Monday 14 October 2019

பள்ளிகொண்டபுரம்



               பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன்



நீல. பத்மநாபன் எழுதிய தலைமுறை நாவலை வாசித்த பின் அவர் எழுதிய பள்ளிகொண்டபுரம்  நாவலை வாங்கினேன். ரொம்ப பெரிய ஆர்வம் இல்லாமல்தான் வாசிக்கத் தொடங்கினேன்... ஆனால் வாசிக்க ஆரம்பித்த பின் நாவலைக் கீழே வைக்க மனமில்லை. நாவலின் நடை என்னைக் கட்டிப்போட்டு விட்டது. கதையின் களம் திருவனந்தபுரத்தின் தெருக்கள் மற்றும் கோவில்கள்தான்.  ஆவூரின் பின்னணியில் முழுக்க முழுக்க கொஞ்சம் மலையாளம் கலந்தது எழுதப்பட்டாலும் திருவனந்தபுரம் என்ற பெயர் நாவலின் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

பள்ளிகொண்டபுரத்தில் வாழும் அனந்தன் நாயர் வாழ்க்கையின் கடைசி இரண்டு பக்கங்கள்தான் கதை. அந்த இரண்டு நாட்களிலும் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவர்களுக்கிடையேயான உரையாடல்களில் அவரது வாழ்க்கையின் மற்ற  பக்கங்கள் நினைவுடாக வருகிறது. தலைமுறை நாவலிலும் கதையை நாயகன் திரவியத்தின் எண்ணங்களின் வழியாகவே  நகர்த்தியிருப்பார் நாவலாசிரியர்.  பள்ளிகொண்டபுரம் அதனை விடச் சிறப்பாக அனந்த நாயரின் மனவோட்டத்தை, அவரின் பார்வையிலே சொல்லுகிறது. அனந்த நாயரின் ஐம்பதாண்டுக் கால வாழ்க்கை ஊடாக முன்பின்னாக சொல்லப்படுகிறது. அவர் சந்திக்கும் மனிதர்களைத் தொடர்புப் படுத்தி நிகழ்கால மற்றும் இறந்தகால சம்பவங்கள் மாறி மாறி வருவது சிலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனக்கு அந்த நடைதான் சுவாரசியத்தைக் கொடுத்தது.

திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் சாதாரண குமாஸ்தா வேலையில் இருக்கும் அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயினி பேரழகி.  சமஸ்தானத்தில் உயர்பதவியிலிருக்கிற விக்கிரமன் தம்பி, அவளுடைய அழகில் மயங்கி மோகம் கொள்கிறான். அதனால் அனந்தன் நாயரின் வாழ்க்கையில் வீசும் சூறாவளியே கதையின் ஆணிவேர். பார்க்க மிகவும் சாதாரண கதை போல் தோன்றினாலும் வாழ்வியலை ஆசிரியர் மனிதர்களின் அகமன இயக்கத்தைக் கொண்டு அலசும் விதம் அதியற்புதம்.

தன் இயலாமையின் கோபங்களை எல்லாம் சராசரி மனிதர்கள் பொதுவாக தன் குடும்பத்தினர் மீது காட்டுவார்கள். அதுபோல்  கார்த்தியாயினின் அழகும், விக்கிரமன் தம்பியை எதிர்க்க முடியாத இயலாமையால் உண்டான பயமும், கோபமாக மாறி கார்த்தியாயினிடம் எப்பொழுதும் சண்டையிடுகிறார். ஒரு கட்டத்தில் அவரையும், பிள்ளைகளையும் விட்டு அவள் விக்கிரமன் தம்பியுடன் சென்று விடப் பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்க்கிறார். ஒரு சராசரி மனிதன் எப்படியெல்லாம் சிந்திப்பானோ அப்படிதான் அனந்தன் நாயரும் சிந்திக்கிறார். மனைவி கார்த்தியாயினியின் செயலை பாவமாகவும், பிள்ளைகளை வளர்க்கக் கஷ்டப்படும் தன் வாழ்க்கையைத் தியாகமாகவும் கருதுகிறார். ஆனால் கடைசியில் அம்மாவின் தற்போதைய செல்வாக்கு மூலம் லாபம் அடைய நினைக்கும் மகனின் செய்கையால் மனம் உடைந்து போகிறார். 

நாவல் தொட்டிருக்கும் இன்னொரு உச்சம்,  மாற்றங்களை மனித மனம் எப்படி ஏற்றுக்கொள்ளத் தடுமாறுகிறது என்பது. பழைய பஞ்சாங்கமான சாதிப்பெருமைகள், அரசியல், குடும்ப உறவுச் சிக்கல்கள் எனச் சகலமும் அனந்தன் நாயரின் கண்முன்னே மாறிக் கொண்டிருக்க அதையும் எதிர்கொள்ள முடியாமல் தவிர்க்கிறார் . அவரை போலவே அந்த நகரமும், மற்றவர்களும் தவியாய் தவிப்பதைக் கதையின் ஓட்டத்தினிலே அருமையாக எழுதியுள்ளார் நாவலாசிரியர். 

நாவலின் முடிவு மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் மேலும் அவர் மனதைக் கிளறப் போகும்  சூழ்நிலைகளிலிருந்து ஒரு வழியாகத் தப்பித்துக் கொண்டார் என ஒருவித ஆறுதலும் அளித்தது. ஒரு சாமானியன் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று என்னும் போது ஏற்படும் சுயவெறுப்பும், அதனால் தோன்றும் எல்லையற்ற மனநாடகங்களும் இத்தனை கூர்மையாக இதுவரை நான் வாசித்த எந்த நாவலிலும் வெளிப்பட்டதில்லை. 


இறுதியாக :

தமிழில் எழுதப்பட்ட முதல் நனவோடை உத்தி ( Steam of Conscious) நாவல் என ஒரு குறிப்பில் படித்தேன். எப்படி இந்த நாவல் விருதுகளின் பட்டியல்களிருந்து விடுபட்டுப் போனது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது . இது ஒருமுறை வாசித்து விட்டு மறந்துவிடும் வெறும் நாவல் அல்ல, அனந்தன் நாயர் ஒருவகையில் நமக்குள் இருக்கும் ஒரு சாதாரண மனிதனையே  பிரதிபலிக்கிறார். நம்முடைய குரூரமான மனதுக்கும் அதை நியாயப்படுத்துகிற எண்ணங்களுக்குமான போராட்டத்தை  எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் சொல்லும்  மிகச்சிறந்த படைப்பு.


2 comments:

  1. மிக அருமை 👌

    ReplyDelete
  2. உங்களின் கருத்தை வழிமொழிகிறேன். one of the best novel in tamil.

    ReplyDelete