Saturday, 22 August 2020

சூல்

    

                                 சூல் -  சோ. தர்மன்

 

சாகித்ய அகாடமி விருதை 2019'ம் ஆண்டு பெற்ற நாவல் என்ற முறையில்தான் எனக்கு அறிமுகமானது இந்த சூல் நாவல். பலமுறை நான் அடுத்து வாசிக்கும் பட்டியலிருந்து தள்ளிப்போனாலும் இறுதியில் வாசித்து முடித்தேன். 

  எட்டயபுரத்து மன்னர் ஆட்சியின் கீழ் உள்ள கோவில் பட்டி அருகில் இருக்கும் உருளைக்குடியின் வெயில் காலத்தில் கதை ஆரம்பிக்கிறது. விவசாயிகள் கண்மாயிலிருந்து கரம்பை மண்ணை எடுத்து தங்கள் வயலில் கொட்டுகிறார்கள். அந்த கண்மாய்தான் நாவலில் கதாநாயகன்.  தண்ணீர் நிறைந்து நிறை சூலியாய் மங்களகரமாக இருந்த கண்மாய் காலப்போக்கில் யார் யார் கைகளிலோ அகப்பட்டு பாலையாய், மூலியாய் மாறியதே நாவலின் மையைக்கரு. எட்டயபுரத்து மன்னர், ஆங்கிலேயர்கள், சுதந்திர இந்தியா காலங்களில் நீர்நிலைகளின் நிலை என்ன? அவை எவ்வாறெல்லாம் பராமரிக்கப்பட்டது, படுகிறது என்பதைப் பேசக்கூடிய நாவல்தான் சூல்.

    அந்த காலத்தில் மன்னரின் உதவியுடன் அந்தந்த கிராம மக்களே அவர்களது கண்மாய் மற்றும் நீர்நிலைகளைப் பராமரிப்பு செய்து, மராமத்து பணிகளை மேற்கொண்டு வந்தனர். கண்மாயைப் பாதுகாத்து அனைத்து நிலங்களுக்கும் நீரைச் சமமாக அளித்து மேலாண்மை செய்பவன்தான் நீர்ப்பாய்ச்சி. அவனை மையைப்படுத்தி நாவலைக் கிராமத்துக் குறும்பு ( பல அசைவ ) பேச்சிலும், அவர்களின் பாரம்பரிய விவசாய, பொறியியல், மருத்துவ இயற்கை சார்ந்த நுண்ணறிவுகளையும் ஆங்காங்கே பதிவு செய்தும் நாவலை நகர்த்திச் செல்லுகிறார் சோ. தர்மன். கி. ராவை வாசித்தவர்களுக்கு அவரின் தாக்கத்தை இந்த நாவலில் காணலாம். 

  வெற்றிலை தொழில் ரகசியத்தைப் பொய் சொல்லி ஆத்தூரில் கற்றுக்கொள்ளும் மகாலிங்கம் பிள்ளை,  மனசாட்சி உறுத்தலோடு அதனை யாரிடம் சொல்லாமலே மடிந்து வயற்காடுகளுக்குக் காவல் தெய்வமாகிப் போனது. தன் உயிரைக் கொடுத்து கண்மாயில் ஏற்பட்ட அடைப்பை எடுத்துக் கண்மாய்க்குக் காவல் தெய்வமாகிப் போன மடைக்குடும்பன். குடிக்கத் தண்ணீர் கேட்டவனைத் தவறாகக் கள்ளன் என நினைத்துத் துரத்த அதனால் மரணமடைந்த கள்ளன் சாமியாகிய கதை, குரவை மீனால் இறந்த குரவன், காதலித்து கற்பமாக்கிக் கைவிட்டவனைக் கொன்று, கொல்ல பயன்படுத்திய  உளியையே சாமியாக்கிய மாதாயி என்று பல கிராம கடவுள்களின் கதைகள், பேயைப் புணர்ந்தவன் கதை, அனுமன் முனி கதை என நம் கிராமங்களில் மட்டுமே வாய்வழியாகக் கேள்விப்படக்கூடிய அமானுஷ்க்கதைகள் சுவாரஸ்யமானவை.  

  தனக்குப் பிள்ளைகள் இல்லாத குறையை மறக்க, தன் எண்ணங்களைக் கட்டுப்படுத்த கோவிலுக்குச் செல்லுபவர்களுக்கு மோர் தந்து அவர்கள் இளைப்பாற மரங்களை வளர்த்து சோலையாக்கும் கோப்புளாயியும், தனக்கான சமாதியைக் கட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கும் குப்பாண்டிசாமியும், மலையாள மந்திரவாதி குஞ்ஞான் வாசிப்பவர்களின் மனதினுள் நிறைந்திருக்கும் கதாபாத்திரங்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பிச் செல்லும் வழியில் தனக்கு உதவி செய்த பனை மரமேறும் எலியன், லாடம் அடிக்கும் பிச்சை ஆசாரிக்கும் பரிசாகத் தந்த நகைகளை அரண்மனைக்காரர்கள் மற்றும் வெள்ளைக்காரர்கள் மீதான பயத்தின் காரணமாக வீட்டுக்குள்ளே புதைத்து வைத்து தலைமுறை தாண்டியும் மீட்டெடுக்க முடியாமலே போவது எழுதப்பட்ட விதம் நகைச்சுவை. தாழ்த்தப்பட்ட மக்களின் ஊருக்குள் எப்படி பள்ளிக்கூடங்களும், சர்ச்சுகளும் நுழைந்தது. மதமாற்றம், கடவுள் மறுப்பு மற்றும் திராவிட அரசியலைப் பற்றிய கூரிய விமர்சனங்களை முன் வைக்கிறார். 

      நாவலில் பேசும் நிகழ்வுகளின் கால வேறுபாடுகள் நாவலின் ஆவணத் தன்மையைக் கொஞ்சம் நிலைகுலையச் செய்கிறது. எடுத்துக்காட்டாகக் கட்டப்பொம்மன் தப்பிச் செல்லும் போது வரும் ரயில். அவர் தூக்கிலிடப்பட்டுக் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழித்தே இந்தியாவில் முதல் இரயில் சேவைத் துவங்கியது. சுச்சி நாயக்கர் என்னும் ராமசாமி நாயக்கர், சின்னாத்துரை, மற்றும் சின்னாத்துரையின் சாவுக்குப் பின் பஞ்சாயத்துத் தலைவராகும் மூக்காண்டி (மூக்கா) கதாபாத்திரங்கள் யாரை மனதில் கொண்டு பின்னப்பட்டவை என வாசிக்கும் எவருக்கும் எளிதில் புரிந்துவிடும்.  சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சீமை உடை மரம், ஜிலேப்பி கெண்டை மீனை இவர்கள் கொண்டு வந்ததாக  எழுதியிருப்பது. 

   ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்ற பொழுது 39,640 கண்மாய்கள் இருந்தனவாம். நம் முன்னோர்கள் அன்று மழை நீரைச் சேமித்து எளிதாக மேலாண்மை செய்த கண்மாய்களை இன்று வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, வனத்துறை எனப் பலதுறைகளை ஏற்படுத்திச் சிக்கலாக்கி நாம் அடைந்தது என்ன? அவற்றின் தற்போதைய நிலைமை? அவையனைத்தும் எங்குச் சென்றன?  எப்படிக் காணாமல் போயிற்று?. போன்ற பல கேள்விகளை நம்முள் எழுப்புகிறது. நீருக்காகப் பல இன்னல்களைச் சந்திக்கும் இன்றைய சூழலில் நீர் மேலாண்மையின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் இந்த சூல் நாவல் தவறவிடாமல் அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல். 

இறுதியாக :

  சூல் நாவல் வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதினையும் பதறச்செய்யலாம். நமது சமுகத்தின் மீது கடுமையான கோபத்தினை ஏற்படுத்தலாம்.. அடுத்து என்ன ???   

அரசாங்கம் :  அருமையான கருத்துள்ள நாவல்... இந்தாப் பிடி சாகித்ய அகாடமி விருதை.

"பாலம் கட்டி ரோடு போட்டால் பட்ஜெட் அதிகமாகி கமிஷன் கம்மியாகி விடும். மண்ணை அள்ளிப்போட்டு குளத்தை நிரப்பி ரோடு போடுங்கள்".. 😛

நாம் : எப்படி இருந்த ஊரை இப்படி ஆக்கிவிட்டார்கள் பாவிகள்... விளங்குவார்களா அவர்கள்... அதனால்தான் இப்படி தண்ணீர் பஞ்சம்.. 

"எப்பா அந்த குளத்துக்குள்ளே போகும் ரோடுக்கு பக்கத்தில் ரெண்டு பிளாட் ரொம்ப சீப்பா கிடக்கு எனத் தரகன் சொன்னான். ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்து விடுவோமா?" .. 🙈

Sunday, 2 August 2020

சிந்து முதல் கங்கை வரை



                         சிந்து முதல் கங்கை வரை 
                                                     - ராகுல சாங்கிருத்தியான்

     
 
  ராகுல சாங்கிருத்தியாயனின் வால்கா முதல் கங்கை வரை புத்தகம் மீண்டும் தந்த வாசிப்பு அனுபவம் அவர் எழுதிய சிந்து முதல் கங்கை வரை நாவலை வாசிக்கத் தூண்டியது. எங்கள் வீட்டில் 1988 'லிருந்து  இந்நாவலிருந்தாலும் நான் முன்பு வாசித்ததில்லை. வால்கா முதல் கங்கை வரையில் இடம் பெற்றிருக்கும் பந்துல மல்லன் (புத்தர்) காலத்துக் கதையை சிம்ஹ சேனாதிபதி என்ற தலைப்பில் அந்த புத்தகத்திற்கு முன்பே எழுதிய நாவலிது. வால்கா முதல் கங்கை கிடைத்த வரவேற்பு, புகழினால் பின்பு இந்த நாவலின் தலைப்பைச் சிந்து முதல் கங்கை வரை என மாற்றி விட்டார்கள் என்றெண்ணுகிறேன்.

    வைசாலி நாட்டை சேர்ந்த லிச்சவி இன இளைஞன் சிம்மன், தட்சசீலத்திற்கு வந்து ஆச்சாரியார் பஹுளாஸ்வரரிடம்  மாணவனாகச் சேருகிறான். பல நாட்டை சேர்ந்த இளைஞர்களும் போர்ப் பயிற்சி முறைகளை அவரிடம் கற்று வருகிறார்கள். அக்காலகட்டத்தில் தட்சசீலம் மற்றும் வைசாலியில் குடியாட்சியும் மற்ற தேசங்களில் முடியாட்சியும் நடைபெறுகிறது. பலவித கலைகளையும் திறம்பட கற்றுத் தேறும் சிம்மனை உதவி ஆசிரியனாக நியமிக்கிறார்.  ஆச்சாரியாரின் மகள் ரோகிணியும் அவன் மீது காதல் கொள்கிறாள். பாரசீக மன்னன் தட்சசீலம் மீது படையெடுத்து வர சிம்மன் மற்றும் மேலும் சில வைசாலி நாட்டு மாணவர்களும் இராணுவத்துடன் சேர்ந்து பாரசீக படையைத் தோற்கடிக்கிறார்கள். சிம்மனின் சேவையை, வீரத்தைப் பாராட்டி ரோகிணியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதுடன் தட்சசீல குடியுரிமையும் அளிக்கிறார்கள். 

   சில மாதங்கள் கழித்து வைசாலி திரும்ப முடிவு செய்யும் சிம்மனோடு, தட்சசீல வீரன் கபில் தலைமையில் ஒரு நல்லிணக்க குழுவும் பரிசுகளோடு கிளம்புகிறது. மகத நாட்டு மன்னன் பும்பிசாரனின் மகன் அஜாதசத்ருவின் தூண்டுதலால் வைசாலி மீது போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் அவர்கள் வைசாலியியை வந்தடைகிறார்கள். வைசாலி குடியரசு சபை உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெறும் சிம்மனை தட்சிண சேனைத் தலைவனாகவும் நியமிக்கிறார் குடியரசுத் தலைவர் கணபதி சுனந்தர். சிம்மனின் யோசனைக்கு ஏற்ப இராணுவத்தில் பெண்களும் சேர்க்கப்பட்ட அதற்கு அவனது அண்ணி பாமா தலைமைத் தாங்குகிறாள். சிம்மன் மற்றும் கபிலின் வியூகங்களால் மகத படைப் போரில் தோல்வித் தழுவ சமாதான உடன்படிக்கை ஏற்படுகிறது. 

    சிம்மன் சேனாதிபதியாகப் பதவி உயர்வு பெறுகிறான். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கௌதம புத்தரும் மகாவீரரும் வைசாலிக்கு வர, சிம்மன் ஜைனவ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அஹிம்சை, புலால் மறுப்பு என மாறுகிறான். ஆனால் சுற்றியுள்ள அனைவரும் புத்தரின் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு அவனைப் பரிகாசம் செய்ய, புத்தரை ஒருமுறையேனும் தரிசிக்க நினைக்கும் அவனது ஆவலை  ஜைன மதாச்சாரியார் தடுத்து விடுகிறார். இறுதியில் அவரை மீறி கௌதம புத்தரைத் தரிசிக்கச் செல்கிறான். அங்குப் புத்தரின் மோகன சக்தியில் கட்டுண்டு அவரின் கோட்பாடுகளை அறிந்து, புரிந்து பௌத்த தர்மத்தில் சரணடைந்து விடுகிறான். 

  முழு நாவலையும் உரை நடை பாணியிலே ராகுல சாங்கிருத்தியான் நகர்த்துகிறார்.  இதிலும் தன்னுடைய பல கருத்துக்களைப் புகுத்தி குடியாட்சி முறையைத் தூக்கிப் பிடிக்கிறார். ஆரியர்கள் இனக்கலப்பில் ஈடுபட்டதாலே குடியாட்சி ஒழிந்து முடியாட்சி தோன்றியதாகக் கூறுகிறார். ஜைனவ மற்றும் புத்த சித்தாந்தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கி பௌத்த மார்க்கம் புலால் உண்ணுபவதைத் தடுப்பதில்லை என்கிறார். பாமா கதாபாத்திரம் மூலம் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களே.. அவர்களாலும் எதனையும் பேசவும், செய்யவும் முடியும் என முன் வைக்கிறார். மொத்தத்தில் நாவல் கொஞ்சம் சாண்டில்யன் டைப் கதைதான் (நினைவில் கொள்க -ராகுல சாங்கிருத்தியான்தான் சாண்டில்யனுக்கு முன்னோடி). கதாநாயகன்தான் எதனையும் தனியாக (சில பெண்களின் உதவியோடும் 😍) செய்து முடிக்கும் One man Show நாவல்தான். யூகிக்கும் வகையிலே நேர்க்கோட்டில் பயணிக்கும் நாவலில் ஆசிரியர் வைத்த ஒரே முடிச்சு போரில் மகத நாட்டின் பட்டத்து யானையை அடக்கிய வீரனைப் பற்றியதுதான்😛.  வால்கா முதல் கங்கை வரையை மனதில் கொள்ளாமலோ அல்லது சிந்து முதல் கங்கை வரை முதலில் வாசித்திருந்தாலோ இந்நாவலைப் பற்றிய என்னுடைய எண்ணங்கள் மாறுபட்டு இருந்திருக்கலாம். 

இறுதியாக :

  இந்த நாவலிற்கான குறிப்புக்களை  எடுத்த பழங்கால 1600 செங்கற்கள் இன்றும் பாட்னா மியூசியத்தில் இருப்பதாக தன் முன்னுரையில் ராகுல சாங்கிருத்தியாயன் குறிப்பிடுகிறார். செங்கற்கள் அவருக்குக் கிடைத்த நிகழ்வையே மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார். என்ன எனக்குத் தெரிந்த பும்பிசாரன் வைசாலி நாட்டை சேர்ந்த இளவரசி செல்லானாவையும் மணந்தவர் தன் மகன்  அஜாதசத்ருவால் சிறை பிடிக்கப்பட்டு அங்கே உயிர்நீத்தவர்.