Saturday 23 February 2019

குண்டு மல்லிகை


                      அரு  இராமநாதன் - குண்டு மல்லிகை





 வீரபாண்டியன் மனைவி நாவல் பத்தி சிலரின்  கருத்துக்களைப் படிக்கும் பொழுதுதான் குண்டு மல்லிகை நாவல் பற்றித் தெரிந்து கொண்டேன். கல்கி வார இதழில் தொடராக வந்த கதையாம். பல ஆண்டுகளாக கல்கி வார இதழில் வரும் நாவல்களை எல்லாம் எனது பெற்றோர்கள்  எடுத்து பைண்டிங் செய்து விடுவார்கள். இந்த நாவல் எப்படித் தவறியது எனத் தெரியவில்லை.

குண்டு மல்லிகை, காதலைப் பேசும் சமூக  நாவல்தான்.  இரண்டு பெண்களின் (இருவரும் சகோதரிகள்தான் ஆனால் வெவ்வேறு தாய்க்குப் பிறந்தவர்கள்) கதை. உமா மற்றும் வசந்தி சகோதரிகள் எனினும் இருவர்களின் குணங்களும் மாறுபட்டு ஆனால் நேர்மறையாக உள்ளது. வீரபாண்டியன் மனைவி நாவலில் வரும் ஜனநாதன் போல் இதிலும் ஜகந்நாதன் என்னும் கதாபாத்திரம் உள்ளது. அவர்கள்  இருவரும் அந்தந்த நாவலில் பேசும் மனிதர்களின் குணநலன்கள் சுட்டிக்காட்டும் வசனங்கள் மற்றும் மனித உறவுகள் பற்றிச் சொல்லும் கருத்துக்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை தெரிகிறது. ஜகந்நாதன் சொல்லும் கருத்துகளுக்காகவே இந்நாவலை வாசிக்கலாம். 

 பணக்காரவீட்டு பிச்சுமணி தன்னை விட வயது அதிகமான உமாவை தன் தாத்தாவின் எதிர்ப்பையும் மீறிக் காதலிக்கிறான். தன்னை விட வயது அதிகமான பெண்ணை காதலித்துதிருமணம் செய்வது அக்காலங்களில் எளிது அல்ல. அதனை பிச்சுமணி சாத்தியப் படுத்துகிறான். மறுமுனையில் ஆண்களையே வெறுக்கும் வசந்தி, ஒருக் கட்டத்தில் ஜகந்நாதன் மீது ஆசை கொள்கிறாள். கதை முழுவதும் ஐந்து பிரதான பாத்திரங்களையே சுத்தி  வந்தாலும் சலிப்பு தரவில்லை. மேலும் யாரையுமே கெட்டவர்களாநேரடி வில்லன்களாகச் சித்தரிக்காமல் சூழ்நிலைகளையும்மனிதர்களின் மாறுபட்ட நல்ல எண்ணங்களுமே கதையில்  திருப்பங்களை ஏற்படுத்துகிறது.

என்னைக் கவர்ந்த கதாபாத்திரம் உமாதான். உமா போலப் பெண் கிடைக்க எந்த ஆணும் தவம் செய்திருக்க வேண்டும். உமா வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்கள்தான் அவளை அவ்வளவு பக்குவப் படுத்திருக்க வேண்டும். உமாவை பற்றி இந்த கதையை வாசித்த அனைவரிடமும் குதூகலமாகப் பேசிக் கொண்டே இருக்கிறேன். பிச்சுமணி பாத்திரம் உணர்ச்சி பொங்கும் நபராகவும், ஜகந்நாதன் அதற்கும் முற்றிலும் நேர் எதிராகவும் படைக்கப் பட்டுள்ளது. 

உமா வீட்டில் இருக்கும் சின்ன பிள்ளையாரையும் ஒரு பாத்திரமாகக் கதை முழுவதும் உலாவச் செய்திருப்பது அருமை.

இறுதியாக :

வசந்தியின் முற்போக்கான கருத்துகளுக்காகவே அவளுக்குத் திருமண நடக்காமலே ஆசிரியர் பழிவாங்கி விட்டாரா அல்லது அவள் முதலில் கல்யாணமே வேண்டாம் என ஆசைப்பட்ட மாதிரி செய்து விட்டாரா எனக் கதையை வாசித்தவர்கள்  கூறுங்கள். 
            

2 comments:

  1. நானும் வாசித்து முடித்து விட்டேன். நிஜமாகவே உமாவின் காதலைப்போல ஒரு அன்பை பெற ஒவ்வோரு ஆணும் தவம் செய்திருக்க வேண்டும். வசந்தியின் ஆரம்ப கால ஆசையே நிறைவேறியதாக தோன்றுகிறது. பிச்சுமணியின் காதலை ஏற்றுக் கொள்ள வயது வித்தியாசத்தை உமா கூறுவதை மனது ஏற்றுக் கொண்டாலும் எப்போதோ நின்று போய் யாருக்கும் தெரியாத கல்யாண விசயத்தை காரணமாய் சொல்லுவதினை ஒத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும் திருமணம் நடக்கவே இல்லை. ஆனால் உமா நான் பழையவள், நீ புதிய பெண்ணாய், உன் வயதுக்கேற்ற இளம் பெண்ணாய் பார்த்து திருமணம் செய்து சந்தோஷமாய் இரு என்று கூறுவது எதோ உமா கன்னி கழிந்தவள் ரீதியில் கதாசிரியர் சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 23 வயது பெண்ணை கிழவி என பிச்சுமணியின் தாத்தா கூறுவதில் கூட அவரின் கோபம், வெறுப்பு, ஏமாற்றம் என அர்த்தப்படுத்திக் கொண்டாலும், அதையே உமா வாயிலானாலேயே சொல்ல வைத்திருப்பதும் முரணாக தோன்றுகிறது. ஜெகந்நாதனின் பாத்திரத்தை கடைசி வரை புரிந்து கொள்ள முடியாத அளவு படைத்திருப்பது சிறப்பு. கடைசி கட்டத்தினை வாசிக்கும் பொழுது பழைய சினிமாவின் க்ளைமாக்ஸ் காட்சியினை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முடிவும் ஓரளவு யூகிக்க முடிகிறது.

    ReplyDelete
  2. அருமை ஜெகன் முழு கதையும் படிக்க முடியாத குறையை உன் கதைச் சுருக்கம் தீர்த்துவைக்கிறது.

    ReplyDelete