியல் எனச் சம காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. எதிர்த் தரப்பு புளியமரத்தை வெட்டத் திட்டம் தீட்ட, தாமு தரப்போ இரவோடு இரவாக மரத்தை சாமியாக்கி விடுகிறது. கடைசியில் மனிதர்களின் சுயநல சூழ்ச்சிகளுக்கு  முன்னால் எப்படி இயற்கை (புளியமரம்) போராட முடியாமல் தோற்றுப் போகிறது என்பதே சோகமான முடிவு. இன்று வரை புளியமரம் ஜங்ஷன் என்ற பெயர் மட்டும் மாறாமல் இருப்பது, ஆசானுக்குக் கிடைத்த சின்ன வெற்றியாக இருக்கலாம்.

நாவலில் உள்ள சில தகவல்கள் எனக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அப்போது இங்குள்ள M.L.A சட்டமன்ற கூட்டத்தில் கலந்தது கொள்ள திருவனந்தபுரம் செல்வது.  ராணித்தோட்டம் (மேற்றி ராணியார்) இடத்தின் பெயர்க் காரணம். மருத்துவா மலையின் சாரலில், அந்த காலத்தில் பறையன் குன்று எனச் செம்மண் குவிந்து கிடந்ததாம். அந்த மண்ணைக் கொண்டுதான் புளிக்குளத்தை நிரப்பி புளியமரத்தைச் சுற்றி ரோடு போட்டார்களாம். பின்பு குளத்தின் அருகிலிருந்த காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டு நகரப் பூங்காவாக மாற்றப்பட்டதாம். நாகர்கோயில் நகரத்துடன் சிறுவயதிலிருந்தே தொடர்பு இருந்தாலும் ஒருமுறை கூட நான் அந்த பூங்காவிற்குச் சென்ற ஞாபகமில்லை. 


இறுதியாக :

வேப்பமூடு ஜங்ஷன் என்று இன்றும் நாகர்கோவிலில் சொல்லப்படும் இடமே நாவலில் வரும் புளியமர ஜங்ஷன். புளியமரம் என்பது எங்கள் ஊரில் நிற்கும் வேப்பமரம் என சு.ரா வே தன்னுடைய ஐந்தாவது பதிப்பின் முன்னுரையில் கூறியுள்ளார். கதையின் வசதிக்காக வேப்பமரத்தை சு.ரா, புளியமரமாக அதனை மாற்றி இருக்கலாம். வேப்பமரம் எனில் காய்களைக் குத்தகைக்கு விடுதல், தோட்டிகள் கல்லெறிந்து காய்களைக் கவர்வது போன்ற நிகழ்வுகளை நாவலில் வைக்க முடியாதே.

Wednesday 11 September 2019

கோவேறு கழுதைகள்



                              கோவேறு கழுதைகள் - இமயம்


சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்பு இமயம் எழுதிய நாவல். அவரின் முதல் நாவல். படித்த, இன்றைய நகரத்து மக்களின் பார்வைகளுக்கு எட்டாத ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் இலக்கியம். கொஞ்சம் பொறுமை தேவை நாவலை வாசித்து அதனுடன் பயணிக்க. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை என்பதை விட ஒதுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை சூழ்நிலை எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும். நான் அவ்வாறு சொல்லக் காரணம் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட காலணிக்கும் அப்பால்,
காலணிவாசிகளாலும் ஒடுக்கப்படும் 
வண்ணான்களான சவுரி, ஆரோக்கியம் தம்பதியினரின் வாழ்வின் சில பக்கங்கள்தான் கோவேறு கழுதைகள் நாவல். கதையின் நாயகியான ஆரோக்கியமே நாவல் முழுவதும் நிறைந்திருக்கிறாள். 

அவர்களுக்கு மிகவும் இயல்பாகி விட்ட, அவர்களின் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள்,  இந்த காலகட்டத்தில் நாவலை வாசிக்கும் யாவரையும் அதிரவைக்கும். சாவு, சடங்கு, திருமணம், பேறுகாலம் என காலணி மக்களின் ஒவ்வொரு நிகழ்விலும் அவர்கள் நிறைந்து இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியமோ (சோறு, தானியம்....) அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மிகவும் சொற்பமாக உள்ளது. பகலில், ஊரில் உள்ள வீடுகளுக்குச் சென்று அழுக்குத் துணிகளை வாங்கி வந்து வண்ணான் குட்டையில் துவைக்கிறார்கள் (தொரப்பாட்டை). இரவில் அதே வீடுகளுக்குச் சென்று, மிச்சம் மீதி உள்ள சாப்பாட்டை வாங்கிவந்து சாப்பிடுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்த வாழ்க்கை அவர்களுக்கு இயல்பாகிப்போனதும், இதிலிருந்து விலகி வேறு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு கூட  தோன்றாத அளவுக்கு இந்த அடிமைத் தன்மை அவர்கள் வாழ்வாகவே மாறியிருப்பதுமான அவலம்தான் நாவலின் அடிநாதம். 

ஆரோக்கியம், சவரி, மேரி, சகாயம்  ஆகியோரின் பாத்திரங்கள் நம் கண்முன்னே நிற்கிறது. அதுவும் ஆரோக்கியம் அடிக்கடி சொல்லும் "வண்ணாத்தி மவ வந்திருக்கிறேன் சாமி",  "இந்த வண்ணாத்தி மகளை மறந்திடாதீர்கள் சாமி"  வார்த்தைகள் நாவலைப் படித்து முடித்த பின்பும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தோனியார் கோவிலுக்குச் செல்ல கொஞ்சம் பணம் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் உச்சக்கட்ட லட்சியம். மேரி, பாலியல்ரீதியான துன்பம் அனுபவித்து, அதனை ஆரோக்கியம் மட்டும் மேரி அணுகும் முறையைப் படிக்கும் போதே மனம் கசிகிறது. ஆரோக்கியம் தன்னுடைய இயலாமையை நினைத்து எப்பொழுதும் அழுது கொண்டே இருப்பது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் அவர்களின் நிலைமை அதனை நியாயப்படுத்தவும் செய்கிறது. 

சவரி சின்னப் பிள்ளையாக இருந்தபோது 'ஒலவத்துல சண்ட ஆரம்பிச்சிக்கிச்சி' என்று மீசை முளைக்காத, படிக்கத் தெரியாதவர்களையெல்லாம் இழுத்துப் போனார்கள். அவன் எப்போதாவது உலகச் சண்டை பற்றி நினைப்பான். 'இந்த ஊருக்கு வெளுக்க ஆள் இல்லாமல  பூடுமே!' என்று வருந்துவான். இந்த வரிகளைப் படிக்கும் போது சவரியின் அப்பாவித்தனத்தை நினைத்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. 

வேலை எதுவும் செய்யாமல் மினுக்கிக் கொண்டு இருக்கும் மருமகள் சகாயத்தை ஆரோக்கியத்துக்குப் பிடிக்கும். சமயம் கிடைக்கும் போது எல்லாம் சகாயத்தின் தோலின் நிறம், வடிவம், முடி  பற்றியெல்லாம் ஊராரிடம் பெருமையாகச் சொல்லுவாள். ஆனால் தனக்குப் பிடித்திருக்கும் விசயம் சகாயத்திற்க்குத் தெரிந்துவிடுமோ அஞ்சியே சில நேரம் அவளிடம் சண்டை போடுவாள். இந்த வரிகள் எனக்குத் தெரிந்த ஒருவரை ஞாபகம் வரச் செய்தது. சிறுவயதில் நானும் இவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்திருந்தாலும் நிகழ்வுகள் அதிகம் ஞாபகம் இல்லை. 


இறுதியாக:

பொதுவாக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை கதையின் நாயகர்களாக நாவல்களில் முடிவிலோ அல்லது இடையிலோ  அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தீர்வாக ஆசிரியர் தன் புரட்சிக் கருத்துக்களைப் புகுத்தி விடுவார். அதுவே அரசியலாக்கப் பட்டுவிடும். அவ்வாறு ஏதுவும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக  நாவலை முடித்து இருப்பது மாறுபட்டு உள்ளது. எனினும் அவர்களது பிள்ளைகள் இந்த வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் வழியைத் தாமே அமைத்துக் கொள்வதாகச் சித்தரித்திருந்தது இந்த அவலங்களுக்கு நேர்மையான ஒரு தீர்வை முன்வைப்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.