Monday 13 July 2020

சத்திய வெள்ளம்


                      
                சத்திய வெள்ளம் - நா. பார்த்தசாரதி


   1960 - 1970  காலத்தில் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான, குறிஞ்சி மலர், மணிபல்லவம் போன்ற பிரபலமான பல நாவல்களை எழுதிய நா. பார்த்தசாரதியின் ஏதாவது ஒரு நாவலை மீண்டும் வாசிக்க முடிவு செய்தேன். சாகித்திய அகாடமி விருந்து பெற்ற அவரின் சமுதாய வீதி நாவலை வாங்க முயற்சி செய்து தாமதம் ஆனதால் எங்கள் வீட்டிலிருந்த சத்திய வெள்ளம் நாவலை வாசித்தேன். சத்திய வெள்ளம் சமூக நாவல் கல்கி வார இதழில் தொடராக 1972'ல் வெளிவந்தது. வாசிக்க ஆரம்பித்த நேரம் அலுவலக, சொந்த வேலைகள் நேரங்களைத் தின்றுவிட முடிக்கக் கொஞ்சம் (நிறையவே) காலம் ஆகிவிட்டது. அதற்கேற்ப நாவலும் மெதுவாக நகர... அந்த அனுபவம் இறுதியில். 

மல்லிகைப் பந்தல் என்னும் ஊரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாவலின் நாயகன் பாண்டியன் மாணவர் பேரவை செயலாளர் பதவிக்கும், மோகன்தாஸ் தலைவர் பதவிக்கும் போட்டியிட, அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் மாணவர்கள் வெற்றிபெற  ஆளும் கட்சியின் MLA மற்றும் வட்ட செயலாளர் பல சூழ்ச்சிகள் செய்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் அருகில் கடை வைத்திருக்கும் தேசிய இயக்கத்தின் மீது பற்றுகொண்ட அண்ணாச்சி அவர்களுக்கு உதவுகிறார். மாணவிகள் சார்பாக அவர்களின் பக்கம் நிற்கும் கண்ணுக்கினியாளும், பாண்டியனும் காதலில் விழுகிறார்கள். மாணவி மேரியின் தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், பின்பு அமைச்சர் கரிய மாணிக்கத்திற்கு டாக்டர் பட்டம் தரப் பல்கலைக்கழகம் முடிவு செய்வதை எதிர்த்தும் முன்னாள் மாணவத் தலைவன் மணவாளன் துணையுடன் கடுமையாகப் போராடும் அவர்களை ஆளும் அரசாங்கம் போலிஸ், குண்டர்கள் மற்றும் துணைவேந்தரின் உதவியுடன் அதிகார துஷ்பிரயோகங்களால் ஒடுக்க முயல இறுதியில் வென்றது யார் என்பதுதான் முடிவு. 

நா. பார்த்தசாரதியே சொல்வது போல் நிகழ்கால சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் நடைமுறைகளை எழுத்துக்கள் தமிழில் குறைவாகவே வருகிறது. அவரின் சமுதாய வீதி நாவலில் நடிகர்திலகம் சிவாஜியை இழுத்திருப்பார். யாருக்கேனும் காரணம் தெரிந்தால் கருத்துகளாகப் பதிவிடவும். இதில் நாவல் எழுதிய காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த திராவிட கட்சியை, ஆட்சியை மறைமுகமாக ஏன்? பல இடங்களில் நேரடியாகவே போட்டுத் தாக்குகிறார். தமிழ் வாழ்க முழக்கம், எதுகை மோனை மேடைப் பேச்சு, ரூபாய்க்கு மூணு படி அரிசி, நிர்வாகங்களில் அரசியல் தலையீடு, தகுதியற்ற அரசியல்வாதிகளின் டாக்டர் பட்ட ஏக்கம் எதையும் விடவில்லை. தேசிய நோக்கமிருந்தாலும் சிலர் வன்முறைப் பாதையில் வழிதவறி போய்விடுகிறார்களே எனவும் சில பாத்திரங்கள் மூலமாக வேதனைப்படுகிறார். காந்தியம், நேருவென எழுத்துகளால் உருகுபவர் காமராஜரை (ராம்ராஜ்) ஒரு  சின்ன பாத்திரமாக நுழைத்துவிட்டார். கதிரேசன், பேராசிரியர் பூதலிங்கம், பொழில் வளவனார், சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலு, இராவணசாமியும் நாவலில் வரும் வெறும் கதாபாத்திரங்கள் மட்டுமில்லை இன்றும் நமது முன்னால் வேறு பெயர்களில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். நாவல் தோலுரிக்கும் அனைத்து சம்பவங்களும், அரசியல் நிர்வாக தலையீடுகளும் எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இன்னும் தொடர்வதுதான் சோகம். 

நாவலின் பெரிய பிரச்சினை ஒருவழிப்பாதையாக எளிதாக ஊகிக்கும் வகையில் பயணிப்பதுதான். அண்ணாச்சி பாத்திரம் அழகாகப் படைக்கப்பட்டிருந்தாலும் அதுபோல் ஒருவர் வாழ முடியுமா? இவ்வளவு உதவிகள் மாணவர்களுக்குச் செய்யக் காரணம் தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆசிரியரின் நிறைவுரை நம்பிக்கையான "வாசகர்கள் வேறெந்தப்  பொழுதுபோக்கு நவீனத்தாலும் அடைய இயலாத புதுவிதமான உணர்வுகளையும் அனுபவங்களையும் சிந்தனைக் கிளர்ச்சிகளையும் இந்த நாவலை வாசிக்கும்போது அடையலாம்"  எனக்குப் பொய்த்துப்போனது. 

இறுதியாக: 

சத்திய வெள்ளம் நாவலின் நாயகன் சத்திய வேட்கையோடு, ஆவேசமாக வலம் வந்தாலும் அந்த உணர்வை வாசிக்கும் எனக்கு நா. பார்த்தசாரதியின் எழுத்துக்கள் அப்படியே உள்வாங்க வைக்கவில்லை. அதனால்  கடினமான நாவல்களை விட இந்நாவல் மிகுந்த அயர்வைத் தந்தது. இந்த நாவலை வாசிக்கும் பயணத்தைப் பாதியிலே நிறுத்திவிடலாம் என்றெண்ணிய மனதை என் தாயார் தந்த ஊக்கம்தான் மாற்றியது.  


7 comments:

  1. நா. பார்த்தசாரதியின் புத்தகங்களில் நாயகன் சமுதாய அவலங்களைக் கண்டு பொங்குவான். இப்படி கேவலமாக நடந்து கொள்கிறார்களே என்று பக்கம் பக்கமாக பொருமுவான். நாயகன் எப்போதுமே லட்சியவாதி. கதையின் நாயகி, நாயகனை பார்த்து உருகி அவனது காரியம் அனைத்துக்கும் கை கொடுப்பவள். பொதுவாக அன்றைய தமிழ் உலகம் விரும்பிய கதைகளை எழுதி இருக்கிறார்.

    ReplyDelete
  2. துளசி மாடம்- நா.பார்த்த சாரதி
    நாபாவின் நாவல் வாசிப்பது என்பது எந்த பொழுது போக்கு அம்சமும் இல்லாத ஆர்ட் ஃப்லிம் பார்ப்பது போன்றது. அவரின் கதைகள் நேரான பாதையிலே பயணிக்கும். ஆனால் கல்லும் முள்ளும் நிரம்பிய ஒத்தையடி பாதை.
    பொதுவாக கல்கியில் தொடராக வரும் கதைகள் 26 அல்லது 30 அத்தியாங்களுக்குள் முடிந்து விடும். துளசி மாடமும் 32 அத்தியாங்கள் கொண்ட சிறு நாவலே. ஒரிரு நாட்களில் படித்து முடித்து விடலாம். ஆனால் ஒத்தையடி பாதையில் விரைவாக பயணிக்க முடியாததால் 5 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது.
    கதை என்பதோ மிக எளிதானதுதான். ஆச்சாரமான பிராமண குடும்பத்து இளைஞன் எப்படி ஐரோப்பிய பெண்ணை (இந்திய பிராமணப் பெண்களை விட ஆச்சாரமான) தன் தாயாரையும் ஊரின் பேச்சினையும் எதிர்த்து கைப்பிடிக்கிறான் என்பதுதான்.
    நாபா பெரிய மிகவும் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் என்றாலும் (அவரின் சத்திய வெள்ளம், மணிபல்லவம் படித்திருக்கிறேன்) துளசி மாடம் அப்படியான நாவல் இல்லை என்றே தோன்றுகிறது. 40 வருடங்களுக்கு முந்தைய நாவல் அந்த காலத்தில் வெகுஜன, அடிமட்ட மக்களை பற்றிய கதைகள் குறைவாக வந்திருக்கும் போல. வழக்கம் போல இந்த கதையும் பிராமண குடும்பத்தினை பற்றியதுதான். கதையில் பிராமணீயத்தை மிகவும் உயர்த்தி சொல்ல மெனக்கெட்டிருக்கிறார் என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை.
    சிறு வயதில் வாசிப்பு என்பது சுகம், சந்தோஷம், களிப்பு தரும் பொழுதுபோக்கு அம்சம். இப்பொது வயதின் காரணமாக நமது சிந்தனை, ரசனை மற்றும் உலகம் பற்றிய பார்வை மாறிப் போனதால் இந்த நாவலை கொண்டாட முடியவில்லை.

    கதையில் வரும் பெரும்பாலான கதைப்பாத்திரங்கள் (பிராமணர்கள்) ஆத்திகம், கடவுள் என்பதை தவறாக புரிந்து கொண்டவர்கள் என காட்டினாலும் ஏதோ பிராமணர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரமுமே (கதையில் வரும் வில்லனும் பிராமணர் என்றாலும்) இந்திய கலாச்சாரம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் சமஸ்கிருதமே மூத்த மொழி என்று கொடி பிடிக்கிறார்.
    கதை முடிவும் எதிர்பார்த்த ஒன்றே. கலாச்சார பரிமாற்றம் என்பதுதான் கதைக்கரு என் முடிவில் ஆசிரியரே சொன்னாலும் வேறு எதை வலியுறுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
    அந்த காலத்தில் இலக்கியம், கலை எல்லாமே உயர் மட்ட மக்களுக்காகவே இருந்திருக்கும் போல.
    இது விமர்சனம் அல்ல. விமர்சனம் எழுதும் அளவுக்கு எனக்கு ஜெகனைப்போல ஞானம் போதாது. ஆனால் அவன் விமர்சனங்களை படிக்கும் போது நாமும் நாம் வாசிக்கும் புத்தகத்தினை குறித்து நம் எண்ணங்களை கூறலாமே என் ஆவல்

    ReplyDelete
    Replies
    1. துளசி மாடமும் நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாவல்தான்.நாவலைப் பற்றிய உங்களின் கருத்தை ரத்தினச்சுருக்கமாக எடுத்துரைத்துள்ளீர்கள். அருமை..

      Delete
    2. Nice review for a review 👌

      Delete
  3. அன்பு நண்பருக்கு நல்ல புதினம் இநது நான் கல்லூரிப் பருவத்தில் படித்திருக்கிறேன் நான் கல்லூரிப் பேயபேராசிரியாவதற்கு இப்புதினமும் ஒஒரு காரணமாகும் மல்லிகைப் பந்தல் கிராமத்தை பல பக்கங்களில் வருணித்திருப்பது அழகோ அழகு படிக்கப் படிக்க சுகமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே... மல்லிகை பந்தல் கிராமத்தை வருணித்திருக்கும் விதம் பற்றி உங்கள் கருத்து உண்மை..

      Delete
  4. அருமையான விமர்சனம்

    ReplyDelete