Sunday 2 August 2020

சிந்து முதல் கங்கை வரை



                         சிந்து முதல் கங்கை வரை 
                                                     - ராகுல சாங்கிருத்தியான்

     
 
  ராகுல சாங்கிருத்தியாயனின் வால்கா முதல் கங்கை வரை புத்தகம் மீண்டும் தந்த வாசிப்பு அனுபவம் அவர் எழுதிய சிந்து முதல் கங்கை வரை நாவலை வாசிக்கத் தூண்டியது. எங்கள் வீட்டில் 1988 'லிருந்து  இந்நாவலிருந்தாலும் நான் முன்பு வாசித்ததில்லை. வால்கா முதல் கங்கை வரையில் இடம் பெற்றிருக்கும் பந்துல மல்லன் (புத்தர்) காலத்துக் கதையை சிம்ஹ சேனாதிபதி என்ற தலைப்பில் அந்த புத்தகத்திற்கு முன்பே எழுதிய நாவலிது. வால்கா முதல் கங்கை கிடைத்த வரவேற்பு, புகழினால் பின்பு இந்த நாவலின் தலைப்பைச் சிந்து முதல் கங்கை வரை என மாற்றி விட்டார்கள் என்றெண்ணுகிறேன்.

    வைசாலி நாட்டை சேர்ந்த லிச்சவி இன இளைஞன் சிம்மன், தட்சசீலத்திற்கு வந்து ஆச்சாரியார் பஹுளாஸ்வரரிடம்  மாணவனாகச் சேருகிறான். பல நாட்டை சேர்ந்த இளைஞர்களும் போர்ப் பயிற்சி முறைகளை அவரிடம் கற்று வருகிறார்கள். அக்காலகட்டத்தில் தட்சசீலம் மற்றும் வைசாலியில் குடியாட்சியும் மற்ற தேசங்களில் முடியாட்சியும் நடைபெறுகிறது. பலவித கலைகளையும் திறம்பட கற்றுத் தேறும் சிம்மனை உதவி ஆசிரியனாக நியமிக்கிறார்.  ஆச்சாரியாரின் மகள் ரோகிணியும் அவன் மீது காதல் கொள்கிறாள். பாரசீக மன்னன் தட்சசீலம் மீது படையெடுத்து வர சிம்மன் மற்றும் மேலும் சில வைசாலி நாட்டு மாணவர்களும் இராணுவத்துடன் சேர்ந்து பாரசீக படையைத் தோற்கடிக்கிறார்கள். சிம்மனின் சேவையை, வீரத்தைப் பாராட்டி ரோகிணியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதுடன் தட்சசீல குடியுரிமையும் அளிக்கிறார்கள். 

   சில மாதங்கள் கழித்து வைசாலி திரும்ப முடிவு செய்யும் சிம்மனோடு, தட்சசீல வீரன் கபில் தலைமையில் ஒரு நல்லிணக்க குழுவும் பரிசுகளோடு கிளம்புகிறது. மகத நாட்டு மன்னன் பும்பிசாரனின் மகன் அஜாதசத்ருவின் தூண்டுதலால் வைசாலி மீது போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் அவர்கள் வைசாலியியை வந்தடைகிறார்கள். வைசாலி குடியரசு சபை உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெறும் சிம்மனை தட்சிண சேனைத் தலைவனாகவும் நியமிக்கிறார் குடியரசுத் தலைவர் கணபதி சுனந்தர். சிம்மனின் யோசனைக்கு ஏற்ப இராணுவத்தில் பெண்களும் சேர்க்கப்பட்ட அதற்கு அவனது அண்ணி பாமா தலைமைத் தாங்குகிறாள். சிம்மன் மற்றும் கபிலின் வியூகங்களால் மகத படைப் போரில் தோல்வித் தழுவ சமாதான உடன்படிக்கை ஏற்படுகிறது. 

    சிம்மன் சேனாதிபதியாகப் பதவி உயர்வு பெறுகிறான். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கௌதம புத்தரும் மகாவீரரும் வைசாலிக்கு வர, சிம்மன் ஜைனவ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அஹிம்சை, புலால் மறுப்பு என மாறுகிறான். ஆனால் சுற்றியுள்ள அனைவரும் புத்தரின் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு அவனைப் பரிகாசம் செய்ய, புத்தரை ஒருமுறையேனும் தரிசிக்க நினைக்கும் அவனது ஆவலை  ஜைன மதாச்சாரியார் தடுத்து விடுகிறார். இறுதியில் அவரை மீறி கௌதம புத்தரைத் தரிசிக்கச் செல்கிறான். அங்குப் புத்தரின் மோகன சக்தியில் கட்டுண்டு அவரின் கோட்பாடுகளை அறிந்து, புரிந்து பௌத்த தர்மத்தில் சரணடைந்து விடுகிறான். 

  முழு நாவலையும் உரை நடை பாணியிலே ராகுல சாங்கிருத்தியான் நகர்த்துகிறார்.  இதிலும் தன்னுடைய பல கருத்துக்களைப் புகுத்தி குடியாட்சி முறையைத் தூக்கிப் பிடிக்கிறார். ஆரியர்கள் இனக்கலப்பில் ஈடுபட்டதாலே குடியாட்சி ஒழிந்து முடியாட்சி தோன்றியதாகக் கூறுகிறார். ஜைனவ மற்றும் புத்த சித்தாந்தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கி பௌத்த மார்க்கம் புலால் உண்ணுபவதைத் தடுப்பதில்லை என்கிறார். பாமா கதாபாத்திரம் மூலம் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களே.. அவர்களாலும் எதனையும் பேசவும், செய்யவும் முடியும் என முன் வைக்கிறார். மொத்தத்தில் நாவல் கொஞ்சம் சாண்டில்யன் டைப் கதைதான் (நினைவில் கொள்க -ராகுல சாங்கிருத்தியான்தான் சாண்டில்யனுக்கு முன்னோடி). கதாநாயகன்தான் எதனையும் தனியாக (சில பெண்களின் உதவியோடும் 😍) செய்து முடிக்கும் One man Show நாவல்தான். யூகிக்கும் வகையிலே நேர்க்கோட்டில் பயணிக்கும் நாவலில் ஆசிரியர் வைத்த ஒரே முடிச்சு போரில் மகத நாட்டின் பட்டத்து யானையை அடக்கிய வீரனைப் பற்றியதுதான்😛.  வால்கா முதல் கங்கை வரையை மனதில் கொள்ளாமலோ அல்லது சிந்து முதல் கங்கை வரை முதலில் வாசித்திருந்தாலோ இந்நாவலைப் பற்றிய என்னுடைய எண்ணங்கள் மாறுபட்டு இருந்திருக்கலாம். 

இறுதியாக :

  இந்த நாவலிற்கான குறிப்புக்களை  எடுத்த பழங்கால 1600 செங்கற்கள் இன்றும் பாட்னா மியூசியத்தில் இருப்பதாக தன் முன்னுரையில் ராகுல சாங்கிருத்தியாயன் குறிப்பிடுகிறார். செங்கற்கள் அவருக்குக் கிடைத்த நிகழ்வையே மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார். என்ன எனக்குத் தெரிந்த பும்பிசாரன் வைசாலி நாட்டை சேர்ந்த இளவரசி செல்லானாவையும் மணந்தவர் தன் மகன்  அஜாதசத்ருவால் சிறை பிடிக்கப்பட்டு அங்கே உயிர்நீத்தவர். 

3 comments:

  1. அருமை... உரைநடைகள் மூலமாக ராகுல சாங்கிருத்தியாயன் சொல்லும் கருத்துக்களுக்காகவே இந்த நாவலை வாசிக்கலாம். புத்தரின் உபதேசமாக வரும் "சிலர் ஆத்மா வேறு திரேகம் வேறு என்கிறார்கள். அப்படியெனில் திரேகத்தை வாட்டி வதைப்பதால் மாத்திரம் ஆத்மா எப்படி பரிசுத்த மடைகிறது??? அப்படியெனில் திரேகத்தின் மீதுள்ள ஆடைகளை வெளுப்பதின் மூலம் திரேகம் சுத்தமாகிவிட வேண்டுமல்லவா? ... நமது மனோபாவங்களையும் , புலன்களையும் கட்டுப்படுத்த முயலவேண்டும்"

    ReplyDelete
  2. ஆரியர்கள் இனக்கலப்பு part 2? Very nice review as always 👌

    ReplyDelete
  3. அருமை ... சிறந்த விமர்சனம்

    ReplyDelete