Saturday 26 December 2020

ரத்தம் ஒரே நிறம்

 

                       ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா


    புத்தக வாசிப்பைத் தாண்டி அவரின் பன்முகத்தன்மையால் பலருக்கும் அறிமுகமானவர் சுஜாதா. அவரது பல கதைகள், கட்டுரைகளைச் சிறுவயது முதலாகவே வாசித்து வந்துள்ளேன். சரித்திர கதைகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.  ரத்தம் ஒரே நிறம் சரித்திர நாவலைக் குமுதம் வார இதழில் எழுதினார். சரித்திர நாவல் என்றவுடன் தின் தோள்களை கொண்ட மன்னர்களையும் அவர்களின் அழகான இளவரசிகளையும் பற்றி பேசி மிக அதிக தூரம் நம்மை அழைத்துச் செல்லாமல்  1857'ஆம் நடந்த சிப்பாய் கலவரம் (முதலாவது சுதந்திரப் போர்) நடந்த காலகட்டத்தின் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கதையைப் பின்னியுள்ளார். 

                     ஆலம்பாக்கம் ஊரைச் சேர்ந்த முத்துக்குமரன் சிலம்பாட்டத்தில் மிகுந்த தேர்ச்சிபெற்றவன். ஊர் திருவிழாவில் சிலம்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக தன் குழுவினரோடு குதிரையில் செல்லும் வெள்ளைக்காரன் எட்வர்ட் மக்கின்ஸி,  முத்துக்குமரனுடன் வம்பிழுத்து மோதுகிறான். தோற்ற மக்கின்ஸி அவமானத்தில் முத்துக்குமரனை கொல்ல முயல எதிர்பாராதவிதமாக முத்துக்குமாரனின் தந்தையைக் கொன்று விடுகிறான். தன் அப்பனுக்கு அழையா எமனாக வந்த மக்கின்ஸியை பழிவாங்கும் எண்ணத்தில் அவனை தேடி அலைந்து பல முயற்சிகள் செய்யும் முத்துக்குமரன் இறுதியில் பழிதீர்த்தானா என்பதுதான் நாவலின் கரு. இதில் எங்கே சிப்பாய் கலவரம் வருகிறது என உங்களுக்குத் தோன்றலாம். 

                                வித்தைக்கார குழுவினரோடு சேர்ந்து சென்னை வரும் முத்துக்குமரன் தன்னுடைய முதல் பழிவாங்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவுகிறான். வெள்ளையர்களின் மாட்டிக்கொண்டவனை   மற்றுமொரு அதிகாரி ஆஷ்லி தப்பிக்க வைக்கிறான். வித்தைக்கார குழுவினைச் சேர்ந்த பூஞ்சோலைக்கு முத்துக்குமரன் மீது ஒரு ஈர்ப்பு. பைராகி என்பவனிடம் சென்று தற்காப்புக் கலைகளின் நுணுக்கங்களை கற்று மீண்டும் மக்கின்ஸியை கொலை செய்ய முயற்சி செய்கிறான்.  இதனிடையே வட இந்தியாவில் சிப்பாய் கலவரம் தீவிரமடைய அதனை முறியடிக்கச் சென்னையிலிருந்து செல்லும் படையில் மக்கின்ஸி மற்றும் ஆஷ்லியும் செல்கிறார்கள். மக்கின்ஸி துரத்திக்கொண்டு கான்பூர் செல்லும்  முத்துக்குமரன் தன் லட்சியத்தை நிறைவேற்றினானா? சிப்பாய் கலவரம் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதுதான் நாவலின் முடிவு. 

                                        ராகுல சாங்கிருத்தியானின் "வால்கா முதல் கங்கை வரை" குறிப்பிட்ட மாதிரி என்பீல்ட் நிறுவனத்தின் புதிய துப்பாக்கியில் பயன்படுத்திய கொழுப்பு தடவிய  குண்டை பற்றி வேண்டுமென்றே சதி எனச் செய்தி பரப்பப்பட்டது சிப்பாய்களை ஆங்கில அரசுக்கு எதிராகத் தூண்டுவதற்காக. சிப்பாய் கலவரத்தை முன்னிறுத்தி காழ்புணர்வு கொண்ட ஆங்கிலேய அதிகாரிகள் செய்ததை மட்டுமில்லாமல் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்களையும் முன்வைக்கிறார். நல்மனம் படைத்த ஆண் மீது ஒரு பெண் காதல் வயப்படுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாகிறாள். நாவலில் வரும் முத்துக்குமரன் - பூஞ்சோலை - ராக்கன், ஆஷ்லி - எமிலி - மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே கோணத்தில் பயணிக்கிறது. கல்கத்தா கரையோரமாக ஒரு 'சதி' (உடன்கட்டை) நிகழ்வை விரிவாக எழுதியுள்ளார். அது வாசிக்கும் அனைவரையும் பதைபதைப்பு அடையச்செய்யும். மேலும் அதனைப் போன்ற சம்பவங்களைப் பற்றி வெள்ளையர்கள் கொண்டிருந்த வேறுபட்ட கருத்துக்களையும் சொல்லுகிறார்.

                                     என்னதான் சரித்திர உண்மை சம்பவங்களைப் பின்னியாகக் கொண்டு எழுதியிருந்தாலும் நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போலத்தான் நகர்கிறது ரத்தம் ஒரே நாவல். அதுவும் முத்துக்குமரன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். பைராகி என்கிற சித்தர் போன்ற கதாபாத்திரம் நம்ப முடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். வட இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய் கலவரத்தில் அந்த மக்களே கணிசமாக அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றுப் பயணித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம்தான் நாவலின் சிறப்பு.

 இறுதியாக :

           ரத்தம் ஒரே நிறம் நாவலை முதலில் குமுதத்தில் "கருப்பு சிவப்பு வெளுப்பு" எனும் பெயரில்தான் எழுதியுள்ளார். ஆனால் மூன்று வாரத்திற்குப் பின் ஒரு இனத்தவர்களின் கடுமையான எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தைச் சுஜாதா குறிப்பிடும் போது "எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது திட்டு வார்த்தைகள் எனக்குப் பாடமாயின. தொலைப்பேசியில் கொலை மற்றும் வலது கையை வெட்டி விடுவேன் மிரட்டல் விடுத்தார்கள்"...  இது இப்பொழுது ஒருவருக்கு நடந்தால்... சமூக வலைத்தளங்களில் அவரின் குடும்பத்தையே இழுத்திருப்பார்கள். அதுவும் பலர் என்னவென்றே சரியாகத் தெரியாமல் புரியாமல் forward செய்வார்கள் 😒... 


Thursday 10 December 2020

பாண்டியன் மகள்

 

                   பாண்டியன் மகள் -  விஷ்வக்சேனன்

     

     கல்கி வார இதழின் பொன்விழா பரிசுப் போட்டியில் 1993'ஆம் ஆண்டு முதல் பரிசு வென்ற சரித்திர நாவல் விஷ்வக்சேனன் எழுதிய பாண்டியன் மகள். எனது அன்னை வாசித்து விட்டு பரிந்துரையும் செய்ததால் எங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்தேன்.

          பாண்டியன் மகள் என்று நாவலின் பெயர் இருந்தாலும் சோழர்களின் வீரத்தை, புகழைப் பாடும் மற்றுமொரு நாவல்தான். நாவலின் கதைக்களம் இராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப் பேரன் குலோத்துங்க சோழன் அரியணையேறிய காலம். குலோத்துங்க சோழன் வடக்கே சாளுக்கியர்களை எதிர்த்துப் போர்புரியப் பெரும்படையுடன் செல்ல அந்த சூழ்நிலையையே சாதகமாகப் பயன்படுத்தி பாண்டியன் மார்த்தாண்டன் மதுரையை மீண்டும் கைப்பற்றி தன் மருமகன் மாறவர்மனை அரியணையில் ஏற்ற முயற்சி செய்கிறான். இத்திட்டத்திற்குப் பிரிந்தது கிடக்கும் பாண்டியர்களை எல்லாம் ஒன்று சேர்ப்பதுடன், சேர மற்றும் ஈழ மன்னர்களிடமும் படை உதவி கேட்கிறான். போரில் வென்றால் மாறவர்மனுக்கு ஈழத்து இளவரசி அஞ்சனாதேவியை மணமுடித்து பாண்டிய நாட்டில் தங்களது செல்வாக்கு நிலைநாட்டலாம் என ஈழ மன்னனும், வென்றால் தங்களுக்குக் கிடைக்கும் நிலப்பகுதிகளுக்காகச் சேர மன்னனும் சம்மதிக்கிறார்கள்.

                         சேர இளவரசி அம்மங்கை தேவியை கடத்தி சென்று மேலைமங்கல கோட்டையில் அடைக்கிறான் மாறவர்மன். ஒரே இரவில் இளவரசியை மீட்டு மேலைமங்கல கோட்டையையும் கைப்பற்றுகிறான் கவி நாராயண பட்டரின் சீடன் அரையன் மதுராந்தகன். இதனால் சோழ இளவல் விக்கிரமனின் நட்பையும் அம்மங்கையின் காதலையும் பெறுகிறான். அதன்பின் பொதிகைக்கு வரும் அரையன் அங்கு ஜடாவர்மா பாண்டியனின் மகள் கயல்விழியை மீட்டு சோழ நாட்டிற்கு அனுப்பி விட்டுச் சேர நாட்டின் விழிஞ்சம் கடற்படைத் தளத்திற்குச் சேர ஒற்றன் சமுத்திரபந்தன் என்னும் மாறுவேடத்தில் செல்கிறான். பாண்டியன் மகளைப் பற்றிய ரகசியங்களை சேரலாதன், ஈழத்து தண்டநாயகன்,  இளவரசி அஞ்சனாதேவியிடம் கூறி பாண்டியர்களுக்கு உதவி செய்வதில் தயக்கமேற்பட வைக்கிறான். சில காலத்திற்கு முன்பு மார்த்தாண்டனின் துரோகத்தால் ஜடாவர்மா பாண்டியன் கொல்லப்பட அரசி மங்கையையர்கரசியை,  நாராயண பட்டர் காப்பாற்றிப் பாதுகாப்பு கொடுக்கிறார். சிறுமி கயல்விழியை ஓர் சேர படைத்தலைவன் தூக்கிச்சென்று அவள் யாரென்ற உண்மையைச் சொல்லாமலே வளர்க்கிறான்.

                          குலோத்துங்க மன்னனைச் சந்திக்கச் சோழ ஒற்றன் ஜெயந்தனுடன் செல்லும் அரையன் மதுராந்தகன் வழியில் நவிலைக் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட சோழ இரண்டாவது இளவல் ராஜராஜனை சாளுக்கிய ஜெயதுங்கனுடன் வாட்போரிட்டு வென்று மீட்கிறான். இதனிடையே மாறவர்மனிடம் நம்பிக்கை இழக்கும் ஈழத்து இளவரசன் பராக்கிரமபாகு, கொங்குப்பாண்டிய இளவல் குலசேகரனை மதுரை அரியணையில் அமர வைத்து அஞ்சனாதேவியை மணமுடித்து  வைக்கச் சதித்திட்டம் ஈடுகிறான். மதுரை அரியணையனைக்கு உரிமையுடைய பாண்டிய இளவரசி கயல்விழியைக் கொல்ல மதுரைக்கு வரும் ஈழத்து மார்க்கீயன், பாண்டிய மார்த்தாண்டனிடமிருந்து  காப்பாற்றிப் பாதுகாப்பு தரும் விக்கிரமன் மீது அவள் காதல் கொள்கிறாள். குலோத்துங்கனின் அன்புக்குப் பாத்திரமாகும் அரையனின் போர் வியூகங்களால் பாண்டியர்கள் மற்றும் அவர்களின் நேசப்படைகள் எவ்வாறு ஒடுக்கப்பட்டது.   அம்மங்கை மற்றும் கயல்விழியின் காதல் கை கூடியதா என்பதே நாவலில் சுகமான முடிவு. 

                              எல்லா சரித்திர ( மன்னர்களைப் பற்றிய) நாவலைப் போலத்தான் இதிலும் கதாநாயகனே அனைத்தையும் அறிந்தவன். அவனது வீரம், மதிநுட்பம் எல்லோராலும் போற்றி புகழப்படும். எங்குப் பிரச்சினை தோன்றினாலும் அவன் அங்கு வந்து தனியொருவனாக அதனை முறியடிப்பான். கல்கி மற்றும் சாண்டில்யனின் பாணிகளைக் கலந்து சுவாரசியமாகப் பாண்டியன் மகள் நாவலை விஷ்வக்சேனன் படைத்துள்ளார். பொதுவாகச் சரித்திர நாவலுக்கென்றே சில எழுதப்படாத விதிகள் உள்ளன. மிக அழகான ராஜகுமாரிகள் அவர்களைப்பற்றிய வருணிப்புகள், எதிரிகளை எளிதில் மாறுவேடம் பூண்டு ஏமாற்றி விடும் ஒற்றர்கள், யவன வியாபாரிகள், பாண்டிய/சோழர்களின் வீரம் இவையெல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்குமெனில் உங்களுக்கான நாவல்தான் இந்த பாண்டியன் மகள். 

இறுதியாக :

         பாண்டியன் மகளைத் தவிர இன்னும் சில சரித்திர நாவல்களையும் விஷ்வக்சேனன் எழுதியுள்ளார். அவர் எழுதிய இந்திர தனுசு நாவலையும் எங்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்தேன். ஆனால் சரித்திரத்தை மட்டுமே பேசாதே இதுபோன்ற நாவல்கள் என்னை இப்போதெல்லாம் மிகவும் கவர்வதில்லை. ஆதலால் அந்த நாவலை இப்போதைக்கு வாசிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.              


Wednesday 25 November 2020

சஞ்சாரம்

 

                   சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்


எஸ். ராமகிருஷ்ணனின் பல கட்டுரைகளை வாசித்து உள்ளேன். 2018'ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம் நாவலைப் பலமுறை வாசிக்க எண்ணியும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இறுதியில் இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். 

        ரத்தினத்தின்  குழுவினர் நாதஸ்வரம் வாசிக்கச் சென்ற கோவில் திருவிழாவில் இரண்டு ஊர்களுக்கிடையே நடக்கும் தகராற்றில் எதிர்பாராதவிதமாக  இவர்கள் இடையில் மாட்டிக்கொள்கிறார்கள். குழுவில் இணைந்து வாசிக்கும் மற்றொரு நாதஸ்வர  கலைஞரான பக்கிரி அதில் ஒருவனை அடித்து விட, ரத்தினம் மற்றும் பக்கிரியை அடித்துக் கட்டிப்போட்டு விடுகிறார்கள். இரவில் கோவில் பூசாரி அவர்களின் கட்டுகளை அவிழ்த்துப் போகச்சொல்ல பக்கிரியோ திரும்பிச் செல்லும்போது விழாப்பந்தலுக்கு தீ வைத்து விடுகிறான். அதனால் போலிஸ் தேட சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத சூழ்நிலையில் ஊர் ஊராகப் பயணம் செய்ய அவர்களின் நினைவுடாக சம்பவங்கள் கிளைக்கதைகளாக வருகிறது. இறுதியில் அவர்களுக்கு என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பு மனதில் நாவல் முடிந்தும் தொடர்கிறது.     

           "முதல் அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது"  என்று தொடங்கும்  முதல் பத்தியே மொத்த நாவலையும் சொல்லி விடுகிறது. சாதியக் கட்டமைப்புகள் ஏற்படுத்தும் வலி, அவலம், வேதனை, கோபம், அவமானம் போன்றவற்றைச் சகித்துக்கொண்டு, கலை மற்றும் கலைஞர்களுக்கான அங்கீகாரமும் சரிவர இல்லாமல், பொருளாதார சவால்களைச் சமாளித்து வாழ்க்கை முழுவதும் சொல்லாத் துயரத்தை அடைந்த நாதஸ்வர கலைஞர்களின் இன்னல்களைச் சஞ்சாரம் நாவல் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லுகிறது. 

       பல சுவாரஸ்யமான தகவல்கள், வாசிப்பவருக்கு மன மாற்றத்தை உண்டாக்கும் கருத்துக்கள், பல்வேறு காலகட்ட மக்களின் வாழ்வியல் பதிவுகள், அபூர்வமான, ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள், கேட்டறியா வரலாற்றுச் செய்திகள் என ஒவ்வொரு கிளைக் கதைகள் ஒரு சிறுகதையைப் போலச் சுவைப்பட நகர்கிறது.  லட்சய்யாவின் நாதஸ்வர இசைக்கு மயங்கிய மாலிக்காபூர், "மண்ணு வேணுமா" "பொன்னு வேணுமா" எனக் கேட்ட ஊரோடிப்பறவைகள், பொம்மக்காபுரத்தின் பாம்புக்கடி வைத்தியம், நூறு வயதைக்கடந்த கொண்டம்மாள் கிழவி திருடனுக்குக் கொடுத்த வித்தியாசமான தண்டனை என மக்களின் செவிவழிக் கதைகள் மூலமாக நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன். மேலும் கரிசல் மண்ணின் நாதஸ்வரக் கலைஞர்களின் அன்றைய வாழ்வையும் இன்றைய நிலைமையையும் ஒரே புனைவுக்குள் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். நாதஸ்வரம் கற்க வரும் வெளிநாட்டுக்காரர், நாதஸ்வர இசையால் ஈர்க்கப்படும் போலியோவால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியச் சிறுவன்  என நிகழ்காலச் சம்பவ கதைகளும் நிறைந்துள்ளது. 

        வட இந்தியாவில் நாதஸ்வரம் ஏன் வாசிக்கப்படுவதில்லை, இந்நாளில் நாதஸ்வர வித்துவான்கள், கரகாட்டக்காரர்கள் ஏன் நம் பாரம்பரிய கலைஞர் என்னன்ன மாதிரியான இன்னல்களைச் சந்திக்கிறார்கள், நாதஸ்வரம் எவ்வளவு புகழ் வாய்ந்தது, "இசை தான் கடவுளோடு பேசும் மொழி. அந்த இசைக்கு தாய்ப்பாலு நாதஸ்வரம்.." என்ற வரிகளால் நாதஸ்வரம் வாசிப்பவர்களுக்கு மட்டுமில்லாது அதனை ரசனையோடு கேட்பவருக்கும் மரியாதை செலுத்துகிறது இந்நாவல். கரிசல் காட்டு நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தும் விதமான மைய நோக்கத்தோடு எழுதப்பட்ட நாவலில் சில கிளைக் கதைகள் மையக்கதைக்குத் தொடர்பில்லாமல் வருவது நாவலை வாசிக்கும் பொழுது நூறு சதவீதம் உணர்வுப்பூர்வமாகக் கதையோடு சேர்ந்து பயணிக்க முடியவில்லை.

     ஆனால், நாவலை வாசித்து முடித்தபின் வாசித்த அனைவருக்கும் நமது பாரம்பரிய நாதஸ்வரத்தின் இனிமையான ஒலியை உடனே கேட்க வேண்டும், கேட்டு ரசித்து அதில் லயிக்க வேண்டும் எனும் ஆவல் கட்டாயம் தோன்றும் அதில் உள்ளது எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தின் வெற்றி. 

இறுதியாக :

          இசையைப்பற்றிப் பேசும் நாவலில் சீவாளி செய்யப்படுவதன் சுருக்கமான குறிப்பைத் தவிர வேறு எதுவுமே இல்லை. தவிலைப்பற்றி சுத்தமாக ஒருதகவலும் சொல்லப்படவில்லை. நாவல் வாசிக்கும்போது இது கரிசல் கிராமத்தைச் சேர்ந்த நாதஸ்வரக்குழுவைக் கொண்டு இசையைப்பற்றிப் பேசுகிறதா?? அல்லது ஜாதி வேறுபாடு இன்னல்களை மையமாக வெளிப்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. 

Monday 9 November 2020

அகல்விளக்கு

                        

               அகல்விளக்கு - மு. வரதராஜன்


மு. வரதராஜன் அவர்கள் எழுதிய அகல்விளக்கு நாவலை எனது கல்லூரி காலத்தில் வாசித்துள்ளேன். மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டியது 1961'ஆம் ஆண்டு நாவல் பெற்றிருந்த சாகித்ய அகாடமி விருது. 

     வேலய்யன் என்ற வேலுவின் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களின் கதைதான் அகல்விளக்கு. பெருங்காஞ்சி ஊரின் நிலக்கிழார் சாமண்ணா. அதிகம் படித்தால் தன் மகன் சந்திரன் கெட்டுப்போய் விடுவான் என்றெண்ணி மேல் வகுப்புக்கு அனுப்ப மறுக்கிறார். சந்திரனின் மதி நுட்பத்தைக் கண்ட பள்ளிக்கூடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் அவரது மனதை மாற்றுகிறார். அந்த ஊரில் எட்டாவது வகுப்பிற்கு மேல் இல்லாததால் வாலாசாப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் சேருகிறான் சந்திரன். அங்கு அவனுக்கு வேலுவின் அறிமுகம் கிடைக்க இருவரும் இணைபிரியாத நண்பர்கள் ஆகிறார்கள். படிப்பில் பின்தங்கியிருக்கும் வேலுவுக்குச் சந்திரன் பாடங்களை விளக்கி உதவுகிறான். சந்திரனின் தங்கை கற்பகத்தின் அழகுணர்ச்சி வேலுவை கவர்கிறது. பக்கத்து வீட்டுப் பாக்கியம் அம்மாள் வேலுவிடம் சிறுவயதிலிருந்தே அன்பு பாராட்டினாலும் அவள் சந்திரனிடம் செலுத்தும் அன்பு வேலுவுக்குக் கொஞ்சம் பொறாமை உணர்வைத் தூண்டுகிறது. இறுதித் தேர்வு சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்படும் வேலு தேர்வில் தோல்வி அடைகிறான். 

        தேர்ச்சி பெற்ற சந்திரன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்கிறான்.  அதன்பின் வேலுவிற்கு சந்திரன் அவனை விட்டு சிறிது விலகுவது போல் தோன்றுகிறது. அடுத்த ஆண்டு தேர்ச்சி அடைந்து அதே கல்லூரியில் சேரும் வேலுவிடம் முன்புபோல் நட்பு பாராட்டாமல் விலகியே செல்லுகிறான் சந்திரன். கல்லூரியில் வேலுவுக்கு மாலன் என்ற மாணவனுடன் நட்பு ஏற்படுகிறது. மாலனின் மூடநம்பிக்கைகள் சலிப்பைத் தந்தாலும் அவனுடன் மிகுந்த நட்புடன் பழகுகிறான். இமாவதி என்ற மாணவியின் நட்பைக் காதல் எனத் தவறாகப் புரிந்து அவளுக்கு நடக்கும் திருமண ஏற்பாட்டால் இறுதித்தேர்வுகளை எழுதாமல், யாரிடமும் சொல்லாமலும் கல்லூரியை விட்டுச் செல்கிறான் சந்திரன். சந்திரனை வெறுக்கும் மாலன் அவன் நினைவுகளைத் துறந்து தேர்வில் கவனம் செலுத்தும்படி வேலுவை அறிவுறுத்துகிறான். சில மாதங்கள் கழித்து சந்திரன் ஊட்டியில் இருப்பதாகத் தகவல் கிடைக்க சாமண்ணாவுடன் சென்று அவனை மீட்டு வந்து வள்ளி என்ற பெண்ணுடன் திருமணமும் செய்து வைக்கிறார்கள்.

         கற்பகத்திற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும் அவனைப் பற்றிய தகவல்களைக் கூறுமாறு சாமண்ணா, வேலுவுக்குக் கடிதம் எழுத, அந்த மாப்பிள்ளை மாலன்தான் எனத் தெரிந்து சந்தோசமும் கொஞ்சம் கவலையும் அடைகிறான். கல்லூரி படிப்பை முடிக்கும் வேலுவுக்குச் சர்வீஸ் கமிஷன் தேர்வின் மூலமாக நல்ல வேலையும் கிடைக்கிறது. இடையே அத்தை மகள் கயற்கண்ணியுடன் திருமணமும் நடைபெறுகிறது. சந்திரன் யாரையும் மதிக்காமல் பல பெண்களும் தொடர்பு எனச் சீரழிந்து போகிறான். மாலனோ ஜோசியங்களை நம்பி வேலைக்குப் போகாமல் சுயதொழில் தொடங்க தன் மாமனார் சாமண்ணாவிடம் பணம் கேட்டு மனைவியை விரட்டுகிறான். சந்திரனின் கொடுமைத் தாங்காமல் அவன் மனைவி தற்கொலை செய்துகொள்ளச் சந்திரன் ஊரை விட்டே ஓடுகிறான். காலமாற்றத்தில் மாலன் மனம் திருந்தினானா?? சந்திரனின் திரும்பி வந்தானா?? என்பதே நாவலின் முடிவு. 

             நண்பர்களின் வாழ்வில் நடக்கும் சமுதாய சிந்தனை மாற்றங்கள், அவர்களின் குணநலன்களால் வாழ்க்கையில் தோன்றும் மேடு பள்ளங்களை அலசுகிறார் ஆசிரியர் மு. வரதராஜன். பெரும்பாலும் பண்பாட்டுச் சிக்கல்களைக் கதைமாந்தர்களின் விவாதங்கள் மூலம் முன்னெடுத்துச் செல்கிறார். எளிதில் ஊகிக்கக்கூடிய முடிச்சுகளும், கொஞ்சம் செயற்கையான உணர்ச்சிகர தருணங்களும், மரபான தீர்வுகளையும் கொண்டிருந்தாலும் வாழ்க்கை நெறிமுறைகளை மட்டுமே பேசி அலுப்பைத் தராமல் பயணிப்பதால் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டிய நாவல்தான். அதுவும் மாணவப் பருவத்தினர் கட்டாயம் வாசிக்கப் பரிந்துரைப்பேன். அவர்களின் சிந்தனைகளைச் சீரமைக்க உதவலாம். சந்திரனைப் போல நல்ல அழகும், கூரிய அறிவும் பெற்று அதனால் செருக்கடைந்து சீரழிந்து போவதை விட வேலய்யன் போல் அறிவு குறைவாக இருந்தாலும் சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ்வதே உயர்வு என்பதை வாசிப்பவர்கள் உள்ளத்தில் உருவாக்குகிறார்.

இறுதியாக:

     கதையில் வரும் பாக்கியம் அம்மாள் கதாபாத்திரம் இதுவரை நான் எந்த நாவலிலும் பார்த்திராத தனித்துவமானது. பாக்கியம் வாயிலாக எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையும், ஞானமும் நம்மை நல்வழியில் கொண்டு செல்லும் என்பதை நமக்குப் புரியவைக்கிறார். சிறந்த நூல்களை வாசிப்பவர்களை, அவை எந்த அளவிற்கு ஒளிவிளக்காக மாற்றுகிறது என்பதற்குப் பாக்கியத்தைக் கொண்டு விளக்கியது அருமை. அதுவும் அந்த விளக்கின் ஒளிபட்ட (அறிவுக்கூர்மையான வாதங்களால்) கற்பகமும், கயற்கண்ணியும், மணிமேகலையும் நற்பண்புகள் பல பெற்று வாழ்க்கை சிக்கல்களிலிருந்து மீள்வதாக நகரும் விதம் அகல் விளக்காகப் பிரகாசிக்கிறது.

Monday 26 October 2020

வேரில் பழுத்த பலா

 

         வேரில் பழுத்த பலா - சு. சமுத்திரம்



சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவல்களை வாசிக்கும் வரிசையில் இந்த நாவலையும் வாங்கினேன். சு. சமுத்திரம் எழுதிய "வேரில் பழுத்த பலா", "ஒரு நாள் போதுமா"  என்ற இரண்டு குறுநாவல்களின் தொகுப்புதான் இந்த நூல். 

வேரில் பழுத்த பலா:

    மத்திய அரசின் அலுவலகங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்யும் துறையில் உயர் அதிகாரியாக பணிபுரியும் சரவணன் தரம் குறைந்த பொருட்களைக் கொள்முதல் செய்து ஊழலில் ஈடுபட்ட தன்  அலுவலர்களைக் கட்டுப்படுத்த முயல்கிறான். அலுவலகத்தையும், அலுவலர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கான்ட்ராக்டர் செளரிராஜன் தரும் நெருக்கடிகளை, சுற்றி நடக்கும் சதிகளை எதிர்கொள்வதுதான் நாவலின் சாராம்சம். சரவணனின் அம்மா, அண்ணி மற்றும் தங்கையின் பாத்திரப்படைப்பு யதார்த்தம். அலுவலகத்தில் அவனுக்கு உதவிகள் செய்து இறுதியில் காதல் வயப்படும் அன்னம் தனித்துத் தெரிகிறாள். 

       அடித்தட்டில் வாழும் மக்களின் அவலங்களில் ஒன்றாக, அவர்கள் படித்து மேலுயுயர்ந்து வந்தாலும் வேலைத்தளங்களிலும், சமூகச் சூழலிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய உளவியல் எண்ணங்களைப் புலப்படுத்தினாலும் சாதிய போக்கு வேறுபாடுகளைப் பேசும் கதையில் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் ஒரே சாதியாகச் சொல்லப்பட்டிருப்பது கொஞ்சம் நெருடல். அரசு அலுவலகங்களில் நேர்மைக்கு என்ன விலை, நீதியின் குரல்வளை எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது, அலுவலகங்களில்  தாழ்த்தப்பட்ட பெண்களின் நிலை என்ன என்பதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.


ஒரு நாள் போதுமா: 

          வேலுவும் அவன் மனைவி அன்னவடிவும் பிழைப்பு தேடி கிராமத்தை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். சித்தாள் வேலை செய்யும் தாயம்மாள் உதவியால் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்கிறார்கள். சிமென்ட் மூட்டை பாரத்தை அதிகமாக  அவன் மீது கான்ட்ராக்டர் ஏற்றிவிட அதனால் உயிரை இழக்கிறான். அதற்காக நியாயம் கேட்டு போராட்டத்தை அன்னவடிவு வீரத்தோடு முன்னிறுத்துகிறாள்.

     அதிகாரவர்க்கத்தினரால் பாட்டாளி மக்கள் எவ்வாறெல்லாம் நசுக்கப் படுகிறார்கள் அவர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை சு. சமுத்திரம் பதிவு செய்கிறார். மழைத் தவறி தண்ணீர் இல்லையெனில் முதலில் பாதிக்கப்படுவது விவசாயி அல்ல விவசாய கூலிதான். கட்டிட மற்றும் அன்றாட கூலிகளின் நிரந்தரமில்லா வேலை நிலைமைகளையும், அவர்களின் பொருளில்லா வாழ்வின் அவல நிலைமையையும் சுட்டிக்காட்டுகிறார். அவர்களின் எந்த அடிப்படை வசதியும் இல்லாத வாழ்வியல் பகுதிகள், தகுந்த இழப்பீடுகளைக் கொடுக்காமல் மூடி மறைக்க நினைக்கும் முதலாளிகளின் நயவஞ்சக தன்மைகளுக்குப் போராட்டமே தீர்வு என்கிறார். 

     இரண்டு குறுநாவல்களுமே வாசிப்பதற்கு எளிமையாக எழுதப்பட்டவைதான். அதனால் பெரிய இலக்கியத்தை வாசித்த பிரமிப்பை தரவில்லை எனினும் அவை அலசி பேசும் விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

இறுதியாக :

      சாகித்ய அகாடமி விருதை இந்நாவல் கொடுத்தற்காகப்  பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது நாவல் மீதும் சு. சமுத்திரம் மீதும். வணிக எழுத்தாளர்களின் நாவல்கள் வாசிக்க எளிமையாக இருந்தால் அதை சில பக்கங்களை வசிப்பதற்குள்ளே எப்படி இலக்கியவாதிகளுக்குப் போர் அடிக்குமோ, அது போல் நேரிடையாகச் சொன்னாலே குழம்பிவிடும் தத்துவங்களை எளிமையான தர்க்கக் கட்டமைப்பில் சொல்லாமல், கவித்துவமான இலக்கிய நடையில் குறியீடுகளைக் கொண்டு விரித்துரைப்பது மற்றவர்களுக்குப் போர் அடிக்கலாம். அதனால் விருதுகள் எல்லோருக்கும்  செல்லலாம். 

Friday 16 October 2020

சுளுந்தீ

 

                       சுளுந்தீ - இரா. முத்துநாகு


  சில நண்பர்களின் பரிந்துரையால் சுளுந்தீ நாவலை வாங்கி வாசித்தேன். கதைக்களம் 18'ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் காலத்தில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு பின்னப்பட்டிருந்தாலும் ஆண்ட மன்னர்களைப் பற்றிப் பேசாமல் சாமானிய, ஒதுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கிறது. அதுவும் அரண்மனை சூழ்ச்சிகள், அதிகார வர்க்கத்தைப் பேசும் நாவலில் நாவிதனை மையமாகக் கொண்டு கதை நகர்வது  எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

     18'ஆம் நூற்றாண்டில் மதுரை மன்னரின் கீழ் உள்ள கன்னியவாடி (இப்போதைய தேனி மாவட்டம்) அரண்மனையார் கதிரியப்ப நாயக்கர். அரண்மனை நாவிதனான ராமன் பன்றிமலை சித்தருக்குச் சீடனாகி மருத்துவத்தைக் கற்று மகாபண்டுவனாகிறான். அதனால் கன்னியவாடி அரண்மனையில் தவிர்க்க முடியாத அங்கமாகும் அவன் மீது தளபதி முத்து இருளப்ப நாயக்கர் எரிச்சல் கொள்கிறார். ராமன் தனது மகன் மாடனை நாவிதத்திலிருந்து விலக்கி அரசுப்படை வீரனாக்க முயல அதற்குத் தளபதி ராமனின் முட்டுக்கட்டை போடுகிறார். இளைய ராணியின் உள்ளங்கை தோல் வெடிப்புக்கு மருந்து தயாரிக்கும் பொழுது நடக்கும் விபத்தில் ராமன் இறக்க, அவன் மனைவி வல்லத்தாரையோ பார்வையை இழக்கிறாள். அதன் பின்பும் அடங்காமல் படை வீரனாக முயலும் மாடன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அரண்மனை சதிகள், உள்குத்துக்களை முறியடித்தானா என்பதே நாவலின் முடிவு.

         குலவிலக்கானவர்களை ஒன்று சேர்த்து கிணறு வெட்டி, அந்த பாசனத்தைக் கொண்டு விவசாயத்தை விரிவாக்கும் மருதமுத்து ஆசாரி, மாடன் மீது மெல்லிய காதல் கொண்டு அதனை வெளிப்படுத்தாமலே அவனுக்கு உதவிகள் செய்யும் அனந்தவல்லி, கன்னிவாடி மடத்தின் குலகுரு அருணகிரி, ஏசு சபை ஊழியரான பாதிரியார் ஆல்வரேசு. எல்லாவற்றுக்கும் மேல் பன்றிமலை சித்தர்  என்று வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் நம்மைக் கதையோடு கட்டிப்போடுகின்றன. பண்டுவத்தில் செந்தூரம் தயாரிக்க உதவும் பொருட்களைப் பயன்படுத்தி அதிகாரத்தை இழந்த பாண்டிய அரசு பிரதிநிதிகள் வெடிமருந்து தயாரிப்பதை அறிந்த நாயக்கர் அரசு பல பண்டுவர்களை கொன்று குவித்தது வரலாற்றுச் சோகம். நாயக்கர் அரசர்களின் குல மரமான புளியமரத்தின் கொட்டைகளை மக்கள் பஞ்சகாலத்தில் உண்டு திடகாத்திரமாக இருந்ததை அறிந்த ராணி மங்கம்மா சாலை ஓரம்தோறும் புளியமரத்தை நடவு செய்யச் சொல்லியுள்ளார். கிடாரிக்குப் பிறக்கும் முதல் கன்றுவை ஏன் கோவிலுக்கு நேர்ந்து விட்டு விடுகிறார்கள் என்பதை அருமையான கிளைக்கதை  மூலம் ஆசிரியர் விளக்குகிறார்.

            செந்தூரம் தயாரிக்கும் முறை, வெடிமருந்து தயாரிக்கும் முறை, அந்தக் கால பண்டுவ குறிப்புகள் மட்டுமில்லாது பல்வேறு நுண் தகவல்கள் நாவலெங்கும் படர்ந்து விரிந்து கிடக்கிறது. பண்டுவம் என்னும் வைத்தியமுறை நுணுக்கங்களை அந்த காலத்தில் நாவிதர்களே அறிந்துள்ளனர். அவர்களின் மனைவிகள் மருத்துவச்சியாக வேலை செய்துள்ளனர்.   காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு ஒதுக்கப்பட்ட மக்கள் ஆகிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் இரா. முத்துநாகு. நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் விஜயநகர குடிகள் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டில் குடியேற அதனால் தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள். பூர்விக குடிகள் பலர் குலநீக்கம் செய்யப்பட்டுத் துரத்தப்பட்ட நிகழ்வுகளைக் குறிப்பிடும் கீழ்க்கண்ட வரிகளைக் கடப்பதற்கு மனம் கனக்கிறது.

"அரண்மனை அதிகாரப் போட்டிக்குக் குடிகள் பலிகடா ஆவதும், அரசுக்கு வேண்டியவர்களைக் குடியமர்த்துவதும், பூர்விகக் குடிகளை அழித்தொழிப்பதும், வரலாறு தொட்டு நீதியாகவே இருக்கிறது"


           நாவலின்  முடிவு கொஞ்சம் யதார்த்தத்தை விட்டு விலகிச் சென்றது போல் எனக்குத் தோன்றியது. ஆண்டவர்களின் பெருமையைப் பேசாமல் நாவல் சாமானியர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசினாலும் இதில் எவ்வளவு வரலாற்று உண்மைத்தன்மை கலந்துள்ளது என்பது இது போன்ற அனைத்து நாவலுக்குள்ள பிரச்சினைதான். மிக அதிகமான நுண்ணறிவு தகவல்கள் ஆரம்பத்தில் வாசிக்கக் கொஞ்சம் அயர்வைத் தந்தாலும் இறுதியில் ஒரு நல்ல நாவலை வாசித்த உணர்வையே தருகிறது. 

இறுதியாக :

எண்ணெய் துணியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தீவட்டிப் பயன்பாட்டுக்கு முன்பே சுளுந்து மர குட்சியையே வெளிச்சம் தரப் பயன்படுத்தியதாக ஆசிரியர் கூறுகிறார். நெருப்புவை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சுளுந்தீக்கு நாயக்கர்களின் அரசு தடை விதித்துள்ளது. முற்காலத்தில் வெளிச்சம் தந்து இன்று பலருக்கும் தெரியாமல் போன சுளுந்தீக்கு ஆசிரியர் வெளிச்சம் கொடுத்துள்ளார்.

Friday 25 September 2020

அன்னா கரீனினா

 

            அன்னா கரீனினா  - லியோ டால்ஸ்டாய்


   எவ்வளவு நாட்கள்தான் உள்ளூர் நாவல்களையே தேடிப்பிடித்து வாசித்துக்கொண்டிருப்பது சற்று வெளியையும் சென்று பார்க்கலாமே என்ற எண்ணத்தினால் உலக இலக்கியத்தைத் தெரிந்தவர்களின் பேச்சில் சரளமாகப் புரளும் லியோ டால்ஸ்டாயின் உலகத்தின் மிகச்சிறந்த நாவலாகப் பெரும்பான்மையானவர்களால் கொண்டாடப்படும் அன்னா கரீனினா நாவலை வாங்கி விட்டேன்.  ஆனால் வாங்கிய பின் நாவலின் நீளம்தான் (மொத்தம் எட்டு பாகங்கள்) கொஞ்சம் தயக்கத்தைக் கொடுத்தது அதனை வாசிக்கத் தொடங்க.... லியோ டால்ஸ்டாய் இந்த நாவலை 1873' ஆம் ருஷ்ய மொழியில் எழுத ஆரம்பித்துள்ளார். நான் வாசித்தது நா. தர்மராஜனின் மொழிபெயர்ப்பு.

    தனது சகோதரன் ஆப்லான்ஸ்கி மற்றும் அவரது மனைவி டாலிக்கும் இடையே ஏற்பட்ட ஊடலைத் தீர்த்துவைக்க அன்னா பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து மாஸ்கோ நகருக்கு வருகிறாள். அவளோடு இரயிலில் இராணுவத்தில் வேலை செய்யும் பிரபு விரான்ஸ்கியின் தாயாரும் ஒரே பெட்டியில் பயணிக்கிறாள். தாயை வரவேற்க வந்த விரான்ஸ்கியை அன்னா சந்திக்கிறாள். கண்களோடு கண்கள் பேசி ஒருவித ஈர்ப்பில் இருவரும் விழுகிறார்கள். டாலியின் சகோதரி கிட்டி மீது கொண்ட காதலால் கிராமத்திலிருந்து மாஸ்கோ வரும் லெவின் அவளிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்க அவளோ, அவளது தாயின் விருப்பத்தின்படி விரான்ஸ்கியை மணக்கும் நோக்கத்தோடு மறுத்து விடுகிறாள். ஆனால் விரான்ஸ்கியோ அன்னாவை பார்த்தபின் அவள் மீது கொண்ட மோகத்தால் கிட்டியை மறந்து அன்னாவை துரத்திக்கொண்டு பீட்டர்ஸ்பர்க் செல்லுகிறான். அன்னாவோ தனக்கு அரசாங்கத்தில் முக்கிய வேலையிருக்கும் கரீனின் என்பவருடன் திருமணமாகி எட்டு வயதில் செரோஷா என்ற மகனும் இருப்பதைக்  கூறி அவனிடமிருந்து விலகுகிறாள்.

          அன்னாவை விடாமல் துரத்தி அவளது மனதையும் கரைத்து அவளையும் அடைகிறான் விரான்ஸ்கி.  இதனால் கர்ப்பம் அடையும் அன்னா, கரீனினனிடம் அனைத்தையும் கூறித் தான் விரான்ஸ்கியோடு வாழ விவாகரத்து தருமாறு வேண்டுகிறாள். கரீனினனோ தன்னுடைய சமூக அந்தஸ்தைப் பறிகொடுத்து விடாமலிருக்க அவளை மன்னித்து ஏற்றக்கொள்வதாகக் கூறுகிறான். மகப்பேறு தொடர்பான கடுமையான காய்ச்சலில்  உடல் குன்றியிருக்கும் பொழுது அன்னா இறந்துவிடுவாள் என நினைத்து விரான்ஸ்கி தற்கொலைக்கு முயன்று தோற்கிறான். அதிலிருந்து மீளும்  விரான்ஸ்கி இராணுவத்தில் தனக்குக் கிடைக்கும் பதவி உயர்வைத் துறந்து அங்கிருந்து வெளியேறி அன்னாவுடன் வெளிநாடு செல்கிறான்.

          விரான்ஸ்கியால் நிராகரிக்கப்பட்ட கிட்டி  அதனால் மனம், உடல் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறாள். அங்குக் கிடைக்கும் அனுபவங்களால் மனப்பக்குவமடைபவள் மீண்டும் ருஷ்யா வந்து தன் சகோதரி டாலியின் உதவியால் லெவினை மணக்கிறாள். வெளிநாட்டிலிருந்து மீண்டும் ருஷ்யா திரும்பும் விரான்ஸ்கி மற்றும் அன்னா ஒரு கிராமத்தில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அன்னவோ தன்னுடைய மகன் செரோஷாவை எண்ணி வாடுகிறாள். கரீனின் அவளுக்கு விவாகரத்து தர மறுக்க, அவளுடைய சமூக அங்கீகாரத்தை எண்ணி வருந்துகிறாள். அவளில் மனதில் அமைதி தேய்ந்தது கொண்டே வருகிறது. அதனால் அவள் மனதில் ஐயம் குடி கொண்டு விரான்ஸ்கி மீதும் நம்பிக்கை இழந்து சந்தேகிக்கிறாள். அனாவசியமாக விரான்ஸ்கி அவள் கட்டுப்படுத்த முயல அவர்களிடையே சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனஸ்தாபம் நிகழ்கிறது. அதுபோல் ஒரு சிறிய ஊடலுக்குப் பின் தன் தாயைப் பார்க்கச் சென்ற விரான்ஸ்கியை தொடரும் அன்னா உச்சக்கட்ட மனக்குழப்பத்தில் வெறுப்பின் உச்சத்தில் எடுக்கும் முடிவுதான் நாவலின் முடிவும் கூட. 

                   அன்னாவை மட்டுமே நாவல் முன்னிலைப் படுத்தாமல் லெவின், கிட்டியின் காதல் வாழ்வும் இணையாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் லெவினின் சகோதரர்களின் கிளைக்கதைகளும் உள்ளது. வெறும் காதல் கதையாக மட்டுமில்லாமல் கதை நகரும் தளத்தினை பயன்படுத்தி அன்றைய  மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் நகரங்கள், ருஷ்யாவின் கிராமங்களை கண்முன்னே நிறுத்துகிறார். அரசியல் சூழ்நிலை, நகர மற்றும் கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்திற்குள்ள வேறுபாடு, சமய நம்பிக்கைகள், விவசாயிகளின் பிரச்சினைகள் என நாவல் அலசும் விஷயங்கள் எண்ணிலடங்காதவை. பெண்களின் நுட்பமான உணர்வுகளை, உணர்ச்சிகளை, அவர்களின் மனவோட்டங்களை டால்ஸ்டாய் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். கதையின் ஊடாக பயணிக்கும் லெவினின் பழக்க வழக்கங்களாக, கருத்துக்களாகத் தனது எண்ணங்களைப் பதிவுசெய்வதாகத் தோன்றியது. கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஆண், பெண்களின் உளவியலை நாவல் பேசினாலும் இன்னும் பல ஆண்டுகள் கடந்து யார் வாசித்தாலும் அவரின்  நெஞ்சையும் நெருடும். 

  நாவலின் பரந்த பின்னணி, நிகழ்வுகளின் விசாலமான சித்தரிப்பு, யதார்த்தமான உரையாடல்கள், கதாபாத்திரங்களின் பன்முகத்தன்மை, விவாதிக்கும் சமூகப் பிரச்சினைகள் என லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவல் நிலையிலிருந்து விலகி அமரகாவியமாகிறது. குடும்பத்தில் தோன்றும் ஒரு சிறிய பிரச்சினை குடும்ப உறவுகளுக்கிடையே புயல், சூறாவளியெல்லாம் தோற்றுவித்து எவ்வாறு சின்னாபின்னமாக்குகிறது. டால்ஸ்டாய்  பேசும் மனித உறவுகள், மனித நேயம் அன்னா கரீனினாவை வாசிக்கும் அனைவரையும் முதல் வாசிப்பிலே கவரும்படி உள்ளது. வாசிப்பின்போது நீங்கள் அறிந்த, பழகிய மனிதர்களைப் பற்றிய எண்ணங்கள் மனதில் தோன்றலாம். காரணம் மனிதர்களின் குணநலன்கள், செயல்பாடுகள், உறவின் சிக்கல்கள்  பல நூற்றாண்டுகளைத் தாண்டியும், புவியியல் எல்லைகளைக் கடந்தும் இன்றும் மாறாமல் இருப்பதுதான். வாசிப்பை நேசிக்கும் அனைவரும் தவற விடாமல் கட்டாயம் வாசித்தனுபவிக்க வேண்டிய காவியம் அன்னா கரீனினா.  

        வாசித்து முடிக்கும் போது பொதுவாகப் பெரிய நாவல்கள் ஒருவித ஆழ்ந்த அமைதியை, நெகிழ்வை, கனத்த மனதை உண்டாக்கிவிடும். நாவலின் கதாபாத்திரங்களுடன் ஒன்றாய் பயணித்து, அவர்களின் வாழ்க்கையின் ஊடே கூடி வாழ்ந்து விட்டு, சட்டென்று அவர்களைப் பிரிவதைப் போன்ற உணர்வின் விளைவாய் இருக்கலாம். அன்னா கரீனினா என் மனதில் ஏற்படுத்திய தாக்கம் விலக சில நாட்கள் என்ன?  சில வாரங்களே ஆகலாம். 

இறுதியாக :

     அன்னா கரீனாவை திரைப்படமாக இதுவரை  பத்திற்கும் மேற்பட்ட முறை பல்வேறு மொழிகளில் எடுத்துள்ளார்கள். ஆனால் எதுவுமே வெற்றி பெறவில்லையாம். டால்ஸ்டாயின் நயமிக்க இலக்கிய சுவையை, அழகான கவித்துவத்தை யாராலும் திரையில் முழு உணர்வுப்பூர்வமாகக் கொண்டு வர முடியாது என்பதே என் எண்ணம். 


Saturday 5 September 2020

சொ. க - 2. கனவு தேவதைகள்



                                         கனவு தேவதைகள்



யாரோ பலமாக அடித்தது போன்ற சத்தத்தைத் தொடர்ந்து  வெளியில்  மேகம் கூக்குரலோடு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தது...  நான் என் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை யாரும் பார்க்கா வண்ணம் துடைத்துக்கொண்டே டிவியை ஆப் செய்தேன். இதயம் வலித்தது. ஜெயித்தது அக்காதான்... அதுவும் அவளுக்கும் இந்த வெற்றி மிகவும் தேவைப்பட்ட ஒன்று. கடைசி இரண்டு ஆண்டுகளாக எந்த முக்கிய போட்டிகளிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை... ஏன் அரையிறுதியைத் தாண்டியே முன்னேறிச் செல்லவில்லை.... கடவுளுக்கே தெரியும்.. நான் எனக்காக அவரிடம் வேண்டியதை விட அவளுக்காக வேண்டியதுதான் அதிகம்... எத்தனை பிரார்த்தனைகள், வேண்டுதல்கள்... ஆனாலும்... இப்பொழுது... எப்படி மனம் இடமாறியது.. நான் மட்டும்தான் இப்படியா??? எல்லோரும் இப்படித்தான் மாறிவிடுவார்களா?? அக்காவின் வெற்றியைக் கொண்டாட முடியாமல் தோற்றவளின் கண்ணீர் மனதைப் பிசைந்தது ஏன்?... எங்கே? எப்படி? எவ்வாறு அவள் என்னுள் நுழைந்தாள்... 

                                ------  xx  ------ xx -------

      டேய்... அவளைப் பாரு.... திருநெல்வேலிகாரன் பால்கனியிலிருந்து அலறினான்.. யாரைடா  பார்க்கச் சொல்லுகிறாய், என்று கூறியவாறே நான் பால்கனியில் நுழைய அதற்குள் "அதோ தலையில் வழுக்கை விழுந்த அவளைத்தான்" நாகர்கோயில்காரனின் கிண்டலான வார்த்தைகள் ஒலித்தது..  வந்து பார்த்த எனக்கு மயக்கம் வராத குறைதான்... How is it possible??? உலகத்தில் ஒருவரை மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என்பார்களே... அது நிஜம்தானா... இல்லை அவளே இங்கு வந்துவிட்டாளா???  அவளின் ஏறு நெற்றியை ஏளனமாக எப்பொழுதும் பேசும் நாகர்கோயில்காரன், நல்லா பாருடா அந்த வழுக்கைத் தலை,  எடுப்பான பல், கலரு எல்லாம் அப்படியே நகல் எடுத்த மாதிரி இருக்கிறது. அதற்குள் நம்ம அவசரக்குடுக்கை திருச்சிக்காரன் வந்து யாருன்னு பார்த்து விசாரித்து வரவா எனக் கேட்க... அவனை திருநெல்வேலிகாரன் உள்ளே கூப்பிட்டுச் செய்த அர்ச்சனை வார்த்தைகளை இங்கே எழுதமுடியாது. 

                             ------  xx  ------ xx -------

        நாங்கள்  வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு எங்களின் இதர நண்பர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். நீளவாக்கில் இருந்த எங்கள் குடியிருப்பின் முடிவின் இருபக்கமும் ரோடு. ஒருபக்கம் அந்த நகரின் பிரபல இனிப்பு கடை+ ஹோட்டல். அதனையொட்டி மெயின் ரோடு. அடுத்தபக்கம்தான் எங்கள் பிளாட் மற்றும் பால்கனி... அதன் கீழே என்ன கடை தெரியுமா?.  நாங்கள் பையைக் கயிற்றில் கட்டி அனுப்பி வாங்க வசதியாக Wine Shop with Bar. அது பெரிய வீதியில்லை எனினும் சில அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைந்திருந்தன. கல்யாணமான நண்பர்களின்  மன வருத்தங்களைத் துரத்தும் புகலிடமாகவும், கல்யாணமாகாத நண்பர்களின் பார்ட்டி ஹாலாகவும் விளங்கியது எங்கள் வீடு. மாதக்கடைசியில் காலி பாட்டில்களை வைத்தே சிலபல முழு பாட்டில்களையே வாங்கிவிடலாம் எனில் பார்த்துக்கொள்ளுங்கள். 

                      ------  xx  ------ xx -------

     ண்பா... இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவள் மனதை எப்படியோ  மாற்றி ஏமாற்றிவிட்டான்.. ஏதாவது செய்யவேண்டும்??
"நிச்சயம் விடக்கூடாது டா...."
சாமி சத்தியமா..
"சத்தியமா... டா... "
நீயேச் சொல்லு.. சரி நான்தான் வேண்டாம் என்று வைத்துக்கொண்டாலும்... உனக்கு என்னடா குறைச்சல்..
"அதுவும் ரெண்டாம் தாரமாக அவனுக்கு... நினைத்தாலே வெறுப்பா, எரிச்சலா இருக்கு.."
ஆமா 😢....  அமலா... நம்ம அமலா டா...
"கவலைப்படாதே நண்பா ஏதாவது செய்து எப்படியும் திருமணத்தை நிறுத்திவிடுவோம்"
என்னடா செய்ய முடியும்... நாளைக்கு physics எக்ஸாம் வேறு இருக்கு ராஜ்....
"எக்ஸாம் எல்லாம் முடியட்டும்... போய் நாகர்ஜுனாவை வெட்டுகிறோம்... கல்யாணத்தை நிறுத்துகிறோம்...."
சூப்பர் ராஜ்..... வெட்டுகிறோம் அவனை... ஒரே வெட்டு.... ஒரே வெட்டு.......

டேய் என்னடா.... எழும்பு டா.... தூக்கத்தில் வெட்டு... வெட்டு என உளறிக்கிட்டு இதான் பகலில் தூங்காதே என்கிறது... என்னடா கனவு கண்டாய் என்றான் என்னைத் தட்டி எழுப்பிய நாகர்கோயில்காரன்.. 

                    ------  xx  ------ xx -------

              ல்லோருக்கும் நிச்சயமாக கனவு தேவதைகள் இருப்பார்கள். பலருக்கு அவ்வப்போது மாறிக்கொண்டும் சிலருக்கு மாறாமலும்... அவர்களுடன் நாம் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கவும் செய்வோம். கனவு தேவதைகள் நம் மனதில் ஊடுருவி இதயத்திற்குள் எவ்வாறு குடியேறுகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.. அதுபோலத்தான் மார்டினா ஹிங்கிஸ் (Martina Hingis). இதோ இந்த நிமிடம் வரை எனக்குப் புரியவில்லை எங்கே? எப்படி? எவ்வாறு அவள் என் மனதுக்குள்ளேயே நுழைந்தாள்... எதற்காக அவளை பார்க்கும் பொழுதெல்லாம் பட்டாம்பூச்சி பறப்பது போல் பரவசம் ஏற்படுகிறது. அன்னா கோர்னிகோவா (Anna Kournikova), சபாடினி (Gabriela Sabatini) போலப் பெரிய அழகெல்லாம் கிடையாது இருந்தாலும் அவள்தான் என் கனவு தேவதை. ஒரு மழைக்காலத்தில் அவள் தோற்று அழ, நான் கண்ணீர் வடித்த நிகழ்ச்சி நடந்தது 1999 French Open Final. ஜெயித்தது நான் அக்காவாக நினைக்கும் ஸ்டெப்பி கிராப்தான் (Steffi Graf)... பிற்காலத்தில் ஸ்டெப்பி அக்கா எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத அகசியை (Andre Agassi) திருமணம் செய்தது மற்றுமொரு அதிர்ச்சி. அந்தக் கதை இப்பொழுது வேண்டாம். 

                       ------  xx  ------ xx -------

       ப்படியே அவளை மாதிரியே அச்சி அசலாக இருக்காடா.... என்ற திருநெல்வேலிகாரனிடம், இதற்கு முன்பு இவளை இங்குப் பார்த்ததில்லையே எப்போது வந்தாள்? எந்த வீட்டிற்கு வந்துள்ளாள் டா எனக் கேட்டேன். அந்த பெண்ணை பற்றிய குழப்பத்திலே என் அறைக்குள் நுழைந்தவனைக் கட்டிலுக்கு நேர் எதிரே ஒட்டப்பட்டிருந்த ஹிங்கிஸ் முறைத்துப்பார்த்தாள். வழக்கம்போல் அடுத்தகட்ட நிகழ்வுகளைத் தீர்மானிக்கக் கூட்டம் கூட்டப்பட்டது. "நீங்கள் எப்படியும் போங்கள்" நாகர்கோயில்காரன் விலக்கிக்கொள்ள எங்களுக்குக் கொஞ்சம் உள்ளூர சந்தோஷம்தான். போனமுறை மாதிரி சொதப்பி விடக்கூடாது எனச் திருச்சிக்காரனை எச்சரித்துவிட்டு அவளைப்பற்றிய தகவல்களைத் திரட்டுவது பற்றி யோசிக்கும் பொழுது அவன் சொன்னான் முதலில் அவள் யாருக்கு என முடிவு செய்துவிடுவோம். நான் திரும்பி மிகுந்த கோபத்தில் அவனை உற்று நோக்க நிலைமையை உணர்ந்து கொண்ட திருநெல்வேலிக்காரன், இதில் என்ன சந்தேகம் அவள் பார்க்க ஹிங்கிஸ் மாதிரியிருப்பதால் நாம் விலக்கிக் கொள்வதுதான் சரி எனத் திருச்சிக்காரனைப் பார்த்துக்கூறினான். 

                  ------  xx  ------ xx -------

     ங்கள் வீடே விழாக்கோலம் கொண்டிருந்தது... விடிய விடியக் கொண்டாட்டம். என் பிறந்தநாள்.... அதற்கான சிறப்பு விருந்துக்குப் பல நண்பர்கள் குவிய கேக்  வெட்டிய பின்... Sony five CD Exchanger அதிரப்பாட்டு, நடனம், கண்ணாடி குவளைகளின் சத்தம் ஒரே கும்மாளம்தான். ஹிங்கிஸ் படம் போட்ட, ஒட்டிய பல Greeting Cards.....  இதனிடையே போன வாரம் எதிர் apartment வீட்டுப் பெண்ணை பற்றி கொஞ்சம் விசாரித்தும் விட்டோம்.. ஒரு கம்பெனியில் வேலை செய்வதாகவும் தனியாகத்தான் இங்கு வீடு எடுத்துத் தங்கியிருப்பதாகவும் தெரிந்தவந்தது. திருச்சிக்காரன்தான் இது நீ ஹிங்கிஸ்க்கு செய்யும் துரோகம்... அவளை விட்டுவிட்டு அவளை மாதிரியே இருக்கும் பெண்ணை பார்ப்பது தவறு, அநியாயம் எனப் புலம்பிக்கொண்டிருந்தான். பார்ட்டிக்கு வந்த நண்பர்களுக்கெல்லாம் அவளைப் பெருமையாக, இறுமாப்புடன் காட்டினேன். இனி அவளைப் பார்த்துப் பேசி அடுத்துக்கட்ட நடவடிக்கைகளுக்குப் போகுமாறு உற்சாக பானம் தந்த உற்சாகத்தில் அவர்கள் கத்தினார்கள். Second shift பார்த்து விட்டு பார்ட்டிக்கு தாமதமாக வந்த திருச்சிக்காரன் என்னை அலட்சியமாகப் பார்த்துக் கொண்டே திருநெல்வேலிகாரனிடம் எப்பா "நம்ம ஹிங்கிஸ் வீட்டுக்கு விருந்தாளி எல்லாம் வந்திருக்காங்கப்பா" என்றான் நக்கலான தோணியில்.... 

                           ------  xx  ------ xx -------

       மெல்லிய குளிர் காற்று என் உடலை வருடிச்சென்றது. எங்கும் பச்சைப்பசேல் எனப் புல்வெளி.. டார்க் சாக்லேட்டை ஒரு கடி கடித்துவிட்டு யார் முதலில் ஆரம்பிப்பது என்றவளிடம் நீயே ஆரம்பி எனப் பந்தைத் தூக்கிப்போட்டேன். லவ் ஆல்.... என சர்வீஸ் செய்தவளைப் பார்த்து ... நோ... நோ... ஒன்லி லவ் மீ எனச் சிரித்துக்கொண்டே சொல்லி பந்தை டென்னிஸ் ராக்கெட்டால் திருப்பி அடித்தேன்.  
Come On...... Super shot ...... 

இவன் பக்கத்தில் தூங்குவதே இம்சைதான் போல.... ஏன்டா என்னை அடிக்கிறாய்... எதிர்வீட்டுக்காரிக்குக் கல்யாணம் ஆகிவிட்டது எனச் சொன்னதுடனே உன் மூஞ்சி போன போக்கே சரியில்லையே... எழும்புடா... ஆபீஸ் போக வேண்டும்.....நாகர்கோயில்காரனின் சத்தம். 

             அடப்பாவி... அப்போ இவ்வளவு நேரம் கனவில்தான் ஹிங்கிஸ் கூட டென்னிஸ் விளையாடினோமா???  இரவு திருச்சிக்காரன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்து நெஞ்சை முள்ளாய் குத்தியது.... எதிர்வீட்டில்  இருப்பவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறதாம்.  புதிய வேலை கிடைத்ததால் அவள் அதில் சேர முதலில் வந்துள்ளாள். பேங்க்கில் வேலை பார்க்கும் அவளது கணவனுக்கு இப்பொழுதுதான் மாறுதல் கிடைக்கக் குழந்தையோடு இன்று வந்துள்ளான்.  இதைச் சொன்னதுடன் பார்டியின் போக்கே மாறிவிட்டது.... என்ன உற்சாகமாக அருந்தியவர்கள்... அதன்பின் சோகமாக அருந்தினார்கள்...   சிலர் என் மனத்தேற்ற இன்னமும் முயற்சிகளாம் டா... அதுத் தப்பில்லை என (அ)நியாயம் பேசினார்கள்... நான் அவர்களுக்குச் சொன்னதெல்லாம் அமலாவுக்காக, நாகர்ஜுனா செய்ததைத் தவறு என்று சொன்ன நியாயவாதிகள் நாங்கள்😎.. கடவுளாகப் பார்த்து நான் ஹிங்கிஸ்க்கு செய்யவிருந்த துரோகத்தைத் தடுத்து நிறுத்திவிட்டார்😛... 

       
                        ல்லாம் சோகமாக... சுகமாக முடிந்து ஒரு வாரம் இருக்கும்... எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தோம்.... டேய் டேய்... சேனலை மாத்தாதே.... சின்ன பெண்ணா அழகா இருக்காளே இவள் யாருடா...

லைலா.... டா உனக்குத் தெரியாதா.... 

ஓ... இது நம்ம லைலாவா😍......   கண்களில் மின்னல் தோன்ற முகம் மலர்ந்த என்னை  மூவரும் முறைத்தார்கள்...


இறுதியாக:

முதல் கதைக்குக் கிடைத்த அபரிதமான வரவேற்பு 😄 இரண்டாவது கதையையும் எழுதலாம் என்கின்ற நம்பிக்கையைக் கொடுத்தது. பலர் அடுத்த கதை எப்பொழுது வெளிவரும் எனப் பலமுறை கேட்கவும் செய்தார்கள். மீண்டும் கூறுகிறேன் சிறிது காத்திருங்கள் மீண்டுமொரு தேவதை நிச்சயம் வருவாள் 💝.


சொ. க - 1. பால்கனி தேவதைகள்  வாசிக்க கிளிக் செய்யவும்

Saturday 22 August 2020

சூல்

    

                                 சூல் -  சோ. தர்மன்

 

சாகித்ய அகாடமி விருதை 2019'ம் ஆண்டு பெற்ற நாவல் என்ற முறையில்தான் எனக்கு அறிமுகமானது இந்த சூல் நாவல். பலமுறை நான் அடுத்து வாசிக்கும் பட்டியலிருந்து தள்ளிப்போனாலும் இறுதியில் வாசித்து முடித்தேன். 

  எட்டயபுரத்து மன்னர் ஆட்சியின் கீழ் உள்ள கோவில் பட்டி அருகில் இருக்கும் உருளைக்குடியின் வெயில் காலத்தில் கதை ஆரம்பிக்கிறது. விவசாயிகள் கண்மாயிலிருந்து கரம்பை மண்ணை எடுத்து தங்கள் வயலில் கொட்டுகிறார்கள். அந்த கண்மாய்தான் நாவலில் கதாநாயகன்.  தண்ணீர் நிறைந்து நிறை சூலியாய் மங்களகரமாக இருந்த கண்மாய் காலப்போக்கில் யார் யார் கைகளிலோ அகப்பட்டு பாலையாய், மூலியாய் மாறியதே நாவலின் மையைக்கரு. எட்டயபுரத்து மன்னர், ஆங்கிலேயர்கள், சுதந்திர இந்தியா காலங்களில் நீர்நிலைகளின் நிலை என்ன? அவை எவ்வாறெல்லாம் பராமரிக்கப்பட்டது, படுகிறது என்பதைப் பேசக்கூடிய நாவல்தான் சூல்.

    அந்த காலத்தில் மன்னரின் உதவியுடன் அந்தந்த கிராம மக்களே அவர்களது கண்மாய் மற்றும் நீர்நிலைகளைப் பராமரிப்பு செய்து, மராமத்து பணிகளை மேற்கொண்டு வந்தனர். கண்மாயைப் பாதுகாத்து அனைத்து நிலங்களுக்கும் நீரைச் சமமாக அளித்து மேலாண்மை செய்பவன்தான் நீர்ப்பாய்ச்சி. அவனை மையைப்படுத்தி நாவலைக் கிராமத்துக் குறும்பு ( பல அசைவ ) பேச்சிலும், அவர்களின் பாரம்பரிய விவசாய, பொறியியல், மருத்துவ இயற்கை சார்ந்த நுண்ணறிவுகளையும் ஆங்காங்கே பதிவு செய்தும் நாவலை நகர்த்திச் செல்லுகிறார் சோ. தர்மன். கி. ராவை வாசித்தவர்களுக்கு அவரின் தாக்கத்தை இந்த நாவலில் காணலாம். 

  வெற்றிலை தொழில் ரகசியத்தைப் பொய் சொல்லி ஆத்தூரில் கற்றுக்கொள்ளும் மகாலிங்கம் பிள்ளை,  மனசாட்சி உறுத்தலோடு அதனை யாரிடம் சொல்லாமலே மடிந்து வயற்காடுகளுக்குக் காவல் தெய்வமாகிப் போனது. தன் உயிரைக் கொடுத்து கண்மாயில் ஏற்பட்ட அடைப்பை எடுத்துக் கண்மாய்க்குக் காவல் தெய்வமாகிப் போன மடைக்குடும்பன். குடிக்கத் தண்ணீர் கேட்டவனைத் தவறாகக் கள்ளன் என நினைத்துத் துரத்த அதனால் மரணமடைந்த கள்ளன் சாமியாகிய கதை, குரவை மீனால் இறந்த குரவன், காதலித்து கற்பமாக்கிக் கைவிட்டவனைக் கொன்று, கொல்ல பயன்படுத்திய  உளியையே சாமியாக்கிய மாதாயி என்று பல கிராம கடவுள்களின் கதைகள், பேயைப் புணர்ந்தவன் கதை, அனுமன் முனி கதை என நம் கிராமங்களில் மட்டுமே வாய்வழியாகக் கேள்விப்படக்கூடிய அமானுஷ்க்கதைகள் சுவாரஸ்யமானவை.  

  தனக்குப் பிள்ளைகள் இல்லாத குறையை மறக்க, தன் எண்ணங்களைக் கட்டுப்படுத்த கோவிலுக்குச் செல்லுபவர்களுக்கு மோர் தந்து அவர்கள் இளைப்பாற மரங்களை வளர்த்து சோலையாக்கும் கோப்புளாயியும், தனக்கான சமாதியைக் கட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கும் குப்பாண்டிசாமியும், மலையாள மந்திரவாதி குஞ்ஞான் வாசிப்பவர்களின் மனதினுள் நிறைந்திருக்கும் கதாபாத்திரங்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பிச் செல்லும் வழியில் தனக்கு உதவி செய்த பனை மரமேறும் எலியன், லாடம் அடிக்கும் பிச்சை ஆசாரிக்கும் பரிசாகத் தந்த நகைகளை அரண்மனைக்காரர்கள் மற்றும் வெள்ளைக்காரர்கள் மீதான பயத்தின் காரணமாக வீட்டுக்குள்ளே புதைத்து வைத்து தலைமுறை தாண்டியும் மீட்டெடுக்க முடியாமலே போவது எழுதப்பட்ட விதம் நகைச்சுவை. தாழ்த்தப்பட்ட மக்களின் ஊருக்குள் எப்படி பள்ளிக்கூடங்களும், சர்ச்சுகளும் நுழைந்தது. மதமாற்றம், கடவுள் மறுப்பு மற்றும் திராவிட அரசியலைப் பற்றிய கூரிய விமர்சனங்களை முன் வைக்கிறார். 

      நாவலில் பேசும் நிகழ்வுகளின் கால வேறுபாடுகள் நாவலின் ஆவணத் தன்மையைக் கொஞ்சம் நிலைகுலையச் செய்கிறது. எடுத்துக்காட்டாகக் கட்டப்பொம்மன் தப்பிச் செல்லும் போது வரும் ரயில். அவர் தூக்கிலிடப்பட்டுக் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழித்தே இந்தியாவில் முதல் இரயில் சேவைத் துவங்கியது. சுச்சி நாயக்கர் என்னும் ராமசாமி நாயக்கர், சின்னாத்துரை, மற்றும் சின்னாத்துரையின் சாவுக்குப் பின் பஞ்சாயத்துத் தலைவராகும் மூக்காண்டி (மூக்கா) கதாபாத்திரங்கள் யாரை மனதில் கொண்டு பின்னப்பட்டவை என வாசிக்கும் எவருக்கும் எளிதில் புரிந்துவிடும்.  சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சீமை உடை மரம், ஜிலேப்பி கெண்டை மீனை இவர்கள் கொண்டு வந்ததாக  எழுதியிருப்பது. 

   ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்ற பொழுது 39,640 கண்மாய்கள் இருந்தனவாம். நம் முன்னோர்கள் அன்று மழை நீரைச் சேமித்து எளிதாக மேலாண்மை செய்த கண்மாய்களை இன்று வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, வனத்துறை எனப் பலதுறைகளை ஏற்படுத்திச் சிக்கலாக்கி நாம் அடைந்தது என்ன? அவற்றின் தற்போதைய நிலைமை? அவையனைத்தும் எங்குச் சென்றன?  எப்படிக் காணாமல் போயிற்று?. போன்ற பல கேள்விகளை நம்முள் எழுப்புகிறது. நீருக்காகப் பல இன்னல்களைச் சந்திக்கும் இன்றைய சூழலில் நீர் மேலாண்மையின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் இந்த சூல் நாவல் தவறவிடாமல் அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல். 

இறுதியாக :

  சூல் நாவல் வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதினையும் பதறச்செய்யலாம். நமது சமுகத்தின் மீது கடுமையான கோபத்தினை ஏற்படுத்தலாம்.. அடுத்து என்ன ???   

அரசாங்கம் :  அருமையான கருத்துள்ள நாவல்... இந்தாப் பிடி சாகித்ய அகாடமி விருதை.

"பாலம் கட்டி ரோடு போட்டால் பட்ஜெட் அதிகமாகி கமிஷன் கம்மியாகி விடும். மண்ணை அள்ளிப்போட்டு குளத்தை நிரப்பி ரோடு போடுங்கள்".. 😛

நாம் : எப்படி இருந்த ஊரை இப்படி ஆக்கிவிட்டார்கள் பாவிகள்... விளங்குவார்களா அவர்கள்... அதனால்தான் இப்படி தண்ணீர் பஞ்சம்.. 

"எப்பா அந்த குளத்துக்குள்ளே போகும் ரோடுக்கு பக்கத்தில் ரெண்டு பிளாட் ரொம்ப சீப்பா கிடக்கு எனத் தரகன் சொன்னான். ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்து விடுவோமா?" .. 🙈

Sunday 2 August 2020

சிந்து முதல் கங்கை வரை



                         சிந்து முதல் கங்கை வரை 
                                                     - ராகுல சாங்கிருத்தியான்

     
 
  ராகுல சாங்கிருத்தியாயனின் வால்கா முதல் கங்கை வரை புத்தகம் மீண்டும் தந்த வாசிப்பு அனுபவம் அவர் எழுதிய சிந்து முதல் கங்கை வரை நாவலை வாசிக்கத் தூண்டியது. எங்கள் வீட்டில் 1988 'லிருந்து  இந்நாவலிருந்தாலும் நான் முன்பு வாசித்ததில்லை. வால்கா முதல் கங்கை வரையில் இடம் பெற்றிருக்கும் பந்துல மல்லன் (புத்தர்) காலத்துக் கதையை சிம்ஹ சேனாதிபதி என்ற தலைப்பில் அந்த புத்தகத்திற்கு முன்பே எழுதிய நாவலிது. வால்கா முதல் கங்கை கிடைத்த வரவேற்பு, புகழினால் பின்பு இந்த நாவலின் தலைப்பைச் சிந்து முதல் கங்கை வரை என மாற்றி விட்டார்கள் என்றெண்ணுகிறேன்.

    வைசாலி நாட்டை சேர்ந்த லிச்சவி இன இளைஞன் சிம்மன், தட்சசீலத்திற்கு வந்து ஆச்சாரியார் பஹுளாஸ்வரரிடம்  மாணவனாகச் சேருகிறான். பல நாட்டை சேர்ந்த இளைஞர்களும் போர்ப் பயிற்சி முறைகளை அவரிடம் கற்று வருகிறார்கள். அக்காலகட்டத்தில் தட்சசீலம் மற்றும் வைசாலியில் குடியாட்சியும் மற்ற தேசங்களில் முடியாட்சியும் நடைபெறுகிறது. பலவித கலைகளையும் திறம்பட கற்றுத் தேறும் சிம்மனை உதவி ஆசிரியனாக நியமிக்கிறார்.  ஆச்சாரியாரின் மகள் ரோகிணியும் அவன் மீது காதல் கொள்கிறாள். பாரசீக மன்னன் தட்சசீலம் மீது படையெடுத்து வர சிம்மன் மற்றும் மேலும் சில வைசாலி நாட்டு மாணவர்களும் இராணுவத்துடன் சேர்ந்து பாரசீக படையைத் தோற்கடிக்கிறார்கள். சிம்மனின் சேவையை, வீரத்தைப் பாராட்டி ரோகிணியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதுடன் தட்சசீல குடியுரிமையும் அளிக்கிறார்கள். 

   சில மாதங்கள் கழித்து வைசாலி திரும்ப முடிவு செய்யும் சிம்மனோடு, தட்சசீல வீரன் கபில் தலைமையில் ஒரு நல்லிணக்க குழுவும் பரிசுகளோடு கிளம்புகிறது. மகத நாட்டு மன்னன் பும்பிசாரனின் மகன் அஜாதசத்ருவின் தூண்டுதலால் வைசாலி மீது போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் அவர்கள் வைசாலியியை வந்தடைகிறார்கள். வைசாலி குடியரசு சபை உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெறும் சிம்மனை தட்சிண சேனைத் தலைவனாகவும் நியமிக்கிறார் குடியரசுத் தலைவர் கணபதி சுனந்தர். சிம்மனின் யோசனைக்கு ஏற்ப இராணுவத்தில் பெண்களும் சேர்க்கப்பட்ட அதற்கு அவனது அண்ணி பாமா தலைமைத் தாங்குகிறாள். சிம்மன் மற்றும் கபிலின் வியூகங்களால் மகத படைப் போரில் தோல்வித் தழுவ சமாதான உடன்படிக்கை ஏற்படுகிறது. 

    சிம்மன் சேனாதிபதியாகப் பதவி உயர்வு பெறுகிறான். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கௌதம புத்தரும் மகாவீரரும் வைசாலிக்கு வர, சிம்மன் ஜைனவ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அஹிம்சை, புலால் மறுப்பு என மாறுகிறான். ஆனால் சுற்றியுள்ள அனைவரும் புத்தரின் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு அவனைப் பரிகாசம் செய்ய, புத்தரை ஒருமுறையேனும் தரிசிக்க நினைக்கும் அவனது ஆவலை  ஜைன மதாச்சாரியார் தடுத்து விடுகிறார். இறுதியில் அவரை மீறி கௌதம புத்தரைத் தரிசிக்கச் செல்கிறான். அங்குப் புத்தரின் மோகன சக்தியில் கட்டுண்டு அவரின் கோட்பாடுகளை அறிந்து, புரிந்து பௌத்த தர்மத்தில் சரணடைந்து விடுகிறான். 

  முழு நாவலையும் உரை நடை பாணியிலே ராகுல சாங்கிருத்தியான் நகர்த்துகிறார்.  இதிலும் தன்னுடைய பல கருத்துக்களைப் புகுத்தி குடியாட்சி முறையைத் தூக்கிப் பிடிக்கிறார். ஆரியர்கள் இனக்கலப்பில் ஈடுபட்டதாலே குடியாட்சி ஒழிந்து முடியாட்சி தோன்றியதாகக் கூறுகிறார். ஜைனவ மற்றும் புத்த சித்தாந்தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கி பௌத்த மார்க்கம் புலால் உண்ணுபவதைத் தடுப்பதில்லை என்கிறார். பாமா கதாபாத்திரம் மூலம் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களே.. அவர்களாலும் எதனையும் பேசவும், செய்யவும் முடியும் என முன் வைக்கிறார். மொத்தத்தில் நாவல் கொஞ்சம் சாண்டில்யன் டைப் கதைதான் (நினைவில் கொள்க -ராகுல சாங்கிருத்தியான்தான் சாண்டில்யனுக்கு முன்னோடி). கதாநாயகன்தான் எதனையும் தனியாக (சில பெண்களின் உதவியோடும் 😍) செய்து முடிக்கும் One man Show நாவல்தான். யூகிக்கும் வகையிலே நேர்க்கோட்டில் பயணிக்கும் நாவலில் ஆசிரியர் வைத்த ஒரே முடிச்சு போரில் மகத நாட்டின் பட்டத்து யானையை அடக்கிய வீரனைப் பற்றியதுதான்😛.  வால்கா முதல் கங்கை வரையை மனதில் கொள்ளாமலோ அல்லது சிந்து முதல் கங்கை வரை முதலில் வாசித்திருந்தாலோ இந்நாவலைப் பற்றிய என்னுடைய எண்ணங்கள் மாறுபட்டு இருந்திருக்கலாம். 

இறுதியாக :

  இந்த நாவலிற்கான குறிப்புக்களை  எடுத்த பழங்கால 1600 செங்கற்கள் இன்றும் பாட்னா மியூசியத்தில் இருப்பதாக தன் முன்னுரையில் ராகுல சாங்கிருத்தியாயன் குறிப்பிடுகிறார். செங்கற்கள் அவருக்குக் கிடைத்த நிகழ்வையே மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார். என்ன எனக்குத் தெரிந்த பும்பிசாரன் வைசாலி நாட்டை சேர்ந்த இளவரசி செல்லானாவையும் மணந்தவர் தன் மகன்  அஜாதசத்ருவால் சிறை பிடிக்கப்பட்டு அங்கே உயிர்நீத்தவர். 

Thursday 23 July 2020

வால்கா முதல் கங்கை வரை



                    வால்கா முதல் கங்கை வரை 
                                  -  ராகுல சாங்கிருத்தியான்


ராகுல சாங்கிருத்தியான் 1942'ல் எழுதிய வால்கா முதல் கங்கை வரை புத்தகத்தை நான் கல்லூரி நாட்களிலே வாசித்து விட்டேன். மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டியது யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் புத்தகம் தந்த அனுபவம். ஒரு வரலாற்று ஆய்வுக் கட்டுரையை வாசிக்கும் அனுபவத்தை சேப்பியன்ஸ் தரும் ஆனால் வால்கா முதல் கங்கை வரையோ ஒரு நாவலை வாசித்த உணர்வைத் தரவல்லது. காரணம் சுமார் எட்டாயிரம் ஆண்டுகாலமாக மனித சமுதாயத்தில் மெல்ல மெல்ல நடந்த நிகழ்ந்த மாற்றத்தினையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் நிகழ்வுகளின் பின்னணியில் இருபது தலைப்புகளில் சிறுகதைகளின் வடிவாக ஆசிரியர் எழுதியிருப்பது.

இருபது கதைகளில் முதல் பத்து கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலகட்டத்தையும், அடுத்த பத்து கிறிஸ்துக்கு பிந்தைய காலகட்டத்தையும் பிரதிபலிக்கிறது. கி.மு 6000'வில் வால்கா நதிக்கரையில் ஆரம்பித்து கி.பி 1942'வில் கங்கை நதிக்கரையில் முடிவடைகிறது. ஒவ்வொரு கதையும் தனித்தனியே என்ன பேசுகிறது என்பதைவிட பொதுவாக எதைப்பற்றிப் பேசுகிறது என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.

  இனக்குழுவாக இருந்த மனிதர்கள் உணவுக்காக வேட்டையாட இடம் பெயர்வது அதனால் மற்ற குழுவினரோடு ஏற்படும் மோதல். காலமாற்றத்தோடு மோதலின் போது பயன் படுத்திய ஆயுதங்களின் உருமாற்றம்.. தாய் வழிச் சமுகமாக வளர்ந்து வந்த மனிதச் சமுதாயம் நாளடைவில் எவ்வாறு ஆண்களால் பெண்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அடிமையாக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கி இறுதி கதைகளில் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகப் பொருமுகிறார். பெண்களுக்கு மறுக்கப்பட்ட சொத்துரிமை, உடன்கட்டையேறுதல் ஏன் பிரிட்டனில் கூட பெண்களுக்கு அப்பொழுது ஓட்டுரிமைக் கிடையாது. 

  வால்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆரியர்களை விட இந்தியாவில் முன்பே வாழும் அசுர (திராவிடர்கள்) இனமக்களின் கலாச்சாரம் மேம்பட்டு இருந்ததாகக் கூறினாலும் அவர்களது மன்னர் ஆட்சி முறை, மன்னரையே தெய்வமாக நினைப்பது, அடிமைகள் முறை போன்றவற்றால் எண்ணங்களால் மேம்படவில்லை என்கிறார். ஆரியர்கள் அசுரர்களின் லிங்க வழிப்பாட்டை வெறுத்தாலும் பின் நடந்த இனகலப்பில் அதனை அவர்களும் பின்பற்ற ஆரம்பித்து மன்னர் ஆட்சி, புரோகிதர் கலாச்சாரத்தில் ஒன்றிவிடுவதை விவரிக்கிறார். அசுரர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து வணிகங்களைச் செய்ததாக முன்வைக்கிறார். குதிரை, பசு மாமிசங்களும், சோமபானமும் எல்லோராலும் பொதுவாக உண்ணக்கூடிய சாதாரண செயலாகவே இருந்துள்ளது. 

 குப்தர்களின் காலகட்டத்தில்தான் மக்களின் பஞ்சாயத்து (குடியாட்சி) முறை ஒழிக்கப்பட்டு,  பிராமணர்களின் கைகள் ஓங்கி சர்வாதிகாரம் பெற்ற மன்னராட்சிக்கு அடித்தளம் ஏற்பட்டதாக விமர்சனம் செய்கிறார். மன்னர்களைப் புகழ்ந்து வர்ணித்து அவர்களைக் காவியத்தலைவனாகக் கொண்டு இதிகாசங்களும், காப்பியங்களும் படைக்கப்பட்டதாகவும் கூறுபவர், ஜெயச்சந்திர மகாராஜாவை (பிருதிவி ராஜனின் மாமா) பற்றி எழுதியவற்றை இப்பொழுது யாராவது எழுதியிருந்தால் சிலர் பெரிய கலவரத்தையே தோற்றுவித்திருப்பார்கள். கில்ஜியும், அக்பரும் சமூக நீதியோடு ஆட்சி செய்ய முயற்சி செய்ததாகக் கூறுகிறார். 

   மங்கள சிங் கதை மூலம் சிப்பாய் கலகம் தோல்வியில் முடிய அதனை முன்னின்று நடத்தியவர்களின் சுயநலம்தான் என விமர்சிக்கிறார். நாமெல்லாம் பாடங்களில் படித்த, கேட்ட தோட்டாக்களின் உறையில் கொழுப்புத் தடவப்பட்ட நிகழ்வை ஆங்கிலேய எதிர்ப்பாளர்களின் உணர்வுகளைத் தூண்டப் பரப்பப்பட்ட வதந்தி என்பவர் ஆங்கிலேய அரசு மற்றும் கவர்னர்கள் மீது மிகத் தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறார். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தை மக்களிடம் கொண்டுசென்ற மகாத்மா காந்தியை மதித்தாலும் அவரின் சில செயல்பாட்டை அறிவியல் காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கு எண்ணங்கள் எனச் சாடுகிறார். காந்தி மீது இந்துத்துவவாதி முத்திரையைக் குத்த ஆசிரியர் முயல்கிறாரோ என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. ஆரியர் கலப்பு, இஸ்லாமியர் கலப்பு, ஆங்கிலேயர் கலப்பு எனப் படிப்படியாக விவரிப்பவர் இன்று ஆரியர் என்று தனியாக யாரும் கிடையாது அந்த அளவிற்கு இரத்தக் கலப்புகள் நடைபெற்று விட்டது என்கிறார்.

  ராகுல சாங்கிருத்தியானின் சமய நல்லிணக்க ஆதரவு எண்ணமும், புத்தரின் கொள்கையில் கொண்ட ஈடுபாடும், பொதுவுடைமைக்குக் கொள்கைகள் மீது கொண்ட தீராப் பற்றும், அவரின் அரசியல் நிலைப்பாடும் கதாபாத்திரங்கள் வழியே வெளிப்படுகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பஞ்சாயத்து முறையைத் தூக்கிப்பிடிக்கிறார். சரித்திரத்தைக் கதை உருவில் தந்திருப்பதால் எளிதாக நம்மால் அந்தந்த காலகட்டத்தோடு சுவாரஸ்யமான பயணிக்க முடிந்தாலும் சிலருக்கு ஆய்வு நூலில் புனைவுகள் இருக்கலாமா என்ற தர்க்கம் மனதில் தோன்றலாம். ஆனால் அதன் கற்பனைகளை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பதும் வாசிப்பவரின் மனநிலையைப் பொறுத்ததே. மனித நாகரிக வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமிருக்கும் யாவரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகம் இது. 

இறுதியாக :

    இப்புத்தகத்தை ராகுல சாங்கிருத்தியானின் தமது சிறை வாசத்தில் 1942'ல் ஜெயிலில் இருந்து கொண்டே எழுதினார். அதனைக் கண. முத்தையா அவர்கள் 1949'ல் ஜெயிலில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கல்லூரி காலத்தில் வாசித்தது கண. முத்தையா அவர்களின் மொழிபெயர்ப்புதான். இப்பொழுது வாசித்தது யூமா வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பு. எனது சகோதரர் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மற்றும், இருகால கட்டத்திலும் வாசித்த போது என் மனதில் தோன்றிய கருத்து மாறுபாடுகளையும் எழுதுமாறு கூறினார். வாய்ப்பிருந்தால் பின்னொரு முறை கட்டாயம் எழுதுவேன்.


Monday 13 July 2020

சத்திய வெள்ளம்


                      
                சத்திய வெள்ளம் - நா. பார்த்தசாரதி


   1960 - 1970  காலத்தில் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான, குறிஞ்சி மலர், மணிபல்லவம் போன்ற பிரபலமான பல நாவல்களை எழுதிய நா. பார்த்தசாரதியின் ஏதாவது ஒரு நாவலை மீண்டும் வாசிக்க முடிவு செய்தேன். சாகித்திய அகாடமி விருந்து பெற்ற அவரின் சமுதாய வீதி நாவலை வாங்க முயற்சி செய்து தாமதம் ஆனதால் எங்கள் வீட்டிலிருந்த சத்திய வெள்ளம் நாவலை வாசித்தேன். சத்திய வெள்ளம் சமூக நாவல் கல்கி வார இதழில் தொடராக 1972'ல் வெளிவந்தது. வாசிக்க ஆரம்பித்த நேரம் அலுவலக, சொந்த வேலைகள் நேரங்களைத் தின்றுவிட முடிக்கக் கொஞ்சம் (நிறையவே) காலம் ஆகிவிட்டது. அதற்கேற்ப நாவலும் மெதுவாக நகர... அந்த அனுபவம் இறுதியில். 

மல்லிகைப் பந்தல் என்னும் ஊரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாவலின் நாயகன் பாண்டியன் மாணவர் பேரவை செயலாளர் பதவிக்கும், மோகன்தாஸ் தலைவர் பதவிக்கும் போட்டியிட, அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் மாணவர்கள் வெற்றிபெற  ஆளும் கட்சியின் MLA மற்றும் வட்ட செயலாளர் பல சூழ்ச்சிகள் செய்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் அருகில் கடை வைத்திருக்கும் தேசிய இயக்கத்தின் மீது பற்றுகொண்ட அண்ணாச்சி அவர்களுக்கு உதவுகிறார். மாணவிகள் சார்பாக அவர்களின் பக்கம் நிற்கும் கண்ணுக்கினியாளும், பாண்டியனும் காதலில் விழுகிறார்கள். மாணவி மேரியின் தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், பின்பு அமைச்சர் கரிய மாணிக்கத்திற்கு டாக்டர் பட்டம் தரப் பல்கலைக்கழகம் முடிவு செய்வதை எதிர்த்தும் முன்னாள் மாணவத் தலைவன் மணவாளன் துணையுடன் கடுமையாகப் போராடும் அவர்களை ஆளும் அரசாங்கம் போலிஸ், குண்டர்கள் மற்றும் துணைவேந்தரின் உதவியுடன் அதிகார துஷ்பிரயோகங்களால் ஒடுக்க முயல இறுதியில் வென்றது யார் என்பதுதான் முடிவு. 

நா. பார்த்தசாரதியே சொல்வது போல் நிகழ்கால சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் நடைமுறைகளை எழுத்துக்கள் தமிழில் குறைவாகவே வருகிறது. அவரின் சமுதாய வீதி நாவலில் நடிகர்திலகம் சிவாஜியை இழுத்திருப்பார். யாருக்கேனும் காரணம் தெரிந்தால் கருத்துகளாகப் பதிவிடவும். இதில் நாவல் எழுதிய காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த திராவிட கட்சியை, ஆட்சியை மறைமுகமாக ஏன்? பல இடங்களில் நேரடியாகவே போட்டுத் தாக்குகிறார். தமிழ் வாழ்க முழக்கம், எதுகை மோனை மேடைப் பேச்சு, ரூபாய்க்கு மூணு படி அரிசி, நிர்வாகங்களில் அரசியல் தலையீடு, தகுதியற்ற அரசியல்வாதிகளின் டாக்டர் பட்ட ஏக்கம் எதையும் விடவில்லை. தேசிய நோக்கமிருந்தாலும் சிலர் வன்முறைப் பாதையில் வழிதவறி போய்விடுகிறார்களே எனவும் சில பாத்திரங்கள் மூலமாக வேதனைப்படுகிறார். காந்தியம், நேருவென எழுத்துகளால் உருகுபவர் காமராஜரை (ராம்ராஜ்) ஒரு  சின்ன பாத்திரமாக நுழைத்துவிட்டார். கதிரேசன், பேராசிரியர் பூதலிங்கம், பொழில் வளவனார், சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலு, இராவணசாமியும் நாவலில் வரும் வெறும் கதாபாத்திரங்கள் மட்டுமில்லை இன்றும் நமது முன்னால் வேறு பெயர்களில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். நாவல் தோலுரிக்கும் அனைத்து சம்பவங்களும், அரசியல் நிர்வாக தலையீடுகளும் எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இன்னும் தொடர்வதுதான் சோகம். 

நாவலின் பெரிய பிரச்சினை ஒருவழிப்பாதையாக எளிதாக ஊகிக்கும் வகையில் பயணிப்பதுதான். அண்ணாச்சி பாத்திரம் அழகாகப் படைக்கப்பட்டிருந்தாலும் அதுபோல் ஒருவர் வாழ முடியுமா? இவ்வளவு உதவிகள் மாணவர்களுக்குச் செய்யக் காரணம் தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆசிரியரின் நிறைவுரை நம்பிக்கையான "வாசகர்கள் வேறெந்தப்  பொழுதுபோக்கு நவீனத்தாலும் அடைய இயலாத புதுவிதமான உணர்வுகளையும் அனுபவங்களையும் சிந்தனைக் கிளர்ச்சிகளையும் இந்த நாவலை வாசிக்கும்போது அடையலாம்"  எனக்குப் பொய்த்துப்போனது. 

இறுதியாக: 

சத்திய வெள்ளம் நாவலின் நாயகன் சத்திய வேட்கையோடு, ஆவேசமாக வலம் வந்தாலும் அந்த உணர்வை வாசிக்கும் எனக்கு நா. பார்த்தசாரதியின் எழுத்துக்கள் அப்படியே உள்வாங்க வைக்கவில்லை. அதனால்  கடினமான நாவல்களை விட இந்நாவல் மிகுந்த அயர்வைத் தந்தது. இந்த நாவலை வாசிக்கும் பயணத்தைப் பாதியிலே நிறுத்திவிடலாம் என்றெண்ணிய மனதை என் தாயார் தந்த ஊக்கம்தான் மாற்றியது.  


Monday 1 June 2020

கிருஷ்ணப் பருந்து



                 கிருஷ்ணப் பருந்து -  ஆ மாதவன்



தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான ஆ மாதவனின் எழுத்துக்கள் எனக்குப் பரிட்சியம் கிடையாது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனினும் திருவனந்தபுரத்திலே அதிகம் வசித்ததால் அவரின் எழுத்திலும் மலையாள வாடை பலமாக வீசும். கிருஷ்ணப் பருந்து நாவலை வாசிக்கும் பொழுது மலையாளம் கலந்த தனித்துவமான நடையும் களமும் தொடக்கத்தில் கொஞ்சம் சிரமத்தைக் கொடுத்தது. கிருஷ்ணப் பருந்து சுமார் 1980 வாக்கில் எழுதப்பட்ட 120 பக்கங்களைக் கொண்ட சிறிய கதைசொல்லி நாவல்தான்.

நாற்பத்தெட்டு வயதிற்குள் குடும்பம், நல்லது கெட்டது எல்லாவற்றையும் இழந்த குருஸ்வாமி தனது தாத்தா, அப்பா எல்லோரும் அழித்தது போக மிஞ்சும்  இரண்டு ஏக்கர் தோப்பு விளையில் தாடியும் எளிமையான பத்திய சாப்பாடு எனத் தனியாக வசிக்கிறார். அவரது வீட்டிலும், தோட்டத்திலும் வேலை செய்யும் பார்வதி, பாட்டுகள் பாடி பிழைக்கும் வெங்கிடாசலம் (வெங்கு), பெயிண்டர் ரவி ஆகியோர் தனி ஆட்களாகவும், பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் வேலை செய்யும் தங்கப்பன் மற்றும் பால் விவசாயச் சங்கத்தில் வேலை செய்யும் வேலப்பன் தன் குடும்பத்தோடும் அவரது தோப்பு விளையில் உள்ள குடிசை வீடுகளில் வாடகைக்கு வசிக்கிறார்கள்.

குருஸ்வாமியின் நினைவுடாக வேலப்பன் சிறுவயதிலே அவருடன் வந்து சேர்ந்ததிலிருந்து ராணியைக் காதலித்து கல்யாணம் செய்த கதையும், அவரது இளமைப் பருவ நிகழ்வுகள் மற்றும் மனைவி சுப்புலஷ்மிக்கு இடையேயான திருமண வாழ்க்கையை இடையிடையே ஆசிரியர் சொல்லுகிறார். புற உலகில் எல்லோரும் மதிக்கும் சாமியாக இருந்தாலும், அக உலகில் குருஸ்வாமியாக இருக்க முடியாமலும், சாமியாக மாறமுடியாமலும் தத்தளிக்கிறார். மன விரிசல்களும், பிறர் மீதான வெறுப்புகளும் ஒரு கணநேரத்தில் தோன்றுவதில்லை. அதற்கேற்ப வேலப்பனின் சகாக்கள் அவனுள் தொடர்ச்சியாக விதைத்த விதைகள்தான் குருஸ்வாமியின் அறையில் முழு நிர்வாண ஓவியத்தைப் பார்த்தவுடன் அவரை நிராகரிக்கத் துவங்குகிறான். ஸாமியப்பா, ஸாமியப்பா எனப் பாசத்தோடு குருஸ்வாமியை அழைக்கும் ராணியை அவரை விட்டு விலகியிருக்குமாறு கோபம் கொள்கிறான். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ராணிக்கு குருஸ்வாமியின் தேவையின் அழுத்தம் என்னவென்று புரிய, மனிதனின் அக மன தடுமாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன? அது எப்படி மனித உறவுகளைத் தீர்மானிக்கிறது என்பதையே நாவல் இறுதியில் பேசுகிறது.

குருஸ்வாமியின் உணர்வுகளை உரக்கக் கூறினாலும் இதர கதாபாத்திரங்கள் அவரைச்சுற்றிப் படைக்கப்பட்ட விதம் நாவலின் ஜீவனை அதிகரிக்கிறது. அதுவும் மவுனமாக வலம் வந்தாலும் பார்வதியின் பாத்திரம் வாசிப்பவர்கள் மனதில் தரும் அழுத்தம் வியக்கவைத்தது. உங்களைத் தறுதலை என உங்கள் அப்பா கூறினாரே என சுப்புலஷ்மி கேட்க, அவரின் காதல் கதைகள் எல்லாம் வெறும் வாய்க் கற்பனைகளை வைத்துப் பின்னியவைதான் வேறொன்றுமில்லை எனப் புரியவைக்கப் படாத பாடுபடும் தவிப்பு அருமை. நாவலின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கிருஷ்ணப் பருந்து  ஒரு குறியீடாக, சாட்சியாக வலம்வருகிறது. சொல்லப்போனால் குருஸ்வாமி தனக்கான அகண்ட வெளியில் ஒரு பருந்தைப் போல் பறக்க நினைக்கிறார். அவரது இனம் புரியாத சல்லாப லயத்தைக் குறியீடுகள் மூலம் மிக நுட்பமாக மாதவன் எழுதியுள்ளார். குருஸ்வாமியின் மனநிலையில் நமது சமூகத்தில் பலர் உலாவினாலும் பொதுவாக அதிகம் வெளிப்படையாகப் பேசப்படாத அந்த மனித உணர்ச்சியைத் துளியும் விரசமின்றி வெளிச்சம் போட்டுக் காட்டும் நாவல்தான் கிருஷ்ணப் பருந்து. 

இறுதியாக :

வாழ்க்கையில் ஞானப்பசியை மட்டுமே யதார்த்தமென்று அங்கீகரிக்க முடியாது. காமத்தைப் பற்றிய தேடல்கள் ஒவ்வொரு வளர்ந்த மனிதனையும் இயல்பாகக் கவர்கிறது. அந்த தேடல்கள் ஒருகட்டுப்பாட்டிலிருந்தால் வாழ்வும் மிக எளிதாகக் கடந்துபோகிறது. 


நல்லவேளை நாவலை முன்பே எழுதிவிட்டார் அல்லது பத்திரகாளியை ரூபப்படுத்திய விதம், கோவில் உள்மண்டபத்தின் கல்தூண்களில் உள்ள சிற்பங்களின் வர்ணனைகளை எதிர்த்து யாராவது கேஸ் போட்டிருப்பார்கள்😎.

Wednesday 20 May 2020

குற்றப் பரம்பரை



         குற்றப் பரம்பரை - வேல  ராமமூர்த்தி



காவல் கோட்டத்தை அடுத்துக் குற்றப் பரம்பரை நாவலை வாசிப்பதா அல்லது வேறு நாவலா எனக் குழப்பம். இரு நாவல்களும் பேசும் கதையின் மையக்கரு கொஞ்சம் ஒத்திருப்பதால் மனதில் மலரும் ஒப்பீடுகளைத் தவிக்கத்தான்😊. கள்ளர் இனக்குழுவின் வாழ்வியலைப் பேசுவதுதான் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை. கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் ஜூனியர் விகடனில் (2007) தொடராக வந்துள்ளது. 

தங்களை அழிக்க நினைக்கும் (அரசாங்க) குதிரைப்படையால் விரட்டப்படுகையில் பலரை இழந்து, வேலுச்சாமி தன் கூட்டத்தினருடன் சம்பங்கி ஆற்றைக் கடந்து ஓடுகிறான். ஆற்றை நோக்கி ஓடுகையில் அவரது மூத்தமகன் சேது வழி தவறி  குதிரை வீரர்களிடம் அகப்பட்டுக் கொள்கிறான். பெரும்பச்சேரியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சிறுவன் வையத்துரை உதவியால் முள்ளுக்காட்டுக்குள் உள்ளே உள்ள கொம்பூதி என்ற மலைக்கிராமத்தில் குடியமர்கிறார்கள். வேலுச்சாமி பலதரப்பு மக்களாலும் மதிக்கப்படும் நபராக மாறி வேயன்னா என்று மரியாதையாக  அழைக்கப்படுகிறார். வளர்ந்து விட்ட அவரின் இரண்டாவது மகன் வில்லாயுதமும், வையத்துரையும் அவர்களுடன் இணைந்து களவு தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். களவில் கிடைக்கும் பொருட்களை பெருநாழி கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்துவிடம் கொடுத்து ஈடாக உணவுத்தானியங்களைப் பெறுகிறார்கள். 

பெரும்பச்சேரி காரணமாக பெருநாழி மற்றும் கொம்பூதிகளுக்கிடையே புகைச்சல் வரும் நேரத்தில் கொம்பூதி கள்ளர்களை அடக்க  அரசாங்கம் கச்சேரியை (போலீஸ் ஸ்டேஷன்) பெருநாழியில் அமைக்கிறது. முதல் இன்ஸ்பெக்டர் வெள்ளைக்கார விக்டரை வேயன்னாவின் கூட்டம் ஊரை விட்டே துரத்துகிறது. கொம்பூதி கள்வர் இனத்தை அழித்தே தீருவேன் என்ற சூளுரையுடன் குற்றப் பரம்பரை சட்டத்தை அமல்படுத்த முயலும் இன்ஸ்பெக்டர் பகதூரை உலகத்தை விட்டே துரத்துகிறார்கள். வெள்ளைக்கார (வளர்ப்பு) பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட அவரது மூத்த மகன் சேது புதிய இன்ஸ்பெக்டராக பதவியேற்கக் காட்சிகள் திசைமாறுகிறது. இனிமேல் களவு செய்யக்கூடாது என வேயன்னாவிடம் சத்தியம் வாங்குகிறான் சேது. களவுகள் நடக்காததால் பாதிக்கப்படும் பச்சமுத்து சூழ்ச்சிகள் செய்து கலவரத்தைத் தூண்டுகிறான். அதனால் சேது மற்றும் போலீஸ் அதிகாரிகள் எடுத்த தீர்மானங்கள் என்ன? வேயன்னாவுக்கு என்ன நடந்தது? என்பதுதான் நாவலின் முடிவு. 

இக்கதைக்கு நடுநடுவே வரும் வைரப் புதையலைத் தேடும் நாகமுனி, அதற்காக அவன் நரபலி கொடுக்க வளர்க்கும் அழகுப் பதுமை வஜ்ராயினி, அவளைக் காட்டில் பாதுகாக்கும் ஹசார் தினார், வஜ்ராயினி மீது காதல் கொள்ளும் வேயன்னாவின் புதல்வன் வில்லாயுதம் என்று வளரும்  Fantasy கிளைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் மூலக்கதையின் நோக்கத்தைச் சிதைக்கும் திணிப்பாகத் தோன்றியது. 

வேல ராமமூர்த்தியின் கதை சொல்லும் பாங்கு நாவலை விறுவிறுப்பாகச் சிறிதும் தொய்வின்றி கொண்டுசெல்லுகிறது. வேயன்னாவை சாதி வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்ப்பவராக, நியாயத்திற்குக் கட்டப்பட்டவராக, பிறர்பால் பரிவு கொண்டு உதபுவராக, வேற்றூர் மக்களும் மதிக்கும் ஒரு பெரிய மனிதனாகச் சித்தரிக்கிறார். களவை அவ்வின மக்கள் தவறான செய்கையாக நினைக்காமல் தங்களது குலத்தொழிலாக எண்ணுகின்றனர். இந்த நாவலும் களவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை சிறிதும் பேசாமல் கள்வர்களின் வீரத்தை மட்டுமே சிகாலித்து எழுதியிருப்பது கொஞ்சம் உறுத்தல்தான். 

நாவலோடு பயணிக்கும்போது சந்திக்கும் கதைமாந்தர்களான வேயன்னாவின் அம்மா கூழானிக் கிழவி, சிட்டு, அன்னமயில், கிழட்டுப் போலிஸ், இருளாயி, கழுவன், துருவன், விசக்குட்டை நாவலை வாசித்து முடிந்த பின்பும் மனதில் தாக்கத்தைத் தருகிறார்கள். அம்மக்கள் புறத்தோற்றத்தில் கரடுமுரடாகத் தோன்றினாலும் அகத்தோற்றத்தில் மாசற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையே யதார்த்தமாகக் கூறுகிறார்.

கதையிலுள்ள சில லாஜிக் மீறல்களை விமர்சனத்தில் சுட்டிக்காட்ட நினைத்திருந்தேன்.

"டேய் வையத்துரை, உள்ளே வாடா...." கிழட்டு போலிஸ் இளக்காரமாக அழைக்கவும், "ஏய்... முட்டாள் கிழவா... !  அறிவிருக்கிறதா உனக்கு? கச்சேரிக்கு யார் வந்தாலும் மரியாதையாகப் பேசு" எனச் சேது சீற்றத்தோடு கூறுகிறான்.  

முரண்பாடு உங்களுக்கே புரிந்திருக்கும். கதையின் இறுதி நிகழ்வுகள் கொஞ்சம் சினிமாத்தனமாக நகர்ந்தாலும் எளியநடையிலான நல்லதொரு நாவலை வாசித்த திருப்தியே விஞ்சியதால் அவற்றினை தவிர்த்துவிட்டேன்.

இறுதியாக:

 குற்றப் பரம்பரையை யார் திரைப்படமாக எடுப்பது எனப் பாலாவும், பாரதிராஜாவும் குடுமிப்பிடி சண்டையிட்டது😤 உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அந்த சமயத்தில் வேல ராமமூர்த்தி எழுதிய இந்நாவலை அடிப்படையாகக் கொண்டுதான் பாலாவின் குற்றப் பரம்பரை திரைப்படம் வருவதாக அறிவிக்கப்பட்டது.

Saturday 9 May 2020

காவல் கோட்டம்



                காவல் கோட்டம் - சு வெங்கடேசன்



சாகித்ய அகாடமி விருதை 2011'ஆம் ஆண்டு பெற்றதால் பலரின் கவனத்தை ஈர்த்த நாவல். எனது சகோதரர் வாசித்துவிட்டு அவரே நாவலையும் தந்து பரிந்துரைத்தார். புத்தகத்தின் தடிமனைப் பார்த்துவிட்டு வாசிக்க சிறுத் தயக்கம் எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத நாவலாசிரியர் என்பதால். பெரிய நாவல்களைத் தொடர்ச்சியாக வாசிக்க ஒரு நீண்ட உற்சாகம் தேவை. இல்லையெனில் அயர்ச்சியைத்  தந்து அப்புத்தகத்தைத் தொடவே மனமில்லாமல் செய்துவிடும். 

நான் மானுடம் வெல்லும்  விமர்சனத்தில் கூறியது போல் கல்கி, சாண்டில்யன் போன்றவர்கள் எழுதிய சரித்திர நாவல்கள் சில வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நிறையக் கற்பனையுடன் ஜனரஞ்சகமாக எழுதப்பட்டவை. ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்து வரலாற்றைத் தெரிந்துகொள்ள மிகுந்த  பொறுமையும், ஆர்வமும் தேவை. அதனை எளிமையாக்கும் விதமாக அவற்றில் சாத்தியமான சில துணைக் கதாபாத்திரங்களை நுட்பமாகச் சேர்த்து ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றின் பக்கங்கள் சிதையாமல் எழுதப்படும் சரித்திர புதினங்களின் வரிசையில் வருவதுதான்  சு.வெங்கடேசன் எழுதியுள்ள காவல் கோட்டம்.    

மாலிக்காபூரின் தென்னக படையெடுப்பில் ஆர்ப்பாட்டமாகத் தொடங்கும் நாவல் அடுத்த அத்தியாயத்திலே விஜயநகர மன்னன் குமார கம்பணனின் மதுரை முற்றுகைக்குள் நுழைந்து விடுகிறது. அவனால் மதுரை மீனாட்சியம்மன் மீண்டும் தன் குடிக்குள் (கோவிலுக்குள்) திரும்புகிறாள். மதுரா விஜயத்தின் தொடர்ச்சியாக நாயக்கர்களின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார். நான் வாசித்து விமர்சனம் எழுதியுள்ள அகிலனின் வெற்றித் திருநகர் நாவல், கிருஷ்ணதேவராயர் மற்றும் விஸ்வநாத நாயக்கர் கதை என்பதால் எனக்கு வாசிக்க எளிமையாக இருந்தது. தாதனூர் கள்வர்களின் களவுத் திறனில் மெச்சிய திருமலை நாயக்கர், மதுரையை காவல்காக்கும் உரிமையை அவர்களுக்குத் தருகிறார். நாயக்கர்களின் அரசு வீழ்ச்சியற்ற பின் ஆதிக்கம் செலுத்தும் பிரிட்டிஷ் அரசாங்கம் பல ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நகரக்காவல் முறையை ஒழித்து, போலீஸ், நீதிமன்ற நிர்வாக முறையைப் புகுத்த முயல்கிறது. அதனால் தாதனூர்காரர்களுடன் மூளும் மோதல்களைக் குற்றப் பரம்பரை சட்டங்களைப் பயன்படுத்தி எவ்வாறெல்லாம் ஒடுக்கினார்கள் என்பதே நாவலில் முடிவு. 

நாவலைப்பற்றிய எனது பார்வையை எழுதுவதற்கு முன்பு ஆசிரியர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள். சுமார் 600 ஆண்டுகளின் வரலாற்றைத் தொகுத்து எழுதுவது சாதாரணமான காரியமல்ல. இதற்காக அவர் பத்தாண்டுகள் உழைத்ததாகக் கூறியுள்ளார். அந்த உழைப்பு நாவலின் ஒவ்வொரு சமூகவியல் நுட்பங்களிலும் வெளிப்பட்டு மலைக்கவைத்தது. 

நாவலின் முதல் 350 பக்கங்கள் நாயக்கர்கள் காலத்தின் வரலாற்றைப் பேசுகிறது. இறுதியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்துக் கதை கொஞ்சம் அயர்வைத் தந்தாலும்  பொதுவாக மிகவும் ரசித்து வாசித்தேன். சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட நாயக்கர்களின் வரலாற்றை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. ஏன்? பள்ளி வரலாற்று பாடபுத்தகங்களிலும் அவை விரிவாக வருவதில்லை. இதன் காரணங்களைப் பற்றிப் பேசினால் விமர்சனத்தின் போக்கே மாறிவிடும். சரித்திரக்கதைகளை வாசிக்கும் போது அக்காலகட்டத்தின் விவரங்களை நாவலுக்கு வெளியிலும் தேடித் தேடி வாசிக்கும் (கெட்ட*) பழக்கம் எனக்கு உண்டு. (*கெட்ட-- தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பிறரிடம் காட்டிக்கொள்ளவே இந்த தேடுதல்கள் - என்மீது சுமத்தப்படும் விமர்சனம்😢). திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பெயர்க்காரணம், காந்திமதி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தைக் கட்டியது யார், பாளையக்காரர்கள் உருவாக்கப்பட்ட வரலாறு, ராணி மங்கம்மாவின் இறுதிக் கணங்கள், குமாரசாமி நாயக்கன் ஏன் ஊமைத்துரை ஆனான் உட்பட ஏராளமான தகவல்களைத் தெரிந்துகொண்டேன். மொகலாயர்களின் காலத்தில்தான் ஆட்சி மாற்றங்கள் சுமுகமாக நடந்ததில்லை என நம் மனதில் பதிய வைக்கப்படுகிறது. ஆனால் எக்காலத்திலும்  ஆட்சி மாற்றங்கள் சதி, துரோகங்களால் குழப்பங்களிலே நடந்துள்ளன.

இரண்டாம் பகுதிதான் நாவலின் அடிநாதமான காவல் தொழில் செய்த கள்ளர்களின் வாழ்க்கையை மற்றும் வீழ்ச்சியைப் பிரதானமாகப் பேசுகிறது கொஞ்சம் மெதுவாக. பிரிட்டிஷ்  அரசின் நேரடி ஆளுமைக்குக் கீழ்  மதுரை வந்தவுடன் அதன் கலெக்டராக வரும் பிளாக்பர்ன், நகரின் விஸ்தரிப்பைக் காரணம் காட்டி மதுரைக் கோட்டையை இடிக்கிறார். பின் அரசு சார்பில் நகரின் முதல் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படுகிறது. கோட்டை இடிப்புக்கு அவர் பயன்படுத்தும் உத்தி, போலிஸ் ஸ்டேஷன் அமைந்த பின் அதனைப்பற்றிய மக்களின் மனநிலையை அருமையாகச் சித்தரித்துள்ளார். போலீஸ் ஸ்டேஷன் வந்ததிலிருந்தே தாதனூர் மக்களின் நகர் காவலுக்குச் சிக்கல் தொடங்கிவிடுகிறது. தாது வருடத்தில் மதுரை சந்திக்கும் கடும் பஞ்சம் மற்றும் கொள்ளைநோயால் நிறைய உயிர்ச்சேதம் நிகழ்கிறது. பஞ்சத்தின் கோரதாண்டவத்தை மொழிநடையால் நம் கண்முன்னே நிறுத்துகிறார். பலமுறை தடைப்பட்ட முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிமுடித்துப் பல ஊர்களில் வேளாண்மையை அதிகப்படுத்துகிறார்கள். புதியதாக மதுரைக்கு வரும் கலெக்டர் தாதனூர்க்காரர்களின் காவல் உரிமை ரத்து செய்யப்பட்டதைத் தீவிரமாக அமல்படுத்த, சிலர் வேறுவழியின்றி மதுரையைச் சுற்றியுள்ள வெளி கிராமங்களின் காவலைப் பிடிக்கிறார்கள். எதிர்த்தவர்கள் சிறைப் படுத்தப்படுகிறார்கள் அல்லது சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அரசாங்கம் தாதனூருக்கு ரோடு அமைத்து அருகிலே ஒரு சிறைச்சாலையையும் கட்டுகிறது. குற்றப் பரம்பரை சட்டம் அமல்படுத்தப்பட்டு அனைவரின் கைரேகைகளும் பதிவு செய்யப்படுகின்றன. அவர்களில் மனோபலத்தைச் சிதைக்கவும், இயக்கங்களைக் கட்டுப்படுத்தவும் தினசரி பலமுறை ஆஜராக உத்தரவிடப்பட்டு மீறுபவர்கள் சித்தரவதை அனுபவிக்கிறார்கள்.

காவல் உரிமை கிடைத்தாலும்  தாதனூர் மக்கள் அனைவரும் அதனை மட்டுமே செய்வதில்லை. பல குழுக்கள் (கொத்து) களவு தொழிலையும் தொடர்ந்து செய்துவந்தன. காவல் கூலியைத் தர மறுப்பவர்களின் இடங்கள், பிற ஊரின் காவல்கட்டுபாட்டில் வரும் பகுதிகள், காவலில்லாத பகுதிகளில் அவர்களின் களவு தொழிலும் தொடர்ந்தது. ஏன் ரயில்லேறிச் சென்று தூரத்து ஊர்களிலும் களவுச் செய்கின்றனர். சில நேரங்களில் காவலை விடக் கள்வரின் வாழ்க்கைதான் அழகியல் நோக்கோடு காட்டப்பட்டு களவை நியாயப்படுத்த முயல்கிறதோ எனத் தோன்றியது. களவுகளால் பாதிக்கப்படுபவர்களின் வலியை, மனநிலையை இன்னும் ஆழமாகக் கையாண்டிருந்தால் இந்த உணர்வு தோன்றாமல் இருந்திருக்கலாம்.  சில இடங்களில் நாவல் கொஞ்சம் வழி மாறிப் போய் நெற்கதிர் கசக்குவது, மாடு, ஆடு திருடுவது போன்ற களவின் தகவல்களே திரும்பத்திரும்ப வருவது அலுப்பைத் தந்தது. அதுவும் இறுதியில் வரும் குரங்குகளைப் பிடித்து வரும் களவு, அமணமலையில் அமர்ந்து ஆட்டுக்கறி சுட்டுச் சாப்பிடுவதெல்லாம் தேவையற்ற தகவல்களின் திணிப்பாகத் தோன்றியது.

பெண் கதாபாத்திரங்களைப் படைத்த விதத்தில் ஆசிரியர் உயர்ந்து நிற்கிறார்கள். நாவலே சடச்சியின் பிள்ளைகள் (வழித்தோன்றல்கள்) பற்றித்தானே. அதுவும் கங்காதேவி பாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் ultimate. அதற்காகவே இரண்டாம் அத்தியாயத்தை சில முறை வாசித்தேன். பஞ்சகாலத்தில் எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி மக்களின் பசி தீர்த்த தாசி குலப்பெண் குஞ்சரத்தம்மாள், தன் இனமக்களை வதைக்கும் வெள்ளைக்கார காவலனைக் கொலை செய்யும் வீராயி, வெள்ளைக்காரனைக் கழுத்திலே கடித்துக் கொல்லும் அங்கம்மா கிழவி எனக் கள்ளர் குலப்பெண்களின் உக்கிரத்தையும் பதிவுசெய்கிறார். ஆனால் கள்வர் இனத்தில் ஏற்படும் இழப்புகளின்போது அவர்களைச் சார்ந்துள்ள குடும்பத்தினர் படும் துயரம், எதிர்கொண்ட விதம் மற்றும் மனவோட்டத்தை சொல்ல முயலவேயில்லை. 

மாயாண்டி பெரியாம்பிளைத் தவிரப் பிற துணைக் கதாபாத்திரங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவில் அழுத்தமாகப் படைக்கப்படவில்லை. படிப்படியாக வளர்ந்து விரியும் காலளவுகளைக் கொண்ட நாவலில் அதுபோல் பாத்திரங்களைக் கட்டமைப்பது எளிதுமல்ல. கள்ளர் இனத்தில் பிறந்து மிஷனரி பள்ளியில் படித்து போதகராக மாறும் டேவிட் சாம்ராஜ் பாத்திரம் இன்னும் தெளிவோடு படைக்கப்பட்டிருக்கலாம். இரவை தொழிற்களமாக்கி புரியும் காவலையும், களவையும் இரு கண்களாகக் கொண்ட ஒரு சமூகத்தின் இந்நாவலை நீங்கள் ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும் ஏதேனும் புதிய தகவலோ, வரலாற்று உண்மையோ தெரியவந்து மலைப்பையும் பிரமிப்பையும் தரலாம்.

இறுதியாக:

தாதனூர் பெரியாம்பிள ஒச்சு போலீஸ்காரரை நோக்கி "எங்களுக்கு திருமலை நாயக்கர் கொடுத்த காவடா" என சீறுகிறார். இந்த ஒரு சொல்லுக்காகத்தான் நாயக்கர் காலத்திலிருந்து நாவலை ஆரம்பித்துள்ளார் போலும். வாசிக்கும் போது புத்தகத்தின் சுமைத் தாங்காமல் (Hard Cover)  கை வலித்து சிரமமாக இருந்தது. ஆனால் இரண்டு பாகங்களாக வெளியிட்டிருந்தால் தனித்தனி நாவலாக மாறிவிடும் அபாயமுள்ளது 😀. இந்த நாவலின் சில பக்கங்களை மையைப்படுத்தி எடுக்கப்பட்டதுதான் அரவான் திரைப்படம்.