Monday 9 November 2020

அகல்விளக்கு

                        

               அகல்விளக்கு - மு. வரதராஜன்


மு. வரதராஜன் அவர்கள் எழுதிய அகல்விளக்கு நாவலை எனது கல்லூரி காலத்தில் வாசித்துள்ளேன். மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டியது 1961'ஆம் ஆண்டு நாவல் பெற்றிருந்த சாகித்ய அகாடமி விருது. 

     வேலய்யன் என்ற வேலுவின் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களின் கதைதான் அகல்விளக்கு. பெருங்காஞ்சி ஊரின் நிலக்கிழார் சாமண்ணா. அதிகம் படித்தால் தன் மகன் சந்திரன் கெட்டுப்போய் விடுவான் என்றெண்ணி மேல் வகுப்புக்கு அனுப்ப மறுக்கிறார். சந்திரனின் மதி நுட்பத்தைக் கண்ட பள்ளிக்கூடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் அவரது மனதை மாற்றுகிறார். அந்த ஊரில் எட்டாவது வகுப்பிற்கு மேல் இல்லாததால் வாலாசாப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் சேருகிறான் சந்திரன். அங்கு அவனுக்கு வேலுவின் அறிமுகம் கிடைக்க இருவரும் இணைபிரியாத நண்பர்கள் ஆகிறார்கள். படிப்பில் பின்தங்கியிருக்கும் வேலுவுக்குச் சந்திரன் பாடங்களை விளக்கி உதவுகிறான். சந்திரனின் தங்கை கற்பகத்தின் அழகுணர்ச்சி வேலுவை கவர்கிறது. பக்கத்து வீட்டுப் பாக்கியம் அம்மாள் வேலுவிடம் சிறுவயதிலிருந்தே அன்பு பாராட்டினாலும் அவள் சந்திரனிடம் செலுத்தும் அன்பு வேலுவுக்குக் கொஞ்சம் பொறாமை உணர்வைத் தூண்டுகிறது. இறுதித் தேர்வு சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்படும் வேலு தேர்வில் தோல்வி அடைகிறான். 

        தேர்ச்சி பெற்ற சந்திரன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்கிறான்.  அதன்பின் வேலுவிற்கு சந்திரன் அவனை விட்டு சிறிது விலகுவது போல் தோன்றுகிறது. அடுத்த ஆண்டு தேர்ச்சி அடைந்து அதே கல்லூரியில் சேரும் வேலுவிடம் முன்புபோல் நட்பு பாராட்டாமல் விலகியே செல்லுகிறான் சந்திரன். கல்லூரியில் வேலுவுக்கு மாலன் என்ற மாணவனுடன் நட்பு ஏற்படுகிறது. மாலனின் மூடநம்பிக்கைகள் சலிப்பைத் தந்தாலும் அவனுடன் மிகுந்த நட்புடன் பழகுகிறான். இமாவதி என்ற மாணவியின் நட்பைக் காதல் எனத் தவறாகப் புரிந்து அவளுக்கு நடக்கும் திருமண ஏற்பாட்டால் இறுதித்தேர்வுகளை எழுதாமல், யாரிடமும் சொல்லாமலும் கல்லூரியை விட்டுச் செல்கிறான் சந்திரன். சந்திரனை வெறுக்கும் மாலன் அவன் நினைவுகளைத் துறந்து தேர்வில் கவனம் செலுத்தும்படி வேலுவை அறிவுறுத்துகிறான். சில மாதங்கள் கழித்து சந்திரன் ஊட்டியில் இருப்பதாகத் தகவல் கிடைக்க சாமண்ணாவுடன் சென்று அவனை மீட்டு வந்து வள்ளி என்ற பெண்ணுடன் திருமணமும் செய்து வைக்கிறார்கள்.

         கற்பகத்திற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும் அவனைப் பற்றிய தகவல்களைக் கூறுமாறு சாமண்ணா, வேலுவுக்குக் கடிதம் எழுத, அந்த மாப்பிள்ளை மாலன்தான் எனத் தெரிந்து சந்தோசமும் கொஞ்சம் கவலையும் அடைகிறான். கல்லூரி படிப்பை முடிக்கும் வேலுவுக்குச் சர்வீஸ் கமிஷன் தேர்வின் மூலமாக நல்ல வேலையும் கிடைக்கிறது. இடையே அத்தை மகள் கயற்கண்ணியுடன் திருமணமும் நடைபெறுகிறது. சந்திரன் யாரையும் மதிக்காமல் பல பெண்களும் தொடர்பு எனச் சீரழிந்து போகிறான். மாலனோ ஜோசியங்களை நம்பி வேலைக்குப் போகாமல் சுயதொழில் தொடங்க தன் மாமனார் சாமண்ணாவிடம் பணம் கேட்டு மனைவியை விரட்டுகிறான். சந்திரனின் கொடுமைத் தாங்காமல் அவன் மனைவி தற்கொலை செய்துகொள்ளச் சந்திரன் ஊரை விட்டே ஓடுகிறான். காலமாற்றத்தில் மாலன் மனம் திருந்தினானா?? சந்திரனின் திரும்பி வந்தானா?? என்பதே நாவலின் முடிவு. 

             நண்பர்களின் வாழ்வில் நடக்கும் சமுதாய சிந்தனை மாற்றங்கள், அவர்களின் குணநலன்களால் வாழ்க்கையில் தோன்றும் மேடு பள்ளங்களை அலசுகிறார் ஆசிரியர் மு. வரதராஜன். பெரும்பாலும் பண்பாட்டுச் சிக்கல்களைக் கதைமாந்தர்களின் விவாதங்கள் மூலம் முன்னெடுத்துச் செல்கிறார். எளிதில் ஊகிக்கக்கூடிய முடிச்சுகளும், கொஞ்சம் செயற்கையான உணர்ச்சிகர தருணங்களும், மரபான தீர்வுகளையும் கொண்டிருந்தாலும் வாழ்க்கை நெறிமுறைகளை மட்டுமே பேசி அலுப்பைத் தராமல் பயணிப்பதால் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டிய நாவல்தான். அதுவும் மாணவப் பருவத்தினர் கட்டாயம் வாசிக்கப் பரிந்துரைப்பேன். அவர்களின் சிந்தனைகளைச் சீரமைக்க உதவலாம். சந்திரனைப் போல நல்ல அழகும், கூரிய அறிவும் பெற்று அதனால் செருக்கடைந்து சீரழிந்து போவதை விட வேலய்யன் போல் அறிவு குறைவாக இருந்தாலும் சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ்வதே உயர்வு என்பதை வாசிப்பவர்கள் உள்ளத்தில் உருவாக்குகிறார்.

இறுதியாக:

     கதையில் வரும் பாக்கியம் அம்மாள் கதாபாத்திரம் இதுவரை நான் எந்த நாவலிலும் பார்த்திராத தனித்துவமானது. பாக்கியம் வாயிலாக எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையும், ஞானமும் நம்மை நல்வழியில் கொண்டு செல்லும் என்பதை நமக்குப் புரியவைக்கிறார். சிறந்த நூல்களை வாசிப்பவர்களை, அவை எந்த அளவிற்கு ஒளிவிளக்காக மாற்றுகிறது என்பதற்குப் பாக்கியத்தைக் கொண்டு விளக்கியது அருமை. அதுவும் அந்த விளக்கின் ஒளிபட்ட (அறிவுக்கூர்மையான வாதங்களால்) கற்பகமும், கயற்கண்ணியும், மணிமேகலையும் நற்பண்புகள் பல பெற்று வாழ்க்கை சிக்கல்களிலிருந்து மீள்வதாக நகரும் விதம் அகல் விளக்காகப் பிரகாசிக்கிறது.

2 comments:

  1. அனைவருக்கும் பழக்கப்பட்ட கதைக்களம். வாசிக்க எளிமையான நடை, வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு கருத்துக்கள் எனப் பன்முகத்தன்மை கொண்ட நாவல். நான் இருமுறை வாசித்து உள்ளேன். உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன் கட்டாயம் அனைவரும் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டிய நாவல்.

    ReplyDelete