Thursday 16 March 2023

நினைவினுள் தங்கியவன் - ஆனந்தராஜ்


                          நினைவினுள்  தங்கியவன்  - ஆனந்தராஜ் 



          நள்ளிரவில்  அலறிய செல்போனை எடுத்துப்  பேசிய பின் எனது இதயம் ஒரு நிமிடம் செயலிழந்து போய்விட்டது. அவனது மனைவியைத் தவிர வேறு யார் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன். மரணம் மட்டுமே இந்த பூலோக வாழ்வில் நிதர்சனமானது   என்று அறிவுக்குத் தெரிந்திருந்தாலும் உணர்வுகளின் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது போன்ற உணர்வினை சில வருடங்களுக்கு முன்பு எனது சித்தியின் மரணச்செய்தித் தந்திருந்தது. அதன்பின் வெறுமையான ஒரு வேதனையைக் கொடுத்த மரணம் நண்பன் ஆனந்தராஜின்  செய்திதான்.  நண்பா, உன்னுடன் பழகிய நாட்கள், நட்பில் நனைந்த நிமிடங்கள் என்றும்  எங்கள் இதயத்தில்  நிறைந்திருக்கும். நீ எங்களை விட்டுச் செல்லவில்லை, எங்கள் நினைவுகளில் தங்கிவிட்டாய். 

             பள்ளி காலத்தில் தொடங்கிய நட்பு ....  நிலையாய் என்றும் நிலைக்கும் என்று நினைத்த நட்பு..  ஆனால் பள்ளிப் படிப்பின் இறுதியில்  நாம் பிரிந்து சென்றோம். உடலால் மட்டும், மனதால் அல்ல... அது டெக்னாலஜி காலம் அல்ல, அப்பொழுது யாரின் வீட்டிலும் தொலைப்பேசி இணைப்பே கிடையாது. பருவங்கள் பல கடந்தது நாம் அனைவரும் மீண்டும் சந்தித்த பொழுது அதே உற்சாகம், அன்பு, குதூகலம்... நாம் மாறவில்லை, நமது மனம், நட்பு  மாறவில்லை. நமது நட்பைப் பார்த்து பலரும் வியந்தார்கள். பள்ளியில் படிக்கும் பொழுது எப்பொழுதும் முதலில்தான் இருக்க வேண்டும் என்ற வெறி, வேகம் படிப்பில் தெரியும். ஆனால் இதிலுமா நண்பா நீ முதலில்... 


                 நெஞ்சு அடைக்கிறது நண்பா, மாரடைப்பால் மரணிக்கும் வயதா உனக்கு, நீ அடைந்த வேதனையை உன் குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டாயே.. கடவுள் கயவானி விட்டானா??.. உன்னை எங்களிடமிருந்து பிரிக்க, உனது அன்பான குடும்பத்தை விட்டு உன்னை அழைத்துச்  செல்ல.. நண்பா நாம் சந்தித்தால், பேசினால் சிரிக்க மட்டுமே தெரிந்த உதடுகளை இன்று சிணுங்கச் செய்து விட்டாய். Smule ஆஃப்பில் நீ பாடி அனுப்பும் பாடல்களுக்கு மதிப்பெண்கள் அளித்து நாங்களும் ஜட்ஜ் ஆகியிருந்தோம். எங்களை பதவியிறக்கம் செய்ய உனக்கு எப்படியடா மனம் வந்தது. கள்ளமில்லா உன் முகத்தைப் பெட்டியிலே பார்த்த பொழுது உன் நினைவுகளின் நெருடல் நெருஞ்சியாய் தைத்தது. எழுந்து வா நண்பா.. நீ ஒருமுறை மரணித்தாய் ஆனால் இனி உன் நினைவுகள் வரும் பொழுதெல்லாம், நாங்கள் ஒவ்வொரு முறையும் மரணிப்போமே.. 

        அடே நண்பா, நிழல்போல் இருந்தவன், இன்று நினைவாய் மாறினாய்... கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர்த் துளியாக்கினாய்.. இதயங்கள் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய, எங்களைத் தவிக்கவிட்டு எங்கேடா நீ மட்டும் பயணமானாய்??. அன்பைப்  பகிர்ந்திருக்கிறோம்.. அறிவைப் பகிர்ந்திருக்கிறோம்.., உணவைப் பகிர்ந்திருக்கிறோம்.., இன்பத்தைப் பகிர்ந்திருக்கிறோம்.., துன்பத்தைப் பகிர்ந்திருக்கிறோம்.., மறந்தது விட்டாயா?? மரணப்படுக்கையை மட்டும்??... டேய்  நீ எங்கும் போகவில்லை, எங்கள் இதயத்தில் வாழ்கிறாய்.

இறுதியாக:

    ஆனந்த்,  நீ மடிந்தது போகவில்லை, எங்களது மனத்தில் படிந்து போயிருக்கிறாய்.  நீ மண்ணில் புதைக்கப் படவில்லை... எங்கள் மனத்தில் விதைக்கப் பட்டிருக்கிறாய்... என்றாவது ஒருநாள் எங்கோ ஓரிடத்தில் நாம் மீண்டும் சந்தித்துக் கொள்வோம்... நமது நட்புக்கு என்றும் மரணமில்லை.....


5 comments:

  1. நமது நட்புக்கு என்றும் மரணமில்லை..

    ReplyDelete
  2. உண்மைதான்..நம் மனதில் குடி இருக்கிறான்...இத்தனை வேதனையை மனதில் வைத்து கொண்டு எனக்கு எப்படி ஜெகன் ஆறுதல் சொன்னாய்...

    ReplyDelete
  3. பழகிய நாட்கள்
    நட்பில் நனைந்த நிமிடங்கள்
    நினைவில் நின்று - நமது
    நெஞ்சை கனமாக்குகிறதே ! 😢

    ReplyDelete
  4. Sorry to hear bro! Deepest condolences! May his soul RIP! Nicely written tribute to your friend, it’s show he is sweet and special. Stay strong and I hope time will help to ease the pain!

    ReplyDelete
  5. யாரோ என்று கடந்து செல்ல இயலவில்லை சார் எனக்கும் வலிக்கிறது உங்கள் இரங்கல் வரிகளை வாசிக்கும் போது அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரபஞ்ச பேராற்றல் துணை புரியட்டும். .

    ReplyDelete