செல்லாத பணம் - இமயம்
செல்லாத பணம் நாவல் நீண்டதொரு கதையைச் சொல்லும் நாவல் அல்ல. ஒரு சம்பவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதனை மிக யதார்த்தமாக, பெரிய திடீர் திருப்பங்கள் கிடையாது ஆனால் வாசிப்பவரை பதைபதைப்போடு அடுத்து என்னவாகும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் இமயம் எழுதியுள்ளார். பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் நடேசன், அமராவதி தம்பதியினருக்கு முருகன், ரேவதி என இருபிள்ளைகள். பொறியியல் படிக்கும் ரேவதி எதிர்பாராதவிதமாக ஆட்டோ டிரைவர் ரவியைக் காதலித்து திருமணம் செய்கிறாள். குணநலன்கள் சரியில்லாத ரவியால் மிகவும் சித்திரவதைகள் படும் அவள் ஒருநாள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். நடேசனின் குடும்பம் எவ்வளவு பணம் செலவழித்தும் ரேவதியைக் காப்பாற்ற முயற்சி செய்ய அந்த பணம் அவளைக் காப்பாற்றியதா என்பதுதான் நாவலின் முடிவு.
ரேவதி பர்மா பஜாரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவியைக் காதலிப்பதும், அதற்குப் பெற்றோர்கள் மறுப்பு தெரிவிப்பதும், அவள் தன் முடிவில் இறுக்கமாக நிற்பதால் வேறு வழியின்றி அவனுக்கே திருமணம் செய்துக்கொடுப்பதுமான கதையின் முன்பகுதி சுமார் 25 பக்கங்கள்தான். நாவலின் மீதி பக்கங்கள் அனைத்தும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரேவதி கிடக்கும் பொழுதுதான் நடக்கிறது. பெரும்பாலும் உரையாடல்களின் ஊடாக, அதுவும் உணர்வுகள் கொப்பளிக்கும் உரையாடல். ரேவதி தற்கொலை செய்யத் தீக்குளித்தாளா?, ரவிதான் கொளுத்தினானா? இல்லை தவறுதலாக நடந்த விபத்தா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், ரேவதியின் குடும்பம் ரவிதான் கொளுத்தினான் என அவள் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள் அவனை வஞ்சகம் தீர்க்க.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் தீக்காயத்திற்கான அவரச சிகிச்சை நடைமுறைகள், அங்குள்ள ஊழியர்களின் செயல்பாடுகள், நோயாளிகளின் உறவினர்களின் அணுகுமுறை எல்லாவற்றையும் வெகு இயல்பாக எழுதியுள்ளார். நாவலை வாசிக்கும்போது இமயத்தின் சொல்லாட்சியில் ஏதோ நாமே அந்த மருத்துவமனையிலிருந்து சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது. நாவலில் ரவி, முருகனின் மனைவி அருள்மொழியிடம் தன் பக்க ஆதங்கத்தைப் பேசும் பகுதி முக்கியமானது. ரேவதியின் உறவினர்கள் எல்லோரும் தங்கள் பக்கம் மட்டுமே சிந்திக்க, அருள்மொழி மட்டும் கொஞ்சம் ரவியின் பக்கமும் சிந்திக்கிறாள். ஆனாலும் ரவியின் தர்க்கங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
கதாபாத்திரங்களின் தத்ரூபமான சித்தரிப்புகள், மிக யதார்த்தமான உணர்ச்சி பொங்கும் உரையாடல்களைக் கொண்டு இரண்டு வரிக்கதையை 200 பக்கங்களுக்கு மேல் நாவலாக இமயம் படைத்துள்ளார். நாவலில் வரும் சில கதைமாந்தர்கள் மிகச் சாதாரணமாகப் பணத்தை வீச வேண்டியதுதானே என்கிறார்கள் ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் பணம் மட்டுமே அத்தியாவசியமானதல்ல என்பதை ஆசிரியர் இறுதியில் உணர்த்துகிறார். இமயத்தின் கதை சொல்லும் ஆற்றல் உங்கள் உள்ளத்தை ஊடுருவி கண்களில் கண்ணீரைத் துளிக்க வைக்கலாம். மனித உறவுகளில் சாதி, பணம், தகுதி ஏற்றத்தாழ்வுகள் எத்தனை சமூக சிக்கல்களை என்பதை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள வாசிக்கவேண்டிய நாவல் இந்த செல்லாத பணம்.
இறுதியாக :
இதுபோன்ற வலிகளைப் பேசும் பல நாவல்கள் அதற்கான தீர்வை முன்வைப்பதில்லை. அதனால் சிலருக்கு நாவல் பேசும் பிரச்சினையின் ஆழம் புரியாமல் வெவ்வேறு விதமாக அலசுவார்கள்.
இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. 48 - புத்தகங்களைப் பற்றிய என் மனதில் பட்ட எண்ணங்கள், 2- என் மனதில் தோன்றிய சொந்த கதைகள். பெரிய திட்டமிடல் எதுவுமின்றி ஆரம்பித்த பயணம் 50'தை தாண்டி தொடர்கிறது. இதுவரை ஆதரவு தந்து உற்சாகப் படுத்திய அனைவருக்கும், இனி வரும்காலத்தில் தொடரும் பயணத்தில் சேர்ந்து பயணிக்க வருகை தரப்போகிறவர்களுக்கும் நன்றி 🙏...
அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள், பயணியுங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.. உங்கள் வாசிக்கும் மற்றும் எழுதும் பயணம், பணி தொடரட்டும். தொடர்ந்து வாசித்து மேலும் அவற்றினை பற்றி எழுதுவது எளிதானதல்ல. செல்லாத பணம் நாவலை நான் முன்பே வாசித்து விட்டேன். மிகவும் யதார்த்தமான நாவல்.இமயம் கதைமாந்தர்களின் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். நீங்கள் சொல்வது மாதிரிதான் நாவலின் முடிவு சொல்லும் கருத்தைச் சிலர் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும்.
ReplyDeleteCongratulations 🎉 for the half-century 👏👏👏 very nice write up as always! For a moment I thought செல்லாத பணம் is about demonetization but far more deeper subject. I think many people who lost their loved ones due to COVID would have felt many aspects of செல்லாத பணம்! Nice cover picture
ReplyDeleteKeep going,dear brother.
ReplyDelete