Saturday 28 March 2020

18வது அட்சக்கோடு



              18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்



பிரபல எழுத்தாளர்களின் ஒரு நாவலையாவது வாசித்து விட வேண்டும் என்ற ஆவலில் வாங்கியதுதான் இந்த நாவலும். வரும் காலங்களின் அசோகமித்திரனின் இதர நாவல்களையும் வாசிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். 

இந்தியா சுதந்திரம் அடையப் போவதற்குக் கொஞ்சம் முன்னால் தொடங்கும் கதை, சுதந்திரம் பெற்ற கொஞ்சக் காலத்துடன் முடிவடைகிறது. நிஜாம்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும்  சிக்கந்தராபாத் வீதிகளில்தான் கதை நகர்கிறது. கதைநாயகன் சந்திரசேகரனின் தந்தை ரயில்வேவில் வேலை செய்வதால் அவர்களது குடும்பம் ரயில்வே குடியிருப்பு குவார்ட்டர்ஸில் வசிக்கிறார்கள். சந்திரசேகரன் அருகில் உள்ள கல்லூரியில் படிக்கிறான். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் இணைய அல்லது தனித்து இயங்க நினைக்கிறார் அதனால் அந்த  நகரத்தில் நடந்த அரசியல், சமூக மாற்றங்களைச்  சந்திரசேகரனின் அனுபவமாக ஆவணப்படுத்துகிறார் ஆசிரியர். 

காந்தி சுட்டுக் கொல்லப் பட்ட போது அதனை முழுவதுமாக தெரிந்து கொள்ளச் சந்திரசேகரன் மனம் படும் பாடு , அரசியல் சூழ்நிலைகள் , மதக் கலவரங்கள் எப்படி மனித மனங்களில் மெல்லிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அதனால் தோன்றும் மனமுறிவுகள்  சமூகத்தில் விளைவிக்கும் தாக்கத்தினை   மிகவும் நுட்பமாகச்  சித்தரித்துள்ளார். 

பொதுவாக ஒரு நாட்டில் நிகழும் அரசியல் மாற்றங்கள், அதன் பின்னணிகளும் சாதாரண மக்களுக்குப் புரிகிறதா?, அவர்களில் பார்வையில் அவை எப்படிப் பார்க்கப்படுகிறது?  தீடிரென்று நடக்கும் வன்முறைகளையும் உயிர்ப்பலிகளையும் சாதாரண மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?? என்கின்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் நாவல்தான் 18வது அட்சக்கோடு. அதுவும் நாவலின் முடிவில் வரும் நிகழ்வு மனதைப் பிசைவதாக வன்முறையும் தாக்கங்களும் சாதாரண மக்கள் அதில் பங்கு கொள்ளாவிடினும் ஒன்றும் அறியா அவர்களையே  மிகவும் பாதிக்கிறது என்பதை உணர்த்துகிறது. 

கிரிக்கெட் விளையாடப் போவது, Chemistry Practical உப்பு கரைசலைக் கண்டுபிடிப்பது, குடும்பமாக சினிமா பார்க்கச் செல்வது , ஜோசியரின் வரவு, அறிந்த பெண்களால் ஏற்படும் மனத் தடுமாற்றம், போர்க்காலத்தில் கடலை எண்ணெயில்  பஸ்ஸை இயக்குவது என அங்கங்கு மெல்லிய நகைச்சுவை  சூழ்நிலையோடு கதை நகர்வது, நாவலை வாசிக்க அலுப்பைத் தரவேயில்லை. 

இறுதியாக :  

   கடைசியாக வாசித்த இரு நாவல்களும் கொஞ்சம் தொடர்பு உள்ளவைதான். சாமானிய மனிதர்களில் பார்வையில் இந்தியா சுதந்திரம் அடைந்த  கால கட்டத்தில் நடந்த சம்பவங்களைக் கூறுகின்றன. ஆனால் கதை நடக்கும் தளங்கள் தான் முற்றிலும் வேறு. புயலிலே ஒரு தோணி ஆசிரியர் சிங்காரமும்,  அசோகமித்திரனும் அந்த களங்களில் அச்சமயங்களில் வாழ்ந்தவர்கள்  என்பது நாவலின் நெருங்கிய உண்மைத் தன்மைக்கு வலு சேர்க்கிறது.

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete