விசாரணைக் கமிஷன் - சா. கந்தசாமி
நாவலின் கதாநாயகன் & நாயகி தங்கராசும், ருக்குமணியும்தான். கணவன் தங்கராசு அரசாங்க பஸ் கண்டக்டர், மனைவி ருக்குமணியோ பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லை. அவர்களின் அன்னியோன்னியமான வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக அவர்களின் நினைவோடைகளின் வாயிலாக நாவலை சா.கந்தசாமி எழுதியுள்ளார். தங்கராசு, ருக்குமணியிடம் கோபப்படுவது பின்பு அவனே சமாதானம்தான் ஆகி அவளிடம் பேசுவதும் இயற்கையாக உள்ளது. குழந்தை இல்லாததை ஒருபோதும் தங்கராசு குறையாக ருக்குமணியுடன் பேசுவதில்லை.
நினைவோடு சம்பவங்களால் நாவல் பல காலகட்டத்திற்குப் பயணித்தாலும், கதாபாத்திரங்களின் பேச்சுக்கு நடுவையே காலத்தைப் பதிவு செய்யும் ஆசிரியரின் எழுத்து நுணுக்கம், நம்மைக் கதையினுள் ஈர்த்து விடுகிறது. பாரதிவாணன், ருக்குமணியை பாராட்டும் பொழுது "உங்க கலைத்திறமையை வைத்துத்தான் அறிஞர் அண்ணாவிடம் கையெழுத்து வாங்கப் போகிறேன் என்பதும், பஸ் டெப்போவில் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் எம். ஜி. ஆரை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள் என்பதும், "இந்திரா காந்தியைச் சுட்டு விட்டார்கள்" என்று சரோஜா டீச்சர், ருக்குமணியிடம் கூறுவதும், நாவலின் இறுதிக்கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் "ராஜீவ் காந்திக்கு ஆதரவு தாரீர்" என்று ஒலிப்பதின் மூலமாகக் கதையின் காலகட்டங்களை நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.
தான் உண்டு, தன் வேலையுண்டு என தன் வேலையில் இருக்கும் தங்கராசு, மற்றும் அவரின் சக ஊழியர்களின் மூலமாக பஸ் டெப்போவில் நடக்கும் உண்மையான நிகழ்வுகளை அப்படியே எழுதியுள்ளார். அவர்கள் பேசும் தற்கால அரசியல், நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அங்கு நடைபெறும் அரசியல் என்பது ஒருபக்கமெனில் மறுபக்கம் ஆசிரியர்களின் உலகம் சித்தரிக்கப்படுகிறது. ஒரு சாதாரண ஆசிரியரும், பேருந்து நடத்துநரும் அவர்களின் சுயநல செயல்பாடுகளால் எவ்வாறு அரசியல் தலைவர்களாக உருமாறுகிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.
தொண்டை வலியால் அவதிப்படும் ருக்குமணியிடம் அவளது நாய் டைகர் செலுத்தும் ஆழமான அன்பை மிக அற்புதமாக தன்னுடைய எழுத்தால் வாசிக்கும் அனைவருக்கும் அதுபோல் ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறார். கடைசி அத்தியாயத்தில்தான் நாவலின் தலைப்புக்குள் நுழைகிறது கதையின் போக்கு. காவல் துறைக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் தொடக்கும் ஒரு சாதாரண சண்டை எப்படி பெரிய கலவரமாக, போராட்டமாக மாறியது. அதில் சம்பந்தமேயில்லாத தங்கராசு மாட்டிக்கொள்ள அது அவன் குடும்பத்தை எவ்வாறு பாதித்தது என்பதுதான் நாவலின் முடிவு.
மாவட்ட ஆட்சியர், அந்த கலவங்களைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கிறார். சமூக போராட்டங்கள் எப்படி ஒரு குடும்பத்தின் நிம்மதியைச் சீர்குலைக்கிறது என்பதுதான் நாவலின் அடிநாதம். நாவலின் சில இடங்களில் தலபுராணங்கள் (கோவில்) வருகிறது அவை நாவலுக்கு எந்த வகையில் வலுசேர்க்கவில்லை.
இறுதியாக:
நாவலின் தலைப்பைப் பார்த்தவுடன் எதாவது கிரைம் விசாரணை நாவலாக இருக்குமோ என்று நினைத்துத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் நாவல் முற்றிலும் என் எண்ணத்திற்கு மாறாக ஒரு (பல) சமூகப் பிரச்சினையை மிக ஆழமாக அலசியது. காவல் துறைக்கும், போக்குவரத்துத் துறைக்குமான மோதல் போக்கு பற்றிய பல செய்திகளை நான் மாணவனாக இருந்த பொழுது நாளிதழ்களில் வாசித்துள்ளேன். அத்தகைய போக்கு இப்பொழுது குறைந்திருப்பது கொஞ்சம் ஆறுதல் தந்தாலும் சமூக மோதல்களின் களங்கள் மாறியிருப்பது இன்னும் வருத்தமடையச் செய்கிறது.
அருமை..
ReplyDeleteநானும் தலைப்பைப் பார்த்தவுடன் கிரைம் நாவலோ என்றெண்ணினேன். அருமை. நாவலை வாசித்ததில்லை. முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteArumai bro! Start creating YouTube channel, more people might benefit
நல்ல பதிவு
ReplyDelete