Thursday 20 May 2021

செல்லாத பணம்

 

                  செல்லாத பணம் - இமயம்     


    இமயத்தின் முதல் நாவலான கோவேறு கழுதைகள் வாசித்துவிட்டு அது தந்த அனுபவத்தை எழுதியுள்ளேன். செல்லாத பணம் நாவலுக்கு 2020'ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்த செய்தி கிடைத்தவுடன் நாவலை வாங்கி வாசித்தேன். 

        செல்லாத பணம் நாவல் நீண்டதொரு கதையைச் சொல்லும் நாவல் அல்ல. ஒரு சம்பவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதனை மிக யதார்த்தமாக, பெரிய திடீர் திருப்பங்கள் கிடையாது ஆனால் வாசிப்பவரை  பதைபதைப்போடு அடுத்து என்னவாகும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் இமயம் எழுதியுள்ளார். பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் நடேசன், அமராவதி தம்பதியினருக்கு முருகன், ரேவதி என இருபிள்ளைகள். பொறியியல் படிக்கும் ரேவதி எதிர்பாராதவிதமாக ஆட்டோ டிரைவர் ரவியைக் காதலித்து திருமணம் செய்கிறாள். குணநலன்கள் சரியில்லாத ரவியால் மிகவும் சித்திரவதைகள் படும் அவள் ஒருநாள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். நடேசனின் குடும்பம் எவ்வளவு பணம் செலவழித்தும் ரேவதியைக்  காப்பாற்ற முயற்சி செய்ய அந்த பணம் அவளைக் காப்பாற்றியதா என்பதுதான் நாவலின் முடிவு.

             ரேவதி பர்மா பஜாரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவியைக் காதலிப்பதும், அதற்குப் பெற்றோர்கள் மறுப்பு தெரிவிப்பதும், அவள் தன் முடிவில் இறுக்கமாக நிற்பதால் வேறு வழியின்றி அவனுக்கே திருமணம் செய்துக்கொடுப்பதுமான கதையின் முன்பகுதி சுமார் 25 பக்கங்கள்தான். நாவலின் மீதி பக்கங்கள் அனைத்தும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரேவதி கிடக்கும் பொழுதுதான் நடக்கிறது. பெரும்பாலும் உரையாடல்களின் ஊடாக, அதுவும் உணர்வுகள் கொப்பளிக்கும் உரையாடல். ரேவதி தற்கொலை செய்யத் தீக்குளித்தாளா?, ரவிதான் கொளுத்தினானா? இல்லை தவறுதலாக நடந்த விபத்தா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், ரேவதியின் குடும்பம் ரவிதான் கொளுத்தினான் என அவள் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள் அவனை வஞ்சகம் தீர்க்க.

               புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் தீக்காயத்திற்கான அவரச சிகிச்சை நடைமுறைகள், அங்குள்ள ஊழியர்களின் செயல்பாடுகள், நோயாளிகளின் உறவினர்களின் அணுகுமுறை எல்லாவற்றையும் வெகு இயல்பாக எழுதியுள்ளார். நாவலை வாசிக்கும்போது இமயத்தின் சொல்லாட்சியில் ஏதோ நாமே அந்த மருத்துவமனையிலிருந்து சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது. நாவலில் ரவி, முருகனின் மனைவி  அருள்மொழியிடம் தன் பக்க ஆதங்கத்தைப் பேசும் பகுதி முக்கியமானது. ரேவதியின் உறவினர்கள் எல்லோரும் தங்கள் பக்கம் மட்டுமே  சிந்திக்க, அருள்மொழி மட்டும் கொஞ்சம் ரவியின் பக்கமும் சிந்திக்கிறாள். ஆனாலும் ரவியின் தர்க்கங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. 

                  கதாபாத்திரங்களின் தத்ரூபமான சித்தரிப்புகள், மிக யதார்த்தமான உணர்ச்சி பொங்கும் உரையாடல்களைக் கொண்டு இரண்டு வரிக்கதையை 200 பக்கங்களுக்கு மேல் நாவலாக இமயம் படைத்துள்ளார். நாவலில் வரும் சில கதைமாந்தர்கள் மிகச் சாதாரணமாகப் பணத்தை வீச வேண்டியதுதானே என்கிறார்கள் ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் பணம்  மட்டுமே அத்தியாவசியமானதல்ல என்பதை ஆசிரியர் இறுதியில் உணர்த்துகிறார். இமயத்தின் கதை சொல்லும் ஆற்றல் உங்கள் உள்ளத்தை ஊடுருவி கண்களில் கண்ணீரைத் துளிக்க வைக்கலாம். மனித உறவுகளில் சாதி, பணம், தகுதி ஏற்றத்தாழ்வுகள் எத்தனை சமூக சிக்கல்களை என்பதை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள வாசிக்கவேண்டிய நாவல் இந்த செல்லாத பணம். 

இறுதியாக :

         இதுபோன்ற வலிகளைப் பேசும் பல நாவல்கள் அதற்கான தீர்வை முன்வைப்பதில்லை. அதனால் சிலருக்கு நாவல் பேசும் பிரச்சினையின் ஆழம்  புரியாமல் வெவ்வேறு விதமாக அலசுவார்கள். 

            இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. 48 - புத்தகங்களைப் பற்றிய என் மனதில் பட்ட எண்ணங்கள், 2- என் மனதில் தோன்றிய சொந்த கதைகள். பெரிய திட்டமிடல் எதுவுமின்றி ஆரம்பித்த பயணம் 50'தை தாண்டி தொடர்கிறது. இதுவரை ஆதரவு தந்து உற்சாகப் படுத்திய அனைவருக்கும், இனி வரும்காலத்தில் தொடரும் பயணத்தில் சேர்ந்து பயணிக்க வருகை தரப்போகிறவர்களுக்கும் நன்றி 🙏...


Monday 10 May 2021

பேசாத பேச்செல்லாம்...

 

               பேசாத பேச்செல்லாம்...   ப்ரியா தம்பி

       

     ஆனந்த விகடனில் வெளிவந்த  போதே வாரம் தவறாமல் பேசாத பேச்செல்லாம் கட்டுரை மிகுந்த ஆர்வத்தோடு வாசித்தேன். ஏன் வார இதழ் கையில் கிடைத்தவுடன் முதலில் வாசித்ததே ப்ரியா தம்பி எழுதிய இந்த  பேசாத பேச்செல்லாம்.. கட்டுரையைத்தான். கட்டுரை தொகுப்பு புத்தகமாக வெளிவந்த பொழுது வாங்கப் பல முயற்சிகள் செய்து இரண்டாம் பதிப்பில்தான் கிடைத்தது.  மீண்டும் ஒருமுறை வாசித்தேன் என் எண்ணங்களைப் பதிவுசெய்ய. 

         முதல் கட்டுரையிலே தூங்கச் சொல்லி தொந்தரவு செய்தால் 100'க்கு போன் செய்து கம்ப்ளைன்ட் செய்துவிடுவேன் என்பதான அவருக்கும், அவரின் மகளுக்கும் இடையேயான உரையாடலை மையப்படுத்தி, இன்றைய குழந்தைகளின் விசாலமான அறிவையும், தைரியத்தையும் எடுத்துரைத்து நாம் வளர்ந்த சூழ்நிலைகளை ஒப்பிடுவதில் தொடங்கி, ஒரு தாயாக, மகளாக, தோழியாக, காதலியாக, மனைவியாக எல்லோரின் குரலாகவும், பொது வெளியில் பேசத் தயங்குகிற எல்லாவற்றையும் பேசுகிறது இந்த  பேசாத பேச்செல்லாம். 

        பெண்கள் டூவீலர் ஓட்டுவதைப் பற்றிச் சொல்லுபவர் அவர்கள் வைத்திருப்பது வண்டியல்ல, "அவர்களின் இறக்கைகள்" என்கிறார். கண்டிப்பாக 10-15 வருடங்களுக்கு முன்பு பல பெண்கள் முதன் முதலில் வண்டியை ஓட்டும் பொழுது மனதால் பறந்திருப்பார்கள். முன்பெல்லாம் குடும்பப் பயணம், திருவிழாக்களுக்குத் தயார் செய்யப் பெண்கள் சமையல் அறையிலே அடைந்து கிடந்தது, பெண்களின் உடை, பாலியல் வன்முறை செய்யப்பட்ட  பெண்ணின் குடும்பத்தினரின் மனநிலையை, பாலியல் தொழிலாளிகளின் மனதின் உணர்வுகள், திருநங்கைகளின் மீதான சமூகத்தின் பார்வைகள், அம்மா- மகள் பாச உறவு, அப்பா -மகள் பாச உறவு, ஆண் - பெண் நட்பின் சாத்தியக்கூறுகள் என உள்ளபடி உள்ளதாகச் சித்தரிக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் மேற்பூச்சுகள் எதுவுமின்றி வெளிப்படையோடு நேர்மையாகப் பிரச்சினைகளை அலசுகிறது.

                    பொதுவாகப் பெண்ணியம் பேசும் நாவல்கள்/கட்டுரைகள் எல்லாம் ஆண்கள் மீது, ஆணாதிக்க சமுகத்தின் மீது சாடுவது போலிருக்கும். அத்தகைய போக்கு இதில் இல்லாமல் ஆண்களின் மனநிலையும் அவர்களின் "ஆண்மை" போக்குகளுக்கு நமது குடும்பம், சமூகங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் வரையறையே என்ற நிதர்சனத்தையும் விளக்குகிறார். பெண்களுக்கு முதல் எதிரி பெண்களே சிறு விசயங்களில் அவர்களுக்கு இருக்கும் சின்ன தயக்கமே ஒரு பலவீனத்தைக் கொடுக்கிறது. அவர்களின் அரைகுறைப் பெண்ணிய புரிதல்களைப் பற்றித் தெளிவாகவும் மிகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கிறார். 

          ப்ரியா தம்பி குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாகர்கோவில் சுற்றுவட்டார இடங்களைப் பற்றி (பிரபு ஹோட்டல் உட்பட) நிறையக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் புத்தகப் பிரியர்களுக்குக் கட்டுரை தொகுப்புகளை விடக் கதைகள் மீதுதான் ஈர்ப்பு அதிகம். ஆனால் பேசாத பேச்செல்லாம் வாசிக்கும் அனைவரையும் ஆசிரியரின் எழுத்து நடை தன்பால் இழுப்பது மட்டுமில்லாமல் உங்களை உலுக்கிப் பல கேள்விகளை எழுப்புவதுடன் தங்களைப் பற்றிய ஓர் சுயவிமர்சனத்தையும் உங்களுக்குள் தோற்றுவிக்கும்.  இந்த கட்டுரை தொகுப்புகள் பெண்களுக்கானது மட்டுமானதல்ல, பெண்களைப் புரிந்து கொள்ளாமல் புலம்பும் ஆண்களுக்குமானதுதான் இந்த பேசாத பேச்செல்லாம்...

இறுதியாக :

        இந்த கட்டுரைகள்  பேசும் மனநிலை கொண்டவர்களை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்திருப்போம். எனக்குத் தெரிந்த பல பெண்கள் படித்து நல்ல வேலையில் இருப்பார்கள் ஆனால் ஒரு ATM சென்று பணம் எடுக்கத் தெரிந்திருக்காது. தனியாக ஒரு இடத்திற்கு, கடைகளுக்குச் செல்லத் தயங்குவார்கள். அதையெல்லாம் அவர் பார்த்துப்பார், அவற்றைப் பற்றி தங்களுக்கு ஒன்றுமே தெரியாது எனப் பெருமையாகவும் பேசுவார்கள். அவர்களையெல்லாம் பொருத்தவரை கணவன் சமையலுக்குக் காய்கறி நறுக்கித் தருவதுதான் பெண்ணிய சமநிலைப்பாடு😂 ...