Tuesday 14 April 2020

சக்கரவர்த்தித் திருமகன் - இராமாயணம்




             சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம்)                                                  ராஜாஜி 



இந்தியர்கள்  அனைவருக்கும் பொதுவாக இதிகாசங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் கதைகள் விரிவாகவில்லை எனினும் சுருக்கமாவது தெரிந்திருக்கும்.  அக்கதைகளைத் தெரிந்து கொண்ட முறை வேண்டுமெனில் மாறுபட்டு இருக்கலாம்.  நான் சிறுவனாக இருந்த காலகட்டங்களில் இராமாயணம், மகாபாரதக் கதைகளை வில்லுப்பாட்டு, பாவைக்கூத்து மூலமாகவும், பெற்றோர் மற்றும் பெரியவர்கள் வாய்மொழியாகவும் கேட்டோம். சின்ன சின்ன சிறுவர் படக் கதைகளாகவும் வாசித்தோம். அதன் பின் டி.வியில் தொடராக வந்து பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டது. ஆனால் எத்தனை பேர் இந்த இதிகாசங்களை முழுநீள உரைநடையாக (நாவலாக) அல்லது செய்யுள்களாக (பாடல்களாக) வாசித்திருப்பார்கள் என்றால் மிகச் சொற்ப எண்ணிக்கையாகவே இருக்கும். 

      வால்மீகி  இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜாஜி தமிழில் எழுதிய இராமாயணம்தான் சக்ரவர்த்தித் திருமகன்.  பலரைப் போல் இவருக்கும் உத்தர காண்டத்தை வால்மீகி எழுதாமல் பிற்கால சேர்க்கை  என்ற சந்தேகம் இருந்ததால் அதை மட்டும் தவிர்த்து விட்டார். கல்கி வார இதழில் தொடராக 1955'ல் எழுதிய நாவல் இது. மணியம் வரைந்த ஓவியங்களோடு மீண்டும் 1992வில் தொடராக வந்த தொகுப்பு எங்கள் வீட்டிலிருந்தாலும் நான் ஒருபோதும் வாசிக்க நினைத்ததில்லை. திடீரென வாசிக்கக் காரணம் இறுதியில்.. மணியம் வரைந்த ஓவியங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் நாவல்கள்தான் வேண்டும் என எனது சகோதரர்கள் அலைந்தது எல்லாம் எனக்குத் தெரியும். ஏன்? ராஜாஜியே மணியம் வரைந்த ஓவியங்கள் கொண்ட நாவல்களைத் திருட்டுப் போகாமல் பத்திரமாகப் பாதுகாப்பதே பெரிய வேலை என நகைச்சுவையாகச் சொல்லியதுண்டு. ஆனால் எனக்கு அவரது மகன் மணியம் செல்வன் (ம செ) ஓவியங்கள்தான் all time favorite.  

 இராமாயணத்தின் கதைச் சுருக்கத்தைச் சொன்னால் எங்களுக்குத் தெரியாததா என எதிர்க்கேள்விகள் வந்து விடும். அதனால் சக்ரவர்த்தித் திருமகன் தந்த சில அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். இராமன், அயனம் என்னும் இரு சமஸ்கிருத சொற்களின் கூட்டுதான் இராமாயணம் என எத்தனைப் பேருக்குத் தெரியும். அயனம் என்றால் பயணம் என்று அர்த்தம் அதாவது  இராமனின் பயணம்தான் இராமாயணம். வால்மீகி ராமாயணத்தில் வரும் ராமன் புலால் உண்பான். அந்த காலத்தில் சத்திரியர்களின் குல வழக்கப்படி வேட்டையாடிய  மாமிச ஆகாரங்கள் அனைவரும் உண்டார்கள். இதனைக்  குறிப்பிடக் காரணம் இதற்கு முன்பு  யாரும் இதைச் சொல்லி நான் அறிந்திருக்கவில்லை. எல்லோரும் இயல்பாக உதாரணமாகக் கூறும் லட்சுமணன் கோட்டைப் பத்தி எதுவும் சொல்லவில்லை. அதைப்பற்றி  வால்மீகி எழுதவில்லையா அல்லது ராஜாஜி விட்டு விட்டாரா? அறிந்தவர்கள் கருத்துக்களில் சொல்லவும்.  என்னைப் பாதித்த இடம் வாலியின் வதம். வாசித்தபோது தெரிந்த முடிவுதான் எனினும் என் இதயம் மீண்டும் கனத்தது. ஆசிரியரும் வால்மீகி எழுதாத (தன்) கருத்துக்களையும் புகுத்தி என்னதான் சப்பைக்கட்டுக் கட்டினாலும்  வாலியின் வதத்திற்கான காரணம், முறையை என்னால் எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ள  முடிவதில்லை. 

   வால்மீகி இராமாயணத்துக்கும், கம்பராமாயணத்துக்கும் இடையிலுள்ள சில மாறுபாடுகளை  அவ்வப்போது சுட்டிக்காட்டி ராஜாஜி எழுதியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. வரிக்கு வரி வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்க்காமல் தனது கற்பனைகளைக் கதையின் கருச் சிதையாமல் புகுத்திக் கம்பர் தமிழில் இயற்றியுள்ளார் என்பது புலனாகிறது.  ஒரு சின்ன உதாரணம். வாலியின் மனைவி தாரையை அவனது வதத்திற்குப் பின் சுக்கிரீவன் மணந்து கொண்டான் என வால்மீகி ராமாயணத்திலும், தாரை விரதம் காத்து விதவையாகவும், ராஜ மாதாவாகவும் விளங்கினாள் எனக் கம்பராமாயணத்திலும் வருகிறது. வால்மீகி இராமாயணத்தைப் பொறுத்தவரை  இராமன் ஒரு வீரம் கொண்ட இராஜகுமாரன், அபூர்வமான தெய்வீக குணங்கள் பெற்றவன். ஆனால் கம்பராமாயணத்தில் இராமன் மகாவிஷ்ணுவே, கடவுளே, அனைத்திலும் பரவி நிற்கும் பரம்பொருளே எனப் பாடியிருக்கிறார்.  

   மொத்தத்தில் எளிமையான நடையில், அனைவருக்கும் புரியும் வகையில் ராஜாஜி இந்த இராமாயண உரைநடையை எழுதியுள்ளார். அவர் மகாபாரதத்தை வியாசர் விருது என்ற தலைப்பில் எழுதியுள்ளார். வாய்ப்புகள் அமைந்தால் அதனையும் வாசிக்க வேண்டும். 


இறுதியாக :

   சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நாவல்களின் பட்டியலைப் பார்த்த போது ராஜாஜி  எழுதிய இந்த  சக்ரவர்த்தித் திருமகனுக்கு 1958'ல் விருது கிடைத்துள்ளது. அதுதான்  இந்நாவலை வாசிக்க திடீர் தூண்டுதல். அப்படி என்னதான் புதுமையாக உள்ளது? விருது கிடைக்க என்ற பேரார்வம். ஆனால் வாசித்து முடித்தபின் இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தற்கெல்லாம் விருதா? அநியாயம். அவராவது பெரிய மனதோடு மறுத்திருந்திருக்கலாம். வால்மீகி, துளசி தாஸர் அல்லது கம்பனுக்குக் கொடுத்திருந்தால் நியாயம் இருக்கிறது. 

9 comments:

  1. ராஜாஜி எழுதிய இந்த இராமாயணத்தை வாசிக்க முடிவு செய்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அநியாயமாக சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளதால் படித்தே தீர வேண்டும் என முடிவு செய்து விட்டேன் 😂

      Delete
  2. உண்மை! இராமாயணம் மற்றும் மகாபாரதம் கேட்டது அல்லது TV பார்த்ததுதான், படித்தது இல்லை. என்றாவது நடக்குமா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  3. விருது எங்க கதைக்கு கொடுக்காங்க? ஆட்களை பார்த்துதான் விருது. உண்மையான படைப்பாளிகள் எப்போதுமே புறக்கணிக்கப்படுவது நம் நாட்டில் இயல்பான ஒன்றுதான்.

    ReplyDelete
  4. எனக்கு ராமரை விட கிருஷ்ணரை தான் பிடிக்கும் வாலி வதம் பற்றி சில பெரியவர்கள் சொல்லும் போது சரியே என்று தோணும்

    ReplyDelete
  5. வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகிய மூவர் எழுதியவற்றில் லட்சுமணன் கோடு பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனந்த ராமாயணத்தில்தான் லட்சுமணன் கோடு கிழித்த நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. வாலியின் வதம் மட்டும் அல்ல,சீதையின் தீக்குளிப்பும் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...ராமனை ஹீரோவாக திரையில் சிறுவயதில் இருந்தே கண்டு மகிழ்ந்தாலும்,இவ்விரு சம்பவங்களும் எவ்வகை வாதங்களின் மூலம் நியாயப்படுத்தப்பட்டாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை...உங்களது இந்தப் பதிவு வெகுகாலம் கழித்து என்னை புத்தகம் படிக்கத் தூண்டியது.... வாழ்த்துக்கள் அத்தான்.

    ReplyDelete
    Replies
    1. சீதையின் தீக்குளிப்பு பற்றி நான் குறிப்படவில்லை... ஆனால் என் மனதிலும் அந்த சம்பவம் பற்றிச் சின்ன உறுத்தல் உண்டு. உன் கருத்துக்கு நன்றி.

      Delete
  7. இலட்சுமணன் கோடு பற்றி வால்மீகி எழுதவில்லை என அறிந்துக்கொண்டேன். இராமன் கோடு (அணிலுக்கு போட்ட கோடு) பற்றி ஏதாவது தகவல் உள்ளதா??

    ReplyDelete