Sunday 14 February 2021

ஒரு கடலோர கிராமத்தின் கதை

 

          ஒரு கடலோர கிராமத்தின் கதை

                                                                 தோப்பில் முஹம்மது மீரான்


     பலமுறை வாசிக்க நினைத்த நாவல். தோப்பில் முஹம்மது மீரான் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அவரின் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சியம் கிடையாது. ஒரு கடலோர கிராமத்தின் கதை அவரின் முதல் நாவல். 1988'ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. பிற சமயத்தைச் சார்ந்த மக்களின் சமூக வாழ்க்கையைப் பிரதிபலித்த நாவல்களை நான் அதிகம் வாசித்ததில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாசித்த ஒரு கடலோர கிராமத்தில் நடக்கும் கதை. வட்டார, சமூக வழக்குச் சொற்கள் நாவல் முழுவதும் விரவிக்கிடந்தாலும் எனக்குக் கொஞ்சம் கேட்ட வார்த்தைகள் என்பதால் எங்கும் தடைப்படாத வாசிப்பனுபவத்தை  அது அளித்தது. 

               மூடநம்பிக்கைகள் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அந்த கிராமத்தின் அதிகார பலமிக்க முதலாளி வடக்கு வீட்டு அகமதுக் கண்ணு. தன்னுடைய அதிகாரத்தையும், போலி கவுரவத்தையும் தக்க வைக்க எதையும் செய்யத் துணிபவர். அனைத்திலும் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்த வேண்டும், தனக்கே எதிலும் முதல் மரியாதை செலுத்த வேண்டும் என்னும் அதிகாரப் பலத்தின் அழிவே ஒரு கடலோர கிராமத்தின் கதை. சுறாப்பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூத் முதலில் அவரை எதிர்த்துப் பேசுகிறான். அகமதுக் கண்ணுவின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட மறுக்கிறான். ஆங்கில அரசாங்கம் பள்ளிக்கூடத்தை அந்த ஊரில் நிறுவ முயற்சி செய்ய அதற்கு இடம் தர மறுப்பதோடு எதிர்ப்பும் தெரிவிக்கிறார் முதலாளி. அறியாமையின் இருள் அகல வேண்டுமெனில் கல்வி அறிவு மிகவும் அவசியம் அதற்கு இங்குப் பள்ளி அமைவது இன்றியமையாதது. அதனால் தன் மகளின் திருமண செலவிற்காக வைத்திருக்கும் தன் நிலத்தைப் பள்ளிக்கூடம் கட்ட தானமாகக் கொடுக்கிறான்  மஹ்மூத். இதனால் மிகுந்த கோபம் கொள்ளும் முதலாளி அவனைப் பழிவாங்கச் செய்யும் முயற்சிகள் வெற்றி பெற்றதா? தன்னுடைய அதிகார பலத்தைத் தக்கவைத்தாரா என்பதே நாவலில் முடிவு.

               அகமதுக் கண்ணுவின் மகள் ஆயிஷா, இளம் வயதில் கணவனை இழந்த அவரது சகோதரி நூஹு பாத்திமா, அவளின் மனவளர்ச்சியில்லாத மகன் பரீது, மோதினார் அசனார் லெப்பை, நியாயவிலைக்கடை நடத்தும் உஸன்பிள்ளை, பள்ளியை நடத்தக் கிராம மக்கள் செய்யும் இடையூறுகளைக் கண்டும் மனம் தளராத பள்ளிகூட ஆசிரியர் மெஹபூப்கான், அவரின் மனைவி நூர்ஜஹான் என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கால ஒரு இஸ்லாமியக் கிராமத்து நிகழ்வை நம் கண்முன்னே காட்சிகளாய் பதிவுசெய்துள்ளார் முஹம்மது மீரான் தன் எழுத்துகளால். தன் அத்தை மகன் பரீது மேல் உள்ள ஈர்ப்பை வெளிப்படுத்துவதை எழுதியவிதம் அருமை. நாவலில் பொறாமை, அதிகார துஷ்பிரயோகம், வன்மம், பழிவாங்கல், காதல், கோபம், அறியாமை என அனைத்தும் மிகையில்லாமல் யதார்த்தமாக உள்ளது. 

           இஸ்லாமிய மக்களின் வாழ்வியலில் உள்ள நம்மில் பலருக்குத் தெரியாத பிரச்சினைகளை வெளி உலகுக்கு ஒரு கடலோர கிராமம் நாவலின் வழியாக பதிவுசெய்கிறார் தோப்பில் முஹம்மது மீரான். ஆயிஷா, நூஹு பாத்திமா இருவரின் பாத்திரப்படைப்பு உங்களின் மனதை வெகுநேரம் அலைக்கழிக்க வைக்கலாம். மதத்தின் பெயரால் சிலர் மக்களின் அறியாமையை எவ்வாறெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைச் சித்தரிக்கிறார். அதனால் நாவலுக்கு அப்பொழுது எதிர்ப்பும் கிளம்பியதாக அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மிகவும் பொறுப்பான முறையில் தனது சமூகத்தின் மேலிருந்த அக்கறையினால் அதன் குறைபாடுகளைக் களையும் நோக்கில் எழுதப்பட்ட படைப்பாகவே ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலைப் பார்க்கமுடிகிறது. வெறும் சீர்திருத்தப் பிரச்சாரமாக இல்லாமல் அன்றைய இஸ்லாம் சமூகம் குறித்த ஒரு எதார்த்தத்தை சித்தரித்ததின் மூலம் தமிழில் நீங்கள் வாசிக்கத் தவிக்கமுடியாத நாவலாக இருக்கிறது.

இறுதியாக :

              ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற பெயரைக் கேட்டவுடன் கடல் சார்ந்த மீனவர்களைப் பற்றிய கதையாக இருக்கும் என எண்ணியே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாகக் கதை பயணிக்கத் தொடங்கியது. தமிழில் இதுபோல் வேறு சமூகத்தினரின் கலாச்சாரம், சடங்குகளைப் பேசும் தமிழ் நாவல்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால்  கருத்துக்கள் பகுதியில் தெரிவிக்கவும். அதனையும் வாசிக்க முயற்சி செய்கிறேன்.