Friday 1 May 2020

சொ. க - 1. பால்கனி தேவதைகள்



                                      பால்கனி தேவதைகள் 
  

நான் எழுதிய நாவல்களின் விமர்சனங்களை வாசித்துவிட்டு நீங்களே கதை/நாவல் எழுதுங்களேன் என நிறைய (கொஞ்சம் என்று உண்மையைச் சொன்னால் நன்றாக இருக்காதே😀) அன்புத்தொல்லைகள். நாமும் எதாவது எழுதலாம் எனக் கற்பனைக் குதிரையைத் தட்டிப்பார்த்தால் அது கொரோனா வைரஸ்க்கு பயந்து வெளியே குதிக்க மாட்டேங்குது. சரி சொந்த கதைகளை எழுதுவோம் என யோசித்துப்பார்த்தால்,  நல்ல பையன் (நான்தான் 🙋) வாழ்க்கையில் பொதுவாகச் சுவாரசியமான சம்பவங்களே நிகழ்வதில்லை போலும்.

நமது வாழ்க்கையில் வீட்டை விட்டு தனியாக நண்பர்களுடன் சேர்ந்து வசிப்பதென்பது ஒரு  இனிமையான அனுபவம்தான். அதிலும் வேலையில் சேர்ந்த பின் கொஞ்சம் financial stability யிருப்பதால் சுதந்திரப்பறவையாகவே எண்ணிப்பறப்போம். குஜராத்தில் எங்களது வீட்டிலிருந்த நான்குபேரும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி என வெவ்வேறு மாவட்டம்.  என்னதான் ஒற்றுமையைப் பத்தி வாய்கிழியப் பேசினாலும், படித்தாலும் நம் மனதின் ஓரத்தில் ஒருவிதமான Groupism இருந்து கொண்டேதான் இருக்கிறது. அது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெளிப்படுகிறது. வெளிநாட்டுக்குச் சென்றால் இந்தியனாகி விடுகிறோம் அதுவே நாலைந்து பேர் சேர்ந்துவிட்டால் South Indian, North Indian எனப் பிரிவும், பெரிய குரூப் எனில் மாநில ரீதியான பிரிவும் வந்துவிடுகிறது. பிரிவினை என்பது எதிர்மறை என்பதால் இது நம்ம ஆளு என்ற நேர்மறையான எண்ணம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும், எங்கள் வீட்டில் என்ன நடந்திருக்கும் என. 3 + 1 ... South vs North district (Should be centre).  இந்த சொ.க இதனை மையப்படுத்தியில்லை என்பதால் இத்தோடு விட்டுவிடுவோம். அந்த சொற்போர்களை 😂  பற்றி இன்னொரு சொ.க வில்.

என்றும் போல் அன்றும் சூரியன் அமைதியாகத்தான் மறைந்தான் சந்திரனுக்கு வழிவிட்டு ஆனால் எங்கள் வீட்டில்தான் அமைதியின்மை தோன்றிவிட்டது. யாருக்கு யார் என? பெரிய கலவரங்களுக்குப் பின்தான் மையான அமைதியிருக்கும் ஆனால் கலவரத்துக்கு முன்பே நாங்கள் கூடியிருந்த அறையில் அப்படியொரு அமைதி. காரணம் ?

ஒரு வாரத்திற்கு முன்பு, ஆகஸ்ட் 2, 1999'ஆம் வருடம் அப்பொழுது கையை தட்டும், விளக்கேற்றும் நிகழ்வுகள் இல்லாததால்  பெரும்பாலும் நாங்கள் பயன்படுத்தாத பால்கனி கதவைத்  திறந்து சென்று   அருகிலிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்களை நோக்குகிறேன்.  யாரோ என்னை நோக்கி எதையோ தூக்கியெறிவது போல் தோன்ற, பயந்து அப்படியே கதவைச் சாத்திவிட்டுப்  பிற நண்பர்களிடம் சொல்ல, அவர்கள் வந்து பார்த்தால் எதுவுமில்லை. இரண்டு நாட்கள் கழித்து மீண்டும்  பயத்துடனே பால்கனி சென்ற என்னை நோக்கி மறுபடியும் அதே நிகழ்வு நடப்பதுபோல் ஒரு பிரம்மை. இந்தமுறை பயப்படாமல் குலதெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு இருக்கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு மெதுவாகக் கண்ணைத் திறந்து பார்க்கிறேன்... சட்டென்று உடம்பெல்லாம் ஒருவிதமான சிலிர்ப்பு, மின்சாரம் பாய்ந்த மாதிரி பிரகாசம்..  கொஞ்சம் தள்ளியுள்ள எதிர் apartment டிலிருந்து இரண்டு இளம்பெண்கள் என்னை நோக்கிக் கையசைத்துக்கொண்டிருந்தனர்.....

       அவள் ..
       கையசைத்ததால்
       வெடித்தது - பூகம்பம்
       எங்கள் - அறையில்..

அதன்பின் மற்ற காரியங்கள் வெகு விரைவாக நடந்தேறின... பால்கனி சுத்தம் செய்யப்பட்டது. அது எங்களுக்குச் சொர்க்கவாசல் ஆனது. நால்வரும் குளிப்பது, கழிப்பது, வேலைக்குப் போகும் நேரம் தவிர இதர நேரமெல்லாம் பால்கனியில்தான்.... அவ்வப்போது சைகையால் பேசிக்கொள்ளுவது - என்னப் பேசினோம், என்னப் புரிந்தது என இன்றுவரை தெரியவில்லை. Cricket விளையாடுவது - அவர்களோ அல்லது நாங்களோ பந்து வீசுவதுபோல் பாவலா செய்ய ஒருவர் பாட்டிங் செய்வது போல் அடிக்க ஓரே சந்தோஷம்தான் போங்கள். ஆனால் சந்தோசம் மட்டுமே நீடிக்க எந்த கடவுளும் விடுவதில்லையே...  இங்கோ நான்கு பேர் அங்கோ இரண்டு பேர்தான்.. Balancing இல்லையே... So யாருக்கு யார்? இது நம்ம ஆளு இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் திருச்சிக்காரன் போட்டியிலிருந்து முதலிலேயே நீக்கப்படுகிறான். மீதியிருப்பது மூன்று பேர்... சிறிது நேர அமைதிக்குப் பின் கன்னியாகுமரிக்காரன் அவனாக முன்வந்து போட்டியிலிருந்து விலகிக்கொள்ள இனி எல்லாம் சுபம் என நீங்கள் நினைத்தால்.... தவறு 

இனிமேல் என்னடா உங்களுக்குப் பிரச்சினை என நீங்கள் கோபத்தில் கேட்பது எனக்குக் கேட்கிறது. அங்கே இரண்டு... இங்கே இரண்டு கணக்கெல்லாம் சரிதான் ஆனால் யாருக்கு யார்?... பலவிதமாக யோசித்து கடைசியில் சாமிப்படம் முன்பு சீட்டுப் போட்டு எடுத்துவிடலாம் என முடிவெடுத்தபோது திருச்சிக்காரன் ஒரு யோசனையை முன்மொழிந்தான்.. அங்கே ஒரு பெண் மற்ற பெண்ணை விட உயரம். அதுபோல் நான் திருநெல்வேலிக்காரனை விடக் கொஞ்சம் வளர்த்தி என்பதால் வளர்ந்த பெண் எனக்கும், கட்டையான பெண் திருநெல்வேலிக்காரனுக்கும் என.. இந்த யோசனை பிற்காலத்தில்😍 நன்மை பயக்கும் என்பதால் நாங்களும் வழிமொழிய ஒருவழியாக யாருக்கு யார் என முடிவானது. 

அப்படியே ஒன்றிரண்டு மாதங்கள் உருண்டோடின. எவ்வளவு நாள்தான் பால்கனியிலே உற்சாகமாகக் களிப்பது.. அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டுமே.. நாங்கள் இருவரும் முடிவு செய்தோம் இனி வெளிவீதிகளிலும் அவர்களை பின் தொடர்வது.. அவர்கள் வெளியில் செல்வதாகச் செய்கை செய்தால் போதும் Mask -  Jim Carry தோற்றான் போங்கள். ஜட்டி, பேன்ட், சட்டை, Make-up யெல்லாம் போட்டு திருநெல்வேலிக்காரன் எகிறி குதித்துக் கிளம்பும் வேகத்தைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது. நவராத்திரி  வேறு வர அவர்களுக்கிடையே புகுந்து எங்களுடைய Garba, Dantiya திறமையெல்லாம் காட்டினோம். இதனிடையே எங்கள் மூவருக்கும் தெரியாமல் அவசரக்குடுக்கை திருச்சிக்காரன் அவர்களது வீட்டிற்கே சென்று ஏதோ பேசி  வர, அதனால் மிகவும் பயந்துபோன கன்னியாகுமரிக்காரன் எங்களின் செயல்களுக்கு ஊடரங்கு உத்தரவு போட்டுவிட்டான். முதலில் நாங்கள் அதனை விளையாட்டாக நினைக்க, மீறினால் வீட்டை விட்டே சென்று விடுவதாகவும் பயமுறுத்தினான். 

       நண்பனின் காதலுக்கு
       நடை - சொல்லும்
       நண்பனைப்  பார்த்திருக்கிறேன்
       தடை - சொல்லும்  
       நண்பனையும்  பார்த்திருக்கிறேன் 
       ஆனால் அவனே 
       விடை - சொல்லுவதைப்
       பார்த்ததில்லை !!
       நாங்கள் 
       செய்வது - காதலல்ல !!
       சூரியகாந்திப் பூக்கள் 
       சூரியனைப் பார்த்துச்
       சிரிப்பது போலத்தான் !!
       நாங்கள் - அறிவோம்   
       இந்த சூரியன் விரைவில் 
       மறைந்து விடும் !!
       பூமியாகிய - நீதான்
       நிரந்தரமென்று !!
       ஆகையால்
       கொஞ்சம் எங்களையும்
       சிரிக்க விடு !!
       மலர்ந்த உடனே
       வாடச் சொல்லாதே !!

இப்படி கவிதையெல்லாம் (கவிதை என நம்புங்கப்பா😀) எழுதி அவனிடம் கொடுக்க இரண்டு நாள் கழித்து பதில் வந்தது. 

      கவிதை வந்தது 
      காதலின் மோகம் !!
      அதனால் குறைந்தது
      நட்பின் வேகம் !!
      உனக்குத் தெரியாது
      பெண்கள் நாகம் !!
      ஒவ்வொருவருக்கும் இருக்கும்
      காதல் தாகம் !!
      அது நிறைவேறிவிட்டால் 
      உன் யோகம் !!

இந்த கவிதை மற்றும் மூன்று பக்கத்துக்குப் பெரிய மடலும் (கதையின் நீளத்தைக் கருத்தில் கொண்டு அதனைப் பதிவிடவில்லை) எழுதினான். அதனால் அடுத்த பூகம்பம் எங்கள் அறையில். மீண்டுமொரு அவசரக்கூட்டம். அவன் எந்த சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. பால்கனியை பூட்டுவதுதான் ஒரேதீர்வு எனக் கூறினான். முன்பு ஒதுக்கிவைக்கப்பட்ட கோபத்திலிருந்த திருச்சிக்காரனும் அதனை ஆதரிக்க, எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிந்தது. நாங்கள் வழக்கம் போல் பால்கனி தேவதைகளின் தரிசனப்பணியைத் தொடர அடுத்தகட்ட போராட்டத்தைத் துவக்கினான். ஒத்துழையாமை இயக்கம். எங்கள் அறையில் நான்கு பேரும் சேர்ந்துதான் சமைப்போம் என்று கூறினாலும் பொதுவாகத் திருச்சிக்காரன் பாத்திரம் கழுவுவதோடு சரி. நான் மற்றும் திருநெல்வேலிக்காரன் பொருட்களை வாங்குவது, குக்கரில் சோறு வைப்பது என சில வேலைகளைப் பார்த்தாலும் குழம்பு,  பொரியல், கூட்டு என ருசியானவைகளைச் செய்வது கன்னியாகுமரி நண்பன்தான். அவன் செய்ய மறுக்க நாங்களும் தயிர்ச்சோறு, எங்களுக்குத் தெரிந்த குழம்பு, குஜராத்தி ஹோட்டல் இனிப்புச் சாப்பாடு என ஒரு வாரம் சமாளித்துப் பார்த்தோம். கடைசியில் சோறுதான் முக்கியம் என்ற வேதவாக்கு நாக்கை நெரிக்க சமாதானப்படலத்தை தொடங்கினோம்.  ஒரு வாரத்துக்கு பால்கனி பக்கம் போகக்கூடாது என்ற ஒப்பந்தம் முடிவானது. எங்களுக்குள் மனதில் ஒரு நப்பாசை ஒப்பந்தத்தை மீறி அவனுக்குத் தெரியாமல் எப்படியாவது பார்த்துவிடலாம் என. எங்களது மனவோட்டத்தை எப்படியோ புரிந்துகொண்டவன் பெரிய பூட்டாக வாங்கி பால்கனியை பூட்டி சாவியை வைத்துக்கொண்டான். 

ஒவ்வொரு நாளும் நரகமாய் நகர்ந்தது... நானும், திருநெல்வேலிக்காரனும் நாள்களை எண்ணிக்கொண்டிருந்தோம். எதிர்பாராதவிதமாக ஊரிலிருந்து திருநெல்வேலிக்காரனுக்கு அவசர அழைப்பு வர, அவன்  திரும்பி வரும்வரை பால்கனியை திறக்கக்கூடாது என ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. பதினைந்து நாட்கள் கழித்துத் திரும்பி வந்து பூட்டை திறக்க சாவியைக் கேட்க, சாவி தொலைந்து விட்டதாகப் பதற்றமின்றிக் கூறினான். பூட்டை உடைக்க நடந்த முயற்சிகள் வெற்றிபெற மேலும் ஒரு வாரக் காலமானது. பூட்டை உடைத்து வாடிவாசல் ஜல்லிக்கட்டு காளைகள் போல் துள்ளிப் போய் பார்த்தால்..... எங்கும் வெறுமை.... எங்கே சென்றார்கள் எனத் தெரியவேயில்லை..... மனமுடைந்து போய் அங்குமிங்கும் பார்த்த என்னை வேறு ஒரு பெண் உற்றுப்பார்த்தாள்... மீண்டும்  மனதில் உற்சாக மின்னல் அவளை எங்கோ பார்த்தமாதிரி உள்ளதே.... எங்கு??  எப்பொழுது ??  Oh ..  டிவியில்... அடுத்த சொ.க ரெடி 😎 


இறுதியாக: 

சொந்த கதை என்பதற்கு இருவிதமான  அர்த்தங்கள் உண்டு. சொந்தமாக எழுதிய கதை என்பதுதான் என்னுடைய விளக்கம்✌. இல்லையப்பா, உன் சொந்த கதைதான் எனத் தோன்றினால் உங்களது பார்வையில் இதில் நான் எந்த ஊர்க்காரன் என்று கருத்துக்கள்(Comments) பகுதியில் பதிவிடவும்.  


19 comments:

  1. முதலில் வாழ்த்துகள்.சுஜாதாவை வாசித்தவர்கள் அவரின் பாதிப்பு இல்லாமல் எழுத முடியாது என பாலகுமாரன் சொன்னதாக படித்த ஞாபகம். அருணின் வலைப்பதிவை வாசிக்கும்போதும் அப்படித்தான் தோன்றியது. ஒருவேளை இது அருணின் பாதிப்பாக இருக்குமோ(?). சொந்தமாக எழுதிய கதை, சொந்த கதை என் கூறினாலும் பொதுவாக எல்லா பேச்சிலர்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கும். அதை நகைச்சுவையாக சொல்ல ஒரு திறமை, பொறுமை & நேரம் வேண்டும். உனக்கென ஒரு தனிப்பாணியில் எழுதினால் இன்னும் நல்லா இருக்கும் என்பது என் எண்ணம். எப்படி எனக் கேட்காதே. அது தெரிந்தால் நானும் எழுத ஆரம்பித்து விடுவேனே.

    ReplyDelete
  2. அருமை நண்பா.... கொரோனா, கைத்தட்டல்,விளக்கு ஏற்றுதல் ஒன்றையும் விடவில்லை. 😂... உண்மையில் நீங்கள் கன்னியாகுமரி காரரா??.. ஆவலுடன் சொ.க- 2 வை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. உன்னுடைய ஊர் தூத்துக்குடிதானே நண்பா.ஆனால் இது உன் சொந்த கதையில்லை...சொந்தமாக எழுதிய கதை...ஏனைன்றால் நீ என் நண்பன் உன்னை எனக்கு தெரியும்.

    ReplyDelete
  4. Climax song:
    நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
    தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
    சிறகுகள் உடைந்ததடி..குருதியில் நனைந்ததடி
    உயிரே…. உயிரே….

    Allathu

    நீ எங்கே... என் அன்பே ...
    மீண்டும் மீண்டும் மீண்டும்
    நீதான் இங்கு வேண்டும்
    நீ எங்கே... என் அன்பே ...
    நீயின்றி நானெங்கே
    மீண்டும் மீண்டும் மீண்டும்
    நீதான் இங்கு வேண்டும்
    உந்தன் அன்பு இல்லாது 
    எந்தன் ஜீவன் நில்லாது
    நீ எங்கே... என் அன்பே ...
    நீயின்றி நானெங்கே

    Varum endru paarthaal, intha song varuthu 😂

    கண்டத எல்லாம் லவ்வுனு நினைச்சு
    ஏன் டா தம்பி புலம்புற
    நீ ஏன் டா தம்பி புலம்புற
    இந்த பிகர் இல்லன இன்னொருத்தி இருக்கா
    த்ரிஷா இல்லன நயன்தாரா
    பத்தர மணிக்கும் ப்ளாக்குல கிடைக்கும்
    வேணாம் மச்சான் டெண்சனு
    சைடு டிஸ் இல்லன்ன ஊறுகா இருக்கு
    த்ரிஷா இல்லன நயன்தாரா

    Loved the fun writing....keep rocking 🤟🤟

    ReplyDelete
  5. மின்னலில் வடம்பிடித்த கயிறென சேலைத் தலைப்பு படபடக்க, அதில் தொங்கவிட்டிருந்த மணி அலங்கார வேலைப்பாடுகள் சலசலக்க கண்களில் காந்தப் பார்வைகள் கவர்ந்திழுக்க கைதனில் அகல் விளக்கொன்னை ஏந்தியபடி பாதம் பூமிதனில் பதியாது காற்றில் மிதந்து வந்தாள் நங்கையொருத்தி.. இல்லை இல்லை தேவதை ஒருத்தி.. சொக்க வைக்கும் சொரூபம்.. உண்மையில் சொக்கிப்போய் என் கால்கள் நடை தளர்ந்தன. அந்த அகல்விளக்கைச் சுற்றி மின்னிக்கொண்டிருந்த விட்டில்களும் அவள் பின்னால் பஞ்சென இருந்த இரு இறக்கைகளும் அந்த நிசப்ப வேளையில் என் மனதில் பயம் கொள்ள வைத்தன. யாரவள் என் வீட்டுக்கருகில்? பெரிதாகக் கத்தவேண்டும்போல் இருந்தது.. தொண்டைக்குழி வரை வந்த சப்தம் அந்த இடத்தை விட்டு நகராது தொண்டைக் குழியிலேயெ சிக்கிக்கொண்டது. அழைக்கும் தூரத்தில் அவளைக் கண்டதும் என் சப்த நாடியும் ஒடுங்கியது..

    இப்படி வர்ணித்து இருக்கலாம் உங்கள் தேவதையை. Readers will feel jealous 😜
    PS: not mine, thanks to Sundar Pitchai 🤟

    ReplyDelete
    Replies
    1. தேவதைகள் என தலைப்பிலே சொல்லிவிட்டு, அவர்களை பற்றி ஒரு வர்ணனையும் இல்லாததது 😮... missed out ...

      Delete
  6. ஜெ.மிராஸ்
    உனது blog ஐ பின் தொடர்பவர்கள் நீ கதாசிரியர் என்பதை மறந்து கவிஞர் என்று நினைத்து விட்டார்கள் போலும், உன்னிடம் இருந்து நிறைய கவிதைகளையும், உவமைகளையும் எதிர்பார்க்கின்றனர். அடுத்த பாகம் அனைவரின் எதிர்பார்ப்பையும் சரிசெய்யும் அளவிற்கு சிறப்பாக அமையும் படி இருக்க முயற்சி செய். எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. முதலில் வாழ்த்துக்கள் நண்பா

    சுவாரஸ்யமான தலைப்பு .

    பெரிதாக கதை ஏதும் இல்லை என்றாலும் , காட்சிகளை எங்கள் கண் முன் நிறுத்தியுள்ளாய். பில்ட் அப் மற்றும் நீ கதை சொல்லும் விதம் அருமை.

    தலைப்பை நியாயப்படுத்த அந்த பெண்களுடன் செலவழித்த நேரங்கள் பற்றி இன்னும் நிறைய சொல்லி இருக்கலாம். சொந்த கதை என்று நீ சொல்லிவிட்டதால் , இப்போது அதை பற்றி எழுதினால் இன்னொரு சோக கதை எழுதும் நிலைமை வரும் என்பதாலா அல்லது அப்படி எதுவும் நடக்கவே இல்லையா ?

    என்னதான் இருந்தாலும் சாப்பாடு தான் முக்கியம்னு நிரூபிச்சிட்டீங்க , தமிழன்டா .

    பால்கனி பூட்டிட்டா வேற வழியே இல்லையடா ? உயரம் கம்மியான பொண்ணு எனக்குன்னு எழுதினப்புறம் நீ எந்த ஊருக்காரன்னு guess பண்ண என்னடா இருக்கு.

    நா இன்னும் நெறய எதிர் பார்க்கிறேன் , ம் mind ல வச்சிக்கிறேன் , பெரிய ஆளா வருவ , போகும்போது மாமி கடையில ரெண்டு இட்லி , கொஞ்சம் போல கெட்டி சட்னி சொல்லிட்டு போய்ரா ராசா , ஏன்னா சாப்பாடு ரொம்ப முக்கியம்டா.

    ReplyDelete
    Replies
    1. Superb. It reminds me of the Balcony Scene in Shakespeare's 'Romeo and Juliet'. But, here both the Romeos and the Juliets are in the balcony. Your narration really kindles everyone to write their own as we all have had the same kind of experiences during our younger days. Keep narrating.

      Delete
  8. இரண்டாவது கதையில் சிக்குமா தேவதை? சொந்த கதையோ தொடர்கதையோ பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  9. அருமையான முயற்சி. நன்றாக இருந்தது. எனக்குத் தெரியும் யாருடைய சொந்த கதையென்று. இரெண்டாவது கதைக்காக காத்திருக்கிறேன். யாருடைய கதை வரப்போகிறது என.

    ReplyDelete
  10. அருமை நண்பா. முயற்சிகள் தொடரட்டும்..

    ReplyDelete
  11. Superb sir👏👏👏👌.Continue the real & imagination story...

    ReplyDelete
  12. கதை மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து நல்ல கதை எழுத்தாளராக வர வாழ்த்துக்கள். மலரும் நினைவுகள் மறக்க முடியாத நினைவுகள். நன்றி.

    ReplyDelete
  13. கிருஷ்ணன்3 May 2020 at 21:51

    பாராட்டுக்கள்... அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  14. சார் கதை அருமையாக உள்ளது வாழ்த்துகள்..��

    ReplyDelete
  15. [6:57 pm, 23/12/2021] Vimal Sankar Cycling: சொ.க.
    படு சோக்கா இருக்கு
    ஆனா குஜராத்தையும்
    தட்டு தட்டி ஒலியெழுப்பிய
    தகிடு தத்தையும் விடல
    சொ.க வில நீங்க குமரிக்காரன்தான்

    சொ.க 2 எப்ப
    அதில பூஸ்டர் ஊசிய
    மறந்திடாதீங்க
    ஏன்னா கோவிஷீல்டு
    3 மாததம்தான் ப்ரோஜனமாம் ����
    என்னையும் வாசகராமாத்திவிடுவீங்க போல��

    ReplyDelete