Saturday, 18 May 2024

42.2 கிலோமீட்டர்


 

                                        42.2 கிலோமீட்டர்கள்


     நாம், நம்மால் எப்பொழுதும் முடியாது .. இது நம்மால் சாத்தியமாகாது எனப் பலவற்றை நினைத்துக் கொண்டிருப்போம். அப்படிப்பட்ட ஒன்றுதான்.. முழு மராத்தான் தொலைவான 42.2 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடிப்பது அதுவும் முதல் முயற்சியிலே நான்கு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும்.. உன்னால் முடியும் என்று  யாராவது என்னிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பு கூறியிருந்தால் சிரித்திருப்பேன்.. 

                      சிறுவயது முதலே எனக்கு ஓட்டத்தில் ஆர்வம் உண்டு ஆனால் பள்ளியுடன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது   நின்றுவிட்டது. ஆனாலும் அதன் மீதான காதல் எப்பொழுது தொடர்ந்துகொண்டே இருந்தது.  ஓட்டம் இல்லையெனினும் நடைப் பயிற்சியை மேற்கொண்டுதான் இருந்தேன். அதுவும் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து நடந்த தூரம் எண்ணிலடங்காதவை.. தினமும் குறைந்த பட்சம் 7000 ஸ்டெப்ஸ் (5 கிலோமீட்டர்கள்) நடக்க வேண்டும் என்ற வெறி MI Band (First Version) வாங்கியவுடன் துவங்கி விட்டது.   அப்பொழுது அதில் டிஸ்ப்ளே கூட கிடையாது. மொபைல் ஃபோன் ஆப்பில் தான் அனைத்தையும் பார்க்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக MI Band-2, அதன் பின் Amazfit Bip என தொடர்ந்தது. ஒருமுறை  தொடர்ந்து 265 நாட்கள் குறைந்த பட்சம் 7000 ஸ்டெப்ஸ் மற்றும் அடுத்தமுறை தொடர்ந்து 421  நாட்கள் குறைந்த பட்சம் 7000 ஸ்டெப்ஸ் அதன்பின் 651 நாட்கள் என்று போய்க் கொண்டிருந்த வண்டியைத் திசைதிருப்பியது ஒன்று.. 

                           Honor Magic Watch 2 ..  பெயரில் மட்டுமல்ல என்னுடைய எண்ணம், வாழக்கையில் பெரிய மேஜிக் செய்து காட்டியது. நடைப் பயிற்சியை மட்டுமே செய்துகொண்டிருந்த நான் மீண்டும் ஓடவும் ஆரம்பித்தேன். பதினாறு வயதில் விட்டதை நாற்பத்தாறு வயதில் மீண்டும் துவங்கினேன். கொஞ்சம் ஓட்டம், நடை எனத்துவங்கிப் பயணிக்கும் பொழுது நண்பர்கள் மூலம் Strava ஆப்பின் அறிமுகமும் கிடைத்தது. அதன் மூலம் சில நண்பர்களும் கிடைக்க மேலும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. என்னிடம் உள்ள ஒரு கெட்டப் பழக்கம் பற்றி  என்னிடம் நன்கு பழகியவர் அனைவருக்கும் தெரியும். எதைச் செய்தாலும் அதனைப் பற்றி அதிகம் ஆராய்வது, அது தொடர்பான பலதரப்பட்ட  விவரங்களைச் சேகரிப்பது. இந்த கெட்டப் பழக்கம் என்னை ஓட்டத்திலும் அடுத்த கட்டத்திற்கு    நகரச்செய்தது. 


           கொஞ்சம் ஓட்டம் பழகியவுடன் எல்லோருக்கும் வரும் ஆசைதான், எப்படியாவது ஒரு அரை மராத்தான் ஓடிவிட வேண்டும். நம்மதான் டார்கெட் எதுவும் இல்லாமல் செய்வதில்லையே.. இரண்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என ஆரம்பித்தேன் இறுதியில் இரண்டு மணி இரண்டு நிமிடம் ஆகி விட்டது.. இருந்தாலும் எனக்குள் ஒரு மலைப்பு. ஆனாலும் முழு மராத்தான் நம்மால் எப்பொழுதும் முடியாது.. கனவில் வேண்டுமெனில் சாத்தியம் ஆகலாம் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. இடையில் கெண்டைக் காலில் ஏற்பட்ட வலி சைக்கிளிங் பக்கமும் கொஞ்சம் நகர்த்தியது. அங்கும் பல நண்பர்கள் கிடைத்தாலும், ஓட்டம் மட்டும் என்னை அதனை விட்டு ஓடிப் போக விடவேயில்லை.

                                 துவக்கத்தில் ஓடும் பொழுது T-Shirt மற்றும் Track Pant அணிந்து தான் ஓடுவேன். அதன்பின் ரன்னிங் ஷார்ட்ஸ்.. முதலில் அதனை அணியும் பொழுது கொஞ்சம் வெட்கமாக தான் இருந்தது.. இப்பொழுதோ Sleeveless T-Shirt வரை வந்தாச்சு.. அது போலத்தான் மனதிலும் ஒரு சிறிய மாற்றம், நாம் ஏன் ஒரு முழு மராத்தான் ஓடி பார்க்கக் கூடாது.. ஆனால் அங்கும் மனது ஒரு செக் வைத்தது. முழு மராத்தான் ஓடு ஆனால் முதல் முயற்சியில் நான்கு மணி நேரத்திற்குள் ஓடி முடிக்க வேண்டும்.. என் லக்கி வாட்ச் ஆன Honor MagicWatch 2 விட மனதில்லைதான். அதிலிருந்து ஆக்டிவிட்டியை Strava ஆப்பில் upload செய்யக் கொஞ்சம் பிரச்சினை இருந்ததால், ஃபோனையும் தூக்கிக் கொண்டே ஓட வேண்டியதிருந்தது. நீண்ட தூர ஓட்டங்களில் அதுவே பெரிய சுமையாக மாற Garmin Watch நோக்கி நகர்ந்தேன். அது மணி பர்ஸின சுமையை வெகுவாக குறைத்தாலும் ஆசை விடவில்லை.. 

 எதுவும் தனியாக நடந்து விடுவதில்லை.. இதோ நான் 42.2 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளேன் எனில் அதன் பின்னால் நான் காலையில் எழும் நேரம் எல்லாம் அவர்களும் எழுந்து காப்பி போட்டுக் கொடுத்து, தண்ணீர் பாட்டில் எல்லாம் வைத்து என் ஓட்டத்திற்கும்  துணையாக நின்ற மனைவியும் ஒரு காரணம். உற்சாகம் தந்த நண்பர்கள் சிவராமன் சார் மற்றும் ஜெயாசுதன் மற்றொரு காரணம். இந்த இரண்டு கால்கள் இல்லாமல் என் கால்களால் மட்டும் இந்த  சாதனை சாத்தியப்பட்டு இருக்காது.. இதனைத்  தவிர என்னை அவ்வப்போது பாராட்டி உற்சாகம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல.  ஜனவரி(2024) மாதம்  இந்த முழு மராத்தானை ஓடி முடித்து விட திட்டம் போட்டிருந்தோம். ஆனால் வேலைப் பளு, சிறு காயங்களால் தள்ளிப்போனது. ஒன்று மட்டும் நிச்சயம் பலருக்குப் பல காரணங்கள் எதையும் செய்யாமல் இருக்க.. ஆனால் மனதிருந்தால் மார்க்கம் எப்பொழுதும் உண்டு👍 ...

இறுதியாக:

            42.2 கிலோமீட்டர் ஓடியாச்சி.. அடுத்து என்ன?? ஏதோ Ulta Marathon அப்படி , இப்படி எனச் சொல்லுகிறார்கள்.. அதுவும் என்னவென்று ஒரு எட்டுப் போய் பார்த்து விட்டு வருவோமா??? அல்லது Duathlon பக்கம் வண்டியைத் திருப்புவோமா???😂                  


Wednesday, 31 January 2024

நமக்கு நாமே 🚴🏃🚶‍♂️

 

                                          🏃 நமக்கு நாமே சவால் 🚴 


     உடலினை உறுதி செய்ய சிறிது நாள்களாக உடற்பயிற்சிகளை செய்கிறோம், சில போட்டிகளிலும் சென்று பங்கேற்கிறோம் அடுத்து என்ன? இந்த கேள்வி என் மனதில் தோன்றிய பொழுதுதான் உடலினை உறுதி செய் குழுவின் 100 நாட்கள் சவால் என் கண்ணில் பட்டது. இதுபோல் நாமும் நமக்கு நாமே ஒரு சவாலை ஏற்படுத்தி, அதனைச் செயல்படுத்தினால்  எப்படி இருக்கும். அடுத்த மாதம் முழுவதும் அதாவது ஜனவரி.2024'ல் அனைத்து நாட்களும், சைக்கிள் ஓட்டம், ஓட்டம் அல்லது நடை அப்படி என ஏதாவது ஒன்றைத் தினமும் செய்யவேண்டும். நடை, ஓட்டம் என்றால் 5 கிலோமீட்டர்களுக்குக்  குறையாமலும், சைக்கிள் ஓட்டமெனில் 40 கிலோமீட்டர்களுக்குக்  குறையாமலும் செய்ய வேண்டும் மேலும் மொத்தமாக 1000 கிலோமீட்டர்களுக்கு மேல் முடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். 


                முதல் நாளே வந்தது சோதனை.. பள்ளி நண்பர்கள்  மற்றும் அவர்களது  குடும்பத்தினரோடு சேர்ந்து புத்தாண்டை வரவேற்கக் குற்றாலத்தில் ரிசார்ட் போட்டாச்சு. டிசம்பர் 31- அன்று குளியலில் போட்ட ஆட்டத்தில் இடதுகால் சுண்டுவிரல் நகம் பெயர்ந்து ஒரே ரத்தம். ஹாஸ்பிடல் போய் TT எல்லாம் போட்டும், விரலை கட்டி விட்டார்கள். அது மட்டுமா? புத்தாண்டின் கொண்டாட்டங்கள் முடிந்து தூங்கவே மணி 3 (காலை) ஆகி விட்டது.  நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்த ஷூ எல்லாம் குற்றாலத்திற்குக் கொண்டு போயிருந்தேன். காலையில் ஆறு மணிக்கு எழுந்து ஓடலாம் என்று பார்த்தால் ஷூவுக்குள் இடது கால் போக மாட்டேங்குது. இது என்னடா சோதனை என்று சுண்டுவிரல் கட்டை அவிழ்த்து ஷூவுக்குள் பஞ்சு  எல்லாம் வைத்து மாட்டினேன். அருகிலிருந்த நண்பன் பயம் காட்டினான்  "டேய் இன்று ஒரு நாள் ஓட ஆசைப்பட்டு மீதி 364 நாள்கள் ஓட  முடியாமல் போய் விடப் போகிறது". ஆனாலும் நான் விடவில்லை செங்கோட்டையையே சுற்றி 7 கிலோமீட்டர் ஓடி முடித்தேன். ஷூக்குள் ரத்தம். முதல் நாளே ரத்தம் காட்டியாயிற்று இனி எல்லாமே  சுகம்தான் என்ற நம்பிக்கையோடு முதல்நாள் முடிந்தது.  

  அடுத்த மூன்று நாட்கள் சுமுகமாகப் போனதைத்  தடுக்க வந்தது அடுத்த செய்தி. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை பார்க்கப் போகவேண்டும். நாகர்கோவிலிருந்து ஆறுமுகநேரி போக வேண்டும். நமது சைக்கிளிலே  போய்விட்டால் என்ன? 110 கிலோமீட்டர்தானே. அதனைச் செயல்படுத்த சிவராமன் சாரிடம் கேட்க, அவரும் சம்மதித்தார். ஒரு பையில் துணிகளைப் போட்டுக் கொண்டு கிளம்பியாச்சு. வள்ளியூர் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது ஜெயசுதன் எங்களை தூரத்திப் பிடித்தது மறக்க முடியாதது. சிவராமன் சார் திருச்செந்தூரிலிருந்து அன்றே திரும்பி விட, நான் இரண்டு நாட்கள் கழித்து ஆறுமுகநேரியிலிருந்து சைக்கிளிலே நாகர்கோவில் கிளம்பினேன். 

          காலையிலே பொங்கல் விட வேண்டும் இன்று எங்கும் போகக் கூடாது என்று வீட்டுகாரம்மா  கறாராகச் சொல்லிவிட, யாரால் தான் மீற முடியும். ஆனாலும் ஆசை விடவில்லை சிவராமன் சாரை வரச்சொல்லிச் சாப்பிட்ட பொங்கல் செரிக்கச் சாயங்காலம் ஒரு ரைட் போய் விட்டோம். அதிகாலையில்  செய்த ஓட்டம் மற்றும் சைக்கிள் பயிற்சி வேலையைக் காட்டத் தொடங்கியது. சளி, இருமல் மற்றும் காய்சல்.. அது கொடுத்த உடல் வலியினை பொறுத்துக் கொண்டே பயிற்சிகளைத் தொடர்ந்தேன். இடையினில் ஒருநாள் அலுவலக பணி மற்றும் சொந்த வேலைகளின் காரணமாகக் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் நேரம் அமையவில்லை. விடாது கருப்பு என்று அன்றுதான் முதல் முறையாக இரவு ஓட்டம். வாகன நெரிசல் இல்லாத சாலையில் (தெருவிளக்கு) வெளிச்சம் இல்லை. இவன் யாருடா புதுசா என நாய்கள் என்னையே முறைத்துப் பார்த்தது வேறு வயிற்றினை கலங்கச் செய்தது. வித்தை காட்டும் இரு சக்கர வாகன ஓட்டிகளினிடையே எப்படியோ 10 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்தேன். 

        
      குடியரசு தினச் சிறப்பு நிகழச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தி
ல் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களுக்கும் ஒரு சைக்கிள் பயணம் அதுவும் சீதாராமன் தம்பதியினர் வழியெங்கும் அன்போடு கொடுத்த பானங்கள் மற்றும் பலகாரங்கள் இந்த பயணத்தை இதயத்தில் இடம்பெற செய்தது. சென்னையிலிருந்து வந்த குழுவினரோடு இரண்டு நாட்கள் சைக்கிள் பயணம், ஒரு அரை மாரத்தான் ஓட்டம், வேகமான 50 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டம், ஒரு நாளாவது காலையில் நிம்மதியாக தூங்க விடுகிறீர்களா - போன்ற வீட்டுகாரம்மாவின் முணுமுணுப்புக்கிடையே வாலானது விடாமுயற்சியால் நிறைவை நோக்கி நெகிழ்சியாய் நகர்ந்தது. அதற்குள் அதிர்ச்சி தரும் மற்றொரு அறிவிப்பு  50 நாள் சவால்.... 31 நாட்களுக்கே முக்கிக் கொண்டிருக்க.. 50 நாளா.. இருந்தாலும் ஆசை யாரைவிட்டது. உடலினை உறுதி செய் குழுவின் சவாலில் கலந்தது கொள்ளும் என் ஆர்வத்தைப் பதிவு செய்தேன்..  இறுதியில் இந்த  (ஜனவரி-2024) மாதத்தில் மொத்தம் 1330 கிலோமீட்டர்கள்.  நமக்கு நாமே சவாலைச் சிறப்பாக நிறைவு செய்தேன். இதனை சிறப்பாக முடிக்க உதவிய சிவராமன் சார், ஜெயசுதன் மற்றும் என் தொல்லையெல்லாம் பொறுத்துக் கொண்ட வீட்டுகாரம்மாவுக்கும் நன்றிகள் பல. 🤝

 🚴சைக்கிள் ஓட்டம் :  நாள் 14 -  தூரம் 1159 கிலோமீட்டர்கள். 

 🏃ஓட்டம் :  நாள் 10 -  தூரம் 116  கிலோமீட்டர்கள். 

 🚶‍♂️நடை    :  நாள் 7  -  தூரம்  52 கிலோமீட்டர்கள். 

இறுதியாக:

                நமக்கு நாமே சவாலை ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கினாலும், டிசம்பர் 16 முதலே தினமும் ஏதாவது ஒரு பயிற்சியைச் மேற்கொண்டுதான் வருகிறேன். பார்ப்போம் அது எதுவரை தொடர்கிறது என .. 😍