Thursday 23 July 2020

வால்கா முதல் கங்கை வரை



                    வால்கா முதல் கங்கை வரை 
                                  -  ராகுல சாங்கிருத்தியான்


ராகுல சாங்கிருத்தியான் 1942'ல் எழுதிய வால்கா முதல் கங்கை வரை புத்தகத்தை நான் கல்லூரி நாட்களிலே வாசித்து விட்டேன். மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டியது யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் புத்தகம் தந்த அனுபவம். ஒரு வரலாற்று ஆய்வுக் கட்டுரையை வாசிக்கும் அனுபவத்தை சேப்பியன்ஸ் தரும் ஆனால் வால்கா முதல் கங்கை வரையோ ஒரு நாவலை வாசித்த உணர்வைத் தரவல்லது. காரணம் சுமார் எட்டாயிரம் ஆண்டுகாலமாக மனித சமுதாயத்தில் மெல்ல மெல்ல நடந்த நிகழ்ந்த மாற்றத்தினையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் நிகழ்வுகளின் பின்னணியில் இருபது தலைப்புகளில் சிறுகதைகளின் வடிவாக ஆசிரியர் எழுதியிருப்பது.

இருபது கதைகளில் முதல் பத்து கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலகட்டத்தையும், அடுத்த பத்து கிறிஸ்துக்கு பிந்தைய காலகட்டத்தையும் பிரதிபலிக்கிறது. கி.மு 6000'வில் வால்கா நதிக்கரையில் ஆரம்பித்து கி.பி 1942'வில் கங்கை நதிக்கரையில் முடிவடைகிறது. ஒவ்வொரு கதையும் தனித்தனியே என்ன பேசுகிறது என்பதைவிட பொதுவாக எதைப்பற்றிப் பேசுகிறது என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.

  இனக்குழுவாக இருந்த மனிதர்கள் உணவுக்காக வேட்டையாட இடம் பெயர்வது அதனால் மற்ற குழுவினரோடு ஏற்படும் மோதல். காலமாற்றத்தோடு மோதலின் போது பயன் படுத்திய ஆயுதங்களின் உருமாற்றம்.. தாய் வழிச் சமுகமாக வளர்ந்து வந்த மனிதச் சமுதாயம் நாளடைவில் எவ்வாறு ஆண்களால் பெண்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அடிமையாக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கி இறுதி கதைகளில் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகப் பொருமுகிறார். பெண்களுக்கு மறுக்கப்பட்ட சொத்துரிமை, உடன்கட்டையேறுதல் ஏன் பிரிட்டனில் கூட பெண்களுக்கு அப்பொழுது ஓட்டுரிமைக் கிடையாது. 

  வால்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆரியர்களை விட இந்தியாவில் முன்பே வாழும் அசுர (திராவிடர்கள்) இனமக்களின் கலாச்சாரம் மேம்பட்டு இருந்ததாகக் கூறினாலும் அவர்களது மன்னர் ஆட்சி முறை, மன்னரையே தெய்வமாக நினைப்பது, அடிமைகள் முறை போன்றவற்றால் எண்ணங்களால் மேம்படவில்லை என்கிறார். ஆரியர்கள் அசுரர்களின் லிங்க வழிப்பாட்டை வெறுத்தாலும் பின் நடந்த இனகலப்பில் அதனை அவர்களும் பின்பற்ற ஆரம்பித்து மன்னர் ஆட்சி, புரோகிதர் கலாச்சாரத்தில் ஒன்றிவிடுவதை விவரிக்கிறார். அசுரர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து வணிகங்களைச் செய்ததாக முன்வைக்கிறார். குதிரை, பசு மாமிசங்களும், சோமபானமும் எல்லோராலும் பொதுவாக உண்ணக்கூடிய சாதாரண செயலாகவே இருந்துள்ளது. 

 குப்தர்களின் காலகட்டத்தில்தான் மக்களின் பஞ்சாயத்து (குடியாட்சி) முறை ஒழிக்கப்பட்டு,  பிராமணர்களின் கைகள் ஓங்கி சர்வாதிகாரம் பெற்ற மன்னராட்சிக்கு அடித்தளம் ஏற்பட்டதாக விமர்சனம் செய்கிறார். மன்னர்களைப் புகழ்ந்து வர்ணித்து அவர்களைக் காவியத்தலைவனாகக் கொண்டு இதிகாசங்களும், காப்பியங்களும் படைக்கப்பட்டதாகவும் கூறுபவர், ஜெயச்சந்திர மகாராஜாவை (பிருதிவி ராஜனின் மாமா) பற்றி எழுதியவற்றை இப்பொழுது யாராவது எழுதியிருந்தால் சிலர் பெரிய கலவரத்தையே தோற்றுவித்திருப்பார்கள். கில்ஜியும், அக்பரும் சமூக நீதியோடு ஆட்சி செய்ய முயற்சி செய்ததாகக் கூறுகிறார். 

   மங்கள சிங் கதை மூலம் சிப்பாய் கலகம் தோல்வியில் முடிய அதனை முன்னின்று நடத்தியவர்களின் சுயநலம்தான் என விமர்சிக்கிறார். நாமெல்லாம் பாடங்களில் படித்த, கேட்ட தோட்டாக்களின் உறையில் கொழுப்புத் தடவப்பட்ட நிகழ்வை ஆங்கிலேய எதிர்ப்பாளர்களின் உணர்வுகளைத் தூண்டப் பரப்பப்பட்ட வதந்தி என்பவர் ஆங்கிலேய அரசு மற்றும் கவர்னர்கள் மீது மிகத் தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறார். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தை மக்களிடம் கொண்டுசென்ற மகாத்மா காந்தியை மதித்தாலும் அவரின் சில செயல்பாட்டை அறிவியல் காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கு எண்ணங்கள் எனச் சாடுகிறார். காந்தி மீது இந்துத்துவவாதி முத்திரையைக் குத்த ஆசிரியர் முயல்கிறாரோ என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. ஆரியர் கலப்பு, இஸ்லாமியர் கலப்பு, ஆங்கிலேயர் கலப்பு எனப் படிப்படியாக விவரிப்பவர் இன்று ஆரியர் என்று தனியாக யாரும் கிடையாது அந்த அளவிற்கு இரத்தக் கலப்புகள் நடைபெற்று விட்டது என்கிறார்.

  ராகுல சாங்கிருத்தியானின் சமய நல்லிணக்க ஆதரவு எண்ணமும், புத்தரின் கொள்கையில் கொண்ட ஈடுபாடும், பொதுவுடைமைக்குக் கொள்கைகள் மீது கொண்ட தீராப் பற்றும், அவரின் அரசியல் நிலைப்பாடும் கதாபாத்திரங்கள் வழியே வெளிப்படுகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பஞ்சாயத்து முறையைத் தூக்கிப்பிடிக்கிறார். சரித்திரத்தைக் கதை உருவில் தந்திருப்பதால் எளிதாக நம்மால் அந்தந்த காலகட்டத்தோடு சுவாரஸ்யமான பயணிக்க முடிந்தாலும் சிலருக்கு ஆய்வு நூலில் புனைவுகள் இருக்கலாமா என்ற தர்க்கம் மனதில் தோன்றலாம். ஆனால் அதன் கற்பனைகளை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பதும் வாசிப்பவரின் மனநிலையைப் பொறுத்ததே. மனித நாகரிக வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமிருக்கும் யாவரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகம் இது. 

இறுதியாக :

    இப்புத்தகத்தை ராகுல சாங்கிருத்தியானின் தமது சிறை வாசத்தில் 1942'ல் ஜெயிலில் இருந்து கொண்டே எழுதினார். அதனைக் கண. முத்தையா அவர்கள் 1949'ல் ஜெயிலில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கல்லூரி காலத்தில் வாசித்தது கண. முத்தையா அவர்களின் மொழிபெயர்ப்புதான். இப்பொழுது வாசித்தது யூமா வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பு. எனது சகோதரர் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மற்றும், இருகால கட்டத்திலும் வாசித்த போது என் மனதில் தோன்றிய கருத்து மாறுபாடுகளையும் எழுதுமாறு கூறினார். வாய்ப்பிருந்தால் பின்னொரு முறை கட்டாயம் எழுதுவேன்.


10 comments:

  1. அருமையான விமர்சனம். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு பொதுவுடைமையே என்ற அவரின் சித்தாந்தம் விவாதத்திற்கு உரியதே. மேலும் அவர்/அவரை முன்னிருந்தும் இயக்கங்களே அந்த சித்தாந்தங்களை காலத்திற்கேற்ப வளைத்து விட்டார்கள். அவரின் சிந்து முதல் கங்கை வரையும் வாசியுங்கள்.

    ReplyDelete
  2. நல்ல பல தகவல்கள் நண்பா..

    ReplyDelete
  3. உன்னுடைய விமர்சனங்களில் இதுதான் சிறந்தது என்று தோன்றுகிறது. சிறிதளவு ஆதரவாய் வார்த்தைகள் வெளிப்பட்டிருந்தாலும் தேசத்துரோகி பட்டம் கிடைத்திருக்கும். நானும் கல்லூரி காலங்களில் படித்திருந்தாலும் இப்போது முழுமையாக மனதில் இல்லை.கடவுள் பக்தி இருந்தாலும் மனதிற்குள் சிறிதளவு நாத்திக எண்ணம் இருப்பதற்கு இந்த புத்தகம் ஒரு காரணம்.நிச்சயமாய் இன்னொரு முறை வாசிக்க வேண்டும். வாசிக்க தூண்டியதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. I started liking the reply to your reviews :)

      Delete
  4. அருமையான வாசிப்பு அனுபவம், இந்த நூலை வாசித்து விட்டு விமர்சனம் அல்லது அனுபவத்தை எழுதியவர்கள் அநேகம்பேர், தமிழில் அதிக வாசகர்களால் வாசிக்கப்பட்ட நாவல் இது , நிறைய பேர் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் . 2011ம் ஆண்டு இந்த நாவலை வாசித்தேன், இப்போதும் வாசிக்கத்தூண்டுகிறது. அப்போது என்னுடைய அனுபவத்தை எழுதினேன்.
    http://bala-bharathi.blogspot.com/2011/11/blog-post_16.html

    ReplyDelete
  5. உன்னுடைய கருத்துக்கள் மிகவும் அருமை.

    ReplyDelete
  6. May be the most serious novel you have reviewed till date and nicely done as always. History is very subjective and a person’s belief plays big impact and role, looks like a level headed author. Good one

    ReplyDelete
  7. Kalaiarasan Velladurai (Comment posted on Facebook)

    உலகின் உண்மையான வரலாறு காலத்தினால் மட்டும் எழுதப்பட்டிருந்தால் அது வேறாக இருந்திருக்கும். ஆனால் அது நடவாத காரியம். மற்றவையெல்லாம் தனிப்பட்ட மனிதன் உணர்ந்தது, படித்தது, கேட்டதுதான். அதில் ஒருவரது ஆசிரியர், பெற்றோர், நண்பர்களின் அறிவின் தாக்கம், விருப்பு, வெறுப்பு கண்டிப்பாக இருக்கும். நடுநிலையில் இருந்து யாரும் சரித்திரம் எழுதிட முடியாது. ஏதோ ஒரு தாக்கம் ஏற்படும் போதுதான் எழுத தோன்றுகிறது. உதாரணம் மகாத்மா காந்தியை வெறும் காந்தி என்று எழுதியதை வாசிக்கும் போது ஏற்பட்ட ஒரு வருத்தத்தினால்தான் இதை எழுதுகிறேன்.
    மகாத்மா காந்தி நம்நாட்டுக்கு சுதந்திரம் வாங்க அஹிம்சை முறையை தேர்ந்தெடுத்தார். காரணம் யுத்தத்தினால், வன்முறையால் வென்றெடுத்தால் வரும் ஆட்சிமுறை வன்முறை ஆட்சியாகத்தான் இருக்கும்.
    உதாரணம் கிரேக்க, ரோமானியர்களின் வன்முறைகளின் வழி மலர்ந்த ஐரோப்பிய ஆட்சிகள் அடக்குமுறை ஆட்சிகாகவே அமைந்தன. ஆங்கிலேய, பிரெஞ்ச், டச்சுக்காரர்கள் அனைவருமே ஆதிக்க எண்ணம் உள்ள நாடுகள். மாகாத்மா காந்தி இதை எழுதும்போது ஹிட்லர் உருவாகவில்லை. அவர் சொன்னதுதான் ஜெர்மனியிலும் பின்னர் நடந்தது.
    மகாத்மா காந்தியின் கருத்துகளில் லியோ டால்ஸ்டாயின் தாக்கம் அதிகம் இருக்கும்.
    நமது கல்வியில் ஆங்கிலேயர்களின் தாக்கம் இருக்கும். மகாத்மா காந்தி நினைத்தது போலவே இந்தியாவில் மக்களால் வென்றெடுக்கப்பட்ட மக்களாட்சி மலர்ந்தது.
    இந்த விமர்சனத்தில் காந்தி என்று எழுதாமல் மகாத்மா காந்தி என்று எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் மகாத்மா காந்தியடிகள் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு... திருத்தி விட்டேன். வரலாற்றை எழுதுபவர்களின் தாக்கத்தை வாசிக்கும் பொழுது நாம் உணரலாம். அதனைப் பற்றிய தர்க்கங்கள் எப்பொழுதுமே முடிவு பெறாது . உங்கள் கருத்துக்கு நன்றி 🙏🙏

      Delete