Wednesday 20 May 2020

குற்றப் பரம்பரை



         குற்றப் பரம்பரை - வேல  ராமமூர்த்தி



காவல் கோட்டத்தை அடுத்துக் குற்றப் பரம்பரை நாவலை வாசிப்பதா அல்லது வேறு நாவலா எனக் குழப்பம். இரு நாவல்களும் பேசும் கதையின் மையக்கரு கொஞ்சம் ஒத்திருப்பதால் மனதில் மலரும் ஒப்பீடுகளைத் தவிக்கத்தான்😊. கள்ளர் இனக்குழுவின் வாழ்வியலைப் பேசுவதுதான் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை. கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் ஜூனியர் விகடனில் (2007) தொடராக வந்துள்ளது. 

தங்களை அழிக்க நினைக்கும் (அரசாங்க) குதிரைப்படையால் விரட்டப்படுகையில் பலரை இழந்து, வேலுச்சாமி தன் கூட்டத்தினருடன் சம்பங்கி ஆற்றைக் கடந்து ஓடுகிறான். ஆற்றை நோக்கி ஓடுகையில் அவரது மூத்தமகன் சேது வழி தவறி  குதிரை வீரர்களிடம் அகப்பட்டுக் கொள்கிறான். பெரும்பச்சேரியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சிறுவன் வையத்துரை உதவியால் முள்ளுக்காட்டுக்குள் உள்ளே உள்ள கொம்பூதி என்ற மலைக்கிராமத்தில் குடியமர்கிறார்கள். வேலுச்சாமி பலதரப்பு மக்களாலும் மதிக்கப்படும் நபராக மாறி வேயன்னா என்று மரியாதையாக  அழைக்கப்படுகிறார். வளர்ந்து விட்ட அவரின் இரண்டாவது மகன் வில்லாயுதமும், வையத்துரையும் அவர்களுடன் இணைந்து களவு தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். களவில் கிடைக்கும் பொருட்களை பெருநாழி கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்துவிடம் கொடுத்து ஈடாக உணவுத்தானியங்களைப் பெறுகிறார்கள். 

பெரும்பச்சேரி காரணமாக பெருநாழி மற்றும் கொம்பூதிகளுக்கிடையே புகைச்சல் வரும் நேரத்தில் கொம்பூதி கள்ளர்களை அடக்க  அரசாங்கம் கச்சேரியை (போலீஸ் ஸ்டேஷன்) பெருநாழியில் அமைக்கிறது. முதல் இன்ஸ்பெக்டர் வெள்ளைக்கார விக்டரை வேயன்னாவின் கூட்டம் ஊரை விட்டே துரத்துகிறது. கொம்பூதி கள்வர் இனத்தை அழித்தே தீருவேன் என்ற சூளுரையுடன் குற்றப் பரம்பரை சட்டத்தை அமல்படுத்த முயலும் இன்ஸ்பெக்டர் பகதூரை உலகத்தை விட்டே துரத்துகிறார்கள். வெள்ளைக்கார (வளர்ப்பு) பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட அவரது மூத்த மகன் சேது புதிய இன்ஸ்பெக்டராக பதவியேற்கக் காட்சிகள் திசைமாறுகிறது. இனிமேல் களவு செய்யக்கூடாது என வேயன்னாவிடம் சத்தியம் வாங்குகிறான் சேது. களவுகள் நடக்காததால் பாதிக்கப்படும் பச்சமுத்து சூழ்ச்சிகள் செய்து கலவரத்தைத் தூண்டுகிறான். அதனால் சேது மற்றும் போலீஸ் அதிகாரிகள் எடுத்த தீர்மானங்கள் என்ன? வேயன்னாவுக்கு என்ன நடந்தது? என்பதுதான் நாவலின் முடிவு. 

இக்கதைக்கு நடுநடுவே வரும் வைரப் புதையலைத் தேடும் நாகமுனி, அதற்காக அவன் நரபலி கொடுக்க வளர்க்கும் அழகுப் பதுமை வஜ்ராயினி, அவளைக் காட்டில் பாதுகாக்கும் ஹசார் தினார், வஜ்ராயினி மீது காதல் கொள்ளும் வேயன்னாவின் புதல்வன் வில்லாயுதம் என்று வளரும்  Fantasy கிளைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் மூலக்கதையின் நோக்கத்தைச் சிதைக்கும் திணிப்பாகத் தோன்றியது. 

வேல ராமமூர்த்தியின் கதை சொல்லும் பாங்கு நாவலை விறுவிறுப்பாகச் சிறிதும் தொய்வின்றி கொண்டுசெல்லுகிறது. வேயன்னாவை சாதி வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்ப்பவராக, நியாயத்திற்குக் கட்டப்பட்டவராக, பிறர்பால் பரிவு கொண்டு உதபுவராக, வேற்றூர் மக்களும் மதிக்கும் ஒரு பெரிய மனிதனாகச் சித்தரிக்கிறார். களவை அவ்வின மக்கள் தவறான செய்கையாக நினைக்காமல் தங்களது குலத்தொழிலாக எண்ணுகின்றனர். இந்த நாவலும் களவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை சிறிதும் பேசாமல் கள்வர்களின் வீரத்தை மட்டுமே சிகாலித்து எழுதியிருப்பது கொஞ்சம் உறுத்தல்தான். 

நாவலோடு பயணிக்கும்போது சந்திக்கும் கதைமாந்தர்களான வேயன்னாவின் அம்மா கூழானிக் கிழவி, சிட்டு, அன்னமயில், கிழட்டுப் போலிஸ், இருளாயி, கழுவன், துருவன், விசக்குட்டை நாவலை வாசித்து முடிந்த பின்பும் மனதில் தாக்கத்தைத் தருகிறார்கள். அம்மக்கள் புறத்தோற்றத்தில் கரடுமுரடாகத் தோன்றினாலும் அகத்தோற்றத்தில் மாசற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையே யதார்த்தமாகக் கூறுகிறார்.

கதையிலுள்ள சில லாஜிக் மீறல்களை விமர்சனத்தில் சுட்டிக்காட்ட நினைத்திருந்தேன்.

"டேய் வையத்துரை, உள்ளே வாடா...." கிழட்டு போலிஸ் இளக்காரமாக அழைக்கவும், "ஏய்... முட்டாள் கிழவா... !  அறிவிருக்கிறதா உனக்கு? கச்சேரிக்கு யார் வந்தாலும் மரியாதையாகப் பேசு" எனச் சேது சீற்றத்தோடு கூறுகிறான்.  

முரண்பாடு உங்களுக்கே புரிந்திருக்கும். கதையின் இறுதி நிகழ்வுகள் கொஞ்சம் சினிமாத்தனமாக நகர்ந்தாலும் எளியநடையிலான நல்லதொரு நாவலை வாசித்த திருப்தியே விஞ்சியதால் அவற்றினை தவிர்த்துவிட்டேன்.

இறுதியாக:

 குற்றப் பரம்பரையை யார் திரைப்படமாக எடுப்பது எனப் பாலாவும், பாரதிராஜாவும் குடுமிப்பிடி சண்டையிட்டது😤 உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அந்த சமயத்தில் வேல ராமமூர்த்தி எழுதிய இந்நாவலை அடிப்படையாகக் கொண்டுதான் பாலாவின் குற்றப் பரம்பரை திரைப்படம் வருவதாக அறிவிக்கப்பட்டது.

Saturday 9 May 2020

காவல் கோட்டம்



                காவல் கோட்டம் - சு வெங்கடேசன்



சாகித்ய அகாடமி விருதை 2011'ஆம் ஆண்டு பெற்றதால் பலரின் கவனத்தை ஈர்த்த நாவல். எனது சகோதரர் வாசித்துவிட்டு அவரே நாவலையும் தந்து பரிந்துரைத்தார். புத்தகத்தின் தடிமனைப் பார்த்துவிட்டு வாசிக்க சிறுத் தயக்கம் எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத நாவலாசிரியர் என்பதால். பெரிய நாவல்களைத் தொடர்ச்சியாக வாசிக்க ஒரு நீண்ட உற்சாகம் தேவை. இல்லையெனில் அயர்ச்சியைத்  தந்து அப்புத்தகத்தைத் தொடவே மனமில்லாமல் செய்துவிடும். 

நான் மானுடம் வெல்லும்  விமர்சனத்தில் கூறியது போல் கல்கி, சாண்டில்யன் போன்றவர்கள் எழுதிய சரித்திர நாவல்கள் சில வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நிறையக் கற்பனையுடன் ஜனரஞ்சகமாக எழுதப்பட்டவை. ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்து வரலாற்றைத் தெரிந்துகொள்ள மிகுந்த  பொறுமையும், ஆர்வமும் தேவை. அதனை எளிமையாக்கும் விதமாக அவற்றில் சாத்தியமான சில துணைக் கதாபாத்திரங்களை நுட்பமாகச் சேர்த்து ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றின் பக்கங்கள் சிதையாமல் எழுதப்படும் சரித்திர புதினங்களின் வரிசையில் வருவதுதான்  சு.வெங்கடேசன் எழுதியுள்ள காவல் கோட்டம்.    

மாலிக்காபூரின் தென்னக படையெடுப்பில் ஆர்ப்பாட்டமாகத் தொடங்கும் நாவல் அடுத்த அத்தியாயத்திலே விஜயநகர மன்னன் குமார கம்பணனின் மதுரை முற்றுகைக்குள் நுழைந்து விடுகிறது. அவனால் மதுரை மீனாட்சியம்மன் மீண்டும் தன் குடிக்குள் (கோவிலுக்குள்) திரும்புகிறாள். மதுரா விஜயத்தின் தொடர்ச்சியாக நாயக்கர்களின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார். நான் வாசித்து விமர்சனம் எழுதியுள்ள அகிலனின் வெற்றித் திருநகர் நாவல், கிருஷ்ணதேவராயர் மற்றும் விஸ்வநாத நாயக்கர் கதை என்பதால் எனக்கு வாசிக்க எளிமையாக இருந்தது. தாதனூர் கள்வர்களின் களவுத் திறனில் மெச்சிய திருமலை நாயக்கர், மதுரையை காவல்காக்கும் உரிமையை அவர்களுக்குத் தருகிறார். நாயக்கர்களின் அரசு வீழ்ச்சியற்ற பின் ஆதிக்கம் செலுத்தும் பிரிட்டிஷ் அரசாங்கம் பல ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நகரக்காவல் முறையை ஒழித்து, போலீஸ், நீதிமன்ற நிர்வாக முறையைப் புகுத்த முயல்கிறது. அதனால் தாதனூர்காரர்களுடன் மூளும் மோதல்களைக் குற்றப் பரம்பரை சட்டங்களைப் பயன்படுத்தி எவ்வாறெல்லாம் ஒடுக்கினார்கள் என்பதே நாவலில் முடிவு. 

நாவலைப்பற்றிய எனது பார்வையை எழுதுவதற்கு முன்பு ஆசிரியர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள். சுமார் 600 ஆண்டுகளின் வரலாற்றைத் தொகுத்து எழுதுவது சாதாரணமான காரியமல்ல. இதற்காக அவர் பத்தாண்டுகள் உழைத்ததாகக் கூறியுள்ளார். அந்த உழைப்பு நாவலின் ஒவ்வொரு சமூகவியல் நுட்பங்களிலும் வெளிப்பட்டு மலைக்கவைத்தது. 

நாவலின் முதல் 350 பக்கங்கள் நாயக்கர்கள் காலத்தின் வரலாற்றைப் பேசுகிறது. இறுதியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்துக் கதை கொஞ்சம் அயர்வைத் தந்தாலும்  பொதுவாக மிகவும் ரசித்து வாசித்தேன். சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட நாயக்கர்களின் வரலாற்றை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. ஏன்? பள்ளி வரலாற்று பாடபுத்தகங்களிலும் அவை விரிவாக வருவதில்லை. இதன் காரணங்களைப் பற்றிப் பேசினால் விமர்சனத்தின் போக்கே மாறிவிடும். சரித்திரக்கதைகளை வாசிக்கும் போது அக்காலகட்டத்தின் விவரங்களை நாவலுக்கு வெளியிலும் தேடித் தேடி வாசிக்கும் (கெட்ட*) பழக்கம் எனக்கு உண்டு. (*கெட்ட-- தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பிறரிடம் காட்டிக்கொள்ளவே இந்த தேடுதல்கள் - என்மீது சுமத்தப்படும் விமர்சனம்😢). திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பெயர்க்காரணம், காந்திமதி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தைக் கட்டியது யார், பாளையக்காரர்கள் உருவாக்கப்பட்ட வரலாறு, ராணி மங்கம்மாவின் இறுதிக் கணங்கள், குமாரசாமி நாயக்கன் ஏன் ஊமைத்துரை ஆனான் உட்பட ஏராளமான தகவல்களைத் தெரிந்துகொண்டேன். மொகலாயர்களின் காலத்தில்தான் ஆட்சி மாற்றங்கள் சுமுகமாக நடந்ததில்லை என நம் மனதில் பதிய வைக்கப்படுகிறது. ஆனால் எக்காலத்திலும்  ஆட்சி மாற்றங்கள் சதி, துரோகங்களால் குழப்பங்களிலே நடந்துள்ளன.

இரண்டாம் பகுதிதான் நாவலின் அடிநாதமான காவல் தொழில் செய்த கள்ளர்களின் வாழ்க்கையை மற்றும் வீழ்ச்சியைப் பிரதானமாகப் பேசுகிறது கொஞ்சம் மெதுவாக. பிரிட்டிஷ்  அரசின் நேரடி ஆளுமைக்குக் கீழ்  மதுரை வந்தவுடன் அதன் கலெக்டராக வரும் பிளாக்பர்ன், நகரின் விஸ்தரிப்பைக் காரணம் காட்டி மதுரைக் கோட்டையை இடிக்கிறார். பின் அரசு சார்பில் நகரின் முதல் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படுகிறது. கோட்டை இடிப்புக்கு அவர் பயன்படுத்தும் உத்தி, போலிஸ் ஸ்டேஷன் அமைந்த பின் அதனைப்பற்றிய மக்களின் மனநிலையை அருமையாகச் சித்தரித்துள்ளார். போலீஸ் ஸ்டேஷன் வந்ததிலிருந்தே தாதனூர் மக்களின் நகர் காவலுக்குச் சிக்கல் தொடங்கிவிடுகிறது. தாது வருடத்தில் மதுரை சந்திக்கும் கடும் பஞ்சம் மற்றும் கொள்ளைநோயால் நிறைய உயிர்ச்சேதம் நிகழ்கிறது. பஞ்சத்தின் கோரதாண்டவத்தை மொழிநடையால் நம் கண்முன்னே நிறுத்துகிறார். பலமுறை தடைப்பட்ட முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிமுடித்துப் பல ஊர்களில் வேளாண்மையை அதிகப்படுத்துகிறார்கள். புதியதாக மதுரைக்கு வரும் கலெக்டர் தாதனூர்க்காரர்களின் காவல் உரிமை ரத்து செய்யப்பட்டதைத் தீவிரமாக அமல்படுத்த, சிலர் வேறுவழியின்றி மதுரையைச் சுற்றியுள்ள வெளி கிராமங்களின் காவலைப் பிடிக்கிறார்கள். எதிர்த்தவர்கள் சிறைப் படுத்தப்படுகிறார்கள் அல்லது சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அரசாங்கம் தாதனூருக்கு ரோடு அமைத்து அருகிலே ஒரு சிறைச்சாலையையும் கட்டுகிறது. குற்றப் பரம்பரை சட்டம் அமல்படுத்தப்பட்டு அனைவரின் கைரேகைகளும் பதிவு செய்யப்படுகின்றன. அவர்களில் மனோபலத்தைச் சிதைக்கவும், இயக்கங்களைக் கட்டுப்படுத்தவும் தினசரி பலமுறை ஆஜராக உத்தரவிடப்பட்டு மீறுபவர்கள் சித்தரவதை அனுபவிக்கிறார்கள்.

காவல் உரிமை கிடைத்தாலும்  தாதனூர் மக்கள் அனைவரும் அதனை மட்டுமே செய்வதில்லை. பல குழுக்கள் (கொத்து) களவு தொழிலையும் தொடர்ந்து செய்துவந்தன. காவல் கூலியைத் தர மறுப்பவர்களின் இடங்கள், பிற ஊரின் காவல்கட்டுபாட்டில் வரும் பகுதிகள், காவலில்லாத பகுதிகளில் அவர்களின் களவு தொழிலும் தொடர்ந்தது. ஏன் ரயில்லேறிச் சென்று தூரத்து ஊர்களிலும் களவுச் செய்கின்றனர். சில நேரங்களில் காவலை விடக் கள்வரின் வாழ்க்கைதான் அழகியல் நோக்கோடு காட்டப்பட்டு களவை நியாயப்படுத்த முயல்கிறதோ எனத் தோன்றியது. களவுகளால் பாதிக்கப்படுபவர்களின் வலியை, மனநிலையை இன்னும் ஆழமாகக் கையாண்டிருந்தால் இந்த உணர்வு தோன்றாமல் இருந்திருக்கலாம்.  சில இடங்களில் நாவல் கொஞ்சம் வழி மாறிப் போய் நெற்கதிர் கசக்குவது, மாடு, ஆடு திருடுவது போன்ற களவின் தகவல்களே திரும்பத்திரும்ப வருவது அலுப்பைத் தந்தது. அதுவும் இறுதியில் வரும் குரங்குகளைப் பிடித்து வரும் களவு, அமணமலையில் அமர்ந்து ஆட்டுக்கறி சுட்டுச் சாப்பிடுவதெல்லாம் தேவையற்ற தகவல்களின் திணிப்பாகத் தோன்றியது.

பெண் கதாபாத்திரங்களைப் படைத்த விதத்தில் ஆசிரியர் உயர்ந்து நிற்கிறார்கள். நாவலே சடச்சியின் பிள்ளைகள் (வழித்தோன்றல்கள்) பற்றித்தானே. அதுவும் கங்காதேவி பாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் ultimate. அதற்காகவே இரண்டாம் அத்தியாயத்தை சில முறை வாசித்தேன். பஞ்சகாலத்தில் எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி மக்களின் பசி தீர்த்த தாசி குலப்பெண் குஞ்சரத்தம்மாள், தன் இனமக்களை வதைக்கும் வெள்ளைக்கார காவலனைக் கொலை செய்யும் வீராயி, வெள்ளைக்காரனைக் கழுத்திலே கடித்துக் கொல்லும் அங்கம்மா கிழவி எனக் கள்ளர் குலப்பெண்களின் உக்கிரத்தையும் பதிவுசெய்கிறார். ஆனால் கள்வர் இனத்தில் ஏற்படும் இழப்புகளின்போது அவர்களைச் சார்ந்துள்ள குடும்பத்தினர் படும் துயரம், எதிர்கொண்ட விதம் மற்றும் மனவோட்டத்தை சொல்ல முயலவேயில்லை. 

மாயாண்டி பெரியாம்பிளைத் தவிரப் பிற துணைக் கதாபாத்திரங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவில் அழுத்தமாகப் படைக்கப்படவில்லை. படிப்படியாக வளர்ந்து விரியும் காலளவுகளைக் கொண்ட நாவலில் அதுபோல் பாத்திரங்களைக் கட்டமைப்பது எளிதுமல்ல. கள்ளர் இனத்தில் பிறந்து மிஷனரி பள்ளியில் படித்து போதகராக மாறும் டேவிட் சாம்ராஜ் பாத்திரம் இன்னும் தெளிவோடு படைக்கப்பட்டிருக்கலாம். இரவை தொழிற்களமாக்கி புரியும் காவலையும், களவையும் இரு கண்களாகக் கொண்ட ஒரு சமூகத்தின் இந்நாவலை நீங்கள் ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும் ஏதேனும் புதிய தகவலோ, வரலாற்று உண்மையோ தெரியவந்து மலைப்பையும் பிரமிப்பையும் தரலாம்.

இறுதியாக:

தாதனூர் பெரியாம்பிள ஒச்சு போலீஸ்காரரை நோக்கி "எங்களுக்கு திருமலை நாயக்கர் கொடுத்த காவடா" என சீறுகிறார். இந்த ஒரு சொல்லுக்காகத்தான் நாயக்கர் காலத்திலிருந்து நாவலை ஆரம்பித்துள்ளார் போலும். வாசிக்கும் போது புத்தகத்தின் சுமைத் தாங்காமல் (Hard Cover)  கை வலித்து சிரமமாக இருந்தது. ஆனால் இரண்டு பாகங்களாக வெளியிட்டிருந்தால் தனித்தனி நாவலாக மாறிவிடும் அபாயமுள்ளது 😀. இந்த நாவலின் சில பக்கங்களை மையைப்படுத்தி எடுக்கப்பட்டதுதான் அரவான் திரைப்படம்.

Friday 1 May 2020

சொ. க - 1. பால்கனி தேவதைகள்



                                      பால்கனி தேவதைகள் 
  

நான் எழுதிய நாவல்களின் விமர்சனங்களை வாசித்துவிட்டு நீங்களே கதை/நாவல் எழுதுங்களேன் என நிறைய (கொஞ்சம் என்று உண்மையைச் சொன்னால் நன்றாக இருக்காதே😀) அன்புத்தொல்லைகள். நாமும் எதாவது எழுதலாம் எனக் கற்பனைக் குதிரையைத் தட்டிப்பார்த்தால் அது கொரோனா வைரஸ்க்கு பயந்து வெளியே குதிக்க மாட்டேங்குது. சரி சொந்த கதைகளை எழுதுவோம் என யோசித்துப்பார்த்தால்,  நல்ல பையன் (நான்தான் 🙋) வாழ்க்கையில் பொதுவாகச் சுவாரசியமான சம்பவங்களே நிகழ்வதில்லை போலும்.

நமது வாழ்க்கையில் வீட்டை விட்டு தனியாக நண்பர்களுடன் சேர்ந்து வசிப்பதென்பது ஒரு  இனிமையான அனுபவம்தான். அதிலும் வேலையில் சேர்ந்த பின் கொஞ்சம் financial stability யிருப்பதால் சுதந்திரப்பறவையாகவே எண்ணிப்பறப்போம். குஜராத்தில் எங்களது வீட்டிலிருந்த நான்குபேரும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி என வெவ்வேறு மாவட்டம்.  என்னதான் ஒற்றுமையைப் பத்தி வாய்கிழியப் பேசினாலும், படித்தாலும் நம் மனதின் ஓரத்தில் ஒருவிதமான Groupism இருந்து கொண்டேதான் இருக்கிறது. அது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெளிப்படுகிறது. வெளிநாட்டுக்குச் சென்றால் இந்தியனாகி விடுகிறோம் அதுவே நாலைந்து பேர் சேர்ந்துவிட்டால் South Indian, North Indian எனப் பிரிவும், பெரிய குரூப் எனில் மாநில ரீதியான பிரிவும் வந்துவிடுகிறது. பிரிவினை என்பது எதிர்மறை என்பதால் இது நம்ம ஆளு என்ற நேர்மறையான எண்ணம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும், எங்கள் வீட்டில் என்ன நடந்திருக்கும் என. 3 + 1 ... South vs North district (Should be centre).  இந்த சொ.க இதனை மையப்படுத்தியில்லை என்பதால் இத்தோடு விட்டுவிடுவோம். அந்த சொற்போர்களை 😂  பற்றி இன்னொரு சொ.க வில்.

என்றும் போல் அன்றும் சூரியன் அமைதியாகத்தான் மறைந்தான் சந்திரனுக்கு வழிவிட்டு ஆனால் எங்கள் வீட்டில்தான் அமைதியின்மை தோன்றிவிட்டது. யாருக்கு யார் என? பெரிய கலவரங்களுக்குப் பின்தான் மையான அமைதியிருக்கும் ஆனால் கலவரத்துக்கு முன்பே நாங்கள் கூடியிருந்த அறையில் அப்படியொரு அமைதி. காரணம் ?

ஒரு வாரத்திற்கு முன்பு, ஆகஸ்ட் 2, 1999'ஆம் வருடம் அப்பொழுது கையை தட்டும், விளக்கேற்றும் நிகழ்வுகள் இல்லாததால்  பெரும்பாலும் நாங்கள் பயன்படுத்தாத பால்கனி கதவைத்  திறந்து சென்று   அருகிலிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்களை நோக்குகிறேன்.  யாரோ என்னை நோக்கி எதையோ தூக்கியெறிவது போல் தோன்ற, பயந்து அப்படியே கதவைச் சாத்திவிட்டுப்  பிற நண்பர்களிடம் சொல்ல, அவர்கள் வந்து பார்த்தால் எதுவுமில்லை. இரண்டு நாட்கள் கழித்து மீண்டும்  பயத்துடனே பால்கனி சென்ற என்னை நோக்கி மறுபடியும் அதே நிகழ்வு நடப்பதுபோல் ஒரு பிரம்மை. இந்தமுறை பயப்படாமல் குலதெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு இருக்கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு மெதுவாகக் கண்ணைத் திறந்து பார்க்கிறேன்... சட்டென்று உடம்பெல்லாம் ஒருவிதமான சிலிர்ப்பு, மின்சாரம் பாய்ந்த மாதிரி பிரகாசம்..  கொஞ்சம் தள்ளியுள்ள எதிர் apartment டிலிருந்து இரண்டு இளம்பெண்கள் என்னை நோக்கிக் கையசைத்துக்கொண்டிருந்தனர்.....

       அவள் ..
       கையசைத்ததால்
       வெடித்தது - பூகம்பம்
       எங்கள் - அறையில்..

அதன்பின் மற்ற காரியங்கள் வெகு விரைவாக நடந்தேறின... பால்கனி சுத்தம் செய்யப்பட்டது. அது எங்களுக்குச் சொர்க்கவாசல் ஆனது. நால்வரும் குளிப்பது, கழிப்பது, வேலைக்குப் போகும் நேரம் தவிர இதர நேரமெல்லாம் பால்கனியில்தான்.... அவ்வப்போது சைகையால் பேசிக்கொள்ளுவது - என்னப் பேசினோம், என்னப் புரிந்தது என இன்றுவரை தெரியவில்லை. Cricket விளையாடுவது - அவர்களோ அல்லது நாங்களோ பந்து வீசுவதுபோல் பாவலா செய்ய ஒருவர் பாட்டிங் செய்வது போல் அடிக்க ஓரே சந்தோஷம்தான் போங்கள். ஆனால் சந்தோசம் மட்டுமே நீடிக்க எந்த கடவுளும் விடுவதில்லையே...  இங்கோ நான்கு பேர் அங்கோ இரண்டு பேர்தான்.. Balancing இல்லையே... So யாருக்கு யார்? இது நம்ம ஆளு இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் திருச்சிக்காரன் போட்டியிலிருந்து முதலிலேயே நீக்கப்படுகிறான். மீதியிருப்பது மூன்று பேர்... சிறிது நேர அமைதிக்குப் பின் கன்னியாகுமரிக்காரன் அவனாக முன்வந்து போட்டியிலிருந்து விலகிக்கொள்ள இனி எல்லாம் சுபம் என நீங்கள் நினைத்தால்.... தவறு 

இனிமேல் என்னடா உங்களுக்குப் பிரச்சினை என நீங்கள் கோபத்தில் கேட்பது எனக்குக் கேட்கிறது. அங்கே இரண்டு... இங்கே இரண்டு கணக்கெல்லாம் சரிதான் ஆனால் யாருக்கு யார்?... பலவிதமாக யோசித்து கடைசியில் சாமிப்படம் முன்பு சீட்டுப் போட்டு எடுத்துவிடலாம் என முடிவெடுத்தபோது திருச்சிக்காரன் ஒரு யோசனையை முன்மொழிந்தான்.. அங்கே ஒரு பெண் மற்ற பெண்ணை விட உயரம். அதுபோல் நான் திருநெல்வேலிக்காரனை விடக் கொஞ்சம் வளர்த்தி என்பதால் வளர்ந்த பெண் எனக்கும், கட்டையான பெண் திருநெல்வேலிக்காரனுக்கும் என.. இந்த யோசனை பிற்காலத்தில்😍 நன்மை பயக்கும் என்பதால் நாங்களும் வழிமொழிய ஒருவழியாக யாருக்கு யார் என முடிவானது. 

அப்படியே ஒன்றிரண்டு மாதங்கள் உருண்டோடின. எவ்வளவு நாள்தான் பால்கனியிலே உற்சாகமாகக் களிப்பது.. அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டுமே.. நாங்கள் இருவரும் முடிவு செய்தோம் இனி வெளிவீதிகளிலும் அவர்களை பின் தொடர்வது.. அவர்கள் வெளியில் செல்வதாகச் செய்கை செய்தால் போதும் Mask -  Jim Carry தோற்றான் போங்கள். ஜட்டி, பேன்ட், சட்டை, Make-up யெல்லாம் போட்டு திருநெல்வேலிக்காரன் எகிறி குதித்துக் கிளம்பும் வேகத்தைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது. நவராத்திரி  வேறு வர அவர்களுக்கிடையே புகுந்து எங்களுடைய Garba, Dantiya திறமையெல்லாம் காட்டினோம். இதனிடையே எங்கள் மூவருக்கும் தெரியாமல் அவசரக்குடுக்கை திருச்சிக்காரன் அவர்களது வீட்டிற்கே சென்று ஏதோ பேசி  வர, அதனால் மிகவும் பயந்துபோன கன்னியாகுமரிக்காரன் எங்களின் செயல்களுக்கு ஊடரங்கு உத்தரவு போட்டுவிட்டான். முதலில் நாங்கள் அதனை விளையாட்டாக நினைக்க, மீறினால் வீட்டை விட்டே சென்று விடுவதாகவும் பயமுறுத்தினான். 

       நண்பனின் காதலுக்கு
       நடை - சொல்லும்
       நண்பனைப்  பார்த்திருக்கிறேன்
       தடை - சொல்லும்  
       நண்பனையும்  பார்த்திருக்கிறேன் 
       ஆனால் அவனே 
       விடை - சொல்லுவதைப்
       பார்த்ததில்லை !!
       நாங்கள் 
       செய்வது - காதலல்ல !!
       சூரியகாந்திப் பூக்கள் 
       சூரியனைப் பார்த்துச்
       சிரிப்பது போலத்தான் !!
       நாங்கள் - அறிவோம்   
       இந்த சூரியன் விரைவில் 
       மறைந்து விடும் !!
       பூமியாகிய - நீதான்
       நிரந்தரமென்று !!
       ஆகையால்
       கொஞ்சம் எங்களையும்
       சிரிக்க விடு !!
       மலர்ந்த உடனே
       வாடச் சொல்லாதே !!

இப்படி கவிதையெல்லாம் (கவிதை என நம்புங்கப்பா😀) எழுதி அவனிடம் கொடுக்க இரண்டு நாள் கழித்து பதில் வந்தது. 

      கவிதை வந்தது 
      காதலின் மோகம் !!
      அதனால் குறைந்தது
      நட்பின் வேகம் !!
      உனக்குத் தெரியாது
      பெண்கள் நாகம் !!
      ஒவ்வொருவருக்கும் இருக்கும்
      காதல் தாகம் !!
      அது நிறைவேறிவிட்டால் 
      உன் யோகம் !!

இந்த கவிதை மற்றும் மூன்று பக்கத்துக்குப் பெரிய மடலும் (கதையின் நீளத்தைக் கருத்தில் கொண்டு அதனைப் பதிவிடவில்லை) எழுதினான். அதனால் அடுத்த பூகம்பம் எங்கள் அறையில். மீண்டுமொரு அவசரக்கூட்டம். அவன் எந்த சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. பால்கனியை பூட்டுவதுதான் ஒரேதீர்வு எனக் கூறினான். முன்பு ஒதுக்கிவைக்கப்பட்ட கோபத்திலிருந்த திருச்சிக்காரனும் அதனை ஆதரிக்க, எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிந்தது. நாங்கள் வழக்கம் போல் பால்கனி தேவதைகளின் தரிசனப்பணியைத் தொடர அடுத்தகட்ட போராட்டத்தைத் துவக்கினான். ஒத்துழையாமை இயக்கம். எங்கள் அறையில் நான்கு பேரும் சேர்ந்துதான் சமைப்போம் என்று கூறினாலும் பொதுவாகத் திருச்சிக்காரன் பாத்திரம் கழுவுவதோடு சரி. நான் மற்றும் திருநெல்வேலிக்காரன் பொருட்களை வாங்குவது, குக்கரில் சோறு வைப்பது என சில வேலைகளைப் பார்த்தாலும் குழம்பு,  பொரியல், கூட்டு என ருசியானவைகளைச் செய்வது கன்னியாகுமரி நண்பன்தான். அவன் செய்ய மறுக்க நாங்களும் தயிர்ச்சோறு, எங்களுக்குத் தெரிந்த குழம்பு, குஜராத்தி ஹோட்டல் இனிப்புச் சாப்பாடு என ஒரு வாரம் சமாளித்துப் பார்த்தோம். கடைசியில் சோறுதான் முக்கியம் என்ற வேதவாக்கு நாக்கை நெரிக்க சமாதானப்படலத்தை தொடங்கினோம்.  ஒரு வாரத்துக்கு பால்கனி பக்கம் போகக்கூடாது என்ற ஒப்பந்தம் முடிவானது. எங்களுக்குள் மனதில் ஒரு நப்பாசை ஒப்பந்தத்தை மீறி அவனுக்குத் தெரியாமல் எப்படியாவது பார்த்துவிடலாம் என. எங்களது மனவோட்டத்தை எப்படியோ புரிந்துகொண்டவன் பெரிய பூட்டாக வாங்கி பால்கனியை பூட்டி சாவியை வைத்துக்கொண்டான். 

ஒவ்வொரு நாளும் நரகமாய் நகர்ந்தது... நானும், திருநெல்வேலிக்காரனும் நாள்களை எண்ணிக்கொண்டிருந்தோம். எதிர்பாராதவிதமாக ஊரிலிருந்து திருநெல்வேலிக்காரனுக்கு அவசர அழைப்பு வர, அவன்  திரும்பி வரும்வரை பால்கனியை திறக்கக்கூடாது என ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. பதினைந்து நாட்கள் கழித்துத் திரும்பி வந்து பூட்டை திறக்க சாவியைக் கேட்க, சாவி தொலைந்து விட்டதாகப் பதற்றமின்றிக் கூறினான். பூட்டை உடைக்க நடந்த முயற்சிகள் வெற்றிபெற மேலும் ஒரு வாரக் காலமானது. பூட்டை உடைத்து வாடிவாசல் ஜல்லிக்கட்டு காளைகள் போல் துள்ளிப் போய் பார்த்தால்..... எங்கும் வெறுமை.... எங்கே சென்றார்கள் எனத் தெரியவேயில்லை..... மனமுடைந்து போய் அங்குமிங்கும் பார்த்த என்னை வேறு ஒரு பெண் உற்றுப்பார்த்தாள்... மீண்டும்  மனதில் உற்சாக மின்னல் அவளை எங்கோ பார்த்தமாதிரி உள்ளதே.... எங்கு??  எப்பொழுது ??  Oh ..  டிவியில்... அடுத்த சொ.க ரெடி 😎 


இறுதியாக: 

சொந்த கதை என்பதற்கு இருவிதமான  அர்த்தங்கள் உண்டு. சொந்தமாக எழுதிய கதை என்பதுதான் என்னுடைய விளக்கம்✌. இல்லையப்பா, உன் சொந்த கதைதான் எனத் தோன்றினால் உங்களது பார்வையில் இதில் நான் எந்த ஊர்க்காரன் என்று கருத்துக்கள்(Comments) பகுதியில் பதிவிடவும்.