Tuesday 21 April 2020

கள்ளிக்காட்டு இதிகாசம்




                கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து




  ஆனந்த விகடனில் தொடராக வந்த பொழுதே வாசிக்க முயற்சி செய்தேன். பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக வாசிக்க இயலாமல் போக இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன்.  இந்நாவலுக்கு  2003'ல்   சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அதனால் பலரது எதிர்மறையான, சிலரது நேர்மறையான விமர்சனங்களையும் ஒருங்கப்பெற்றது. 

 கள்ளிக்காட்டில் உழைப்பையும், வைராக்கியத்தையும் நம்பி வாழும் பெரியவர் பேய்த்தேவர் தன் உதிரத்தில் வந்த உறவுகளாலும், இறுதியில் அரசாங்கம் கட்டும் வைகை அணையாலும் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார், நசுக்கப்பட்டார் என்பதே நாவலின் கதை. வாழும் தன் மண்ணை நேசித்த அந்த ஜீவன் அம்மண்ணை விட்டுச் சென்றதா அல்லது மண்ணோடு சென்றதா என்பதுதான் முடிவு. 

 நாவலை முழுவதுமாக பேய்த்தேவரே ஆக்கிரமித்துள்ளார். நோய்வாய்ப்பட்டு கிடையிலிருக்கும் மனைவி அழகம்மா, திருமணத்தில் குறைவாய் செய்த நகைக்காக நடையாய் நடக்கும் மூத்தமகள் செல்லத்தாயி, சிறுதகறாறு ஒன்றின் காரணமாகக் கொலை செய்துவிட்டு கணவன் சிறைச் செல்வதால் தாய் வீட்டிற்குக் குழந்தையோடு திரும்பி வந்த இரண்டாவது மகள் மின்னல், ஊருக்கும் வீட்டுக்கும் அடங்காமல் அடாவடி செய்துகொண்டு அலையும் மகன் சின்னு, பேய்த்தேவரின் சின்னவயது Crush முருகாயி, அவரின் ஒரே ஆறுதல் மற்றும் நண்பர் வண்டிநாயக்கர், அவருக்கு எதிலும் ஒத்தாசையாகவிருக்கும் பேரன் மொக்கராசு எனக் கதாபாத்திரங்கள் இருந்தாலும் எல்லாமே பேய்த்தேவரை வைத்தே பின்னப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள கஷ்டம் எல்லாம் ஒருத்தருக்கே தொடர்ந்து வருவது போல் எடுத்துக் காண்போரை உணர்ச்சி மேலிட்டு அழவைக்கும் உத்தி பல சமயம் திரைப்படங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். நாவலிலும் அதே உத்தியையே வைரமுத்து பயன்படுத்தியிருப்பதால் கொஞ்சம் சினிமாத்தனமான கதையாகவும் அவ்வப்போது மனதில் தோன்றுகிறது. 

 பசுவுக்குப் பிரசவம் பார்ப்பது, பெண்ணுக்கு அக்காலத்தில் பிரசவம் பார்ப்பது, சாராயம் காய்ச்சுவது, பாடைக்கட்டுவது,  சுடுகாட்டில் பிணத்தை எரிப்பது, கோழிச்சாறு சமைப்பது என எக்கச்சக்க  நுண்விவரங்களை நாவல் முழுவதும் அனாசயமாக அள்ளித்தெளிக்கிறார். கிராமத்து எளிய மனிதர்களின் யதார்த்தமான வாழ்க்கையை அழகாகப் பிரதிபலித்துள்ளார் வைரமுத்து. எனினும் சில வர்ணனைகளில்  அவரின் திணிப்பும் செயற்கை தனமும் தலையைக் காட்டுகிறது. உரைநடை வார்த்தைகளில் அவரது கவிதைத்தனம் தோன்றினாலும், சில என்னை மிகக் கவரவும் செய்தது. உதாரணமாக "கள்ளிக்காட்டு விவசாய கலாச்சாரத்தில் கட்டில் உற்பத்தியில் மட்டுமல்லாமல் காட்டின் உற்பத்தியிலும் மனைவியின் வியர்வை விழுந்தாக வேண்டும்". 

 கள்ளிக்காட்டு இதிகாசம் பேய்த்தேவரின்  வாழ்க்கை போராட்டத்தை விவரித்தாலும் இறுதியில் வைகையில் புதிய அணை கட்டப்படுவதால் கள்ளிக்காடு என்ற கிராமத்துடன் மற்றும் சில கிராமங்களும் அழிவது, அதனால் கிராம மக்கள் குடும்பம் குடும்பமாகப் பல தலைமுறையாக வாழ்ந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்த  சோகம்தான் மையக் கருத்து.

இறுதியாக:

 நாவலின் முடிவு என் கண்களைக் கலங்க வைக்கவில்லை..  பொதுவாக வளர்ச்சி என்ற பெயரில் முன்னிறுத்தப்படும் பெரும் தொழிற்சாலைகள், அணைகள், விமான நிலையங்கள் போன்றவற்றால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் அப்பகுதி மக்களில் மனநிலையை, போராட்ட வலிகளைப் பிறபகுதிகளில் வாழும் மனிதர்கள் பொருட்படுத்துவதில்லை, அவர்களே அவற்றால் பாதிக்கும் வரை. ஏன்? அத்தகைய எதிர்ப்புகளை வெறுக்கவும் செய்கிறார்கள். நானும் அந்த மனநிலையைத்தான் பிரதிபலிக்கிறனோ??.  அதனால்தான் நாவலின் இறுதிப் பகுதி என் நெஞ்சில் வலியைத் தரவில்லையோ.. 


Tuesday 14 April 2020

சக்கரவர்த்தித் திருமகன் - இராமாயணம்




             சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம்)                                                  ராஜாஜி 



இந்தியர்கள்  அனைவருக்கும் பொதுவாக இதிகாசங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் கதைகள் விரிவாகவில்லை எனினும் சுருக்கமாவது தெரிந்திருக்கும்.  அக்கதைகளைத் தெரிந்து கொண்ட முறை வேண்டுமெனில் மாறுபட்டு இருக்கலாம்.  நான் சிறுவனாக இருந்த காலகட்டங்களில் இராமாயணம், மகாபாரதக் கதைகளை வில்லுப்பாட்டு, பாவைக்கூத்து மூலமாகவும், பெற்றோர் மற்றும் பெரியவர்கள் வாய்மொழியாகவும் கேட்டோம். சின்ன சின்ன சிறுவர் படக் கதைகளாகவும் வாசித்தோம். அதன் பின் டி.வியில் தொடராக வந்து பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டது. ஆனால் எத்தனை பேர் இந்த இதிகாசங்களை முழுநீள உரைநடையாக (நாவலாக) அல்லது செய்யுள்களாக (பாடல்களாக) வாசித்திருப்பார்கள் என்றால் மிகச் சொற்ப எண்ணிக்கையாகவே இருக்கும். 

      வால்மீகி  இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜாஜி தமிழில் எழுதிய இராமாயணம்தான் சக்ரவர்த்தித் திருமகன்.  பலரைப் போல் இவருக்கும் உத்தர காண்டத்தை வால்மீகி எழுதாமல் பிற்கால சேர்க்கை  என்ற சந்தேகம் இருந்ததால் அதை மட்டும் தவிர்த்து விட்டார். கல்கி வார இதழில் தொடராக 1955'ல் எழுதிய நாவல் இது. மணியம் வரைந்த ஓவியங்களோடு மீண்டும் 1992வில் தொடராக வந்த தொகுப்பு எங்கள் வீட்டிலிருந்தாலும் நான் ஒருபோதும் வாசிக்க நினைத்ததில்லை. திடீரென வாசிக்கக் காரணம் இறுதியில்.. மணியம் வரைந்த ஓவியங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் நாவல்கள்தான் வேண்டும் என எனது சகோதரர்கள் அலைந்தது எல்லாம் எனக்குத் தெரியும். ஏன்? ராஜாஜியே மணியம் வரைந்த ஓவியங்கள் கொண்ட நாவல்களைத் திருட்டுப் போகாமல் பத்திரமாகப் பாதுகாப்பதே பெரிய வேலை என நகைச்சுவையாகச் சொல்லியதுண்டு. ஆனால் எனக்கு அவரது மகன் மணியம் செல்வன் (ம செ) ஓவியங்கள்தான் all time favorite.  

 இராமாயணத்தின் கதைச் சுருக்கத்தைச் சொன்னால் எங்களுக்குத் தெரியாததா என எதிர்க்கேள்விகள் வந்து விடும். அதனால் சக்ரவர்த்தித் திருமகன் தந்த சில அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். இராமன், அயனம் என்னும் இரு சமஸ்கிருத சொற்களின் கூட்டுதான் இராமாயணம் என எத்தனைப் பேருக்குத் தெரியும். அயனம் என்றால் பயணம் என்று அர்த்தம் அதாவது  இராமனின் பயணம்தான் இராமாயணம். வால்மீகி ராமாயணத்தில் வரும் ராமன் புலால் உண்பான். அந்த காலத்தில் சத்திரியர்களின் குல வழக்கப்படி வேட்டையாடிய  மாமிச ஆகாரங்கள் அனைவரும் உண்டார்கள். இதனைக்  குறிப்பிடக் காரணம் இதற்கு முன்பு  யாரும் இதைச் சொல்லி நான் அறிந்திருக்கவில்லை. எல்லோரும் இயல்பாக உதாரணமாகக் கூறும் லட்சுமணன் கோட்டைப் பத்தி எதுவும் சொல்லவில்லை. அதைப்பற்றி  வால்மீகி எழுதவில்லையா அல்லது ராஜாஜி விட்டு விட்டாரா? அறிந்தவர்கள் கருத்துக்களில் சொல்லவும்.  என்னைப் பாதித்த இடம் வாலியின் வதம். வாசித்தபோது தெரிந்த முடிவுதான் எனினும் என் இதயம் மீண்டும் கனத்தது. ஆசிரியரும் வால்மீகி எழுதாத (தன்) கருத்துக்களையும் புகுத்தி என்னதான் சப்பைக்கட்டுக் கட்டினாலும்  வாலியின் வதத்திற்கான காரணம், முறையை என்னால் எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ள  முடிவதில்லை. 

   வால்மீகி இராமாயணத்துக்கும், கம்பராமாயணத்துக்கும் இடையிலுள்ள சில மாறுபாடுகளை  அவ்வப்போது சுட்டிக்காட்டி ராஜாஜி எழுதியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. வரிக்கு வரி வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்க்காமல் தனது கற்பனைகளைக் கதையின் கருச் சிதையாமல் புகுத்திக் கம்பர் தமிழில் இயற்றியுள்ளார் என்பது புலனாகிறது.  ஒரு சின்ன உதாரணம். வாலியின் மனைவி தாரையை அவனது வதத்திற்குப் பின் சுக்கிரீவன் மணந்து கொண்டான் என வால்மீகி ராமாயணத்திலும், தாரை விரதம் காத்து விதவையாகவும், ராஜ மாதாவாகவும் விளங்கினாள் எனக் கம்பராமாயணத்திலும் வருகிறது. வால்மீகி இராமாயணத்தைப் பொறுத்தவரை  இராமன் ஒரு வீரம் கொண்ட இராஜகுமாரன், அபூர்வமான தெய்வீக குணங்கள் பெற்றவன். ஆனால் கம்பராமாயணத்தில் இராமன் மகாவிஷ்ணுவே, கடவுளே, அனைத்திலும் பரவி நிற்கும் பரம்பொருளே எனப் பாடியிருக்கிறார்.  

   மொத்தத்தில் எளிமையான நடையில், அனைவருக்கும் புரியும் வகையில் ராஜாஜி இந்த இராமாயண உரைநடையை எழுதியுள்ளார். அவர் மகாபாரதத்தை வியாசர் விருது என்ற தலைப்பில் எழுதியுள்ளார். வாய்ப்புகள் அமைந்தால் அதனையும் வாசிக்க வேண்டும். 


இறுதியாக :

   சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நாவல்களின் பட்டியலைப் பார்த்த போது ராஜாஜி  எழுதிய இந்த  சக்ரவர்த்தித் திருமகனுக்கு 1958'ல் விருது கிடைத்துள்ளது. அதுதான்  இந்நாவலை வாசிக்க திடீர் தூண்டுதல். அப்படி என்னதான் புதுமையாக உள்ளது? விருது கிடைக்க என்ற பேரார்வம். ஆனால் வாசித்து முடித்தபின் இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தற்கெல்லாம் விருதா? அநியாயம். அவராவது பெரிய மனதோடு மறுத்திருந்திருக்கலாம். வால்மீகி, துளசி தாஸர் அல்லது கம்பனுக்குக் கொடுத்திருந்தால் நியாயம் இருக்கிறது. 

Sunday 5 April 2020

முற்றுகை / ஆகாயச் சிறகுகள்


                     முற்றுகை / ஆகாயச் சிறகுகள்
         
                                                மேலாண்மை பொன்னுச்சாமி


மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய இரு நாவல்கள் நான் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் கல்கி வார இதழில் தொடராக வந்தது.  நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற முற்றுகை நாவலை அப்பொழுது வாரம் வாரம் ஆவலாக வாசித்தேன். எங்கள் கல்லூரிக்கு ஒரு விழாவில் பங்கு கொள்ள வந்த மேலாண்மை பொன்னுச்சாமியிடம் அவரின் இந்த நாவல் பற்றிப் பேசியுள்ளேன். அது ரொம்ப விரிவான சந்திப்பு அல்ல . இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு 2007ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளது. அதையும் வாசிக்க நினைத்துள்ளேன். கல்கியில் வெளிவந்த அவரின் முற்றுகை மற்றும் ஆகாயச் சிறகுகள் நாவல்களை மீண்டும் இப்பொழுது வாசித்தேன்.


                                                       முற்றுகை 


   ஜமீன்தார் ராமானுஜத்தின் இறப்புக்குப் பின் அவரது பல பெண்களுடன் உறவு மற்றும் ஆடம்பரமான பழக்கத்தால் குடும்பம் நொடிந்து போய் விடுகிறது. மூத்தமகள் கிருஷ்ணம்மாளுக்குத் திருமணம் முடிந்துவிட இளையமகள் சொர்ணம் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து  தாயுடன் வாழுகிறாள். சொர்ணத்தின் அக்கா கணவன் நாராயணசாமி, அவளைத் திருமணம் செய்து கொண்டு அவள் பெயரில் உள்ள வீடு மற்றும் நிலங்களைக் கைப்பற்ற நினைக்கிறான். அழகும் கம்பீரமும் மிக்க அருஞ்சுனை, தான்  கூலி வேலை செய்யும் தீப்பெட்டி தொழிற்சாலை ஓனரின் அழகற்ற மகள் ரத்னத்தை மணந்து முதலாளி ஆகிறான். ரத்னத்தை மனதால் வெறுத்தாலும் ஒரு போலித்தனமாய், அன்பொழுக, பரவசமாவது போல் நடிக்கிறான். அவனது தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சொர்ணத்தின் அழகில் மயங்கி அவளை அடைய நினைக்கிறான். இதனிடையே சொர்ணம் தன் வீட்டில் முன்பு வேலைச் செய்த முனியசாமியின் பேரன்  பழநியிடம்  தன் அக்காள் கணவனின் முற்றுகையை உடைக்க  உதவிக் கேட்கிறாள். சிமெண்ட் தொழிற்சாலையின் யூனியன் லீடரான பழநிக்கும் அவள் மீது கொஞ்சம் ஈர்ப்பு  இருக்கிறது. இப்படியாக ஒவ்வொருவரும் சொர்ணத்தின் மீது முற்றுகையிட ,  தன் பிறப்பு மற்றும் அழகு குறித்தும்  நிறையவே கர்வம் கொண்டிருக்கும் சொர்ணம்  அவளின் அந்த மன முற்றுகையிலே வீழ்வதுதான் முடிவு.

சொர்ணத்தின் மீது மனதளவில் கொண்ட முற்றுகைக்கு ஒவ்வொருவரும் கொண்டுள்ள காரணம், மனிதன் எப்படியெல்லாம் தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறான் என்பதைப் படம் போட்டுக் காட்டுகிறது. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளால் மனதளவில் முற்றுகை இடப்பட்டவர்கள் வாழ்வில் ஆண்- பெண்ணிடையே சமவாழ்வுரிமைக்கு வழி இல்லை என்பதே இப்புதினத்தின் மைய இழையாகும்.



                                             ஆகாயச் சிறகுகள்


கமலஹாசனின் தீவிர ரசிகனான பால்ச்சாமி ஜனநாயக வாலிபர் சங்கத்தால் ஈர்க்கப் பட்டு அதில் தீவிரமாக இயங்குகிறான். இரண்டு வீட்டாருக்கும் முழுச் சம்மதம் இல்லாமல் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிரேமாவை மனம் முடிக்கிறான். கிராமத்துப் பெண்ணான பிரேமா இயல்பிலே கூச்ச சுபாவம் உடையவள். இதர ஆண்கள் முன்பு வர மனதில் பட படப்பு  அடைபவள். அவளையும் தான் இயங்கும் இயக்கத்தில் பங்கு கொள்ள வைக்க முயற்சி செய்கிறான் பால்ச்சாமி. அவனது எண்ணம் நிறைவேறியதா என்பதே நாவலில் முடிவு. 

இது ஆசிரியருக்குக் கொஞ்சம் சிக்கலான களம்தான் இது. சிறிதளவே தவறினாலும் நாவலின் நோக்கமே மாறிவிடும் அபாயம் உள்ளது. பெண்ணுரிமை, மக்களின் விடுதலையைப் பேசும் கதாநாயகன் தன் மனைவியை வற்புறுத்தி அவளின் சம்மதம் இல்லாமலே தனது விருப்பம் போல் ஆட்டிவைப்பது போல் எதிர்மறையாக மாறிவிடும்.

இறுதியாக :

இரண்டுமே சிறிய நாவல்கள்தான். அனைவரும் எளிமையாக வாசிக்கும் வடிவில், நடையில் உள்ளது. மேலாண்மை பொன்னுச்சாமி மார்க்ஸிய கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். அவருடைய எழுத்துகளிலும் அதன் தாக்கம் தெரிகிறது. நாவல்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் அந்த நிலைப்பாட்டை ஒட்டி வலம் வந்து விடுகிறது.