Saturday 15 December 2018

சிவகாமி மற்றும் ரோகிணியின் காதல் ....



            சிவகாமி மற்றும் ரோகிணியின் காதல் ....



 இந்த வாரம்தான் அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் கதையை வாசித்து முடித்தேன். 1963'ல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற நாவல். மிகவும் ஆர்வமாக வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று..

ஆனால் இக்கதையைப் பற்றி ஒருவர் எழுதிய விமர்சனத்தை என்னுடைய ஒரு சகோதரர் அனுப்பியிருந்தார் அதைப் படித்ததுடன் இந்தப் புத்தகத்தை படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது... ஆனால் ஒரு தடவை வாசிக்க ஆரம்பித்த உடன் அந்த நபர் எழுதிய விமர்சனம் தவறு எனப் புரிந்தது...

பொதுவாக எனக்குக் காதல் கதைகள் கொஞ்சம் பிடிக்கும்...

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மற்றும் பார்த்திபன் கனவு கதைகளில் காதல் இருந்தாலும் அதுவே கதையின் களமாக இருக்காது... ஆனால் சிவகாமியின் சபதத்தில்... சிவகாமி மற்றும் மாமல்லருக்கு இடையே உள்ள காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்... கதையே அந்தக் காதலில்தான் பிணைந்து இருக்கும்.

அவர் எழுதி,  நான் வாசித்த சமூககதைகளில் கள்வனின் காதலி மற்றும் அரும்பு அம்புகள் கதைகளில் காதலே பிரதானம்... அரும்பு அம்புகளே கல்கி எழுதிய கதைகளில் சிறந்த காதல் உள்ள கதை என்பேன்.

நீங்கள் நினைக்கலாம் காதலில் அது என்ன சிறந்தது... நல்லது...
யார் காதல் பெரியது எனப் பேசுவது எல்லாம் முட்டாள்தனமானது என...
அது சூழ்நிலைகளை பொறுத்தது... அவர்கள் எண்ணங்களை பொறுத்தது....

கண்டிப்பாக இது மாதிரி ஒப்பிட்டு பார்ப்பது சரியாக இருக்காது...

ஆனாலும் என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை... என் சகோதரருக்கு சிவகாமி , மாமல்லர் மீது வைத்த காதல் சிறந்தது என்ற எண்ணம் உண்டு. எனக்கு எப்பொழுதும் இதில் மாற்றுக் கருத்து உண்டு..

சிவகாமிக்கு எப்பொழுதுமே மாமல்லர் மீது ஒரு சந்தேகம் இருக்கும்... சந்தேகம் என்பதை விடச் சின்ன நம்பிக்கையின்மை இருந்து கொண்டே இருக்கும். அதை கல்கி மிகவும் அழகாக எழுதியிருப்பார் ... சிவகாமியோ ஒரு சிற்பியின் மகள்... மாமல்லரோ இளவரசர்...

நிறைய திரைப்படங்களில் இதுதான் கதையே... சாதாரண மனிதர்கள் இதைப் பொருந்தாத காதல் எனக் கூறுவார்கள்.. ஆனால் சிவகாமியின் சபதத்தில் பிரச்சினை என்னவேனில்... சிவகாமியே அப்படி நினைப்பதுதான்.

இதனால் அவள் பல சமயங்களில் மற்றவர்களின் சொல்லை கேட்டு விட்டு மாமல்லரை சந்தேகிப்பது மற்றும் சண்டையிடுவது... அவர்கள் காதல் மீது அவளுக்கு முழுமையான நம்பிக்கை இல்லையோ எனத் தோன்றுகிறது.பல நேரங்களில் வீணாக மிகவும் மனம் வருத்தம் அடைவது. அதனால் தவறான முடிவுகள் எடுப்பது.

சாதாரண சிற்பியின் மகள் இளவரசர் மீது ஆசைப் படலாமா என அடுத்தவர்கள் நினைக்கலாம் ஆனால் ஆசை வைத்தபின்பு மேலும் இளவரசரே அதை ஏற்றுக்கொண்ட பின் ... குழப்பத்திலே இருப்பது ஒருவித தாழ்வுமனப்பான்மையை சிவகாமி கொண்டிருப்பதை காட்டுகிறது..

நீங்கள் சொல்லலாம்.. சிவகாமியின் சூழ்நிலைதானே காரணம் என...
அதை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

இளவரசரை மணந்து பிற்காலத்தில் அரசியாகப் போகிறவர்களுக்கு மனதைரியம் இருக்க வேண்டும்.. என்னைப் பொறுத்தவரை நல்லவேளை மாமல்லர், சிவகாமியை மணக்கவில்லை (கதையை வாசித்தவர்களுக்கு மணக்காத காரணம் தெரிந்து இருக்கும்)

மணந்திருந்தாலும் சிவகாமி ஒருவித தாழ்வு மனநிலையோடவே வாழ்ந்திருப்பார்.. மாமல்லரின் மனம் மணக்காததால் வேதனைப் பட்டதை விட மணந்திருந்தால் அதிகம் வேதனை அடைந்திருக்கும் என்பது என் கருத்து....

சரி இப்பொழுது இளங்கோ ... ரோகிணி காதலுக்கு வருவோம்... என் சகோதரர் கேட்கிறார் ஏன் அவர்கள் இருவரும் சண்டையிட்டு கொள்ளவில்லையா... சந்தேகப் படவில்லையா என்று.

சிவகாமியின் காதலுக்கும், ரோகிணியின் காதலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ரோகிணியின் மனதில் நடப்பது பாசப்போராட்டம்.
அவள் காதலிப்பதோ எதிரி நாட்டு இளவரசனை. தன் தந்தையை போரில் தோற்க்கடித்தவனை . நன்றாகக் கவனித்தால் புரியும். இன்றும் நமது பெண்கள் சந்திக்கும் பிரச்சினைதான் ரோகிணிக்கும்..  பிறந்த வீடா... காதலனா (புகுந்த வீடா)...

அவளோ தன் காதல் மீது எப்பொழுதுமே சந்தேகப்படவேயில்லை.. அருள்மொழி மற்றும் இளங்கோ உறவு பற்றி அறிந்தாலும் அதையும் அவள் தன் காதலையும் குழப்பிக்கொள்ளவில்லை

அவள் தன் குடும்பத்திற்கும்... காதலுக்கும் இடையே மட்டும்தான் சிக்கிக்கொண்டு தவித்தாள். மேலும் அதனால் உணர்ச்சிவசப்பட்டுத் தவறு செய்தாலும் அதையும் தானே திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறாள்.

இறுதியாக :

கல்கியே சிவகாமியைப் பத்தி நன்றாகப் புரிந்து கொண்டதாலோ என்னவோ.. மாமல்லருடன் அவளைச் சேர்த்து வைக்கவில்லை
ஆனால் அகிலனோ, ரோகிணி மற்றும் அருள்மொழி இருவரையும் இளங்கோ திருமணம் செய்வதாகக் கதையை முடித்துள்ளார்.

3 comments:

  1. சிவகாமியின் காதலா, ரோகிணியின் காதலா

    சரித்திர நாவல்கள் வாசிப்பு சிறு வயது முதலே மனதுக்கு மிகவும் பிடித்த விஷயம்.சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன் இரண்டும் நான் அதிக முறை வாசித்த நாவல்களில் அடக்கம். ஆனால் சிவகாமியின் சபதம் சிறுவயதிலேயே அறிமுகமானதால் அதிக முறை வாசித்திருக்கிறேன்.
    சரித்திர நாவல்களில் சரித்திரத்தை விட கதைநாயகனின் காதல்தான் பிரதானமாயிருக்கும். வாசித்து முடித்தபின்னர் மனசு அக்காதலைத்தான் அசை போடும்.
    கல்கியின் சிறந்த படைப்புகளில் ஒன்றான பொன்னியின் செல்வன் படித்தவர்கள் வந்தியத்தேவன், குந்தவை காதலை பெரிதாக சொல்வார்கள். ஆனால் சிவகாமியின் காதலைத்தான் கல்கி அழகாக காட்டியிருப்பதாக எண்ணுகிறேன்.
    வேங்கையின் மைந்தனில் இளங்கோ-ரோகிணியின் காதலும் மனதை வருடினாலும் சிவகாமியின் காதலைத்தான் சிறப்பாக நினைக்கிறேன்.
    என் நினைப்புக்கு பங்கம் என் தம்பியிடமிருந்து வந்தது. வேங்கையின் மைந்தன் வாசித்தவன் சிவகாமியின் காதலை விட ரோகிணியின் காதலே சிறந்தது என் வாதிட்டான். அதற்காக அவன் எழுதிய கட்டுரையும் அருமை.
    நான் காதலை என் மனதால் பார்க்கிறேன். அவனோ மூளையால் பார்க்கிறான். அவன் வாதங்கள் சிறப்பாக அறிவு பூர்வமாக இருந்தாலும் என்னால் முழுவதுமாக ஒத்துக் கொள்ள முடியவில்லை. என்னாலும் சில விளக்கங்களை கூற முடியும்.
    நல்ல வேளை சிவகாமியை கல்கி அவர்களை சேர்த்து வைக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. கல்கி ஆசைப்பட்டால் கூட அவர்களை சேர்த்து வைத்திருக்க முடியாது. ஏனென்றால் சிவகாமி முழுக்க முழுக்க கற்பனை கதாப்பாத்திரம். மாமல்லரும் சிவகாமியைத்தான் திருமணம் செய்வதாய் இருந்தால் வாதாபிப் போரில் அவர் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
    இரு காதல்களிலும் காதலர்களுக்கிடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டாலும் சிவகாமி மனப்போராட்டத்தை எப்பொழுதும் மாமல்லரை சந்தேகப்படுகிறாள் என்றும், ரோகிணியின் மனப்போராட்டம் என்பது தம்பியா காதலனா என்கிற உரிமைப்போராட்டம் என்கிறான். சிவகாமிக்கு தன் காதலின் மேல் நம்பிக்கையில்லை அவள் மனநிலையில் பெரிய தடுமாற்றம் இருக்கிறது. மாமல்லரை திருமணம் செய்து ஒரு நாட்டுக்கு ராணியாகப் போகிறவள் உறுதியான மன நிலையுடன் இருக்க வேண்டும் என்பது அவன் வாதம்.
    ரோகிணியும் இளங்கோவும் ஏறக்குறைய சம அந்தஸ்தில் இருப்பவர்கள், இன்னும் சொல்லப்போனால் ரோகிணி தோல்வியுற்ற மன்னன் மகள். ஆனால் சிவகாமிக்கும் மாமல்லருக்கும் உள்ளது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். சிவகாமியின் பயம் மாமல்லரின் மீது சந்தேகத்தினால் வந்ததில்லை.
    சிவகாமியின் தடுமாற்றத்திற்கு காரணத்தினை சொல்லி விட்டு அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறான். நிச்சயமாக சிவகாமியின் சூழ்நிலை மிக கடுமையானது என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.
    என்னதான் மாமல்லர் அவள் காதலை ஏற்றுக் கொண்டாலும், மகேந்திரர் அந்த காதலுக்கு எதிராக இருப்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

    எனக்கு பெரிதாக காதல் அனுபவமில்லை. என் தம்பிக்கு இருந்திருக்கலாம். ஆனால் சில காதலர்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் எதுக்காக கொஞ்சிக் கொள்வார்கள். எப்போது எதற்காக எப்படி சண்டை போட்டு கொள்வார்கள் ஏன் போட்டுக் கொள்கிறார்கள் என்பது புரியாத புதிர்தான். அருகிலிருக்கும் பொழுது அவர்கள் மன நிலை வேறு, மற்ற நேரங்களில்தான் தங்கள் காதலைப் பற்றி எண்ணிப் பார்க்கிறார்கள். காதல் நடைமுறையில் சாத்தியப்படுமா காதலுக்கு என்ன மாதிரி எதிர்ப்புகள் வரும் என யோசிப்பார்கள்.

    ரோகிணிக்கு அவள் காதல் கை கூடியது. ஆனால் சிவகாமி எடுக்கும் முடிவே அவள் காதல் எவ்வளவு அழமானது, தீவிரமானது என்பதை சொல்லுகிறது

    தீவிரமாக யோசித்து பார்த்ததில் மனது ஒரு முடிவுக்கும் வருகிறது. காதலில் என்ன சிறந்தது என் போட்டி போட வேண்டும். இருவரின் காதலும் சிறந்ததே.

    இரண்டு காதல்களும் மிகவும் அழகாய் சொல்லப்பட்டுருப்பதால் எந்த காதல் சிறந்தது என வாதம் தேவையில்லாதது என்றும், எது பிடிக்கிறது என்பது படிப்பவரின் மன நிலையையும் பொறுத்த விஷயம் என்றும் எண்ணுகிறேன்.
    எனக்கு சிவகாமியின் காதல் மிகவும் பிடித்துப் போனதற்கு அதுதான் முதலில் அறிமுகமானது என்பது கூட ஒரு காரணமாய் இருக்கலாம். கூடா காதல் தரும் வலி எப்பொதும் அதிகம் (சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் - ரகு).


    இறுதியாக:

    கல்கி எழுதிய மிகச் சிறந்த காதல் கதை அரும்பு அம்புகள். இருக்கலாம். கதை வேண்டுமானால் காதல் கதையாக இருக்கலாம். ஆனால் காதலின் வலியை, அது தரும் உணர்வுகளை கல்கி அரும்பு அம்புகளில் சரியாக காட்ட வில்லை என்பதே என் எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. https://jeganmiras.blogspot.com/2019/11/blog-post.html

      அரும்பு அம்புகள் மீண்டும் ஒருமுறை வாசித்த பின் எனது கருத்தினை மாற்றிக் கொண்டேன்

      Delete
  2. மிக அருமை 👌

    ReplyDelete