Wednesday 2 October 2019

வெற்றித் திருநகர்



                     வெற்றித் திருநகர் - அகிலன்





மீண்டும் ஒரு அகிலனின் சரித்திர நாவல் . பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வாங்கி வாசித்த நாவல். கிருஷ்ணதேவராயரின் விஜயநகர பேரரசு மூலம் எவ்வாறு நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் தென்னாடு (தற்போதைய தமிழ்நாடு) வந்தது என்பதுதான் நாவலின் முடிவு. அப்போ தொடக்கம்😀.

லாகூர் சுல்தான் தெளலத்கான், காபூலிலிருந்து பாபரை டெல்லி மன்னர் இப்ரஹிம் லோடிக்கு  எதிராகப் படையெடுத்து வர அழைக்கும் காலகட்டத்தில் தென்னிந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளை விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆட்சி செய்து வருகிறார். அவரை தீர்க்க தரிசனம் நிறைந்தவராக, பரத கண்டத்தின் பெரும்பான்மையான சிற்றரசர்களின் ஒற்றுமையின்மையால், அந்நியர்கள் நுழைந்து அதனால் பிற்காலத்தில்  ஏற்படப் போகும் மாற்றங்களையும், பாதிப்புகளையும் நினைத்துக் கவலை கொள்ளும் மன்னராகச் சித்தரித்து உள்ளார். மொகலாயர்களின் படையெடுப்பைத் தடுக்க அண்டை நாடுகள் அனைத்தையும்  கூட்டுச் சேர எடுக்கும் முயற்சிகளுக்கு  அவரின் அவையில் உள்ள அமர நாயக்கர்களே (பிரபுக்கள்) முட்டுக்கட்டை போட்டு விடுகிறார்கள்.

வீரசோழரால் பாதிக்கப்படும் பாண்டியர்களுக்கு உதவி செய்யச் சென்ற விஸ்வநாதனின் தந்தை நாகம நாயக்கர், அமைச்சர் சாளுவ நரசிம்மரின் சொல்லைக் கேட்டு சந்திரசேகர பாண்டியனிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுக்கிறார். அதனால் கோபம் கொள்ளும் ராயர், விஸ்வநாதனையே தந்தைக்கு எதிராகப் போர் செய்ய அனுப்புகிறார். கிருஷ்ணதேவாரயருக்கு பின்பு விஜய நகரச் சாம்ராஜ்யம் சிதைந்து விடும் என நினைக்கும் அமைச்சர் சாளுவர்,  அதனால் மதுரை மற்றும் தஞ்சை பகுதிகளை உள்ளடக்கிய தனி சமஸ்தானத்தை உருவாக்கி தன் மருமகனை அதற்கு மன்னராக்க சில சதிகளைச் செய்கிறார். ஆனால்  அவர் செய்யும் சதிகள் எல்லாம் நாவலில் பெரிய திருப்பத்தையோ அல்லது எந்தவித பதைபதைப்பையோ ஏற்படுத்தவில்லை. எனவே நாவல் ஒரே நேர்க்கோட்டில் அதிக சுவாரசியத்தைத் தராமல் பயணிக்கிறது.  சாளுவரின் மகள் இலட்சுமியும், விஸ்வநாதனும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். அந்த  ஈர்ப்பு மற்றும் சேரமன்னன் உதயமார்த்தாண்டனுக்கு இலட்சுமி மேல் உள்ள  ஆசையைப் பகடைக்காயாய் பயன்படுத்தி தன் இலக்கை அடைய முயல்கிறார். கடைசியில் இலட்சுமியை மணக்கக் கூடாது என விஸ்வநாதனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு இறப்பது ஒன்று மட்டும்தான் கொஞ்சமாவது உருப்படியான வில்லத்தனமாக உள்ளது.

நாவல் முழுவதும் மன்னர் ராயரின் எண்ணமாக ஒற்றுமையான தேசம், இந்து முஸ்லீம் மதநல்லிணக்கம் எனப் பல கருத்துக்களைப் போட்டுத் திணித்து உள்ளார். கொஞ்சம் ஓவர் டோஸ் ஆன மாதிரி இருந்தது. இந்தியாவின் மீது சீனா படையெடுத்த சுழலும், பாகிஸ்தானின் தொல்லைகளும் அகிலனிடம் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தினால் வெற்றித் திருநகர் நாவலை எழுதினாராம். ஆனால்  வாசித்த எனக்குள், வெற்றித் திருநகர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிஜம்.


இறுதியாக :

கிருஷ்ணதேவராயரின் கதை எனினும் உடனே நமக்கெல்லாம் நினைவுக்கு வரும் தென்னாலிராமன் பத்தி ஒரு குறிப்புகள் கூட நாவலில் இல்லை. மேலும் அவரின் புகழ்பெற்ற அமைச்சர் அப்பாஜி(திம்மரசு), நாவலின் தொடக்கத்திலே இளவரசரைக் கொன்ற குற்றத்திற்காகத் தன் குடும்பத்தினரோடு சிறையில் இருப்பதாக வருகிறது.

2 comments:

  1. மிக அருமை 👌

    ReplyDelete
  2. அகிலன் எழுதிய நாவல் என்ற ஆவலுடனும், நெடுநாளாய் வாசிக்க வேண்டும் என்றிருந்த ஆவலுடனும் வாசிக்க ஆரம்பித்தேன். நீ கூறிய படியே எந்த தீடிர் திருப்பங்களும், சுவாரசியமும் இல்லாமல் பாட்டி வடை சுட்ட கதை மாதிரி ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது.
    கதையில் விசுவநாதன் இலட்சுமியின் காதலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. அகிலனின் கதாநாயகியான ரோகிணி மாதிரியே இலட்சுமியும் தேம்பித் தேம்பி அழுகிறாள். மெழுகாய் உருகுகிறாள். நிறைவேறாத காதல் தரும் தரும் வலி அதிகம் என்ற எண்ணமுடையவன் நான். ஆனாலும் விசுவநாதனின் நிறைவேறாத காதல் எனக்குள் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை என்பதே நிஜம்.
    உனக்கும் அந்த உணர்வு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ரோகிணி, சிவகாமி அளவிற்கு ஏன் இலட்சுமி நம் மனதைக் கவரவில்லை என்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
    நீ சொன்னாயே சிவகாமி மாமல்லரை சந்தேகிப்பது, சண்டையிடுவது அவளுக்கு அவர்கள் காதல் மீது நம்பிக்கையே இல்லை என்றாயே அதுதான் அதேதான். அதேபோல இளங்கோ ரோகிணிக்கிடையில் எத்தனை எத்தனை சண்டைகள். ரோகிணியின் உயிரே போயிருக்கும்.
    காதலர்கள் என்றால் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே காரணம் இல்லாமலேயே சண்டையிட வேண்டும், சண்டையிடுவார்கள். கண்டிப்பாக ஊடல் இல்லா காதல் வெறும் வெற்று நாடகம். (திரும்பவும் சொல்கிறேன் எனக்கு காதல் அனுபவமில்லை) இலட்சுமிக்கும் விசுவநாதனுக்கும் இடையில் ஏன் ஊடல் நிகழ வில்லை என்பதற்கு காரணமிருந்தாலும் அகிலனின் வேங்கையின் மைந்தன் ரோகிணி அளவிற்கு கவர வில்லை. இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை கதையின் நாயகன் ஒரு சாதாரண சிற்றரசன் (அமர நாயகன்).
    சமூகத்தில் மக்கள் எந்த மத, மொழி, இன வெறியும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால்தான் நாடு பலமாக இருக்கும் என்பதை வலியுறுத்துகிறார். இது இக்காலத்திற்கும் பொருந்தும் என்பது என் எண்ணம்.
    ஏன் சரித்த நாவல்களுக்காக கல்கி இன்றும் கொண்டாடப் படுகிறார் என்பது இந்த மாதிரியான நாவல்களை படிக்கும் போதுதான் புரிகிறது.

    ReplyDelete