Wednesday 27 November 2019

வேதபுரத்து வியாபாரிகள்



                  வேதபுரத்து வியாபாரிகள் 
                                     - இந்திரா பார்த்தசாரதி



இந்திரா பார்த்தசாரதி எழுதிய எதாவது ஒரு நாவலைப் படிக்கலாம் என நினைத்து இந்த நாவலை வாங்க ஆர்டர் செய்தேன் ஆனால் ஸ்டாக் இல்லாததால் கிடைக்கவில்லை. கடைசியில் எங்களது வீட்டிலேயே (பெற்றோர்கள்) நாவல் இருந்தது. கல்கி வார இதழில் தொடராக வந்த நாவல்.

எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வாசிக்க ஆரம்பித்தேன். அமெரிக்காவில் வசிக்கும் வேதபுரத்தை மூலமாகக் கொண்ட அபூர்வா என்கிற பெண்ணொருத்தி தன் தாய் நாடான வேதபுரத்துக்கு வருகிறாள். அங்கு உள்ள மக்களுடன் பழகி அந்த நாட்டை பற்றி புத்தகம் எழுதும் நோக்கத்துடன். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக இங்குள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்த தொடர்புகள் அவளுடைய நோக்கத்தை எப்படி திசை திருப்பி அவளை அரசியலில் தள்ளி, தலைவி ஆக்கியது என்பதுதான் கதை.

ஏதோ சுவாரசியமான கற்பனை கதை என நினைத்து விடாதீர்கள். ஆசிரியரின் நோக்கம் அதுவல்ல. கதை எழுதிய காலகட்டமான 1994-95  தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடந்த ஆட்சியின் அலங்கோலங்களைத்தான் கிண்டல் கலந்த நகைச்சுவையாக எழுதியுள்ளார். ஆசிரியர் அமெரிக்கா, தமிழ்நாடு, இந்தியா எனக் குறிப்பிடவில்லை எனினும்  வேதபுரம் - தமிழ்நாடு, இந்திரப்பிரஸ்தம் - இந்தியா என எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

எந்த ஒரு அரசியல் கட்சியையோ, தலைவரையோ கிண்டல் செய்வது தன் நோக்கமில்லை என ஆசிரியர் கூறினாலும், நமக்கு அவர் கிண்டல் செய்யும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் எளிதில் அடையாளம் காண முடிகிறது. பல உதாரணங்களை நான் எழுத நினைத்தேன் ஆனால் அந்த நையாண்டி கலந்த வரிகளை நீங்களே வாசித்தால்தான் மிகவும் ரசிக்க முடியும்.

இறுதியாக :

 இந்த மாதிரியான நாவல்களுக்கே உரியப் பிரச்சினைதான் இதிலும் உள்ளது. நாவலை எவ்வாறு முடிப்பது என்பதுதான். ஏனெனில் நிஜக் கதாபாத்திரங்களை பிரதிபலிப்பதால் அவர்கள் திருந்திவிட்டார்கள் என்றோ அல்லது அந்த பிரச்சினைகளுக்கு ஆசிரியரால் தீர்வுகளைத் தந்தோ முடிக்கமுடியாது. என்ன நாவலில் நையாண்டியாகச் சொல்லப்பட்ட  பல செயல்கள் இன்னும் தொடர்வதுதான் சோகம். 

      

Friday 15 November 2019

அரும்பு அம்புகள்



                             அரும்பு அம்புகள் - கல்கி



அரும்பு அம்புகள் நாவல் கல்கி மறைந்த பின் அவரது மகனால் கண்டுபிடிக்கப்பட்டு கல்கி வார இதழில் தொடராக வந்தது. பல வருடங்களுக்கு முன்பு வாசித்த பொழுது என்னை மிகவும் கவர்ந்த நாவல். மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என நினைத்தாலும் இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

கல்கி இரு சிறுகதைகளை இணைத்து ஒரு திரைப்படத்துக்காக எழுதிய கதையாம். அதனால் கதையின் போக்கும் அப்படித்தான் உள்ளது. இரண்டாம் உலகப்போரினால் சென்னையை விட்டுச் செல்லும் கமலாவின் குடும்பத்தினர், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக இடையில் ஒரு ஊரில் தஞ்சம் புகுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் கல்யாணத்தின் மீது கமலாவுக்குக் காதல். ஆனால் கல்யாணத்திற்கு, அவனுக்கு மட்டும் அல்ல அந்த ஊரில் உள்ள நீதிபதி கோவர்த்தனனுக்கும் வக்கீல் பவானி மேல் ஒரு கண்ணு.

பவானியோ சிறையில் இருக்கும் தன் கல்லூரி காதலனை நினைத்து வாடிக் கொண்டிருக்கிறாள். இடையில் கமலாவை அவளது பெற்றோர், வயதான வீட்டு ஓனருக்கு மணமுடித்து வைக்க முயல அதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான் கல்யாணம். சிறையிலிருந்து பவானியின் காதலன் தப்பித்து அவளைக் காண வர, அதனால் ஏற்படும் கலவரங்கள் எப்படி அனைவரையும் பாதித்தது, யார் யாரைத் திருமணம் செய்தார்கள் என்பதுதான் முடிவு..

நாவலை இப்பொழுது வாசித்தபின், அது முன்பு வாசித்தபோது தந்த உணர்வை அப்படியே அளிக்கவில்லை. சிவகாமி மற்றும் ரோகிணியின் காதல் .... பதிவில் அப்பொழுது கூறிய என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.  காரணம் எளிமையானது.. நமது மனதின் முதிர்ச்சி மற்றும் வாசிப்பின் நிலைகள் மேம்பட்டிருப்பதும்தான். ஆனாலும் சினிமாத்தனமான திருப்பங்கள் நிறைந்த ஒரு சுவாரசியமான கதைதான். அதைத் தவிர ரொம்ப பெரிதாக ஒன்றும் இல்லை.

இறுதியாக :

    பவானி கதாபாத்திரத்தில் கொஞ்சம் பொன்னியின் செல்வன் நந்தினியின் பாதிப்பு இருப்பது போல எனக்குத் தோன்றியது. பவானியின் ஆளுமை மற்றும் அழகைக் கண்டு அவளிடம் பழகும் ஆண்கள் அனைவரும் கொஞ்சம் தன்னிலை மறந்து தடுமாறுவது.


Monday 14 October 2019

பள்ளிகொண்டபுரம்



               பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன்



நீல. பத்மநாபன் எழுதிய தலைமுறை நாவலை வாசித்த பின் அவர் எழுதிய பள்ளிகொண்டபுரம்  நாவலை வாங்கினேன். ரொம்ப பெரிய ஆர்வம் இல்லாமல்தான் வாசிக்கத் தொடங்கினேன்... ஆனால் வாசிக்க ஆரம்பித்த பின் நாவலைக் கீழே வைக்க மனமில்லை. நாவலின் நடை என்னைக் கட்டிப்போட்டு விட்டது. கதையின் களம் திருவனந்தபுரத்தின் தெருக்கள் மற்றும் கோவில்கள்தான்.  ஆவூரின் பின்னணியில் முழுக்க முழுக்க கொஞ்சம் மலையாளம் கலந்தது எழுதப்பட்டாலும் திருவனந்தபுரம் என்ற பெயர் நாவலின் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

பள்ளிகொண்டபுரத்தில் வாழும் அனந்தன் நாயர் வாழ்க்கையின் கடைசி இரண்டு பக்கங்கள்தான் கதை. அந்த இரண்டு நாட்களிலும் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவர்களுக்கிடையேயான உரையாடல்களில் அவரது வாழ்க்கையின் மற்ற  பக்கங்கள் நினைவுடாக வருகிறது. தலைமுறை நாவலிலும் கதையை நாயகன் திரவியத்தின் எண்ணங்களின் வழியாகவே  நகர்த்தியிருப்பார் நாவலாசிரியர்.  பள்ளிகொண்டபுரம் அதனை விடச் சிறப்பாக அனந்த நாயரின் மனவோட்டத்தை, அவரின் பார்வையிலே சொல்லுகிறது. அனந்த நாயரின் ஐம்பதாண்டுக் கால வாழ்க்கை ஊடாக முன்பின்னாக சொல்லப்படுகிறது. அவர் சந்திக்கும் மனிதர்களைத் தொடர்புப் படுத்தி நிகழ்கால மற்றும் இறந்தகால சம்பவங்கள் மாறி மாறி வருவது சிலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனக்கு அந்த நடைதான் சுவாரசியத்தைக் கொடுத்தது.

திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் சாதாரண குமாஸ்தா வேலையில் இருக்கும் அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயினி பேரழகி.  சமஸ்தானத்தில் உயர்பதவியிலிருக்கிற விக்கிரமன் தம்பி, அவளுடைய அழகில் மயங்கி மோகம் கொள்கிறான். அதனால் அனந்தன் நாயரின் வாழ்க்கையில் வீசும் சூறாவளியே கதையின் ஆணிவேர். பார்க்க மிகவும் சாதாரண கதை போல் தோன்றினாலும் வாழ்வியலை ஆசிரியர் மனிதர்களின் அகமன இயக்கத்தைக் கொண்டு அலசும் விதம் அதியற்புதம்.

தன் இயலாமையின் கோபங்களை எல்லாம் சராசரி மனிதர்கள் பொதுவாக தன் குடும்பத்தினர் மீது காட்டுவார்கள். அதுபோல்  கார்த்தியாயினின் அழகும், விக்கிரமன் தம்பியை எதிர்க்க முடியாத இயலாமையால் உண்டான பயமும், கோபமாக மாறி கார்த்தியாயினிடம் எப்பொழுதும் சண்டையிடுகிறார். ஒரு கட்டத்தில் அவரையும், பிள்ளைகளையும் விட்டு அவள் விக்கிரமன் தம்பியுடன் சென்று விடப் பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்க்கிறார். ஒரு சராசரி மனிதன் எப்படியெல்லாம் சிந்திப்பானோ அப்படிதான் அனந்தன் நாயரும் சிந்திக்கிறார். மனைவி கார்த்தியாயினியின் செயலை பாவமாகவும், பிள்ளைகளை வளர்க்கக் கஷ்டப்படும் தன் வாழ்க்கையைத் தியாகமாகவும் கருதுகிறார். ஆனால் கடைசியில் அம்மாவின் தற்போதைய செல்வாக்கு மூலம் லாபம் அடைய நினைக்கும் மகனின் செய்கையால் மனம் உடைந்து போகிறார். 

நாவல் தொட்டிருக்கும் இன்னொரு உச்சம்,  மாற்றங்களை மனித மனம் எப்படி ஏற்றுக்கொள்ளத் தடுமாறுகிறது என்பது. பழைய பஞ்சாங்கமான சாதிப்பெருமைகள், அரசியல், குடும்ப உறவுச் சிக்கல்கள் எனச் சகலமும் அனந்தன் நாயரின் கண்முன்னே மாறிக் கொண்டிருக்க அதையும் எதிர்கொள்ள முடியாமல் தவிர்க்கிறார் . அவரை போலவே அந்த நகரமும், மற்றவர்களும் தவியாய் தவிப்பதைக் கதையின் ஓட்டத்தினிலே அருமையாக எழுதியுள்ளார் நாவலாசிரியர். 

நாவலின் முடிவு மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் மேலும் அவர் மனதைக் கிளறப் போகும்  சூழ்நிலைகளிலிருந்து ஒரு வழியாகத் தப்பித்துக் கொண்டார் என ஒருவித ஆறுதலும் அளித்தது. ஒரு சாமானியன் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று என்னும் போது ஏற்படும் சுயவெறுப்பும், அதனால் தோன்றும் எல்லையற்ற மனநாடகங்களும் இத்தனை கூர்மையாக இதுவரை நான் வாசித்த எந்த நாவலிலும் வெளிப்பட்டதில்லை. 


இறுதியாக :

தமிழில் எழுதப்பட்ட முதல் நனவோடை உத்தி ( Steam of Conscious) நாவல் என ஒரு குறிப்பில் படித்தேன். எப்படி இந்த நாவல் விருதுகளின் பட்டியல்களிருந்து விடுபட்டுப் போனது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது . இது ஒருமுறை வாசித்து விட்டு மறந்துவிடும் வெறும் நாவல் அல்ல, அனந்தன் நாயர் ஒருவகையில் நமக்குள் இருக்கும் ஒரு சாதாரண மனிதனையே  பிரதிபலிக்கிறார். நம்முடைய குரூரமான மனதுக்கும் அதை நியாயப்படுத்துகிற எண்ணங்களுக்குமான போராட்டத்தை  எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் சொல்லும்  மிகச்சிறந்த படைப்பு.


Wednesday 2 October 2019

வெற்றித் திருநகர்



                     வெற்றித் திருநகர் - அகிலன்





மீண்டும் ஒரு அகிலனின் சரித்திர நாவல் . பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வாங்கி வாசித்த நாவல். கிருஷ்ணதேவராயரின் விஜயநகர பேரரசு மூலம் எவ்வாறு நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் தென்னாடு (தற்போதைய தமிழ்நாடு) வந்தது என்பதுதான் நாவலின் முடிவு. அப்போ தொடக்கம்😀.

லாகூர் சுல்தான் தெளலத்கான், காபூலிலிருந்து பாபரை டெல்லி மன்னர் இப்ரஹிம் லோடிக்கு  எதிராகப் படையெடுத்து வர அழைக்கும் காலகட்டத்தில் தென்னிந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளை விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆட்சி செய்து வருகிறார். அவரை தீர்க்க தரிசனம் நிறைந்தவராக, பரத கண்டத்தின் பெரும்பான்மையான சிற்றரசர்களின் ஒற்றுமையின்மையால், அந்நியர்கள் நுழைந்து அதனால் பிற்காலத்தில்  ஏற்படப் போகும் மாற்றங்களையும், பாதிப்புகளையும் நினைத்துக் கவலை கொள்ளும் மன்னராகச் சித்தரித்து உள்ளார். மொகலாயர்களின் படையெடுப்பைத் தடுக்க அண்டை நாடுகள் அனைத்தையும்  கூட்டுச் சேர எடுக்கும் முயற்சிகளுக்கு  அவரின் அவையில் உள்ள அமர நாயக்கர்களே (பிரபுக்கள்) முட்டுக்கட்டை போட்டு விடுகிறார்கள்.

வீரசோழரால் பாதிக்கப்படும் பாண்டியர்களுக்கு உதவி செய்யச் சென்ற விஸ்வநாதனின் தந்தை நாகம நாயக்கர், அமைச்சர் சாளுவ நரசிம்மரின் சொல்லைக் கேட்டு சந்திரசேகர பாண்டியனிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுக்கிறார். அதனால் கோபம் கொள்ளும் ராயர், விஸ்வநாதனையே தந்தைக்கு எதிராகப் போர் செய்ய அனுப்புகிறார். கிருஷ்ணதேவாரயருக்கு பின்பு விஜய நகரச் சாம்ராஜ்யம் சிதைந்து விடும் என நினைக்கும் அமைச்சர் சாளுவர்,  அதனால் மதுரை மற்றும் தஞ்சை பகுதிகளை உள்ளடக்கிய தனி சமஸ்தானத்தை உருவாக்கி தன் மருமகனை அதற்கு மன்னராக்க சில சதிகளைச் செய்கிறார். ஆனால்  அவர் செய்யும் சதிகள் எல்லாம் நாவலில் பெரிய திருப்பத்தையோ அல்லது எந்தவித பதைபதைப்பையோ ஏற்படுத்தவில்லை. எனவே நாவல் ஒரே நேர்க்கோட்டில் அதிக சுவாரசியத்தைத் தராமல் பயணிக்கிறது.  சாளுவரின் மகள் இலட்சுமியும், விஸ்வநாதனும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். அந்த  ஈர்ப்பு மற்றும் சேரமன்னன் உதயமார்த்தாண்டனுக்கு இலட்சுமி மேல் உள்ள  ஆசையைப் பகடைக்காயாய் பயன்படுத்தி தன் இலக்கை அடைய முயல்கிறார். கடைசியில் இலட்சுமியை மணக்கக் கூடாது என விஸ்வநாதனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு இறப்பது ஒன்று மட்டும்தான் கொஞ்சமாவது உருப்படியான வில்லத்தனமாக உள்ளது.

நாவல் முழுவதும் மன்னர் ராயரின் எண்ணமாக ஒற்றுமையான தேசம், இந்து முஸ்லீம் மதநல்லிணக்கம் எனப் பல கருத்துக்களைப் போட்டுத் திணித்து உள்ளார். கொஞ்சம் ஓவர் டோஸ் ஆன மாதிரி இருந்தது. இந்தியாவின் மீது சீனா படையெடுத்த சுழலும், பாகிஸ்தானின் தொல்லைகளும் அகிலனிடம் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தினால் வெற்றித் திருநகர் நாவலை எழுதினாராம். ஆனால்  வாசித்த எனக்குள், வெற்றித் திருநகர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிஜம்.


இறுதியாக :

கிருஷ்ணதேவராயரின் கதை எனினும் உடனே நமக்கெல்லாம் நினைவுக்கு வரும் தென்னாலிராமன் பத்தி ஒரு குறிப்புகள் கூட நாவலில் இல்லை. மேலும் அவரின் புகழ்பெற்ற அமைச்சர் அப்பாஜி(திம்மரசு), நாவலின் தொடக்கத்திலே இளவரசரைக் கொன்ற குற்றத்திற்காகத் தன் குடும்பத்தினரோடு சிறையில் இருப்பதாக வருகிறது.

Sunday 15 September 2019

ஒரு புளியமரத்தின் கதை



                       ஒரு புளியமரத்தின் கதை - சு.ரா



சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை நாவல்தான் நான்  வாசித்த தமிழ் இலக்கியத் தரம் அளவுக்குள் வரும் முதல் நாவல். அது என்ன அளவுகோல் எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. ஒரு புளியமரத்தின் கதைதான் சு.ராவின் முதல் நாவல் கூட. இதனை சில வருடங்களுக்கு முன்பே வாசித்து விட்டேன். பொதுவாக கல்கியின் சரித்திர நாவல்களைத் தவிர எந்த நாவலையும் பலமுறை வாசித்தது கிடையாது. நாகர்கோயில் வேப்பமூடு ஜங்ஷன் கதை என்பதும் தற்போது மிகவும் பழக்கப்பட்ட இடமாக இருப்பதும் மற்றொருமுறை வாசிக்கத் தூண்டியது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்த போது நடக்கும் கதை. புளிக்குளத்தின் மத்தியில் நிற்கும் புளியமரத்தை மையப்படுத்தி, அதனின் வாழ்தலும், வீழ்ச்சியும்தான்  கதையின் களம். புளியமரம் தன்னை சுற்றியுள்ள மனிதர்களின் சூழ்ச்சிகளையும், சுயநல போக்குகளையும் எதுவும் செய்ய முடியாமல் மெளனசாட்சியாய் நின்று நோக்குகிறது. முதலில் புளியமரத்தின் பழங்கதையினை  தாமோதர ஆசான், ஆசிரியரிடம் கூறுவது போலவும் பின்பு பிற்கால கதையை, ஆசிரியர் அவரின் பார்வையில் கூறுவது போலவும் உள்ளதது. ஆசானின் ஆர்ப்பாட்டமாய் கதைசொல்லும் பாணி, செல்லத்தாயின் மரணம், ஆசான் தனது சமயோசித புத்தியால் மரத்தை வெட்டாமல் காப்பாற்றுவது  என இதர நாவல்களை விடத் தனித்துப் பயணிக்கும் கதைக் களம் பின்பு இரண்டு வியாபாரிகளின் தொழில் போட்டி, தகராறு எனக் கொஞ்சம் இயல்பான நடைக்கு வந்தது விட்டது போல் எனக்குத் தோன்றியது. இது என்னுடைய பிரத்தியேக அனுபவம்தான். ஏன் எனில் சிலர் சண்டைக்கு வந்து விடலாம் நாவல் தொட்டிருக்கும் இலக்கியச் சிகரங்களையும், அதனுள் விவரிக்கப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் ஆழம் பற்றி ஆராயும் தகுதி  உனக்கில்லை என.

புளியமர  ஜங்ஷனில் கடைகள் வைத்திருக்கும் தாமு மற்றும் அப்துல் காதருக்கும் சிறு சிறு பொறியாகக் கிளம்பும் பகை பின்பு சிலரின் தூண்டுதலால் பெரிதாகி எவ்வாறு அந்தப் பகுதியின் அமைதியின்மைக்கே காரணமாகிறதென்றும், இரு தனி மனிதர்களின் தொழில் போட்டிப் பொறாமை எவ்வளவு தூரம் மதப் பிரச்சினையாகவும், அரசியலாகவும் உருவாக்கப் படலாம் என்பதனைக் காண்கிறோம். இடையில் பத்திரிக்கைகளின் ஒரு சார்ப்புத் தன்மை, ஜாதி மற்றும் மத ஓட்டு வங்கி அரசியல் எனச் சம காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. எதிர்த் தரப்பு புளியமரத்தை வெட்டத் திட்டம் தீட்ட, தாமு தரப்போ இரவோடு இரவாக மரத்தை சாமியாக்கி விடுகிறது. கடைசியில் மனிதர்களின் சுயநல சூழ்ச்சிகளுக்கு  முன்னால் எப்படி இயற்கை (புளியமரம்) போராட முடியாமல் தோற்றுப் போகிறது என்பதே சோகமான முடிவு. இன்று வரை புளியமரம் ஜங்ஷன் என்ற பெயர் மட்டும் மாறாமல் இருப்பது, ஆசானுக்குக் கிடைத்த சின்ன வெற்றியாக இருக்கலாம்.

நாவலில் உள்ள சில தகவல்கள் எனக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அப்போது இங்குள்ள M.L.A சட்டமன்ற கூட்டத்தில் கலந்தது கொள்ள திருவனந்தபுரம் செல்வது.  ராணித்தோட்டம் (மேற்றி ராணியார்) இடத்தின் பெயர்க் காரணம். மருத்துவா மலையின் சாரலில், அந்த காலத்தில் பறையன் குன்று எனச் செம்மண் குவிந்து கிடந்ததாம். அந்த மண்ணைக் கொண்டுதான் புளிக்குளத்தை நிரப்பி புளியமரத்தைச் சுற்றி ரோடு போட்டார்களாம். பின்பு குளத்தின் அருகிலிருந்த காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டு நகரப் பூங்காவாக மாற்றப்பட்டதாம். நாகர்கோயில் நகரத்துடன் சிறுவயதிலிருந்தே தொடர்பு இருந்தாலும் ஒருமுறை கூட நான் அந்த பூங்காவிற்குச் சென்ற ஞாபகமில்லை. 


இறுதியாக :

வேப்பமூடு ஜங்ஷன் என்று இன்றும் நாகர்கோவிலில் சொல்லப்படும் இடமே நாவலில் வரும் புளியமர ஜங்ஷன். புளியமரம் என்பது எங்கள் ஊரில் நிற்கும் வேப்பமரம் என சு.ரா வே தன்னுடைய ஐந்தாவது பதிப்பின் முன்னுரையில் கூறியுள்ளார். கதையின் வசதிக்காக வேப்பமரத்தை சு.ரா, புளியமரமாக அதனை மாற்றி இருக்கலாம். வேப்பமரம் எனில் காய்களைக் குத்தகைக்கு விடுதல், தோட்டிகள் கல்லெறிந்து காய்களைக் கவர்வது போன்ற நிகழ்வுகளை நாவலில் வைக்க முடியாதே.

Wednesday 11 September 2019

கோவேறு கழுதைகள்



                              கோவேறு கழுதைகள் - இமயம்


சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்பு இமயம் எழுதிய நாவல். அவரின் முதல் நாவல். படித்த, இன்றைய நகரத்து மக்களின் பார்வைகளுக்கு எட்டாத ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் இலக்கியம். கொஞ்சம் பொறுமை தேவை நாவலை வாசித்து அதனுடன் பயணிக்க. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை என்பதை விட ஒதுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை சூழ்நிலை எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும். நான் அவ்வாறு சொல்லக் காரணம் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட காலணிக்கும் அப்பால்,
காலணிவாசிகளாலும் ஒடுக்கப்படும் 
வண்ணான்களான சவுரி, ஆரோக்கியம் தம்பதியினரின் வாழ்வின் சில பக்கங்கள்தான் கோவேறு கழுதைகள் நாவல். கதையின் நாயகியான ஆரோக்கியமே நாவல் முழுவதும் நிறைந்திருக்கிறாள். 

அவர்களுக்கு மிகவும் இயல்பாகி விட்ட, அவர்களின் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள்,  இந்த காலகட்டத்தில் நாவலை வாசிக்கும் யாவரையும் அதிரவைக்கும். சாவு, சடங்கு, திருமணம், பேறுகாலம் என காலணி மக்களின் ஒவ்வொரு நிகழ்விலும் அவர்கள் நிறைந்து இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியமோ (சோறு, தானியம்....) அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மிகவும் சொற்பமாக உள்ளது. பகலில், ஊரில் உள்ள வீடுகளுக்குச் சென்று அழுக்குத் துணிகளை வாங்கி வந்து வண்ணான் குட்டையில் துவைக்கிறார்கள் (தொரப்பாட்டை). இரவில் அதே வீடுகளுக்குச் சென்று, மிச்சம் மீதி உள்ள சாப்பாட்டை வாங்கிவந்து சாப்பிடுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்த வாழ்க்கை அவர்களுக்கு இயல்பாகிப்போனதும், இதிலிருந்து விலகி வேறு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு கூட  தோன்றாத அளவுக்கு இந்த அடிமைத் தன்மை அவர்கள் வாழ்வாகவே மாறியிருப்பதுமான அவலம்தான் நாவலின் அடிநாதம். 

ஆரோக்கியம், சவரி, மேரி, சகாயம்  ஆகியோரின் பாத்திரங்கள் நம் கண்முன்னே நிற்கிறது. அதுவும் ஆரோக்கியம் அடிக்கடி சொல்லும் "வண்ணாத்தி மவ வந்திருக்கிறேன் சாமி",  "இந்த வண்ணாத்தி மகளை மறந்திடாதீர்கள் சாமி"  வார்த்தைகள் நாவலைப் படித்து முடித்த பின்பும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தோனியார் கோவிலுக்குச் செல்ல கொஞ்சம் பணம் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் உச்சக்கட்ட லட்சியம். மேரி, பாலியல்ரீதியான துன்பம் அனுபவித்து, அதனை ஆரோக்கியம் மட்டும் மேரி அணுகும் முறையைப் படிக்கும் போதே மனம் கசிகிறது. ஆரோக்கியம் தன்னுடைய இயலாமையை நினைத்து எப்பொழுதும் அழுது கொண்டே இருப்பது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் அவர்களின் நிலைமை அதனை நியாயப்படுத்தவும் செய்கிறது. 

சவரி சின்னப் பிள்ளையாக இருந்தபோது 'ஒலவத்துல சண்ட ஆரம்பிச்சிக்கிச்சி' என்று மீசை முளைக்காத, படிக்கத் தெரியாதவர்களையெல்லாம் இழுத்துப் போனார்கள். அவன் எப்போதாவது உலகச் சண்டை பற்றி நினைப்பான். 'இந்த ஊருக்கு வெளுக்க ஆள் இல்லாமல  பூடுமே!' என்று வருந்துவான். இந்த வரிகளைப் படிக்கும் போது சவரியின் அப்பாவித்தனத்தை நினைத்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. 

வேலை எதுவும் செய்யாமல் மினுக்கிக் கொண்டு இருக்கும் மருமகள் சகாயத்தை ஆரோக்கியத்துக்குப் பிடிக்கும். சமயம் கிடைக்கும் போது எல்லாம் சகாயத்தின் தோலின் நிறம், வடிவம், முடி  பற்றியெல்லாம் ஊராரிடம் பெருமையாகச் சொல்லுவாள். ஆனால் தனக்குப் பிடித்திருக்கும் விசயம் சகாயத்திற்க்குத் தெரிந்துவிடுமோ அஞ்சியே சில நேரம் அவளிடம் சண்டை போடுவாள். இந்த வரிகள் எனக்குத் தெரிந்த ஒருவரை ஞாபகம் வரச் செய்தது. சிறுவயதில் நானும் இவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்திருந்தாலும் நிகழ்வுகள் அதிகம் ஞாபகம் இல்லை. 


இறுதியாக:

பொதுவாக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை கதையின் நாயகர்களாக நாவல்களில் முடிவிலோ அல்லது இடையிலோ  அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தீர்வாக ஆசிரியர் தன் புரட்சிக் கருத்துக்களைப் புகுத்தி விடுவார். அதுவே அரசியலாக்கப் பட்டுவிடும். அவ்வாறு ஏதுவும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக  நாவலை முடித்து இருப்பது மாறுபட்டு உள்ளது. எனினும் அவர்களது பிள்ளைகள் இந்த வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் வழியைத் தாமே அமைத்துக் கொள்வதாகச் சித்தரித்திருந்தது இந்த அவலங்களுக்கு நேர்மையான ஒரு தீர்வை முன்வைப்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். 


Tuesday 27 August 2019

ரோமாபுரிப் பாண்டியன்



                  
                              ரோமாபுரிப் பாண்டியன் 



   இடையிடையே கொஞ்சம் எளிமையான நடை மற்றும் கதைக் களங்கள் கொண்ட  நாவல்களையும் வாசிக்கலாம் எனச் சிலவற்றை வாங்கினேன் அதில் ஒன்று கருணாநிதி எழுதிய ரோமாபுரிப் பாண்டியன். வெவ்வேறு எழுத்தாளர்களின் பாணி மற்றும் கருத்து நடைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் ஒரு காரணம். கருணாநிதி எழுதிய ஏதாவது ஒரு நாவலை மட்டும் முதலில் வாங்கலாம் என முடிவு செய்தேன் ஆனால் எதை வாங்குவது என்பதில்தான் குழப்பம் பின்பு எனது மாமாவின் சிபாரிசினால் ரோமாபுரிப் பாண்டியன் நாவலைத் தேர்ந்தெடுத்தேன். 


மற்றுமொரு சரித்திர கதை... கி.மு 20-ஆம் ஆண்டில் நடப்பதாகக் கதை உள்ளது. கரிகால்சோழனும், பெருவழுதிப்பாண்டியனும் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். கரிகாலனால் தோற்கடிக்கப் பட்ட குறுநில மன்னனான இளங்கோவேள் அவனை வீழ்த்த செய்யும் முயற்சியை முறியடிக்கிறான் பாண்டிய வீரன் செழியன். காயம்பட்ட செழியனை இளங்கோவேளின் ஆட்கள் சிறைப்படுத்த அவனை மீட்கப் புலவர் காரிக்கண்ணாரின் மகள் முத்துநகை ஆண் வேடம் அணிந்து புறப்படுகிறாள்.

     மாறுவேடத்தில் இருக்கும் இளங்கோவேளிடம், முத்துநகை காதல் வசப்படுகிறாள். சிறையில் இருக்கும் செழியன்,  இளங்கோவேளின் தங்கை தாமரைதான் முன்பு தனக்காகப் பார்த்த பெண் என்பதனை தெரிந்து கொண்டு அவள் மீது ஆசைப் படுகிறான். ஆண் வேடத்தில் இருக்கும் முத்துநகையிடம் தாமரை மயங்குகிறாள். ஒரு கட்டத்தில் இளங்கோவேளின் மனைவியே கரிகாலனைக் கொல்ல முயற்சி செய்ய பல குழப்பங்களுக்கு இடையே இளங்கோவேள் முத்து நகையால் கொலை செய்யப் படுகிறான். 

     இதுவரை கொஞ்சம் சுவாரசியமாகச் சென்ற கதை தடம்புரள்கிறது. தாமரை மீது பாண்டிய இளவரசன் இளம்பெருவழுதியின் காதல்... செழியனின் ரோமாபுரிப் பயணம்...  அங்கு உள்ள ஜூனோ... அவளைப் பற்றிய ரகசியம் என. இளங்கோவேளின் பழிவாங்கும் படலத்தை  மட்டுமே இன்னும் கொஞ்சம் சுவாரசிய படுத்தி நீட்டி எழுதியிருந்தால்,  ஒரு நல்ல நாவல் படித்த உணர்வைத் தந்திருக்கலாம். என்ன ரோமாபுரிப் பாண்டியன் கிடைத்திருக்க மாட்டான்.  

     பிறப்பின் ரகசியங்களே பொதுவாகச் சரித்திர கதைகளின் மூலமாக உள்ளது. இதிலும் அது இருந்தாலும்... அது சொல்லப்பட்ட விதம் பெரிய உணர்வுகளை ஏற்படுத்தவில்லை. ரோமாபுரிப் பாண்டியன் என்னை ரொம்பக் கவராமல் போனதற்குக் காரணம், கொஞ்சக் காலமாக நான் யதார்த்தமான நாவல்களுக்கு மாறி விட்டது கூட இருக்கலாம். இந்த நாவலில்  ஒரு சதவீதம்தான் வரலாறு  மீதியெல்லாம் கற்பனை என நினைக்கிறேன். 


இறுதியாக:

நாவலாசிரியர் கருணாநிதி, அந்நிய மொழியைச் சிலர் புகுத்த நினைப்பதைத் தடுத்துப் போராடுவது. சுயாட்சி, கூட்டாட்சி தத்துவங்கள், பகுத்தறிவு தத்துவங்கள் போன்ற தன்னுடைய கருத்துக்களையும் நாவலில் அழகாக ஆங்காங்கே அள்ளி தெளித்துவிட்டார்.   மேலும் தளபதி நெடுமாறன், மன்னருக்குப் பின் அவரது மகனைத் தள்ளிவிட்டு தான்தான் அரியணையில் ஏற வேண்டும் என சில வேலைகளைச் செய்கிறான்.. அது யாரை மனதில் வைத்து எழுதப்பட்டதோ....😜


Thursday 8 August 2019

கடல்புரத்தில்



                            கடல்புரத்தில் - வண்ணநிலவன்




       கதைக்களம் மணப்பாடு என்று
தெரிந்தவுடன் இந்த நாவலை வாங்கிவிட்டேன். நமக்குக் கொஞ்சம் பரிட்சியமான  இடம்  என்பதால். இதுவும் சிறிய நாவல்தான். கதையில் வரும் ஊர்களான உவரி, உடன்குடி, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் என எல்லாம் நமக்கு மிகவும் தெரிந்த பழகிய இடங்களாக இருப்பது ஒருவிதமான நெருக்கத்தை நாவல் வாசிக்கும்போது கொடுக்கிறது. மீனவ குடும்பங்களின் வாழ்க்கை அந்த வட்டார மொழியில் சொல்லப்பட்டுள்ளது.

மிக்கேல் குருஸினை அவரது மகன் செபஸ்தி, அவரின் வல்லம் மற்றும் வீட்டை விற்று விட்டு, ஆசிரியர் வேலை பார்க்கும் ஊரில் தன்னுடன் வந்தது இருக்குமாறு அழைக்கிறான். குருசுக்கு அதில் விருப்பம் இல்லை கடைசிவரை தன் வல்லத்தை விடப் போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறான். கடைசி மகள் பிலோமியோ தன் தந்தைக்குப் பிடிக்காத லாஞ்சிகாரர் ஒருவரின் மகன் சாமிதாஸை காதலிக்கிறாள். தான் விரும்பும் சாமிதாஸ்வுடன் தனக்குத் திருமணம் நடக்க வாய்ப்பில்லை எனத்  தெரிந்தும் அவன் மீது மாறாத அன்பு கொண்டு ஒரு கட்டத்தில் தன்னையே இழந்தாலும்,  பின்பு அவனின் பலவினங்களை தன் தோழி ரஞ்சியின் உதவியினால் யதார்த்தமாக ஏற்றக் கொள்கிறாள். தோழி ரஞ்சி மற்றும் அவளது அண்ணன் செபஸ்தி  காதலும் நிறைவேறவில்லை அந்த காரணம் கதையில் சொல்லப்படவும் இல்லை. அந்த ஊரில் உள்ள வாத்திக்கும், தன் தாய் மாரியம்மைக்கும்  இடையேயான நட்பினால்  பிலோமி அந்த வாத்தியை வெறுக்கிறாள். ஆனால் குடிபோதையில் தடுக்கிவிழுந்து தாய் உயிரிழக்க, ஒரு கட்டத்தில்  மன உளைச்சலில் இருக்கும் பிலோமிக்கு அந்த வாத்தியுடன் நட்பு ஏற்படுகிறது. கதையின் இறுதியில் பிலோமி நாளை வாத்தியின் வீட்டுக்கே போய்விடப் போகிறாள் என்ற வரிகள், இருவருக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதை நமது ஊகத்திற்கே ஆசிரியர் விட்டுவிடுகிறார். 

நாவலில் கடற்கரை கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த தொழில் முறை சார்ந்த மாற்றத்தின்  (வல்லம் - லாஞ்ச்)  விளைவுகள் ஏற்படுத்திய பாதிப்புகள், உரசல்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கதாபாத்திரங்கள் பேசும் மொழியும் அவர்களின் இயல்புக்கு ஏற்ப உரையாடலாக உள்ளது. மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையே ஆன பந்தம், வலத்தின் மீது அவர்களுக்கு உள்ள பாசம்  என அவர்களின் வாழ்க்கையைக் கண் முன்னே காட்டுகிறார். ஒரு சமயத்தில் தன் மனைவியைப் பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றொரு சமயம் அவளை நினைத்து பெருமை கொள்கிறான். இந்த உண்மைக்கு அருகிலான சித்தரிப்பு நாவலுக்கும் நமக்கிடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

எனக்கு நாவலில் சில நெருடல்களும் தோன்றியது... மிக்கேலின் நண்பன் ஐசக் தன் மனைவியை விரட்டி விட்டு பிலோமியை அடைய நினைப்பது, ஒரு சூழ்நிலையில் மிக்கேலிடம் கையாளாக இருக்கும் சிலுவையடியான் அவள் மீது ஆசைப் படுவது. மேலும் பிலோமிக்கு தான் வெறுக்கும் வாத்தியுடன் நெருக்கமான நட்பு ஏற்படச் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு மிகவும் அழுத்தமானதாக  இல்லை. ஆண்களுக்கு உள்மனதில் தோன்றும் சலாப ஆசைகளைத்தான் ஆசிரியர் வெளிச்சம் படுத்தியுள்ளார் எனவும் சிலரின் கருத்து உள்ளது. 

இறுதியாக :

     இந்த நாவல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செந்தாமரை, சோ, லிவிங்ஸ்டன் போன்றவர்கள் நடித்து தொடராக வந்துள்ளது. எனக்கும் பார்த்த ஞாபகம் கொஞ்சம் உள்ளது. மீண்டும் அதைப் பார்க்க வீடியோக்களை தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை யாருக்காவது கிடைத்தால் தெரியப்படுத்தவும். 


Sunday 4 August 2019

கோபல்ல கிராமம்


               
          கோபல்ல கிராமம்  - கி. ராஜநாராயணன்



                 
   சிறந்த புத்தகங்களின் வரிசையில் மற்றும் ஒரு நாவல். மற்ற நாவல்களை ஒப்பிடும்போது சிறிய நாவல்தான்.  வாங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் என் சகோதரர் மூலமாகக் கிடைத்தது. இது ஒரு  கதைச் சொல்லி நாவல். வாசிக்கும்போது நமக்கு ஒரு தாத்தா, பாட்டி கதை சொல்வது போன்ற உணர்வைத் தருகிறது. நாவலிலும் முக்கால்வாசி கதையை 139 வயது மங்கயத்தாயரு என்ற பாட்டி சொல்வது போலவே வருகிறது.

தெலுங்கு மொழி பேசும் ஒரு பிரிவினரின் வீட்டுப் பெண்ணுக்கு அவர்களை ஆட்சி செய்யும் துலுக்க ராஜாவால் தொல்லைகள் வருகிறது. அந்த ராஜாவின் படைகளிடமிருந்து தப்பிக்க குடும்பத்தோடு தெற்கு நோக்கி புலம் பெய்கிறார்கள். அவர்கள் வரும் வழியில் வாழ ஏதுவாய் தோன்றும் ஒரு காட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதனை அழித்து  வசிப்பதற்கு ஏற்ற இடமாய் மாற்றுகிறார்கள். பசுக்கள் நிறைந்த இடமாக இருப்பதால் கோபல்ல கிராமம் எனப் பெயர் பெறுகிறது. கோட்டையார் குடும்பம் என்று அழைக்கப்படும் ஊரின் வசதியான குடும்பம் மற்ற மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவ்வூரில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கின்றனர். அங்கு வாழும் மக்கள் இயற்கையாலும், பின்பு வந்த ஆங்கிலேயராலும் ஏற்படும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. 

ஆசிரியர் பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் அறிமுகப் படுத்தும் போது அவர்களின் குணாதிசயங்களைச் சொன்ன விதம் மற்றும் வர்ணனைகள் கச்சிதம். அக்கையா பாத்திரம் செய்யும் குசும்புகள் வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறது. இது ஒரு முறை படித்து விட்டு வைத்து விடும் நாவல் அல்ல.. சில பக்கங்கள் நம்மை யோசிக்க வைக்கும்.. இது உண்மையா?? பொய்யா?? எனக் குழப்பவும் வைக்கும் ஆனாலும் திரும்பத் திரும்ப அலுப்பில்லாமல் ரசித்து வாசிக்கவல்ல ஒருவித பாண்டசி கலந்த காமெடிதான்.

இறுதியாக :
    
முதல் மரியாதை படத்தில் ஆற்றுக்குத் தண்ணீர் குடிக்க வரும் ரஞ்சனியின் காதில் உள்ள அணிகலன்களை பறித்து, கொல்லும் பொழுது அவனது  கால் கட்டை விரலை அவள் கடிக்கும் காட்சி இந்த நாவலிலிருந்துதான் எடுக்க (சுட) பட்டுள்ளது.
.

Tuesday 30 July 2019

மோக முள்



                               தி ஜானகிராமனின்  மோக முள்


    
 இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் என்னுள் சில ஆண்டுகளாக இருந்தது, ஆனால் அதற்கான வாய்ப்பு சமீபத்தில்தான் அமைந்தது. வாசித்து முடித்த உடன் எழுதப்பட்டு இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் பலரால் பேசப்படுகிறது, வாசிப்பவர்களை எல்லாம் ஏன் கவர்ந்திழுக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

தி ஜாவின் அம்மா வந்தாள் வாசிக்கும் பொழுது கதையில் வழக்காடப்பட்டுள்ள சொற்கள் (வட்டார நடை) எனக்கு அதிகம் பரிட்சியமானதாக இல்லை. அதனால் தொடக்கத்தில் சிறிது தடுமாற்றம் இருந்தது ஆனால் மோக முள்ளில் அந்த பிரச்சினை எழவில்லை. சொற்கள் மற்றும் தி.ஜா வின் நடை எனக்குக் கொஞ்சம் பழகிவிட்டது போல. 

சிறுவயது முதலே இசையில் ஈர்ப்பு ஏற்படுமாறு நாயகன் பாபு அவனுடைய தந்தையால் (வைத்தி)  வளர்க்கப்படுகிறான். யமுனா தமிழ் தந்தைக்கும், மராட்டிய    வம்சாவளி  தாயிக்கும்  (பார்வதி-  இரண்டாந்தாரம்) பிறந்தவள். யமுனா மிகவும் அழகான பெண்ணாக பாபுவின் பார்வையின் மூலமாக   விவரிக்கப் படுகிறாள். 

தன் சிறுவயதிலிருந்தே தன்னை விட பத்து வயது அதிகமான யமுனாவுடன் பழகி வரும் பாபு, மெல்ல மெல்ல அவள் அன்பில் கரைந்து, வாலிப பருவத்தில் அவளைத் தெய்வத்தின் உருவமாகப் பார்க்கிறான். பல்வேறு காரணங்களால் 30 வயது ஆகிய பின்பும்  தள்ளிப் போகும் அவளின் திருமணத்தை நடத்தவும் முயற்சி செய்கிறான் ஆனால் யமுனாவின் அழகும், இலட்சணமும் அவனுடைய மனதில் ஒருவித மோகத்தை எரியூட்டி ஒருதலைக் காதலாக உருமாறுகிறது. அதுவும் ஓர் வளர்சிதைப் பருவத்திலிருந்து இளைஞனாக மாறும் ஆணின் மனதில் தோன்றும் முதல் காதல். ஆனால் ஆரம்பத்தில் பாபுவால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் ஒரு நல்ல மற்றும் உயர்வான இடத்தில் இருக்க வேண்டியவள் என்று மட்டுமே நினைக்கும் பாபுவுக்கு, சமய சந்தர்ப்பத்தால் பக்கத்து வீட்டு வயதானவரின்  இளம் மனைவியுடன் (இரண்டாம்தாரம்கூடிய பின்தான் யமுனாவின் மீது உள்ள காதல் புலனாகிறது. ஆனால் பாபுவின் நண்பன் ராஜம் அதை முதலிலே புரிந்து கொள்கிறான். தங்கம்மா தற்கொலை செய்து விட  பாபு மயானத்தில் குற்றவுணர்வில் நிற்பதை வாசிக்கும் போது என் இதயம் கனமாகி விட்டது.

சற்றே வரம்பு மீறிய காதலை யமுனா நிராகரிப்பதால் ஏக்கம் மற்றும் வலியுடன்  இசைப் பயிற்றுவார் ரங்கண்ணாவிடம் முழு வீச்சில் கர்நாடக இசையைக் கற்றுக்கொள்கிறான்.  பின்னாளில் குரு ரங்கண்ணாவும் இறந்து விட  மெட்ராஸ் சென்று பணிபுரிந்து வரும் பாபுவை, சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகத் தேடிவரும் யமுனா இவ்வளவு வருடங்களுக்குப் பின்பும் பாபுவின் மனதில் தன் மீதிருக்கும் காதலில் எவ்வித மாற்றமும் இல்லாதது கண்டு மலைக்கிறாள்.

ஒரு கட்டத்தில்  தன் இளமையைஇத்தனை காலம் தனக்காக எவ்வளவோ செய்துவிட்டுக் காத்திருக்கும் பாபுவிற்குக் கொடுத்து விட்டு, இத்தனை நாளிலிருந்த தவிப்பும் காத்திருப்பும் ''இதற்குத்தானா'' என்று யமுனா, பாபுவிடம் கேட்பது என் மனதில் மிகப் பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. நாவலை முழுமையாக, உணர்வுப் பூர்வமாக வாசித்தால் மட்டுமே அந்த ஒரு வார்த்தையின் வலிமையைப்  புரிந்து கொள்ள முடியும். 

நாவல் முழுதும் வரும் உரையாடல்கள் மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றின் தேவைகளையும் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கின்றது. குறிப்பாக பாபு-வைத்தி (தந்தை மகன் உறவு)பாபு-ராஜம் (நட்பு).  அதே போல் ஆசிரியர் காமம் என்ற தணலைக் கதையில் கையாண்டிருக்கும் விதம் விரசமாகத் தோன்றாமல் மனிதனின் அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகத் தோன்றுகிறது. சுதந்திரத்துக்கும் முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையாக வருவதால் அக்கால சமுதாய சட்டங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகளை நாம் அறிய உதவுகிறது. 

பொதுவாக ஆண்களுக்கு, பெண்கள் மீது இருக்கும் ஈர்ப்பு இரு வகைப்படும். 
சிலரைப் பார்த்தால் காமுறுவர், சில பெண்களைப் பார்த்தால் பரவசம் கொள்வார்கள். ஆனால் அந்த பரவசத்துக்கும் அடித்தள அடிப்படை காமமே என்பதைச் சிலர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் அடிப்படை என்பதை பாபு மூலம் அழகாக தி ஜானகிராமன் உணர வைக்கிறார். 

இறுதியாக :

     அரு இராமநாதன் எழுதிய குண்டு மல்லிகை நாவலிலும் நாயகன் தன்னைவிட மூத்த பெண்ணை காதலிப்பதுதான் கரு. ஆனால் இரு கதைகளின் தளங்களும், எழுதப்பட்ட விதமும் முற்றிலும் வேறு . இருந்தாலும் என்னை இரண்டு பாத்திரங்களுமே (உமா மற்றும் யமுனா) கவர்ந்து விட்டது. இன்னொரு முறை கும்பகோணம் சென்றால் கட்டாயம் யமுனா வாழ்ந்த தூக்காம்பாளையத் தெருவில் கால்பதித்து விட்டு வர முடிவு செய்துவிட்டேன்.
 

Monday 22 July 2019

தலைமுறைகள்



                        தலைமுறைகள் - நீல பத்மநாதன்





     மீண்டும் ஒரு வட்டார வழக்கு மொழியில் வந்த நாவல். பலரின் சிறந்த நாவல்களின் பட்டியலில் இருக்கும் நாவல். குமரி மாவட்ட வட்டார வழக்கு என்பதால் எனக்குக் கொஞ்சம் எளிதாக வாசிக்க முடிந்தது, இதர இத்தகைய நாவல்களை ஒப்பிடும்போது. 

1968'ல் வெளிவந்த இந்த நாவல் செட்டியார் சமூகத்தைத் சேர்ந்த திரவியம் குழந்தையில்லாதக் காரணத்தால் கணவனால் ஒதுக்கி வைக்கப்பட்ட  தன் சகோதரியை மீண்டும் குடும்ப வாழ்வில் இணைக்க முயல்வதுதான் கதை. இதை நாவலாகச் சமூகத்தில் நடைபெறும் சடங்குகள்விசேஷங்கள் மூலமாக மிகவும் லாவலாக நகர்த்தி உள்ளார்.


 அந்த காலத்தில் நடந்த திருமணம்பெண் பெரியவளானதும் நடக்கும் சடங்குவளைகாப்புஇறந்த வீட்டுச் சடங்குகள்  போன்ற அனைத்து விசேஷங்கள் மற்றும் அதனையொட்டிய நடக்கும் சடங்குகள் அதனால் சராசரி குடும்பத்தலைவன் அடைந்த கஷ்டங்கள் விரிவாகவும், சுவையாகவும் நாவலில் இடம்பெற்றுள்ளது.

ஏராளமான கதாபாத்திரங்கள் இருப்பதால் முதலில் அவர்களுக்குள் உள்ள உறவுமுறைகள் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் போகப் போக அனைத்து பாத்திரங்களும் நன்கு பரிசம் ஆகிவிடுகிறது. மேலும் ஒவ்வொரு பாத்திரங்களின் குணங்களும் வெவ்வேறாக இருப்பதும், நாம் பார்த்துப் பழகியதுமாக இருப்பதும் நம்மை கதையுடம் ஒன்றி விடச் செய்கிறது. 

அந்தக்காலத்தில் சாதி மீது தாக்கம் கொண்ட கட்டுக்கோப்பான ஊரில் தன் அக்காவுக்கு மறுமணம் செய்யத் திரவியம் முயற்சி செய்வதை எந்த ஹீரோயிசமும் இல்லாமல் இயல்பாகவும், யதார்த்தமாகவும் சொல்லுகிறார். திரவியம் தன் அப்பா கடைமைகளைச் செய்யப் பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படும் போதும், தன் அக்காவின் நிலையை எண்ணித் தவிர்ப்பதும்  வாழ்க்கையின் யதார்த்த நடைமுறையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பொதுவாக இலக்கியப் படைப்புகளில் கதை மையம் அல்லது கதை சொல்லி அறிவாளியாகவோ, மிகுந்த நுண்ணுணர்வுள்ளவனாகவோ காட்டப் படுவதே வழக்கம்.  காரணம் அவன் மூலம் ஆசிரியர் வெளிப்படுகிறார் என்பதே. ஆனால் திரவியம் மிகச் சாதாரணமானவனாகவே காட்டப்படுகிறான். நடுத்தரவர்க்கத்துக்கே உரிய எல்லா கோழைத்தனங்களும், தயக்கங்களுள்ள ஒருவனாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். அவன் புரட்சியாளனோ கலகக்காரனோ அல்ல. அவன் சற்று படித்து அதன் மூலம் நவீனக் காலகட்டத்துக்குள் வந்தது மட்டுமே அவனுக்கும் பிறருக்குமிடையேயான வித்தியாசம். இதன் மூலம் நாவலின் ஒவ்வொரு வரியிலும் நம்பகத்தன்மை தெரிகிறது. 

கதையின் முடிவுதான் டக் என முடிந்தது போல இருக்கிறது.. நான் கொஞ்சம் கூட எதிர்பாராத முடிவுதான். கிளைமாக்ஸ்தான் நாவலின் பலவீனமான பகுதி என ஒரு விமர்சனமும் உள்ளது. 


இறுதியாக :

  இந்த கதையை  கௌதம் இயக்கி, நடித்து 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளது. You Tube 'ல் கொஞ்சம் பார்த்தேன்.. மேலும் அதை பற்றி சொல்லுவதுக்கு ஒன்றுமில்லை மக்கா ...

          

Wednesday 17 July 2019

சேப்பியன்ஸ்



                                              சேப்பியன்ஸ் 
    மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு


                   

 கொஞ்சக் காலமாக சமுக நாவல்களாகப் படித்துக்  கொண்டிருந்ததால் மாற்றத்திற்காக வரலாற்றின் பக்கம். யுவால் நோவா ஹராரி எழுதிய இந்த புத்தகத்தை ஒரு விமர்சனம் மூலமாகத்  தெரிந்த உடனே வாங்கிய வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.

  இந்த புத்தகத்தைப் படிக்க படிக்க பிரமிப்பாக இருந்தது. அவ்வளவு தகவல்கள் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்த விஷயங்களைத் தொகுத்து எழுத, எவ்வளவு ஆராய்ச்சி மற்றும் வாசிப்பு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போது மலைப்பாக உள்ளது.

 மனிதக்குலத்தின் வரலாற்றை நான்கு தொகுதிகளாக ஆசிரியர் பிரித்துள்ளார்.  1.அறிவு  புரட்சி, 2.வேளாண் புரட்சி, 3.மனிதக் குல ஒருங்கிணைப்பு,  4.அறிவியல் புரட்சி.


 இப்பொழுது மட்டும் அல்ல... அறிவு புரட்சி தோன்றிய நாள் முதலே, அதாவது சுமார் 50000 ஆண்டுகளுக்கு முன்னாலே மனிதர்கள் இயற்கையையும், மற்ற உயிரினங்களையும் அழிக்கத் தொடங்கி விட்டார்கள். அது இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் சோகம்.  நெருப்பைப் பயன் படுத்த ஆரம்பித்த உடனே மனிதன் Food Chain லில் மற்ற உயிரினங்களை எல்லாம் தாண்டி முதல் இடம் வந்து விட்டான்.

நாம் வேளாண் புரட்சி பத்தி பெருமையா பேசிக்கொண்டு இருக்கிறோம் ஆனால் ஆசிரியர் வேளாண் புரட்சி மக்கள்தொகை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதற்கும், சொகுசான மேட்டுக்குடியினர் என்ற ஒரு புதிய பிரிவு உருவாவதற்கும் மட்டுமே அது வழிவகுத்தது என்கிறார்.

வம்பு (Gossip) பேசுவதில் நம்மிடம் இருந்த  ஆர்வம்தான் மொழிகள் உருவாகக் காரணம் என விளக்கமாக சொல்லியிருப்பது ஆச்சரியத்தை அளித்தது. பேரரசுகள் மற்றும் மதங்கள் உருவாக்கப்பட்டதே மனிதக் குல ஒருங்கிணைப்புக்குத் தான் என்பதைத் தெளிவாக விளக்குகிறார். ஒருங்கிணைக்கத் தோற்றுவிக்கப் பட்ட மதங்கள் இப்பொழுது மனிதக்குலத்தைப் பிளவு படுத்துவதுதான் மிகவும் வேதனை.

ஐரோப்பிய நாட்டினருக்கு முன்பே, பல நாட்டினர் கடல் வழி பயன்களை மேற்கொண்டு உள்ளனர் ஆனால் அவர்களின் நோக்கம் செல்லும் இடங்களை வெற்றி பெற்று செல்வங்களை எடுத்துச் செல்வதுதாக இருந்தது. 

ஆனால் ஐரோப்பியர்கள் அவர்களது பயணத்தில் ஆய்வுக் குழுக்களையும், அழைத்துச்சென்றனர். ஆய்வு செய்தல் (Discovery Concept) பிறகு வெற்றி கொள்ளுதல்... அவர்களின் ஆக்கிரமிப்புகளால் எவ்வாறு பூர்விகவாசிகள் பாதிக்க மற்றும் அழிக்கப்பட்டனர் என்பதைப் பார்க்கும் பொழுது பிரமிப்பாக உள்ளது.

Time Zone எப்படித் தொடங்கியது, முதலாளித்துவம் எப்படி நம் வாழ்க்கை முறையினை  மாற்றி உள்ளது... என்பதையெல்லாம் நாம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. 

மனிதர்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதையும் கூறியுள்ளார். சூப்பர் மனிதர்கள் தோன்றலாம்.  அவர்கள் நம்மை விட மிகவும் திறமைசாலியாக (Well Advanced) இருக்கலாம். அதற்கு ஆசிரியர் சொல்லும் காரணங்களைப் பார்க்கும்போது நடக்கலாம் என்றே தோன்றுகிறது.

இந்த புத்தகத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆனால் நீங்கள் வாசித்தால் மட்டுமே முழுமையாக  உணரமுடியும்.

இறுதியாக : 


முக்கியத்துவம் இல்லாத ஒரு விலங்காகத் தோன்றிய மனிதன் எப்படி படிப்படியாக வெவ்வேறு புரட்சிகள் மூலமாகத் தவிர்க்க முடியாத முதல் உயிரினமாக மாறினான் என்பதை விளக்குகிறது.  நான் வாசித்த புத்தகங்களில் ஒரு சிறந்த புத்தகம் எனக் கூறுவேன். எல்லோரும்  வாசிக்க வேண்டும் எனப் பரிந்துரையும் செய்வேன்.