Tuesday 21 April 2020

கள்ளிக்காட்டு இதிகாசம்




                கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து




  ஆனந்த விகடனில் தொடராக வந்த பொழுதே வாசிக்க முயற்சி செய்தேன். பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக வாசிக்க இயலாமல் போக இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன்.  இந்நாவலுக்கு  2003'ல்   சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அதனால் பலரது எதிர்மறையான, சிலரது நேர்மறையான விமர்சனங்களையும் ஒருங்கப்பெற்றது. 

 கள்ளிக்காட்டில் உழைப்பையும், வைராக்கியத்தையும் நம்பி வாழும் பெரியவர் பேய்த்தேவர் தன் உதிரத்தில் வந்த உறவுகளாலும், இறுதியில் அரசாங்கம் கட்டும் வைகை அணையாலும் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார், நசுக்கப்பட்டார் என்பதே நாவலின் கதை. வாழும் தன் மண்ணை நேசித்த அந்த ஜீவன் அம்மண்ணை விட்டுச் சென்றதா அல்லது மண்ணோடு சென்றதா என்பதுதான் முடிவு. 

 நாவலை முழுவதுமாக பேய்த்தேவரே ஆக்கிரமித்துள்ளார். நோய்வாய்ப்பட்டு கிடையிலிருக்கும் மனைவி அழகம்மா, திருமணத்தில் குறைவாய் செய்த நகைக்காக நடையாய் நடக்கும் மூத்தமகள் செல்லத்தாயி, சிறுதகறாறு ஒன்றின் காரணமாகக் கொலை செய்துவிட்டு கணவன் சிறைச் செல்வதால் தாய் வீட்டிற்குக் குழந்தையோடு திரும்பி வந்த இரண்டாவது மகள் மின்னல், ஊருக்கும் வீட்டுக்கும் அடங்காமல் அடாவடி செய்துகொண்டு அலையும் மகன் சின்னு, பேய்த்தேவரின் சின்னவயது Crush முருகாயி, அவரின் ஒரே ஆறுதல் மற்றும் நண்பர் வண்டிநாயக்கர், அவருக்கு எதிலும் ஒத்தாசையாகவிருக்கும் பேரன் மொக்கராசு எனக் கதாபாத்திரங்கள் இருந்தாலும் எல்லாமே பேய்த்தேவரை வைத்தே பின்னப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள கஷ்டம் எல்லாம் ஒருத்தருக்கே தொடர்ந்து வருவது போல் எடுத்துக் காண்போரை உணர்ச்சி மேலிட்டு அழவைக்கும் உத்தி பல சமயம் திரைப்படங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். நாவலிலும் அதே உத்தியையே வைரமுத்து பயன்படுத்தியிருப்பதால் கொஞ்சம் சினிமாத்தனமான கதையாகவும் அவ்வப்போது மனதில் தோன்றுகிறது. 

 பசுவுக்குப் பிரசவம் பார்ப்பது, பெண்ணுக்கு அக்காலத்தில் பிரசவம் பார்ப்பது, சாராயம் காய்ச்சுவது, பாடைக்கட்டுவது,  சுடுகாட்டில் பிணத்தை எரிப்பது, கோழிச்சாறு சமைப்பது என எக்கச்சக்க  நுண்விவரங்களை நாவல் முழுவதும் அனாசயமாக அள்ளித்தெளிக்கிறார். கிராமத்து எளிய மனிதர்களின் யதார்த்தமான வாழ்க்கையை அழகாகப் பிரதிபலித்துள்ளார் வைரமுத்து. எனினும் சில வர்ணனைகளில்  அவரின் திணிப்பும் செயற்கை தனமும் தலையைக் காட்டுகிறது. உரைநடை வார்த்தைகளில் அவரது கவிதைத்தனம் தோன்றினாலும், சில என்னை மிகக் கவரவும் செய்தது. உதாரணமாக "கள்ளிக்காட்டு விவசாய கலாச்சாரத்தில் கட்டில் உற்பத்தியில் மட்டுமல்லாமல் காட்டின் உற்பத்தியிலும் மனைவியின் வியர்வை விழுந்தாக வேண்டும்". 

 கள்ளிக்காட்டு இதிகாசம் பேய்த்தேவரின்  வாழ்க்கை போராட்டத்தை விவரித்தாலும் இறுதியில் வைகையில் புதிய அணை கட்டப்படுவதால் கள்ளிக்காடு என்ற கிராமத்துடன் மற்றும் சில கிராமங்களும் அழிவது, அதனால் கிராம மக்கள் குடும்பம் குடும்பமாகப் பல தலைமுறையாக வாழ்ந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்த  சோகம்தான் மையக் கருத்து.

இறுதியாக:

 நாவலின் முடிவு என் கண்களைக் கலங்க வைக்கவில்லை..  பொதுவாக வளர்ச்சி என்ற பெயரில் முன்னிறுத்தப்படும் பெரும் தொழிற்சாலைகள், அணைகள், விமான நிலையங்கள் போன்றவற்றால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் அப்பகுதி மக்களில் மனநிலையை, போராட்ட வலிகளைப் பிறபகுதிகளில் வாழும் மனிதர்கள் பொருட்படுத்துவதில்லை, அவர்களே அவற்றால் பாதிக்கும் வரை. ஏன்? அத்தகைய எதிர்ப்புகளை வெறுக்கவும் செய்கிறார்கள். நானும் அந்த மனநிலையைத்தான் பிரதிபலிக்கிறனோ??.  அதனால்தான் நாவலின் இறுதிப் பகுதி என் நெஞ்சில் வலியைத் தரவில்லையோ.. 


4 comments:

  1. 80’s kids நிறைய பேருக்கு Rahman மற்றும் வைரமுத்து மீது ஒரு அதீத பாசம் உண்டு. அந்த பாசம் உச்சக்கட்டத்தில் இருந்ந போது வந்த நாவல், ஆனாலும் பல காரணங்களால் படிக்க முடியாமல் போனது. உங்கள் review படித்த பின்பு நினைவுக்கு வந்த காரணம் too much anguish for main character is one of them. அருமையான பதிவு, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்க்கையில் விரும்பிய இடத்தில் இருக்க பெறிது முயன்றும், நினைத்தது நடக்காமல் போன பின்பும், நடந்ததை எற்றுக்கொண்டு, தேங்கிவிடாமல் அடுத்தடுத்தக் கட்டத்துக்கு சென்றதனால், நாவலின் முடிவு உங்கள் கண்களைக் கலங்க வைக்கவில்லையோ என்னவோ 🤔

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் யோசிக்கலாமோ?? அப்படியும் இருக்குமோ?? 😁😎

      Delete
  3. மத்திய தர மக்களின் வாழ்க்கையினை பேசும் நாவல்களும், சினிமாக்களும் இருந்தாலும் எண்பதுகளுக்கு பின்பே அடித்தள மக்களினின் வாழ்க்கையை வலியை யதார்த்தமாக பேசும் நாவல்களும் சினிமாக்களும் வந்தன என்று நினைக்கிறேன். அதில் பாரதிராஜாவும் வைரமுத்துவும் தவிர்க்க முடியாதவர்கள்.
    பொதுவாக வட்டார மொழி பேசும் கதைகள் படிப்பது ரொம்பவும் பிடித்த விஷயம். அந்த வகையில் நான் கி.ராவின் இரசிகனாக மாறி விட்டேன். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் நிச்சயமாக ஒரு காவியம் தான். அதை விமர்சிக்கும் அளவிற்கு நான் தகுதி இல்லாதவன். ஆனால் வாசிக்கும் போது வாசித்ததால் எழும் எண்ணங்களை வேண்டுமானால் சொல்லலாம்.
    உன்னுடைய கருத்துகள் அத்தனையையும் ஏற்றுக் கொள்கிறேன். உன் எழுத்து நடையில் ஒரு மெருகேற்றம் இருப்பதாய் தோன்றுகிறது. உன்னுடய ஒரு சில விஷயங்களின் நான் முரண் படுகிறேன். ஒருவருக்கே அத்தனை கஷ்டங்களும் வருவது சினிமாத்தனமாக இருப்பதாய் நீ நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில சமயங்களில் மனிதர்களின் வாழ்க்கையில் அந்த மாதிரி நடக்கத்தான் செய்கிறது. அதனால்தான் பட்ட காலிலேயே படும் என்ற சொல்வடை இருக்கிறது.
    இறுதியாக நீ கூறும் “நாவலின் முடிவு என் கண்களை கலங்க வைக்க வில்லை” என்பதில் என்னுடைய எண்ணம் வேறாக இருக்கிறது. என்னதான் பாதிப்பு வந்தால்தான் வலி புரியும் என சொன்னாலும் ஒன்று உன்னுடைய மனது கொஞ்சம் கல்லாகி போயிருக்க வேண்டும் அல்லது நீ பற்றற்ற ஞானியாயிருக்க வேண்டும்(?)
    இந்த வயதில் வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கினை மட்டும் அளித்து விடாது. கள்ளிக்காட்டு இதிகாசம் வாசித்ததும் பேய்த்தேவர் என் மனதை விட்டு இறங்காமல் வெகுகாலம் இருந்திருக்கிறார்.
    2017 மே மாதம் வைகை அணையை பார்க்க சென்றிருந்த போது மனதுக்குள் ஒரு சின்ன வலியை என்னால் உணர முடிந்தது. பேய்த்தேவரின் சமாதியாய் தெரிந்தது அணை. அமைதியாய் தான் அணையின் மீது நடந்து சென்றேன். சற்று இருட்டி விட்டதால் என் கண்கள் கலங்கியதை யாரும் கவனிக்க வில்லை.

    ReplyDelete