Showing posts with label அரு இராமநாதன். Show all posts
Showing posts with label அரு இராமநாதன். Show all posts

Saturday, 23 February 2019

குண்டு மல்லிகை


                      அரு  இராமநாதன் - குண்டு மல்லிகை





 வீரபாண்டியன் மனைவி நாவல் பத்தி சிலரின்  கருத்துக்களைப் படிக்கும் பொழுதுதான் குண்டு மல்லிகை நாவல் பற்றித் தெரிந்து கொண்டேன். கல்கி வார இதழில் தொடராக வந்த கதையாம். பல ஆண்டுகளாக கல்கி வார இதழில் வரும் நாவல்களை எல்லாம் எனது பெற்றோர்கள்  எடுத்து பைண்டிங் செய்து விடுவார்கள். இந்த நாவல் எப்படித் தவறியது எனத் தெரியவில்லை.

குண்டு மல்லிகை, காதலைப் பேசும் சமூக  நாவல்தான்.  இரண்டு பெண்களின் (இருவரும் சகோதரிகள்தான் ஆனால் வெவ்வேறு தாய்க்குப் பிறந்தவர்கள்) கதை. உமா மற்றும் வசந்தி சகோதரிகள் எனினும் இருவர்களின் குணங்களும் மாறுபட்டு ஆனால் நேர்மறையாக உள்ளது. வீரபாண்டியன் மனைவி நாவலில் வரும் ஜனநாதன் போல் இதிலும் ஜகந்நாதன் என்னும் கதாபாத்திரம் உள்ளது. அவர்கள்  இருவரும் அந்தந்த நாவலில் பேசும் மனிதர்களின் குணநலன்கள் சுட்டிக்காட்டும் வசனங்கள் மற்றும் மனித உறவுகள் பற்றிச் சொல்லும் கருத்துக்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை தெரிகிறது. ஜகந்நாதன் சொல்லும் கருத்துகளுக்காகவே இந்நாவலை வாசிக்கலாம். 

 பணக்காரவீட்டு பிச்சுமணி தன்னை விட வயது அதிகமான உமாவை தன் தாத்தாவின் எதிர்ப்பையும் மீறிக் காதலிக்கிறான். தன்னை விட வயது அதிகமான பெண்ணை காதலித்துதிருமணம் செய்வது அக்காலங்களில் எளிது அல்ல. அதனை பிச்சுமணி சாத்தியப் படுத்துகிறான். மறுமுனையில் ஆண்களையே வெறுக்கும் வசந்தி, ஒருக் கட்டத்தில் ஜகந்நாதன் மீது ஆசை கொள்கிறாள். கதை முழுவதும் ஐந்து பிரதான பாத்திரங்களையே சுத்தி  வந்தாலும் சலிப்பு தரவில்லை. மேலும் யாரையுமே கெட்டவர்களாநேரடி வில்லன்களாகச் சித்தரிக்காமல் சூழ்நிலைகளையும்மனிதர்களின் மாறுபட்ட நல்ல எண்ணங்களுமே கதையில்  திருப்பங்களை ஏற்படுத்துகிறது.

என்னைக் கவர்ந்த கதாபாத்திரம் உமாதான். உமா போலப் பெண் கிடைக்க எந்த ஆணும் தவம் செய்திருக்க வேண்டும். உமா வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்கள்தான் அவளை அவ்வளவு பக்குவப் படுத்திருக்க வேண்டும். உமாவை பற்றி இந்த கதையை வாசித்த அனைவரிடமும் குதூகலமாகப் பேசிக் கொண்டே இருக்கிறேன். பிச்சுமணி பாத்திரம் உணர்ச்சி பொங்கும் நபராகவும், ஜகந்நாதன் அதற்கும் முற்றிலும் நேர் எதிராகவும் படைக்கப் பட்டுள்ளது. 

உமா வீட்டில் இருக்கும் சின்ன பிள்ளையாரையும் ஒரு பாத்திரமாகக் கதை முழுவதும் உலாவச் செய்திருப்பது அருமை.

இறுதியாக :

வசந்தியின் முற்போக்கான கருத்துகளுக்காகவே அவளுக்குத் திருமண நடக்காமலே ஆசிரியர் பழிவாங்கி விட்டாரா அல்லது அவள் முதலில் கல்யாணமே வேண்டாம் என ஆசைப்பட்ட மாதிரி செய்து விட்டாரா எனக் கதையை வாசித்தவர்கள்  கூறுங்கள். 
            

Monday, 7 January 2019

வீரபாண்டியன் மனைவி



                         அரு  இராமநாதன் - வீரபாண்டியன் மனைவி 





   எப்பொழுதும் நான் அடுத்துப் படிக்கவேண்டியது எனப் புத்தகங்கள் பட்டியல் வைத்திருப்பேன் (மனதில்தான்) .. ஆனால் அருராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி புத்தகம் எப்பொழுதுமே அந்த லிஸ்டில் இருந்ததில்லை..

அகிலனின் வேங்கையின் மைந்தன் முடிந்தும் பாவை விளக்குதான் அடுத்தது வாசிக்க வேண்டும் என இருந்தேன்... தொடங்கிக் கூட விட்டேன்... ஆனால் திடீர் மனமாற்றம்... வீரபாண்டியன் மனைவி புத்தகம் கிடைத்து....

 நான் பள்ளியில் படிக்கும்போதே எங்கள் வீட்டில் வீரபாண்டியன் மனைவி புத்தகம் இருந்தது ஆனால் அதன் மூன்றாவது பாகம் மட்டும் எப்படியோ தவறி விட அதை வாசிக்க வேண்டும் என எண்ணம் வந்ததேயில்லை.

குலோத்துங்க சோழன் (III) ...  பாண்டிய மன்னன் வீரபாண்டியனை வெற்றி கொண்டு விக்ரமபாண்டியனை அரியணையில் அமர்த்திய வரலாற்றைக் கற்பனை கலந்து எழுதியுள்ளார்.

கதையில் என்னை ஈர்த்த மற்றும் கவனிக்க வைத்த கதாப்பாத்திரம் ஜனநாதன் கச்சிராயன்... ஆசிரியர் ( ராமநாதன் = ஜனநாதன்) தன்னுடைய கருத்துகளைத்தான் அந்தக் கதாப்பாத்திரம் வழியாகச் சொல்லுகிறாரோ எனத் தோன்றியது. ஜனநாதன் கதாப்பாத்திரம்தான் முழு நாவலையும் தாங்கி நிற்பதுடன் மற்ற நாவல்களில் இருந்து வேறு படுத்திக்காட்டுகிறது. அக்கால அரசியலைச் சாடும்  அவனது கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் இந்தக் காலத்துக்கும் பொருந்தும் படி உள்ளது

தேசபக்தியை வைத்து அரசியல் செய்வது..

ஒருதேசம்... ஒரு கொடி... ஒரே கொள்கை... ஒரே மொழி....

ஆட்சியாளர்களின் புகழ் வேட்டை ....

     இது போன்றவற்றை பற்றி ஜனநாதன் கேலியாக சொல்லும் கருத்துக்கள் இரசிக்க வைக்கிறது.

ஜனநாதன் கதபர்த்திரத்தை நல்லவனா அல்லது கெட்டவனா எனக் கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் அந்த கதாப்பாத்திரம் சுவாரசியமாக படைக்கப் பட்டிருப்பது சிறப்பு.

சாமானியர்களையே கதையின் நாயர்களாக ஆக்கி இருப்பதும் மன்னர்களை வெகுவாக புகழ்ந்து, வீரதீரனாகக் காட்டாததும் மாறுபட்டு ரசிக்கும் படி இருக்கிறது.

இராமாயணம் காண்டங்கள் reverse ஆக வருவது... மற்றும் சில இடங்களில் இராமாயண கதாப்பாத்திரங்களை தொடர்புப் படுத்துவது.  எல்லா அத்தியாயங்களும் 'ம' தொடங்கும் வார்த்தைகளைக் கொண்டு ஆரம்பிப்பது போன்றவை கவனிக்கும் படி இருந்தாலும் ... பாலகாண்டம் ( மூன்றாவது காண்டம்) பேருக்கும் கதைக்கும் நிறைய தொடர்பு இல்லை.

சோழர்களால் சிறை வைக்கப்பட்ட தன் மனைவியைப் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் மீட்கச் செய்யும் முயற்சிகள்தான் கதை.

மீட்பு படலங்கள் மேலோட்டமாக இல்லாமல் விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லப்பட்டிருப்பதுதான் கதைக்கு நிறைய பலமும் கொஞ்சம் பலவீனமும்.

ஒரு கட்டத்தில் கொஞ்சம் அலுப்பூட்ட  ஆரம்பித்து விடுகிறது  ... அதற்கு கதையில் உள்ள காதலும் ஒரு காரணம்.

வீர பாண்டியன் மனைவி -  ஒரு சரித்திரக்காதல் கதை என்றுதான் முதலில் எனக்கு அறிமுகம் ஆனது ஆனால் கதையில் இருந்த காதல் என்னை ஈர்க்கவே இல்லை.

கதையின் நாயகன் வீர சேகரன் மற்றும் நாயகி  ஊர்மிளா இருவருக்கும் ஏற்கனவே மணமாகி அவர்களுக்கு மனைவி மற்றும் கணவன் இருக்கிறார்கள்.  என்னதான் ஆசிரியர் அவர்களின் திருமணங்கள் நடைபெற இக்கட்டான சூழ்நிலைகளையும்.. தவிர்க்க முடியாத நிகழ்வுகளையும் விளக்கிக் கூறினாலும்  என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .
மற்றும் அவர்கள் இருவரின் தங்கள் தனிப்பட்ட மணவாழ்க்கை  ஏன் இயல்பாகவும் , இன்பமாகவும் .. இல்லை என்பதையும் விளக்கியுள்ளார்.

ஆனாலும் ஏனோ அவர்களின் காதல் என் மனதை ஈர்க்கவில்லை.

அவர்கள் உருகி.. உருகிக் காதலித்தாலும் ..அதனால் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் அவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற பரிதவிப்பு எனக்குத் தோன்றவேயில்லை.

அவர்கள் இருவரும் கடைசியில் மரண தண்டனையில்  இறப்பது  மிகவும் சரியான முடிவாகவே தோன்றியது. அவர்களின் அந்தத் துயர முடிவு கூட  என் மனதில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

பொதுவாக ஒரு பெரிய நாவலை வாசித்தபின் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு கதாப்பாத்திரங்கள் என் மனதை விட்டு அகலாது குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்காவது. வீரபாண்டியன் மனைவியை வாசித்த பின் ஜனநாதன் தவிர எந்த ஒரு பாத்திரமும் மனதில் நிற்கவில்லை.. எந்தத்  தாக்கத்தையும் தரவில்லை.


இறுதியாக :

    ஜனநாதன் கதாப்பாத்திரத்தின் பேச்சுக்கள்  மற்றும் கதையில் வரும் பல புரட்சிகரமான கருத்துக்களை பார்க்கும் பொழுது ஆசிரியர் மறுமணத்தை ஆதரித்து வீரசேகரன் மற்றும் ஊர்மிளா கதாப்பாத்திரங்கள் படைத்தாரோ எனத் தோன்றுகிறது. கதை எழுதப்பட்ட காலகட்டமான 1950'ல் இந்த மாதிரி கருத்துக்களை சொல்லுவது மற்றும் எழுதுவது எளிதல்ல.. காரணம் அதுவாக இருந்திருந்தால் மிகவும் பாராட்ட பட வேண்டிய ஒன்று.