Monday 20 December 2021

சாயாவனம்

 

                           சாயாவனம் - சா. கந்தசாமி 


         சா. கந்தசாமியின் முதல்  நாவலான சாயாவனம் நாவலைத்தான்  வாசிக்க ஆர்வமாயிருந்தேன். ஆனால் அவரின்  சாகித்ய அகாடமி விருது பெற்ற விசாரணைக் கமிஷன் நாவல் கிடைக்கவே அதனை வாசித்து என்  எண்ணங்களை எழுதினேன். சாயவனம் பலராலும்  பாராட்டப்பட்ட நாவல்.  

                        1968'ல் எழுதப்பட்ட இந்த நாவலானது இயற்கை மற்றும் சூழியல் சார்ந்து தமிழில் வந்த முதல் நாவலாகப் பார்க்கப்படுகிறது. 1906 காலகட்டத்தில் சாயாவனம் என்கிற ஊருக்குக் கரும்பாலையை நிறுவும் எண்ணத்தோடு வருகிறான் சிறுவயதிலே தாயோடு இலங்கைக்குச் சென்ற சிதம்பரம். அதற்காக மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தை  விலைகொடுத்து வாங்கி, அங்குள்ள மரங்களை வெட்டியும், தீவைத்து அழித்தும் ஆலையைக் கட்டுகிறான். இயற்கையறிவும், நிதான குணமும் கொண்ட சிவனாண்டி தேவருக்கு, சாம்பமூர்த்தி ஐயர் காட்டை சிதம்பரத்துக்கு விற்றது பிடிக்கவில்லை  ஆனால் தன்னுடைய இலக்கை நோக்கிய பயணத்திற்குத் திறமையாக அவரையும் பயன்படுத்திக் கொள்கிறான் சிதம்பரம்.  தனிமனிதன் ஒருவனின் பேராசையால் ஒரு வனம் எவ்வாறெல்லாம் உயிருடன் வதைக்கப்பட்டது என்பதைப்  பேசுகிறது சாயவனம் நாவல். 

                      செல்லும் பாதையில் கொஞ்சம் நகர்ந்தாலும் பிரச்சார நெடி அடித்துவிடும் அபாயமுள்ள கதைக்கரு. அந்த வனத்திற்குள் இருக்கும் சிறு புல்லில் தொடங்கி வானுயர்ந்த மரங்கள் வரை அனைத்து தாவரங்களின் பெயர்களையும் அதன் குணாதிசயங்களையும்  நுணுக்கமாக விவரிக்கப் பட்டிருப்பது  நாவலுக்கு உயிர்ப்பு தன்மையைக் கொடுக்கிறது. சாயவனம் நாவலின் சிறப்பம்சமே சா. கந்தசாமி, ஒரு ஆசிரியரின் கருத்துகளாகவோ அல்லது ஏதேனும் ஒரு கதைமாந்தரின் மூலமாகவோ இயற்கையை இந்த மனிதர்கள் இப்படி இரக்கமின்றிச் சிதைக்கிறார்களே என்று தன் ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொல்வதேயில்லை.  சிதம்பரம் காட்டை அழிக்கச் செயல்படுத்தும் திட்டங்களை விவரித்து எழுதி வாசிக்கும் வாசகன் மனதில் காடுகள் அழிக்கப் படுவதின் தீவிரத்தை உணர்த்துகிறார். 

                         இறுதியில் புளி கேட்கும்  ஒரு ஆச்சியிடம் " பார்த்து நல்ல புளியாக அனுப்புகிறேன் "  எனச் சிதம்பரம் சொல்ல,  அதற்கு அந்த ஆச்சி 

"அதான் எல்லாத்தியும் கருக்கிட்டியே! இன்னமெ எங்கிருந்து அனுப்பப்  போற?"

அப்பொழுது, அவனுக்குள் ஒரு கலக்கம் வந்துவிடுவதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் கந்தசாமி. அந்த உணர்வு நமக்குள்ளும் படர்ந்து விடுவதைத் தவிக்க முடியாது. நாவலின் இறுதியில் வரும் குஞ்சமாளின் மகள் திருமணம் விஸ்தாரமாகச் சொல்லப்படுகிறது. அதைத் தவிர நாவல் முழுவதும் தோட்டம் அழிக்கப்படும் நிகழ்வுகளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த ஒற்றைக் கோட்டிலே நாவல் செல்வது சற்று அயற்சியைச் சிலருக்குக் கொடுக்கலாம். 

              மனிதன் காடுகளை அழித்து சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை உண்டாக்கியதால், பலவித இயற்கை அழிவுகளை நாம் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறோம் எனப் பலராலும் இப்பொழுது பேசப்படுகிறது. மிகப்பெரிய விழிப்புணர்வு இல்லாத அந்தக்  காலத்தில் இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சாயவனம், இன்றையச் சூழ்நிலையில் மிகுந்த முக்கியத்துவத்தைப்  பெறுவதோடு,  பொருத்தமான வாசிப்பு அனுபவத்தையும் தருகிறது. 

இறுதியாக :

     தன் சுயநலத்திற்காக மனிதன் எவ்வாறெல்லாம் இயற்கையைச் சீரழிக்கிறான் என்பதற்கான உதாரணங்களை நம் கண்முன்பே பல நடக்கின்றது. என்ன  ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கான காரணங்கள் மற்றும் எது சீரழிப்பு என்கிற வரையறையும் மாறுபடுகிறது. எப்பொழுது மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கினானோ அதில் தொடங்கியது இந்த பயணம்.