Monday 14 October 2019

பள்ளிகொண்டபுரம்



               பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன்



நீல. பத்மநாபன் எழுதிய தலைமுறை நாவலை வாசித்த பின் அவர் எழுதிய பள்ளிகொண்டபுரம்  நாவலை வாங்கினேன். ரொம்ப பெரிய ஆர்வம் இல்லாமல்தான் வாசிக்கத் தொடங்கினேன்... ஆனால் வாசிக்க ஆரம்பித்த பின் நாவலைக் கீழே வைக்க மனமில்லை. நாவலின் நடை என்னைக் கட்டிப்போட்டு விட்டது. கதையின் களம் திருவனந்தபுரத்தின் தெருக்கள் மற்றும் கோவில்கள்தான்.  ஆவூரின் பின்னணியில் முழுக்க முழுக்க கொஞ்சம் மலையாளம் கலந்தது எழுதப்பட்டாலும் திருவனந்தபுரம் என்ற பெயர் நாவலின் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

பள்ளிகொண்டபுரத்தில் வாழும் அனந்தன் நாயர் வாழ்க்கையின் கடைசி இரண்டு பக்கங்கள்தான் கதை. அந்த இரண்டு நாட்களிலும் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவர்களுக்கிடையேயான உரையாடல்களில் அவரது வாழ்க்கையின் மற்ற  பக்கங்கள் நினைவுடாக வருகிறது. தலைமுறை நாவலிலும் கதையை நாயகன் திரவியத்தின் எண்ணங்களின் வழியாகவே  நகர்த்தியிருப்பார் நாவலாசிரியர்.  பள்ளிகொண்டபுரம் அதனை விடச் சிறப்பாக அனந்த நாயரின் மனவோட்டத்தை, அவரின் பார்வையிலே சொல்லுகிறது. அனந்த நாயரின் ஐம்பதாண்டுக் கால வாழ்க்கை ஊடாக முன்பின்னாக சொல்லப்படுகிறது. அவர் சந்திக்கும் மனிதர்களைத் தொடர்புப் படுத்தி நிகழ்கால மற்றும் இறந்தகால சம்பவங்கள் மாறி மாறி வருவது சிலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனக்கு அந்த நடைதான் சுவாரசியத்தைக் கொடுத்தது.

திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் சாதாரண குமாஸ்தா வேலையில் இருக்கும் அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயினி பேரழகி.  சமஸ்தானத்தில் உயர்பதவியிலிருக்கிற விக்கிரமன் தம்பி, அவளுடைய அழகில் மயங்கி மோகம் கொள்கிறான். அதனால் அனந்தன் நாயரின் வாழ்க்கையில் வீசும் சூறாவளியே கதையின் ஆணிவேர். பார்க்க மிகவும் சாதாரண கதை போல் தோன்றினாலும் வாழ்வியலை ஆசிரியர் மனிதர்களின் அகமன இயக்கத்தைக் கொண்டு அலசும் விதம் அதியற்புதம்.

தன் இயலாமையின் கோபங்களை எல்லாம் சராசரி மனிதர்கள் பொதுவாக தன் குடும்பத்தினர் மீது காட்டுவார்கள். அதுபோல்  கார்த்தியாயினின் அழகும், விக்கிரமன் தம்பியை எதிர்க்க முடியாத இயலாமையால் உண்டான பயமும், கோபமாக மாறி கார்த்தியாயினிடம் எப்பொழுதும் சண்டையிடுகிறார். ஒரு கட்டத்தில் அவரையும், பிள்ளைகளையும் விட்டு அவள் விக்கிரமன் தம்பியுடன் சென்று விடப் பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்க்கிறார். ஒரு சராசரி மனிதன் எப்படியெல்லாம் சிந்திப்பானோ அப்படிதான் அனந்தன் நாயரும் சிந்திக்கிறார். மனைவி கார்த்தியாயினியின் செயலை பாவமாகவும், பிள்ளைகளை வளர்க்கக் கஷ்டப்படும் தன் வாழ்க்கையைத் தியாகமாகவும் கருதுகிறார். ஆனால் கடைசியில் அம்மாவின் தற்போதைய செல்வாக்கு மூலம் லாபம் அடைய நினைக்கும் மகனின் செய்கையால் மனம் உடைந்து போகிறார். 

நாவல் தொட்டிருக்கும் இன்னொரு உச்சம்,  மாற்றங்களை மனித மனம் எப்படி ஏற்றுக்கொள்ளத் தடுமாறுகிறது என்பது. பழைய பஞ்சாங்கமான சாதிப்பெருமைகள், அரசியல், குடும்ப உறவுச் சிக்கல்கள் எனச் சகலமும் அனந்தன் நாயரின் கண்முன்னே மாறிக் கொண்டிருக்க அதையும் எதிர்கொள்ள முடியாமல் தவிர்க்கிறார் . அவரை போலவே அந்த நகரமும், மற்றவர்களும் தவியாய் தவிப்பதைக் கதையின் ஓட்டத்தினிலே அருமையாக எழுதியுள்ளார் நாவலாசிரியர். 

நாவலின் முடிவு மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் மேலும் அவர் மனதைக் கிளறப் போகும்  சூழ்நிலைகளிலிருந்து ஒரு வழியாகத் தப்பித்துக் கொண்டார் என ஒருவித ஆறுதலும் அளித்தது. ஒரு சாமானியன் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று என்னும் போது ஏற்படும் சுயவெறுப்பும், அதனால் தோன்றும் எல்லையற்ற மனநாடகங்களும் இத்தனை கூர்மையாக இதுவரை நான் வாசித்த எந்த நாவலிலும் வெளிப்பட்டதில்லை. 


இறுதியாக :

தமிழில் எழுதப்பட்ட முதல் நனவோடை உத்தி ( Steam of Conscious) நாவல் என ஒரு குறிப்பில் படித்தேன். எப்படி இந்த நாவல் விருதுகளின் பட்டியல்களிருந்து விடுபட்டுப் போனது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது . இது ஒருமுறை வாசித்து விட்டு மறந்துவிடும் வெறும் நாவல் அல்ல, அனந்தன் நாயர் ஒருவகையில் நமக்குள் இருக்கும் ஒரு சாதாரண மனிதனையே  பிரதிபலிக்கிறார். நம்முடைய குரூரமான மனதுக்கும் அதை நியாயப்படுத்துகிற எண்ணங்களுக்குமான போராட்டத்தை  எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் சொல்லும்  மிகச்சிறந்த படைப்பு.


Wednesday 2 October 2019

வெற்றித் திருநகர்



                     வெற்றித் திருநகர் - அகிலன்





மீண்டும் ஒரு அகிலனின் சரித்திர நாவல் . பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வாங்கி வாசித்த நாவல். கிருஷ்ணதேவராயரின் விஜயநகர பேரரசு மூலம் எவ்வாறு நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் தென்னாடு (தற்போதைய தமிழ்நாடு) வந்தது என்பதுதான் நாவலின் முடிவு. அப்போ தொடக்கம்😀.

லாகூர் சுல்தான் தெளலத்கான், காபூலிலிருந்து பாபரை டெல்லி மன்னர் இப்ரஹிம் லோடிக்கு  எதிராகப் படையெடுத்து வர அழைக்கும் காலகட்டத்தில் தென்னிந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளை விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆட்சி செய்து வருகிறார். அவரை தீர்க்க தரிசனம் நிறைந்தவராக, பரத கண்டத்தின் பெரும்பான்மையான சிற்றரசர்களின் ஒற்றுமையின்மையால், அந்நியர்கள் நுழைந்து அதனால் பிற்காலத்தில்  ஏற்படப் போகும் மாற்றங்களையும், பாதிப்புகளையும் நினைத்துக் கவலை கொள்ளும் மன்னராகச் சித்தரித்து உள்ளார். மொகலாயர்களின் படையெடுப்பைத் தடுக்க அண்டை நாடுகள் அனைத்தையும்  கூட்டுச் சேர எடுக்கும் முயற்சிகளுக்கு  அவரின் அவையில் உள்ள அமர நாயக்கர்களே (பிரபுக்கள்) முட்டுக்கட்டை போட்டு விடுகிறார்கள்.

வீரசோழரால் பாதிக்கப்படும் பாண்டியர்களுக்கு உதவி செய்யச் சென்ற விஸ்வநாதனின் தந்தை நாகம நாயக்கர், அமைச்சர் சாளுவ நரசிம்மரின் சொல்லைக் கேட்டு சந்திரசேகர பாண்டியனிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுக்கிறார். அதனால் கோபம் கொள்ளும் ராயர், விஸ்வநாதனையே தந்தைக்கு எதிராகப் போர் செய்ய அனுப்புகிறார். கிருஷ்ணதேவாரயருக்கு பின்பு விஜய நகரச் சாம்ராஜ்யம் சிதைந்து விடும் என நினைக்கும் அமைச்சர் சாளுவர்,  அதனால் மதுரை மற்றும் தஞ்சை பகுதிகளை உள்ளடக்கிய தனி சமஸ்தானத்தை உருவாக்கி தன் மருமகனை அதற்கு மன்னராக்க சில சதிகளைச் செய்கிறார். ஆனால்  அவர் செய்யும் சதிகள் எல்லாம் நாவலில் பெரிய திருப்பத்தையோ அல்லது எந்தவித பதைபதைப்பையோ ஏற்படுத்தவில்லை. எனவே நாவல் ஒரே நேர்க்கோட்டில் அதிக சுவாரசியத்தைத் தராமல் பயணிக்கிறது.  சாளுவரின் மகள் இலட்சுமியும், விஸ்வநாதனும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். அந்த  ஈர்ப்பு மற்றும் சேரமன்னன் உதயமார்த்தாண்டனுக்கு இலட்சுமி மேல் உள்ள  ஆசையைப் பகடைக்காயாய் பயன்படுத்தி தன் இலக்கை அடைய முயல்கிறார். கடைசியில் இலட்சுமியை மணக்கக் கூடாது என விஸ்வநாதனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு இறப்பது ஒன்று மட்டும்தான் கொஞ்சமாவது உருப்படியான வில்லத்தனமாக உள்ளது.

நாவல் முழுவதும் மன்னர் ராயரின் எண்ணமாக ஒற்றுமையான தேசம், இந்து முஸ்லீம் மதநல்லிணக்கம் எனப் பல கருத்துக்களைப் போட்டுத் திணித்து உள்ளார். கொஞ்சம் ஓவர் டோஸ் ஆன மாதிரி இருந்தது. இந்தியாவின் மீது சீனா படையெடுத்த சுழலும், பாகிஸ்தானின் தொல்லைகளும் அகிலனிடம் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தினால் வெற்றித் திருநகர் நாவலை எழுதினாராம். ஆனால்  வாசித்த எனக்குள், வெற்றித் திருநகர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிஜம்.


இறுதியாக :

கிருஷ்ணதேவராயரின் கதை எனினும் உடனே நமக்கெல்லாம் நினைவுக்கு வரும் தென்னாலிராமன் பத்தி ஒரு குறிப்புகள் கூட நாவலில் இல்லை. மேலும் அவரின் புகழ்பெற்ற அமைச்சர் அப்பாஜி(திம்மரசு), நாவலின் தொடக்கத்திலே இளவரசரைக் கொன்ற குற்றத்திற்காகத் தன் குடும்பத்தினரோடு சிறையில் இருப்பதாக வருகிறது.