Wednesday 5 February 2020

கோபல்லபுரத்து மக்கள்



                   கோபல்லபுரத்து மக்கள் -
                                           கி. ராஜநாராயணன்


கி. ராஜநாராயணின், கோபல்ல கிராமம் தந்த தாக்கம்தான் கோபல்லபுரத்து மக்கள் நாவலை வாசிக்கத் தூண்டியது. இந்த மாதத்தில் வெவ்வேறு நாவல்களின் பக்கம் கவனம் திரும்பினாலும் எதையும் முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. கடைசியில் கோபல்லபுரத்து மக்களை வாசித்து முடித்தேன். சாகித்ய அகாடமி விருதை   1991'ல்  பெற்ற நாவல். 

ஆங்கிலேயர் இந்தியாவுக்குள் வரும் காலகட்டத்தோடு கோபல்ல கிராமம் முடியும். (கோபல்ல கிராமம் விமர்சனம்). வெள்ளையர்கள் ஆட்சியில் கோபல்ல கிராமம் சந்திக்கும் மாற்றங்களுடன் ஆரம்பிக்கும் நாவல் இந்தியா சுதந்திரம் வாங்குவதோடு முடிவடைகிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட நாவலில்  முதல்  பாகமான  அச்சிந்த்தலு,  கிட்டப்பன்    கதைதான் கி ராஜநாராயணின் பாணியில் உள்ளது. கிட்டப்பனின் கதையினூடே மக்களின் வாழ்க்கை மற்றும் பழக்கவழக்கங்களை பதிவு செய்கிறார். எருது கட்டு (ஜல்லிக்கட்டு)  விளையாட்டு எப்படி உருவானது என்பதை அவர் சுவாரஸ்யமாக விவரித்துள்ளார். 

இரண்டாவது  பாகத்தில் கோப்பல கிராமத்தில் கால மாற்றங்களால் வரும் புதியவற்றை மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நையாண்டியாகச் சொல்ல ஆரம்பிக்கும் கதை பின்பு சுதந்திரப் போராட்டம், பம்பாய் மாலுமிகளின் போராட்டம் எனத் திசை மாறுகிறது . கடைசியில் திடீரென வரும் மாலுமிகளின் போராட்ட கதை நன்றாக இருந்தாலும் கதையுடன் ஒட்டாமல் துண்டாகத் தெரிகிறது. கடைசி சில அத்தியாயங்களில் சுதந்திரப் போராட்டம் குறித்து அலச ஆரம்பித்து விடுகிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பெரியார் என எல்லோரின் கொள்கைகளையும் நடுநிலையோடு ஒரு ஒப்பிடும் செய்கிறார். பாமர மக்களிடம் அவர்களைப் பற்றி இருந்த பிம்பத்தை வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக அலசுகிறார். 

நாவலில் என்னை மிகவும் கவர்ந்த, எக்காலத்துக்கும் பொருந்தும்  வரிகள் "எந்த புதுசு வந்தாலும் முதலில் அதை சந்தேகிக்கிறதும் அதையே குறை பேசி பரப்புகிறதும், பிறகு தயக்கத்தோடு, வழியில்லாமல் - ஏற்றுக் கொள்கிறதும், ஏற்றுக் கொண்ட பிறகு புதிய வியாதிகள் அதனால்தான் பரப்புவதாகச் சொல்லுவதும் வழக்கம். 

"மக்களுக்கு போதைப் பழக்கத்தைப்  பரப்பிவிட்டால் அரசாங்கத்துக்கு வருமானம் மட்டுமில்லை; எதிர்த்துப் போராடவும் மாட்டார்கள்."

கடைசியில் கோபல்ல கிராமம் வாசித்த போது கிடைக்த ஒரு புதிய அனுபவம், கோபல்லபுரத்து மக்களில்  கிடைக்கவில்லை என்பது உண்மை. 


இறுதியாக :

 என் தந்தை சிறு வயதில் சொல்லிக் கொடுத்த நாட்டுப்புறப் பாடல்கள் நாவலில் வருகிறது. அதை மீண்டும் வாசிக்கும் பொழுது ஏதோ சந்தோஷம். 

           "ஊரான் ஊரான் தோட்டத்திலே 
            ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய் - அத
            காயிதம் போட்டானாம் வெள்ளக்காரன்"

          "வாரண்டா வாரண்டா வெள்ளைக்காரன் 
           வரட்டும் தாயோளி தொப்பிக்காரன்"

           "வெள்ளைக்காரன் பணம் வெள்ளிப்பணம் 
            வேடிக்கை பண்ணுது சின்னப் பணம் 
            வெள்ளிப் பணத்துக்கு ஆசைப்பட்டு 
            வேடங்குலைந்தாயே வீராயி..."


1 comment: