Tuesday 5 March 2019

அம்மா வந்தாள்



                       தி ஜானகிராமன் -    அம்மா வந்தாள் 




      பொதுவாக நாம் கதை புத்தகங்களை வாசிக்கத் தொடங்கும் பொழுது படக்கதைகளில் ஆரம்பிப்போம். அதன்பின்  சிறுவர் கதைகள், சிறு கதைகள், நாவல்கள் என படிப்படியாக முன்னேறுவோம்.

சில சமயம்  இறுதிக் கட்டமாக இலக்கிய நாவல்கள் பக்கம் ஒதுங்குவோம். இலக்கிய நாவல்களைப் படிக்கக் கொஞ்சம் பொறுமையும் மற்றும் ஆழ்ந்த ஈடுபாடும் தேவை... இல்லையெனில் மிகவும் கடினமான பயணமாக இருக்கும்.

 இலக்கியவாதிகள் பட்டியலில் உள்ள சிறந்த நாவல்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் எனக்கு உண்டு. ஆனால் அந்த நாவல்கள்    பொதுவாக வட்டார மொழியில் அல்லது கதாபாத்திரங்களின் சமூகத்தினர் பேசும் மொழியில் இருப்பதால் உரையாடல்கள் புரிவதுக்குக் கவனம் தேவை.. சில சமயங்களில் பல முறை வாசித்தால்தான் புரியும். (இது என் அனுபவம். சிலருக்கு எளிதாக இருக்கலாம்.) இந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்னாள் நான் வாசித்த முதல் நாவல்   சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை.  அது நாகர்கோவில் நடக்கும் கதை என்பதாலோ மற்றும் கதையின் களங்கள் எனக்குக் கொஞ்சம் பரிசம் ஆனதாலோ எளிதாக வாசித்து விட்டேன். ஆனால் அவர் எழுதிய மற்றொரு நாவலான ஜே ஜே சில குறிப்புகள்  நாவலைப் பாதி கூட தாண்ட முடியவில்லை. அதன் பின் அப்படிப்பட்ட இலக்கிய நாவல்களின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை கொஞ்சக் காலம்.

திடீரென மீண்டும் ஒரு ஆசை... புத்தக வாசிப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல.  சுமார் பத்து புத்தகங்களை வாங்கி விட்டேன் பலரின் சிறந்த நாவல்களின் முதல் பத்து பட்டியல்களை அலசி ஆராய்ந்து. அதில் வாசிக்க முதலில் தேர்ந்தெடுத்தது தி ஜானகி ராமன் எழுதிய அம்மா வந்தாள்.

தொடக்கத்தில் அம்மா வந்தாள் புத்தகத்தை வாசித்து, புரியக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஆனால் வாசிக்க, வாசிக்கக் கொஞ்சம் எளிமையாகப் போனது. 

அப்பு சிறுவயது முதல் வேத பாடசாலையில் வேதம் படிக்கிறான். அங்கு இருக்கும் கணவனை இழந்த இந்துவுக்கு, அப்புவின் மீது காதல். அப்புக்கும், இந்துவின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

பதினாறு வருடங்கள் கழித்து வீட்டிற்குத் திரும்பும் அப்பு தன் அம்மாவின் தவறான நடத்தைகளைப் பார்த்தும், கேட்டும் மீண்டும் வேதசாலைக்கே திரும்பி வந்தவன் இந்துவையும் மணம் செய்யும் மனநிலைக்கும் வந்துவிடுகிறான். அவனைக் காண வேதசாலைக்கு வரும் அம்மா இறுதியில் காசிக்குச் செல்ல முடிவு எடுப்பதுதான் நாவலின் கதை...

இது கத்தி மீது நடப்பது போன்ற மிகவும் சிக்கலான கதை . எளிதில் சறுக்கி விடும் சம்பவங்களின் தொகுப்பு. ஆனால் ஆசிரியர் மிகவும் சாமர்த்தியமாகக் கையாளுகிறார். கதையின் சிறப்பே உரையாடல்கள்தான்.

"அவன் குரல் கட்டையாக வறண்டு ஒலித்தது. அதிலே சாம்பல் பூத்தாற்போல்க் கிடந்த கோபம் " 

"கோவில் மணி டைங், டைங் என்று சளி பிடித்தாற்போன்று மூக்கடைப்பு குரலில் அடித்தது "

இதுபோன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.. 

அம்மா அலங்காரத்தின்  குணத்தை அப்பு மற்றும் தண்டபாணி இருவரின் கோணத்திலும் அழகாக அறிமுகம் செய்கிறார். தண்டபாணிக்கு, அலங்காரத்தின் மீது இருக்கும் பத்தி கலந்த மரியாதை அல்லது பயம், அவளுடன் சேர்ந்து வாழக் காரணமாகிறது.. ஆனால் குழந்தைகள் எப்படி இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது கொஞ்சம் குழப்பமாக உள்ளது.

இறுதியாக :

    இந்த கதை வெளிவந்த காலத்தில் பல விமர்சனங்களைச் சந்தித்து இருக்கும். பலருக்கு அதிர்ச்சி அளித்து இருக்கலாம். வேதங்களைப் பற்றிய விமர்சனங்கள் பலரைக் கோபப்படுத்திருக்கலாம். ஆனால் சிறந்த விமர்சனங்கள் பலரைக் கோபப்படுத்தியிருக்கலாம் ஆனால் சம்பாவனைகள் மூலமாக வெளிப்படையாகத் தெரியாமல் மறைமுகமாகப் பல விசயங்களைச் சொல்லுவதின் மூலம் தனித்தன்மை பெறுகிறது. 


2 comments: