புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்
சிறு வயதிலேயே நாவல்களை வாசிக்க ஆரம்பித்து விட்டாலும் பொதுவாகக் கிடைத்த அல்லது தெரிந்த நாவல்களை மட்டுமே வாசித்து வந்தேன். கொஞ்சக் காலமாகத் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். அந்த தேடுதலில் கிடைத்த ஒரு நாவல்தான் புயலிலே ஒரு தோணி. நாவலாசிரியர் ப.சிங்காரம் மொத்தம் இரண்டே நாவல்கள்தான் எழுதியுள்ளார். அவரின் முதல் நாவல் கடலுக்கு அப்பால். புயலிலே ஒரு தோணி அவரின் இரண்டாவது நாவல். வெளிவந்த காலகட்டத்தில் அதிகம் கவனிக்கப் படாமல் இருந்த இந்நாவல் இப்பொழுது பலரால் வாசிக்கப்பட்டு சிறந்த நாவலாகப் பரிந்துரையும் செய்யப்படுகிறது.
இரண்டாவது உலகப் போர் நிகழந்தக் காலத்தையொட்டி இந்தோனேசியா, மலேசியா பிரதேசத்தில் நடந்த சில சம்பவங்களின் கதைத் தொகுப்புதான் புயலிலே ஒரு தோணி. ஆசிரியர் இரண்டாவது உலகப் போர்க் கால கட்டத்தில் அந்த பிரதேசங்களில் வாழ்ந்தது வந்ததால் அவர் பார்த்து, கேட்டதை நாவலாக வடிவமைத்துள்ளார். வாசிக்க ஆரம்பித்தவுடன் அதில் வரும் கதைமாந்தருக்கேற்ப வேற்று மொழிச் சொற்கள் கலந்து வரும் மொழி நடையை அறிந்து, புரிந்து உள்ளே செல்வதற்குள் கண்ணில் தண்ணியே வந்து விட்டது ஆனால் செல்லச் செல்ல கதையின் போக்கில் நாம் செல்ல அது ஒரு தடையாகவே தெரியவில்லை.
மதுரை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பாண்டியன் இந்தோனேசியாவில் கெர்க் ஸ்ட்ராட் நகரத்தில் காதர் மொய்தீன் ராவுத்தரிடம் கிளார்காக வேலை செய்கிறான். வியாபாரம் விசயமாக மலேசியாவின் பினாங் செல்லும் அவன் அங்கு தன் நண்பர்களுடன் நேதாஜியின் I.N.A வில் சேருகிறான். அதில் நடக்கும் சில தவறுகளைத் தட்டிக் கேட்கும் அவனுக்குத் தண்டனை அளிக்கப் படுகிறது. ஆனால் I.N.A வின் கர்னல், பாண்டியன் மீது நம்பிக்கை வைத்து ஒரு முக்கியமான காரியத்தை ஒப்படைக்க அதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறான். இரண்டாம் உலப்போரில் ஜப்பானின் தோல்வி மற்றும் நேதாஜியின் திடீர் மரணம் I.N.A வில் சரியான தலைமை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலானவர்கள் அதிலிருந்து பிரிந்து அவரவர் பழைய தொழிலைப் பார்க்கத் திரும்புகிறார்கள். ஊருக்குத் (இந்தியா) திரும்ப முடிவு செய்து அதற்கு முன்பு தன் நண்பர்களை எல்லாம் கடைசியாக ஒருமுறை காண இந்தோனேசியா வரும் பாண்டியன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் டச்சு படைகளுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். பின்பு தன் வாழ்வின் அபத்தத்தை உணர்ந்து மீண்டும் ஊருக்குத் திரும்ப முடிவு செய்கையில் என்னவாகிறான் என்பதே கதை.
நாவலில் ஆங்காங்கே தெரிந்து கொள்ளவேண்டிய இரண்டாம் உலகப் போரின் போக்கு, ஹிட்லரின் ரஷ்ய படையெடுப்பு, ஜப்பானின் போர்த் தந்திரங்கள், அந்தகால மதுரை, சின்னமங்கலம் கடை வீதி என வரலாற்றின் குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்களை இடையிடையே அருமையாகப் பயன்படுத்தியுள்ளார். புலம் பெயர்ந்து பிழைக்கச் சென்ற மக்களின் மனநிலையை கண்முன்புக் கொண்டு நிறுத்துகிறார். கதை மாந்தர்களுக்கு இடையேயான ஆரோக்கிய விவாதங்கள் வழியாக ஆசிரியர் சிங்காரம் தன் கருத்துக்களைப் பாண்டியனின் குரலாக ஒலிக்கிறார்.
தமிழ் மக்கள் முன்னேற முதல் வேலையாக "பொதிய மலை போதை" யிலிருந்து விடுபடவேண்டும். அதுவரையில் முறையான மேம்பாடு முயற்சிகளுக்கு வழி பிறக்காது. "திருக்குறளைப் பார்! சிலப்பதிகாரத்தைப் பார்! தஞ்சைப் பெரிய கோவிலைப் பார்! காவேரிக் கல்லணைப் பார்!" என்ற கூக்குரல் இன்று பொருளற்ற முறையில் எழுப்பப் படுகிறது.
பொதுவாகத் தமிழர்களுக்கு உலக வரலாற்றுப் பயிற்சி முக்கியம். பெரிய கோவிலுக்கும் கல்லணைக்கும் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஃபேரோ மன்னர்கள் பிரமித்கோபுரங்களைக் கட்டிவிட்டனர். பாபிலோனியர், எப்போதும் நீர் நிறைந்த அகன்ற யூபிரத்தீஸ் நதிக்கு அடியில் பதினைந்து அடி அகலமும் பன்னிரண்டு அடி உயரமும் கொண்ட சுரங்கப் பாதை ஒன்று அமைத்திருக்கிறார்கள்...... இது போன்ற சமூக அக்கறையுள்ள பல விவாதங்கள் நடக்கிறது.
இறுதியாக :
ஆரம்பத்தில் வாசிக்கக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மற்ற நாவல்களிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் , கதை மாந்தர்கள், கதை சொல்லும் பாங்கு என மிக நுட்பமாக வரிக்கு வரி படிக்க வேண்டிய நாவல். இது வரை கிடைக்காத வாசிப்பனுபவத்தோடு அறிந்திராத சுவாரசியமான அனுபவ பயணத்தைப் படித்த பெரும் திருப்தியைத் தரவல்லது புயலிலே ஒரு தோணி நாவல்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅருமை 👌
ReplyDeleteநாவலை வாசிக்க தூண்டும் review.. அருமை
ReplyDelete