Tuesday 3 March 2020

விஷ்ணுபுரம்



                             விஷ்ணுபுரம் - ஜெயமோகன்



ஜெயமோகன் பற்றி நிறையக் கேள்விப்பட்டாலும் அவரின் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சயம் கிடையாது . சரி எதாவது ஒரு நாவலை வாசிக்கலாம் என முடிவு செய்து கொஞ்சம் மார்க்கெட்டிங் செய்யப்பட்ட (அவரால் அதிகமாகவே) விஷ்ணுபுரத்தை வாங்கினேன். ஆனால் வாங்கிய பின் சில ஆண்டுகளாக என் புத்தக அலமாரியிலே தூங்கியதை எப்படியாவது  வாசித்து விட வேண்டும் என்று ஆரம்பித்து விட்டேன்.  ஸ்ரீபாதம், கெளஸ்துபம், மணிமுடி என மூன்று பாகங்களைக் கொண்ட பெரிய நாவல். ஆனால் சில பக்கங்கள் தாண்டுவதற்குள்ளே முட்டி மோத வேண்டியது ஆகி விட்டது. முழுவதுமாக வாசித்து விடுவேனா என்ற வினா மனதில் எழுந்து  வாசிக்காமல் வைத்து விடலாமா என நினைத்தேன் ஆனால் இந்த முறை விட்டு விட்டால் இன்னொருமுறை வாசிக்க மனது வராது என்று முழுமையாக வாசித்து விட்டேன். விஷ்ணுபுரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வாசிக்க ஆரம்பித்து பாதியில் நிறுத்தி விட்டவர்கள்தான் அதிகம் எனக் கேள்விப்பட்டேன்.  விஷ்ணுபுரத்தை படிக்க தொடங்குவது எப்படி என ஜெயமோகனே எழுதியுள்ளது (எப்படி வாசிப்பது?) வாசித்து முடித்த பின்தான் தெரியும். நாவலில் உள்ள முரண்பாடுகள் மற்றும் விமர்சகர்கள் பேசும் அரசியலுக்குள் போகாமல் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை மட்டும்  பேசியுள்ளேன்.

கதைச் சுருக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தாலே சில பக்கங்கள் ஆகி விடும் அத்தனை கிளைக் கதைகள்.  முதல் பாகத்தில், தென் தமிழகத்தில் பாண்டியர்களின் ஆளுகைக்குள்ள விஷ்ணுபுரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஸ்ரீபாதத் திருவிழா தொடங்குகிறது.
அந்த விழாவில் தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றி பரிசு பெற குடும்பத்துடன் விஷ்ணுபுரம் வரும் சங்கர்ஷணன் பெறும் அனுபவங்கள். வைதீக குலத்தில் பிறந்த பிங்கலன் தன் குருகுலத்தில் நம்பிக்கையை இழந்து சாருகேசி எனும் கணிகையைத் தஞ்சமடையும் அவன், பிறகு எவ்வாறு ஞானம் அடைகிறான்.  வாத்தியக்கார குடும்பத்தில் பிறந்த திருவடி, லலிதாங்கி என்ற கணிகையிடம் காதல் வயப்பட்டு சித்தம் கலங்கி அலைகிறான். திருவிழாவில் பங்கேற்க வந்த ஆழ்வார் இறந்து விடத் திருவடி,  ஆழ்வார் ஆக்கப் படுகிறான். இடையில் காவலாளி வில்லாளன், வைஜயந்தி நாச்சியாரை மணந்து விஷ்ணுபுரத்தை ஆள நினைப்பது, அவளின் தோழி சித்திரை  குலதெய்வமாக மாறுவது என நீளுகிறது.

இரண்டாம் பாகமான கெளஸ்துபம், முதல் பாகத்துக்கு முன்பு நடந்த நிகழ்வாக வருகிறது.  அப்போது  நடக்கும் கிருஷ்ணபட்சி பரீட்சை என்ற தர்க்க போட்டியில் பங்குகொள்ளப் பௌத்த பிக்குவான அஜிதன் என்னும் இளைஞன் வட பகுதியிலிருந்து வருகிறான். அவனுடன் விஷ்ணுபுரத்தின் வைதீக மரபின் காவலர் பவதத்தர் மோதுகிறார். விவாதத்தில் பவதத்தர் தோல்வியடைய, சந்திரகீர்த்தி என்னும் வணிகன் தலைமையில் விஷ்ணுபுரம் பௌத்த மரபுக்கு மாறுகிறது.   சீனா அல்லது திபெத்தை சேர்ந்த புத்த பிட்சு நபோரா அபிதரின் கடைசிக் காலத்தில்  அவரை சந்திக்க வருகிறார். ஞானசபையில் நடக்கும் வாத தர்க்கங்கள்தான் பக்கம் பக்கமாக வளர்கிறது. அதனைப் புரிந்தது கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது. நாவலை வாசித்த எத்தனை பேருக்கு அது புரிந்திருக்கும் எனத் தெரியவில்லை 😇.

இறுதி பாகமான மணிமுடி, முதல் பாகத்துக்குப் பின்பு நடந்த நிகழ்வுகளாகச் சொல்லப்பட்டுள்ளது. அது விஷ்ணுபுரத்தின் அழிவைப் பேசுகிறது. காசியிலிருந்து பண்டிதர் யோகவிரதர், அஜிதர் மற்றும் விஷ்ணுபுரத்தை பற்றித் தெரிந்து கொள்ள இங்கு வருகிறார். விஷ்ணுபுரத்தின் கோவில் கைவிடப்பட்டுச் சிதைந்த நிலையில் உள்ளது. எந்த புராணத்தை யார் இயற்றினார்கள் என்று பண்டிதர்கள் முரண்பட்டுக் கொள்வது எனக்கு இன்றைய காலகட்டத்தை நினைவு படுத்தியது. மதுரை மற்றும் பிற இடங்களுக்குப் பலர் புலம் பெயர்ந்து விட்ட நிலையில் வெகுசிலரே அங்கு வசித்து வருகிறார்கள். கடும் குளிர், மழை எனப் பிரளயத்துக்கான அறிகுறிகள் தென்படுகிறது. சிவப்பு நிற நீரைக் கொண்ட சோன நதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன, எங்கிருந்தோ வந்த பறவைகள் கோவில் சுவரில் முட்டி சாகின்றன. பெருமூப்பன் (விஷ்ணு) புரண்டு படுக்க ஒரு யுகம் முடிவதின் காரணமாக விஷ்ணுபுரம் சோனாவின் பெருவெள்ளத்தால் அழிகிறது.

சோனா நதி, ஹரிதுங்கா மலை என ஜெயமோகனின் கற்பனையும், அவற்றின் விவரிப்பும் பிரமிக்க வைக்கிறது. நாவலின் ஒவ்வொரு பக்கத்தையும் எழுத அதன் பின்னால் உள்ள அபரிதமான களப்பணி  மலைக்கச் செய்கிறது. ஜெயமோகன் விஷ்ணுபுரம் அவரின் கனவு என்கிறார். ஆமாம் பிரமாண்டமான கனவுதான். பிரமாண்டமான  நாவலாக மாறியதற்கு எங்கும் நிறைந்துள்ள வர்ணனைகளே காரணம். சில சமயங்களில் அவை கொஞ்சம் அலுப்பூட்டுகின்றன. ஞானகுருமார்கள் ஒருவகையில் சுற்றியுள்ள அதிகார வர்க்கத்தின் கைம்பாவைகளே என்ற யதார்த்தத்தின் நிழலை வயதான ஆழ்வார் மற்றும் முதுமையில் அஜிதரின் நிலைமை தோலுரித்துக் காட்டியது.

கதை மாந்தர்கள் ஓரளவு பரிச்சயமாகிய நமது மனதில் பயணிக்க ஆரம்பிக்கும் போது அவர்கள்  நாவலிருந்து விலகிப் போகிறார்கள். அதனால் எந்த ஒரு கதாபாத்திரமும் நீண்டதோர் தாக்கத்தை மனதில் ஏற்படுத்தவில்லை என்பதால் நாவலும் மனதில் அழுத்தமாகப்  படியாமல் நிற்கிறது. கதை எழுதப்பட்ட உத்திக்காக இன்னும் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வாசிப்பேன் அப்பொழுது என்னுடைய  எண்ணங்கள் மாறுகிறதா எனப் பார்ப்போம்.


இறுதியாக :

கி ராஜநாராயணின் கோபல்ல கிராமத்தின் தாக்கம் ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் கொஞ்சம் இருப்பதாக நான் உணர்ந்தேன்.  கோபல்ல கிராமம் நாவல் எழுதப்பட்ட உத்தி விஷ்ணுபுரத்தில் தென்பட்டாலும் நடை முற்றிலும் வேறு. கோபல்ல கிராமம் சாமானியர்களும் எளிதாக நுழைந்தது கொள்ளும் கிராமம். ஆனால் விஷ்ணுபுரம் கொஞ்சம் அறிவுஜீவிகளுக்காகக்  கட்டமைக்கப்பட்ட பிரமாண்டமான நகரம்.


2 comments:

  1. வாசிக்க மிகவும் எளிதான நாவல் அல்ல என கேள்விப்பட்டுள்ளேன். உங்கள் விமர்சனமும் அதைதான் கூறுகிறது. வாழ்த்துக்க்கள்.

    ReplyDelete