Saturday 28 March 2020

18வது அட்சக்கோடு



              18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்



பிரபல எழுத்தாளர்களின் ஒரு நாவலையாவது வாசித்து விட வேண்டும் என்ற ஆவலில் வாங்கியதுதான் இந்த நாவலும். வரும் காலங்களின் அசோகமித்திரனின் இதர நாவல்களையும் வாசிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். 

இந்தியா சுதந்திரம் அடையப் போவதற்குக் கொஞ்சம் முன்னால் தொடங்கும் கதை, சுதந்திரம் பெற்ற கொஞ்சக் காலத்துடன் முடிவடைகிறது. நிஜாம்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும்  சிக்கந்தராபாத் வீதிகளில்தான் கதை நகர்கிறது. கதைநாயகன் சந்திரசேகரனின் தந்தை ரயில்வேவில் வேலை செய்வதால் அவர்களது குடும்பம் ரயில்வே குடியிருப்பு குவார்ட்டர்ஸில் வசிக்கிறார்கள். சந்திரசேகரன் அருகில் உள்ள கல்லூரியில் படிக்கிறான். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் இணைய அல்லது தனித்து இயங்க நினைக்கிறார் அதனால் அந்த  நகரத்தில் நடந்த அரசியல், சமூக மாற்றங்களைச்  சந்திரசேகரனின் அனுபவமாக ஆவணப்படுத்துகிறார் ஆசிரியர். 

காந்தி சுட்டுக் கொல்லப் பட்ட போது அதனை முழுவதுமாக தெரிந்து கொள்ளச் சந்திரசேகரன் மனம் படும் பாடு , அரசியல் சூழ்நிலைகள் , மதக் கலவரங்கள் எப்படி மனித மனங்களில் மெல்லிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அதனால் தோன்றும் மனமுறிவுகள்  சமூகத்தில் விளைவிக்கும் தாக்கத்தினை   மிகவும் நுட்பமாகச்  சித்தரித்துள்ளார். 

பொதுவாக ஒரு நாட்டில் நிகழும் அரசியல் மாற்றங்கள், அதன் பின்னணிகளும் சாதாரண மக்களுக்குப் புரிகிறதா?, அவர்களில் பார்வையில் அவை எப்படிப் பார்க்கப்படுகிறது?  தீடிரென்று நடக்கும் வன்முறைகளையும் உயிர்ப்பலிகளையும் சாதாரண மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?? என்கின்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் நாவல்தான் 18வது அட்சக்கோடு. அதுவும் நாவலின் முடிவில் வரும் நிகழ்வு மனதைப் பிசைவதாக வன்முறையும் தாக்கங்களும் சாதாரண மக்கள் அதில் பங்கு கொள்ளாவிடினும் ஒன்றும் அறியா அவர்களையே  மிகவும் பாதிக்கிறது என்பதை உணர்த்துகிறது. 

கிரிக்கெட் விளையாடப் போவது, Chemistry Practical உப்பு கரைசலைக் கண்டுபிடிப்பது, குடும்பமாக சினிமா பார்க்கச் செல்வது , ஜோசியரின் வரவு, அறிந்த பெண்களால் ஏற்படும் மனத் தடுமாற்றம், போர்க்காலத்தில் கடலை எண்ணெயில்  பஸ்ஸை இயக்குவது என அங்கங்கு மெல்லிய நகைச்சுவை  சூழ்நிலையோடு கதை நகர்வது, நாவலை வாசிக்க அலுப்பைத் தரவேயில்லை. 

இறுதியாக :  

   கடைசியாக வாசித்த இரு நாவல்களும் கொஞ்சம் தொடர்பு உள்ளவைதான். சாமானிய மனிதர்களில் பார்வையில் இந்தியா சுதந்திரம் அடைந்த  கால கட்டத்தில் நடந்த சம்பவங்களைக் கூறுகின்றன. ஆனால் கதை நடக்கும் தளங்கள் தான் முற்றிலும் வேறு. புயலிலே ஒரு தோணி ஆசிரியர் சிங்காரமும்,  அசோகமித்திரனும் அந்த களங்களில் அச்சமயங்களில் வாழ்ந்தவர்கள்  என்பது நாவலின் நெருங்கிய உண்மைத் தன்மைக்கு வலு சேர்க்கிறது.

Friday 20 March 2020

புயலிலே ஒரு தோணி



               புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்



சிறு வயதிலேயே நாவல்களை வாசிக்க ஆரம்பித்து விட்டாலும் பொதுவாகக் கிடைத்த அல்லது தெரிந்த நாவல்களை மட்டுமே வாசித்து வந்தேன். கொஞ்சக் காலமாகத் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். அந்த தேடுதலில் கிடைத்த ஒரு நாவல்தான் புயலிலே ஒரு தோணி. நாவலாசிரியர் ப.சிங்காரம் மொத்தம் இரண்டே நாவல்கள்தான் எழுதியுள்ளார். அவரின் முதல் நாவல் கடலுக்கு அப்பால். புயலிலே ஒரு தோணி அவரின் இரண்டாவது நாவல். வெளிவந்த காலகட்டத்தில் அதிகம் கவனிக்கப் படாமல் இருந்த இந்நாவல் இப்பொழுது பலரால் வாசிக்கப்பட்டு சிறந்த நாவலாகப் பரிந்துரையும் செய்யப்படுகிறது.


இரண்டாவது உலகப் போர் நிகழந்தக் காலத்தையொட்டி இந்தோனேசியா, மலேசியா பிரதேசத்தில் நடந்த சில சம்பவங்களின் கதைத் தொகுப்புதான் புயலிலே ஒரு தோணி. ஆசிரியர் இரண்டாவது உலகப் போர்க் கால கட்டத்தில் அந்த பிரதேசங்களில் வாழ்ந்தது வந்ததால் அவர் பார்த்து, கேட்டதை நாவலாக வடிவமைத்துள்ளார். வாசிக்க ஆரம்பித்தவுடன் அதில் வரும் கதைமாந்தருக்கேற்ப வேற்று மொழிச் சொற்கள் கலந்து வரும் மொழி நடையை அறிந்து, புரிந்து உள்ளே செல்வதற்குள் கண்ணில் தண்ணியே வந்து விட்டது ஆனால் செல்லச் செல்ல கதையின் போக்கில் நாம் செல்ல அது ஒரு தடையாகவே தெரியவில்லை. 

மதுரை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பாண்டியன் இந்தோனேசியாவில் கெர்க் ஸ்ட்ராட்  நகரத்தில் காதர் மொய்தீன் ராவுத்தரிடம் கிளார்காக வேலை செய்கிறான். வியாபாரம் விசயமாக மலேசியாவின் பினாங் செல்லும் அவன் அங்கு தன் நண்பர்களுடன் நேதாஜியின் I.N.A வில் சேருகிறான். அதில் நடக்கும் சில தவறுகளைத் தட்டிக் கேட்கும் அவனுக்குத் தண்டனை அளிக்கப் படுகிறது. ஆனால் I.N.A வின் கர்னல்,  பாண்டியன் மீது நம்பிக்கை வைத்து ஒரு முக்கியமான காரியத்தை ஒப்படைக்க அதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறான். இரண்டாம் உலப்போரில் ஜப்பானின் தோல்வி மற்றும் நேதாஜியின் திடீர் மரணம் I.N.A வில் சரியான தலைமை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலானவர்கள் அதிலிருந்து பிரிந்து அவரவர் பழைய தொழிலைப் பார்க்கத் திரும்புகிறார்கள்.  ஊருக்குத் (இந்தியா) திரும்ப முடிவு செய்து அதற்கு முன்பு தன் நண்பர்களை எல்லாம் கடைசியாக  ஒருமுறை காண இந்தோனேசியா வரும் பாண்டியன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் டச்சு படைகளுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். பின்பு தன் வாழ்வின் அபத்தத்தை உணர்ந்து மீண்டும் ஊருக்குத் திரும்ப முடிவு செய்கையில் என்னவாகிறான் என்பதே கதை.

நாவலில் ஆங்காங்கே தெரிந்து கொள்ளவேண்டிய இரண்டாம் உலகப் போரின் போக்கு, ஹிட்லரின் ரஷ்ய படையெடுப்பு, ஜப்பானின் போர்த் தந்திரங்கள், அந்தகால மதுரை, சின்னமங்கலம் கடை வீதி என வரலாற்றின் குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்களை இடையிடையே அருமையாகப் பயன்படுத்தியுள்ளார். புலம் பெயர்ந்து பிழைக்கச் சென்ற மக்களின் மனநிலையை கண்முன்புக் கொண்டு நிறுத்துகிறார். கதை மாந்தர்களுக்கு இடையேயான ஆரோக்கிய விவாதங்கள் வழியாக ஆசிரியர் சிங்காரம் தன் கருத்துக்களைப் பாண்டியனின்  குரலாக ஒலிக்கிறார். 

தமிழ் மக்கள் முன்னேற முதல் வேலையாக "பொதிய மலை போதை" யிலிருந்து விடுபடவேண்டும். அதுவரையில் முறையான மேம்பாடு முயற்சிகளுக்கு வழி பிறக்காது. "திருக்குறளைப் பார்! சிலப்பதிகாரத்தைப் பார்! தஞ்சைப் பெரிய கோவிலைப் பார்! காவேரிக் கல்லணைப் பார்!" என்ற கூக்குரல் இன்று பொருளற்ற முறையில் எழுப்பப் படுகிறது. 

பொதுவாகத் தமிழர்களுக்கு உலக வரலாற்றுப் பயிற்சி முக்கியம். பெரிய கோவிலுக்கும் கல்லணைக்கும் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஃபேரோ மன்னர்கள் பிரமித்கோபுரங்களைக் கட்டிவிட்டனர். பாபிலோனியர், எப்போதும் நீர் நிறைந்த அகன்ற யூபிரத்தீஸ் நதிக்கு அடியில் பதினைந்து அடி அகலமும் பன்னிரண்டு அடி உயரமும் கொண்ட சுரங்கப் பாதை ஒன்று அமைத்திருக்கிறார்கள்......  இது போன்ற சமூக அக்கறையுள்ள  பல விவாதங்கள்  நடக்கிறது. 


இறுதியாக : 

ஆரம்பத்தில்  வாசிக்கக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மற்ற நாவல்களிருந்து  முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் , கதை மாந்தர்கள், கதை சொல்லும் பாங்கு என மிக நுட்பமாக வரிக்கு வரி படிக்க வேண்டிய நாவல். இது வரை கிடைக்காத வாசிப்பனுபவத்தோடு அறிந்திராத சுவாரசியமான அனுபவ பயணத்தைப் படித்த பெரும் திருப்தியைத் தரவல்லது புயலிலே ஒரு தோணி நாவல். 

Tuesday 3 March 2020

விஷ்ணுபுரம்



                             விஷ்ணுபுரம் - ஜெயமோகன்



ஜெயமோகன் பற்றி நிறையக் கேள்விப்பட்டாலும் அவரின் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சயம் கிடையாது . சரி எதாவது ஒரு நாவலை வாசிக்கலாம் என முடிவு செய்து கொஞ்சம் மார்க்கெட்டிங் செய்யப்பட்ட (அவரால் அதிகமாகவே) விஷ்ணுபுரத்தை வாங்கினேன். ஆனால் வாங்கிய பின் சில ஆண்டுகளாக என் புத்தக அலமாரியிலே தூங்கியதை எப்படியாவது  வாசித்து விட வேண்டும் என்று ஆரம்பித்து விட்டேன்.  ஸ்ரீபாதம், கெளஸ்துபம், மணிமுடி என மூன்று பாகங்களைக் கொண்ட பெரிய நாவல். ஆனால் சில பக்கங்கள் தாண்டுவதற்குள்ளே முட்டி மோத வேண்டியது ஆகி விட்டது. முழுவதுமாக வாசித்து விடுவேனா என்ற வினா மனதில் எழுந்து  வாசிக்காமல் வைத்து விடலாமா என நினைத்தேன் ஆனால் இந்த முறை விட்டு விட்டால் இன்னொருமுறை வாசிக்க மனது வராது என்று முழுமையாக வாசித்து விட்டேன். விஷ்ணுபுரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வாசிக்க ஆரம்பித்து பாதியில் நிறுத்தி விட்டவர்கள்தான் அதிகம் எனக் கேள்விப்பட்டேன்.  விஷ்ணுபுரத்தை படிக்க தொடங்குவது எப்படி என ஜெயமோகனே எழுதியுள்ளது (எப்படி வாசிப்பது?) வாசித்து முடித்த பின்தான் தெரியும். நாவலில் உள்ள முரண்பாடுகள் மற்றும் விமர்சகர்கள் பேசும் அரசியலுக்குள் போகாமல் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை மட்டும்  பேசியுள்ளேன்.

கதைச் சுருக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தாலே சில பக்கங்கள் ஆகி விடும் அத்தனை கிளைக் கதைகள்.  முதல் பாகத்தில், தென் தமிழகத்தில் பாண்டியர்களின் ஆளுகைக்குள்ள விஷ்ணுபுரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஸ்ரீபாதத் திருவிழா தொடங்குகிறது.
அந்த விழாவில் தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றி பரிசு பெற குடும்பத்துடன் விஷ்ணுபுரம் வரும் சங்கர்ஷணன் பெறும் அனுபவங்கள். வைதீக குலத்தில் பிறந்த பிங்கலன் தன் குருகுலத்தில் நம்பிக்கையை இழந்து சாருகேசி எனும் கணிகையைத் தஞ்சமடையும் அவன், பிறகு எவ்வாறு ஞானம் அடைகிறான்.  வாத்தியக்கார குடும்பத்தில் பிறந்த திருவடி, லலிதாங்கி என்ற கணிகையிடம் காதல் வயப்பட்டு சித்தம் கலங்கி அலைகிறான். திருவிழாவில் பங்கேற்க வந்த ஆழ்வார் இறந்து விடத் திருவடி,  ஆழ்வார் ஆக்கப் படுகிறான். இடையில் காவலாளி வில்லாளன், வைஜயந்தி நாச்சியாரை மணந்து விஷ்ணுபுரத்தை ஆள நினைப்பது, அவளின் தோழி சித்திரை  குலதெய்வமாக மாறுவது என நீளுகிறது.

இரண்டாம் பாகமான கெளஸ்துபம், முதல் பாகத்துக்கு முன்பு நடந்த நிகழ்வாக வருகிறது.  அப்போது  நடக்கும் கிருஷ்ணபட்சி பரீட்சை என்ற தர்க்க போட்டியில் பங்குகொள்ளப் பௌத்த பிக்குவான அஜிதன் என்னும் இளைஞன் வட பகுதியிலிருந்து வருகிறான். அவனுடன் விஷ்ணுபுரத்தின் வைதீக மரபின் காவலர் பவதத்தர் மோதுகிறார். விவாதத்தில் பவதத்தர் தோல்வியடைய, சந்திரகீர்த்தி என்னும் வணிகன் தலைமையில் விஷ்ணுபுரம் பௌத்த மரபுக்கு மாறுகிறது.   சீனா அல்லது திபெத்தை சேர்ந்த புத்த பிட்சு நபோரா அபிதரின் கடைசிக் காலத்தில்  அவரை சந்திக்க வருகிறார். ஞானசபையில் நடக்கும் வாத தர்க்கங்கள்தான் பக்கம் பக்கமாக வளர்கிறது. அதனைப் புரிந்தது கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது. நாவலை வாசித்த எத்தனை பேருக்கு அது புரிந்திருக்கும் எனத் தெரியவில்லை 😇.

இறுதி பாகமான மணிமுடி, முதல் பாகத்துக்குப் பின்பு நடந்த நிகழ்வுகளாகச் சொல்லப்பட்டுள்ளது. அது விஷ்ணுபுரத்தின் அழிவைப் பேசுகிறது. காசியிலிருந்து பண்டிதர் யோகவிரதர், அஜிதர் மற்றும் விஷ்ணுபுரத்தை பற்றித் தெரிந்து கொள்ள இங்கு வருகிறார். விஷ்ணுபுரத்தின் கோவில் கைவிடப்பட்டுச் சிதைந்த நிலையில் உள்ளது. எந்த புராணத்தை யார் இயற்றினார்கள் என்று பண்டிதர்கள் முரண்பட்டுக் கொள்வது எனக்கு இன்றைய காலகட்டத்தை நினைவு படுத்தியது. மதுரை மற்றும் பிற இடங்களுக்குப் பலர் புலம் பெயர்ந்து விட்ட நிலையில் வெகுசிலரே அங்கு வசித்து வருகிறார்கள். கடும் குளிர், மழை எனப் பிரளயத்துக்கான அறிகுறிகள் தென்படுகிறது. சிவப்பு நிற நீரைக் கொண்ட சோன நதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன, எங்கிருந்தோ வந்த பறவைகள் கோவில் சுவரில் முட்டி சாகின்றன. பெருமூப்பன் (விஷ்ணு) புரண்டு படுக்க ஒரு யுகம் முடிவதின் காரணமாக விஷ்ணுபுரம் சோனாவின் பெருவெள்ளத்தால் அழிகிறது.

சோனா நதி, ஹரிதுங்கா மலை என ஜெயமோகனின் கற்பனையும், அவற்றின் விவரிப்பும் பிரமிக்க வைக்கிறது. நாவலின் ஒவ்வொரு பக்கத்தையும் எழுத அதன் பின்னால் உள்ள அபரிதமான களப்பணி  மலைக்கச் செய்கிறது. ஜெயமோகன் விஷ்ணுபுரம் அவரின் கனவு என்கிறார். ஆமாம் பிரமாண்டமான கனவுதான். பிரமாண்டமான  நாவலாக மாறியதற்கு எங்கும் நிறைந்துள்ள வர்ணனைகளே காரணம். சில சமயங்களில் அவை கொஞ்சம் அலுப்பூட்டுகின்றன. ஞானகுருமார்கள் ஒருவகையில் சுற்றியுள்ள அதிகார வர்க்கத்தின் கைம்பாவைகளே என்ற யதார்த்தத்தின் நிழலை வயதான ஆழ்வார் மற்றும் முதுமையில் அஜிதரின் நிலைமை தோலுரித்துக் காட்டியது.

கதை மாந்தர்கள் ஓரளவு பரிச்சயமாகிய நமது மனதில் பயணிக்க ஆரம்பிக்கும் போது அவர்கள்  நாவலிருந்து விலகிப் போகிறார்கள். அதனால் எந்த ஒரு கதாபாத்திரமும் நீண்டதோர் தாக்கத்தை மனதில் ஏற்படுத்தவில்லை என்பதால் நாவலும் மனதில் அழுத்தமாகப்  படியாமல் நிற்கிறது. கதை எழுதப்பட்ட உத்திக்காக இன்னும் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வாசிப்பேன் அப்பொழுது என்னுடைய  எண்ணங்கள் மாறுகிறதா எனப் பார்ப்போம்.


இறுதியாக :

கி ராஜநாராயணின் கோபல்ல கிராமத்தின் தாக்கம் ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் கொஞ்சம் இருப்பதாக நான் உணர்ந்தேன்.  கோபல்ல கிராமம் நாவல் எழுதப்பட்ட உத்தி விஷ்ணுபுரத்தில் தென்பட்டாலும் நடை முற்றிலும் வேறு. கோபல்ல கிராமம் சாமானியர்களும் எளிதாக நுழைந்தது கொள்ளும் கிராமம். ஆனால் விஷ்ணுபுரம் கொஞ்சம் அறிவுஜீவிகளுக்காகக்  கட்டமைக்கப்பட்ட பிரமாண்டமான நகரம்.