Monday 1 June 2020

கிருஷ்ணப் பருந்து



                 கிருஷ்ணப் பருந்து -  ஆ மாதவன்



தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான ஆ மாதவனின் எழுத்துக்கள் எனக்குப் பரிட்சியம் கிடையாது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனினும் திருவனந்தபுரத்திலே அதிகம் வசித்ததால் அவரின் எழுத்திலும் மலையாள வாடை பலமாக வீசும். கிருஷ்ணப் பருந்து நாவலை வாசிக்கும் பொழுது மலையாளம் கலந்த தனித்துவமான நடையும் களமும் தொடக்கத்தில் கொஞ்சம் சிரமத்தைக் கொடுத்தது. கிருஷ்ணப் பருந்து சுமார் 1980 வாக்கில் எழுதப்பட்ட 120 பக்கங்களைக் கொண்ட சிறிய கதைசொல்லி நாவல்தான்.

நாற்பத்தெட்டு வயதிற்குள் குடும்பம், நல்லது கெட்டது எல்லாவற்றையும் இழந்த குருஸ்வாமி தனது தாத்தா, அப்பா எல்லோரும் அழித்தது போக மிஞ்சும்  இரண்டு ஏக்கர் தோப்பு விளையில் தாடியும் எளிமையான பத்திய சாப்பாடு எனத் தனியாக வசிக்கிறார். அவரது வீட்டிலும், தோட்டத்திலும் வேலை செய்யும் பார்வதி, பாட்டுகள் பாடி பிழைக்கும் வெங்கிடாசலம் (வெங்கு), பெயிண்டர் ரவி ஆகியோர் தனி ஆட்களாகவும், பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் வேலை செய்யும் தங்கப்பன் மற்றும் பால் விவசாயச் சங்கத்தில் வேலை செய்யும் வேலப்பன் தன் குடும்பத்தோடும் அவரது தோப்பு விளையில் உள்ள குடிசை வீடுகளில் வாடகைக்கு வசிக்கிறார்கள்.

குருஸ்வாமியின் நினைவுடாக வேலப்பன் சிறுவயதிலே அவருடன் வந்து சேர்ந்ததிலிருந்து ராணியைக் காதலித்து கல்யாணம் செய்த கதையும், அவரது இளமைப் பருவ நிகழ்வுகள் மற்றும் மனைவி சுப்புலஷ்மிக்கு இடையேயான திருமண வாழ்க்கையை இடையிடையே ஆசிரியர் சொல்லுகிறார். புற உலகில் எல்லோரும் மதிக்கும் சாமியாக இருந்தாலும், அக உலகில் குருஸ்வாமியாக இருக்க முடியாமலும், சாமியாக மாறமுடியாமலும் தத்தளிக்கிறார். மன விரிசல்களும், பிறர் மீதான வெறுப்புகளும் ஒரு கணநேரத்தில் தோன்றுவதில்லை. அதற்கேற்ப வேலப்பனின் சகாக்கள் அவனுள் தொடர்ச்சியாக விதைத்த விதைகள்தான் குருஸ்வாமியின் அறையில் முழு நிர்வாண ஓவியத்தைப் பார்த்தவுடன் அவரை நிராகரிக்கத் துவங்குகிறான். ஸாமியப்பா, ஸாமியப்பா எனப் பாசத்தோடு குருஸ்வாமியை அழைக்கும் ராணியை அவரை விட்டு விலகியிருக்குமாறு கோபம் கொள்கிறான். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ராணிக்கு குருஸ்வாமியின் தேவையின் அழுத்தம் என்னவென்று புரிய, மனிதனின் அக மன தடுமாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன? அது எப்படி மனித உறவுகளைத் தீர்மானிக்கிறது என்பதையே நாவல் இறுதியில் பேசுகிறது.

குருஸ்வாமியின் உணர்வுகளை உரக்கக் கூறினாலும் இதர கதாபாத்திரங்கள் அவரைச்சுற்றிப் படைக்கப்பட்ட விதம் நாவலின் ஜீவனை அதிகரிக்கிறது. அதுவும் மவுனமாக வலம் வந்தாலும் பார்வதியின் பாத்திரம் வாசிப்பவர்கள் மனதில் தரும் அழுத்தம் வியக்கவைத்தது. உங்களைத் தறுதலை என உங்கள் அப்பா கூறினாரே என சுப்புலஷ்மி கேட்க, அவரின் காதல் கதைகள் எல்லாம் வெறும் வாய்க் கற்பனைகளை வைத்துப் பின்னியவைதான் வேறொன்றுமில்லை எனப் புரியவைக்கப் படாத பாடுபடும் தவிப்பு அருமை. நாவலின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கிருஷ்ணப் பருந்து  ஒரு குறியீடாக, சாட்சியாக வலம்வருகிறது. சொல்லப்போனால் குருஸ்வாமி தனக்கான அகண்ட வெளியில் ஒரு பருந்தைப் போல் பறக்க நினைக்கிறார். அவரது இனம் புரியாத சல்லாப லயத்தைக் குறியீடுகள் மூலம் மிக நுட்பமாக மாதவன் எழுதியுள்ளார். குருஸ்வாமியின் மனநிலையில் நமது சமூகத்தில் பலர் உலாவினாலும் பொதுவாக அதிகம் வெளிப்படையாகப் பேசப்படாத அந்த மனித உணர்ச்சியைத் துளியும் விரசமின்றி வெளிச்சம் போட்டுக் காட்டும் நாவல்தான் கிருஷ்ணப் பருந்து. 

இறுதியாக :

வாழ்க்கையில் ஞானப்பசியை மட்டுமே யதார்த்தமென்று அங்கீகரிக்க முடியாது. காமத்தைப் பற்றிய தேடல்கள் ஒவ்வொரு வளர்ந்த மனிதனையும் இயல்பாகக் கவர்கிறது. அந்த தேடல்கள் ஒருகட்டுப்பாட்டிலிருந்தால் வாழ்வும் மிக எளிதாகக் கடந்துபோகிறது. 


நல்லவேளை நாவலை முன்பே எழுதிவிட்டார் அல்லது பத்திரகாளியை ரூபப்படுத்திய விதம், கோவில் உள்மண்டபத்தின் கல்தூண்களில் உள்ள சிற்பங்களின் வர்ணனைகளை எதிர்த்து யாராவது கேஸ் போட்டிருப்பார்கள்😎.

11 comments:

  1. நாவல் நமது பலரின் மனவோட்டத்தையே பிரதிபலிக்கலாம் ஆனால் அதனை ஒப்புக்கொள்வதற்கு உரிய மனநிலை யாருக்குமில்லை என்பதே யதார்த்தம். அது எளிதுமல்ல நமது சமூகத்தில்.

    ReplyDelete
  2. மிக நன்று

    ReplyDelete
  3. மிக்க நன்று வழக்கம்போல் கதையை படித்து முடித்த திருப்தி

    ReplyDelete
  4. மிக்க நன்று....தங்களின் வாசிப்பு தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Very well written as always. Lookslike classic Indian predicament: to live for what I want? Or to live for social image? I hope by reading this novel, readers try and put their emotional and physical needs over societal norms and perceptions.

    ReplyDelete
  6. Very nice review about the story. This is also stimulate our reading habits.

    ReplyDelete
  7. Very nice review about the story. This is also stimulate our reading habits.

    ReplyDelete
  8. 120 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை 100 வரிகளில் அருமையாக எடுத்துரைத்த உனது, நாவல்கள் மீதான ஆர்வம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. கிருஷ்ணப் பருந்து நாவல் மீதான என்னுடைய பார்வையை வாசித்த சிலருக்கு நாவல் இறுதியில் பயணிக்கும் பாதையை பற்றி சிறு குழப்பம். அதனால் சிறிய மாற்றங்கள் செய்துள்ளேன். நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  10. Fantastically expressed..this review goes a long way to show that many of our Tamil literary works are still golden despite the changing societal norms.

    ReplyDelete