Sunday 5 April 2020

முற்றுகை / ஆகாயச் சிறகுகள்


                     முற்றுகை / ஆகாயச் சிறகுகள்
         
                                                மேலாண்மை பொன்னுச்சாமி


மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய இரு நாவல்கள் நான் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் கல்கி வார இதழில் தொடராக வந்தது.  நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற முற்றுகை நாவலை அப்பொழுது வாரம் வாரம் ஆவலாக வாசித்தேன். எங்கள் கல்லூரிக்கு ஒரு விழாவில் பங்கு கொள்ள வந்த மேலாண்மை பொன்னுச்சாமியிடம் அவரின் இந்த நாவல் பற்றிப் பேசியுள்ளேன். அது ரொம்ப விரிவான சந்திப்பு அல்ல . இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு 2007ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளது. அதையும் வாசிக்க நினைத்துள்ளேன். கல்கியில் வெளிவந்த அவரின் முற்றுகை மற்றும் ஆகாயச் சிறகுகள் நாவல்களை மீண்டும் இப்பொழுது வாசித்தேன்.


                                                       முற்றுகை 


   ஜமீன்தார் ராமானுஜத்தின் இறப்புக்குப் பின் அவரது பல பெண்களுடன் உறவு மற்றும் ஆடம்பரமான பழக்கத்தால் குடும்பம் நொடிந்து போய் விடுகிறது. மூத்தமகள் கிருஷ்ணம்மாளுக்குத் திருமணம் முடிந்துவிட இளையமகள் சொர்ணம் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து  தாயுடன் வாழுகிறாள். சொர்ணத்தின் அக்கா கணவன் நாராயணசாமி, அவளைத் திருமணம் செய்து கொண்டு அவள் பெயரில் உள்ள வீடு மற்றும் நிலங்களைக் கைப்பற்ற நினைக்கிறான். அழகும் கம்பீரமும் மிக்க அருஞ்சுனை, தான்  கூலி வேலை செய்யும் தீப்பெட்டி தொழிற்சாலை ஓனரின் அழகற்ற மகள் ரத்னத்தை மணந்து முதலாளி ஆகிறான். ரத்னத்தை மனதால் வெறுத்தாலும் ஒரு போலித்தனமாய், அன்பொழுக, பரவசமாவது போல் நடிக்கிறான். அவனது தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சொர்ணத்தின் அழகில் மயங்கி அவளை அடைய நினைக்கிறான். இதனிடையே சொர்ணம் தன் வீட்டில் முன்பு வேலைச் செய்த முனியசாமியின் பேரன்  பழநியிடம்  தன் அக்காள் கணவனின் முற்றுகையை உடைக்க  உதவிக் கேட்கிறாள். சிமெண்ட் தொழிற்சாலையின் யூனியன் லீடரான பழநிக்கும் அவள் மீது கொஞ்சம் ஈர்ப்பு  இருக்கிறது. இப்படியாக ஒவ்வொருவரும் சொர்ணத்தின் மீது முற்றுகையிட ,  தன் பிறப்பு மற்றும் அழகு குறித்தும்  நிறையவே கர்வம் கொண்டிருக்கும் சொர்ணம்  அவளின் அந்த மன முற்றுகையிலே வீழ்வதுதான் முடிவு.

சொர்ணத்தின் மீது மனதளவில் கொண்ட முற்றுகைக்கு ஒவ்வொருவரும் கொண்டுள்ள காரணம், மனிதன் எப்படியெல்லாம் தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறான் என்பதைப் படம் போட்டுக் காட்டுகிறது. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளால் மனதளவில் முற்றுகை இடப்பட்டவர்கள் வாழ்வில் ஆண்- பெண்ணிடையே சமவாழ்வுரிமைக்கு வழி இல்லை என்பதே இப்புதினத்தின் மைய இழையாகும்.



                                             ஆகாயச் சிறகுகள்


கமலஹாசனின் தீவிர ரசிகனான பால்ச்சாமி ஜனநாயக வாலிபர் சங்கத்தால் ஈர்க்கப் பட்டு அதில் தீவிரமாக இயங்குகிறான். இரண்டு வீட்டாருக்கும் முழுச் சம்மதம் இல்லாமல் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிரேமாவை மனம் முடிக்கிறான். கிராமத்துப் பெண்ணான பிரேமா இயல்பிலே கூச்ச சுபாவம் உடையவள். இதர ஆண்கள் முன்பு வர மனதில் பட படப்பு  அடைபவள். அவளையும் தான் இயங்கும் இயக்கத்தில் பங்கு கொள்ள வைக்க முயற்சி செய்கிறான் பால்ச்சாமி. அவனது எண்ணம் நிறைவேறியதா என்பதே நாவலில் முடிவு. 

இது ஆசிரியருக்குக் கொஞ்சம் சிக்கலான களம்தான் இது. சிறிதளவே தவறினாலும் நாவலின் நோக்கமே மாறிவிடும் அபாயம் உள்ளது. பெண்ணுரிமை, மக்களின் விடுதலையைப் பேசும் கதாநாயகன் தன் மனைவியை வற்புறுத்தி அவளின் சம்மதம் இல்லாமலே தனது விருப்பம் போல் ஆட்டிவைப்பது போல் எதிர்மறையாக மாறிவிடும்.

இறுதியாக :

இரண்டுமே சிறிய நாவல்கள்தான். அனைவரும் எளிமையாக வாசிக்கும் வடிவில், நடையில் உள்ளது. மேலாண்மை பொன்னுச்சாமி மார்க்ஸிய கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். அவருடைய எழுத்துகளிலும் அதன் தாக்கம் தெரிகிறது. நாவல்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் அந்த நிலைப்பாட்டை ஒட்டி வலம் வந்து விடுகிறது. 


10 comments:

  1. சுய ஒழுக்கம் என்பது முட்டாள்தனமாக்கப்பட்டு, அதனைக் கடைப்பிடிப்பவர்கள் அம்பிகளாக்கப்பட்ட உலகில், மற்றவர்களின் உள்நோக்கத்தைத் தெரிந்து தன்னை தற்காத்துக்கொள்ள இந்த கதைகளின் கதாபாத்திரங்கள் உதவும் எனத்தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதிய முதல் புதினம் "முற்றுகை". பூர்ஷ்வா சிந்தனைகளால் முற்றுகை இடப்பட்ட ஆண்கள், பெண்களே அதிக அளவு இடம் பெற்றுள்ளனர். ராமானுஜம் நிலப்பிரபுத்துவப் பண்பாட்டு வாழ்க்கை வாழ்ந்து, பல பெண்களுடன் உறவுகொண்டு தன் சொத்தை எல்லாம் இழந்து விட்டு இறந்துவிடுகிறவர்; அவர் மனைவியும் கூட அவரை எதுவும் கேட்கமுடியவில்லை. நமது திருமணமுறை, திருமணத்திற்குப் பிறகு வேறு நபருடன் உறவு என்பதெல்லாம் பூர்ஷ்வா சிந்தனைகளின் வெளிப்பாடுதான். அதனால்தான் நமது குடும்பத்தில் ஜனநாயகம் இல்லை. இதனையே அப்புதினத்தின் வாயிலாக உணர்த்தியுள்ளேன். நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளால் மனத்தளவில் முற்றுகை இடப்பட்டவர்கள் வாழ்வில் ஆண்-பெண்ணிடையில் சமவாழ்வுரிமைக்கு வழி இல்லை என்பதே அப்புதினத்தின் மைய இழையாகும்.

      இந்த நாவலைப்பற்றி ஆசிரியரின் விளக்கம் . ( *பூர்ஷ்வா - முதலாளித்துவ)

      Delete
    2. அப்படியே விட்டு இருக்கலாம் 🤗 மாற்றியது நெகிழ்ச்சி மகிழ்ச்சி...

      Delete
  2. வாசிப்பு பழக்கம் தொடர்ந்தாலும் தற்சமயம் நான் வாசித்த இந்திரா சௌந்திரராஜனின் ஆசை நெசவு என்ற நாவலும் உன்னுடைய விமர்சனங்களும் சமூக நாவல்களை விட்டு வாசிப்பு விலகி விட்டதை சுட்டி காட்டுகின்றன. அடித்தள மக்களின் வாழ்க்கையினை பேசும் நாவல்களை வாசிக்க தூண்டிய உன்னுடைய விமர்சனங்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. இந்திரா சௌந்திரராஜனின் ஆசை நெசவு விமர்சனத்தை இங்கு பதிவேற்றலாமே

      Delete
    2. அருமை ஜெகன்

      Delete
  3. எனக்கு புத்தகம் வாசிக்க சோம்பேறித்தனமாக உள்ளது. முயற்சிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சிறிய சமூகநாவல்களில் இருந்து தொடங்கலாம்...

      Delete
  4. எனக்கு ராமரை விட கிருஷ்ணரை தான் பிடிக்கும் வாலி வதம் சில பெரியவர்கள் சொல்லும்போது சரியே என்று தோணும்

    ReplyDelete