Friday 14 February 2020

சில நேரங்களில் சில மனிதர்கள்


           சில நேரங்களில் சில மனிதர்கள்
                                             - ஜெயகாந்தன்




இதுவே நான் வாசித்த  முதல் ஜெயகாந்தன் நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள். 1972'ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். அவர் எழுதிய அக்கினிப் பிரவேசம் சிறுகதையின் தாக்கம்தான் அவரை இந்த நாவலை எழுதத் துண்டியது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

இப்போதெல்லாம் மனிதர்களின் உளவியலை பேசும் நாவல்கள்தான் என்னை மிகவும் கட்டிப்போடுவது போல் உணர்கிறேன். அத்தகைய நாவல்களை வாசித்துவிட்டு அதன் தாக்கத்திலிருந்து விடுபடக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகிறது. ஏன் சில இரவுகளின் தூக்கத்தை குறைக்கிறது. 



 ஒரு இக்கட்டான சூழ்நிலை மற்றும் குழப்பமான மனநிலையில் யாரென்று தெரியாத ஒருவனிடம் தன்னை இழந்துவிட்ட கங்காவை, அவளது சகோதரன் கணேசன் வீட்டை விட்டே அடித்துத் துரத்துகிறான். வெங்கு மாமாவின் உதவியால் கல்லூரி படிப்புகளை முடித்து நல்ல வேலையில் சேர்ந்தது தன் அம்மாவுடன் தனியே வசிக்கிறாள்.

 வெங்கு மாமாவின் சில்மிஷ செயல்கள், எகத்தாள பேச்சால் 12 ஆண்டுகளாக தனக்குத்தானே சிறை அமைத்துக் கொண்டு வாழும் கங்கா தன்னை சிதைத்தவனை எழுத்தாளர் ஆர்கேவி மூலமாக (பிரபுவை)  தேடிக் கண்டுபிடிக்கிறாள். பிரபுவை மீண்டும் ஒரு மழைநாளில் சந்திக்க, நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கும் அவனிடம் பரஸ்பரம் நட்புக் கொள்கிறாள். இந்த சந்திப்புக்கு இருவரும் வரும் மனநிலையே அந்த நட்புக்கு அடித்தளமாக அமைகிறது என்பது எனது எண்ணம். அவளோ அலட்சியமாக அவனைப் பார்க்க வருகிறாள், அவனோ மனதில் ஒரு சின்ன நப்பாசையுடன் (பொதுவாக ஆண்களுக்கே உரிய) வருகிறான். அவர்களின் அந்த சந்திப்பதை ஜெயகாந்தன் எழுதியிருக்கும் விதம் fantastic. 

 அதன்பின் இருவரும் அடிக்கடி சந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். அவன் வீட்டுக்கு இவளும், இவள் வீட்டுக்கு அவனுமாக வந்து போகிறார்கள். இந்த நட்பு அவர்களின் வாழ்க்கை முறையிலும் சில நடைமுறை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் இவர்கள் இப்படி நட்பாகப் பழகுவதை எவரும் ஏற்கத் தயாராகவில்லை. பிரபுவின் மகள் மஞ்சுவுக்கும் கங்காவுக்கும் ஒரு புரிதல் நிகழ்கிறது. கங்காவின் மனது மெதுவாகப் பிரபுவின் தோழி என்ற ஸ்தானத்திலிருந்து உண்மையிலே  "கான்குபைனாக (concubine)" மாறத் தயாராகிறாள்.

 எழுத்தாளர் ஆர்கேவி  மூலமாக ஒரு வரன் சம்பந்தம் வர எல்லோரும் கங்காவை திருமணம் செய்து கொள்ள வலியிருத்துகிறரகள். பிரபு கூட "நான் வராம இருந்தால்தான் நீ கல்யாணம் பண்ணிப்பேன்னா, நான் இனிமேல் வரவே இல்ல. பாக்கவே இல்ல"  என்று அவளிடம் சொல்லுகிறான். இதனால் மனமுடையும் கங்கா எடுக்கும் முடிவுதான் நாவலின் நிறைவு.

 கங்காவே தன் கதையைச் சொல்வதாக நாவலை ஜெயகாந்தன் எழுதியுள்ளார். சுயவிருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி என கங்காவின் மன ஓட்டத்தின் மூலமாக பெண்களின் உளவியலை மிக அருமையாகச் சொல்லுகிறார். நாவலிருந்து நிறைய விசயங்களைப் பேசிக்கொண்டே போகலாம் ஆனால் நாவலை வாசித்தால் மட்டுமே அதனை முழுமையாக உணரமுடியும். ஸ்ரீகாந்த், லட்சுமி நடிப்பில் திரைப்படமாகவும் வந்துள்ளது (Available on YouTube). கங்காவாக நடித்த லட்சுமிக்குச் சிறந்த நடிகைக்கான National Award கிடைத்துள்ளது. 


இறுதியாக : 

 முதலில் இந்த நாவல் காலங்கள் மாறும் என்ற தலைப்பில்தான் வந்துள்ளது. அதன்பின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" என மாற்றப்பட்டது. உண்மையில் இந்த தலைப்புதான் நாவலுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. 


Wednesday 5 February 2020

கோபல்லபுரத்து மக்கள்



                   கோபல்லபுரத்து மக்கள் -
                                           கி. ராஜநாராயணன்


கி. ராஜநாராயணின், கோபல்ல கிராமம் தந்த தாக்கம்தான் கோபல்லபுரத்து மக்கள் நாவலை வாசிக்கத் தூண்டியது. இந்த மாதத்தில் வெவ்வேறு நாவல்களின் பக்கம் கவனம் திரும்பினாலும் எதையும் முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. கடைசியில் கோபல்லபுரத்து மக்களை வாசித்து முடித்தேன். சாகித்ய அகாடமி விருதை   1991'ல்  பெற்ற நாவல். 

ஆங்கிலேயர் இந்தியாவுக்குள் வரும் காலகட்டத்தோடு கோபல்ல கிராமம் முடியும். (கோபல்ல கிராமம் விமர்சனம்). வெள்ளையர்கள் ஆட்சியில் கோபல்ல கிராமம் சந்திக்கும் மாற்றங்களுடன் ஆரம்பிக்கும் நாவல் இந்தியா சுதந்திரம் வாங்குவதோடு முடிவடைகிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட நாவலில்  முதல்  பாகமான  அச்சிந்த்தலு,  கிட்டப்பன்    கதைதான் கி ராஜநாராயணின் பாணியில் உள்ளது. கிட்டப்பனின் கதையினூடே மக்களின் வாழ்க்கை மற்றும் பழக்கவழக்கங்களை பதிவு செய்கிறார். எருது கட்டு (ஜல்லிக்கட்டு)  விளையாட்டு எப்படி உருவானது என்பதை அவர் சுவாரஸ்யமாக விவரித்துள்ளார். 

இரண்டாவது  பாகத்தில் கோப்பல கிராமத்தில் கால மாற்றங்களால் வரும் புதியவற்றை மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நையாண்டியாகச் சொல்ல ஆரம்பிக்கும் கதை பின்பு சுதந்திரப் போராட்டம், பம்பாய் மாலுமிகளின் போராட்டம் எனத் திசை மாறுகிறது . கடைசியில் திடீரென வரும் மாலுமிகளின் போராட்ட கதை நன்றாக இருந்தாலும் கதையுடன் ஒட்டாமல் துண்டாகத் தெரிகிறது. கடைசி சில அத்தியாயங்களில் சுதந்திரப் போராட்டம் குறித்து அலச ஆரம்பித்து விடுகிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பெரியார் என எல்லோரின் கொள்கைகளையும் நடுநிலையோடு ஒரு ஒப்பிடும் செய்கிறார். பாமர மக்களிடம் அவர்களைப் பற்றி இருந்த பிம்பத்தை வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக அலசுகிறார். 

நாவலில் என்னை மிகவும் கவர்ந்த, எக்காலத்துக்கும் பொருந்தும்  வரிகள் "எந்த புதுசு வந்தாலும் முதலில் அதை சந்தேகிக்கிறதும் அதையே குறை பேசி பரப்புகிறதும், பிறகு தயக்கத்தோடு, வழியில்லாமல் - ஏற்றுக் கொள்கிறதும், ஏற்றுக் கொண்ட பிறகு புதிய வியாதிகள் அதனால்தான் பரப்புவதாகச் சொல்லுவதும் வழக்கம். 

"மக்களுக்கு போதைப் பழக்கத்தைப்  பரப்பிவிட்டால் அரசாங்கத்துக்கு வருமானம் மட்டுமில்லை; எதிர்த்துப் போராடவும் மாட்டார்கள்."

கடைசியில் கோபல்ல கிராமம் வாசித்த போது கிடைக்த ஒரு புதிய அனுபவம், கோபல்லபுரத்து மக்களில்  கிடைக்கவில்லை என்பது உண்மை. 


இறுதியாக :

 என் தந்தை சிறு வயதில் சொல்லிக் கொடுத்த நாட்டுப்புறப் பாடல்கள் நாவலில் வருகிறது. அதை மீண்டும் வாசிக்கும் பொழுது ஏதோ சந்தோஷம். 

           "ஊரான் ஊரான் தோட்டத்திலே 
            ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய் - அத
            காயிதம் போட்டானாம் வெள்ளக்காரன்"

          "வாரண்டா வாரண்டா வெள்ளைக்காரன் 
           வரட்டும் தாயோளி தொப்பிக்காரன்"

           "வெள்ளைக்காரன் பணம் வெள்ளிப்பணம் 
            வேடிக்கை பண்ணுது சின்னப் பணம் 
            வெள்ளிப் பணத்துக்கு ஆசைப்பட்டு 
            வேடங்குலைந்தாயே வீராயி..."