சூல் - சோ. தர்மன்
எட்டயபுரத்து மன்னர் ஆட்சியின் கீழ் உள்ள கோவில் பட்டி அருகில் இருக்கும் உருளைக்குடியின் வெயில் காலத்தில் கதை ஆரம்பிக்கிறது. விவசாயிகள் கண்மாயிலிருந்து கரம்பை மண்ணை எடுத்து தங்கள் வயலில் கொட்டுகிறார்கள். அந்த கண்மாய்தான் நாவலில் கதாநாயகன். தண்ணீர் நிறைந்து நிறை சூலியாய் மங்களகரமாக இருந்த கண்மாய் காலப்போக்கில் யார் யார் கைகளிலோ அகப்பட்டு பாலையாய், மூலியாய் மாறியதே நாவலின் மையைக்கரு. எட்டயபுரத்து மன்னர், ஆங்கிலேயர்கள், சுதந்திர இந்தியா காலங்களில் நீர்நிலைகளின் நிலை என்ன? அவை எவ்வாறெல்லாம் பராமரிக்கப்பட்டது, படுகிறது என்பதைப் பேசக்கூடிய நாவல்தான் சூல்.
அந்த காலத்தில் மன்னரின் உதவியுடன் அந்தந்த கிராம மக்களே அவர்களது கண்மாய் மற்றும் நீர்நிலைகளைப் பராமரிப்பு செய்து, மராமத்து பணிகளை மேற்கொண்டு வந்தனர். கண்மாயைப் பாதுகாத்து அனைத்து நிலங்களுக்கும் நீரைச் சமமாக அளித்து மேலாண்மை செய்பவன்தான் நீர்ப்பாய்ச்சி. அவனை மையைப்படுத்தி நாவலைக் கிராமத்துக் குறும்பு ( பல அசைவ ) பேச்சிலும், அவர்களின் பாரம்பரிய விவசாய, பொறியியல், மருத்துவ இயற்கை சார்ந்த நுண்ணறிவுகளையும் ஆங்காங்கே பதிவு செய்தும் நாவலை நகர்த்திச் செல்லுகிறார் சோ. தர்மன். கி. ராவை வாசித்தவர்களுக்கு அவரின் தாக்கத்தை இந்த நாவலில் காணலாம்.
வெற்றிலை தொழில் ரகசியத்தைப் பொய் சொல்லி ஆத்தூரில் கற்றுக்கொள்ளும் மகாலிங்கம் பிள்ளை, மனசாட்சி உறுத்தலோடு அதனை யாரிடம் சொல்லாமலே மடிந்து வயற்காடுகளுக்குக் காவல் தெய்வமாகிப் போனது. தன் உயிரைக் கொடுத்து கண்மாயில் ஏற்பட்ட அடைப்பை எடுத்துக் கண்மாய்க்குக் காவல் தெய்வமாகிப் போன மடைக்குடும்பன். குடிக்கத் தண்ணீர் கேட்டவனைத் தவறாகக் கள்ளன் என நினைத்துத் துரத்த அதனால் மரணமடைந்த கள்ளன் சாமியாகிய கதை, குரவை மீனால் இறந்த குரவன், காதலித்து கற்பமாக்கிக் கைவிட்டவனைக் கொன்று, கொல்ல பயன்படுத்திய உளியையே சாமியாக்கிய மாதாயி என்று பல கிராம கடவுள்களின் கதைகள், பேயைப் புணர்ந்தவன் கதை, அனுமன் முனி கதை என நம் கிராமங்களில் மட்டுமே வாய்வழியாகக் கேள்விப்படக்கூடிய அமானுஷ்க்கதைகள் சுவாரஸ்யமானவை.
தனக்குப் பிள்ளைகள் இல்லாத குறையை மறக்க, தன் எண்ணங்களைக் கட்டுப்படுத்த கோவிலுக்குச் செல்லுபவர்களுக்கு மோர் தந்து அவர்கள் இளைப்பாற மரங்களை வளர்த்து சோலையாக்கும் கோப்புளாயியும், தனக்கான சமாதியைக் கட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கும் குப்பாண்டிசாமியும், மலையாள மந்திரவாதி குஞ்ஞான் வாசிப்பவர்களின் மனதினுள் நிறைந்திருக்கும் கதாபாத்திரங்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பிச் செல்லும் வழியில் தனக்கு உதவி செய்த பனை மரமேறும் எலியன், லாடம் அடிக்கும் பிச்சை ஆசாரிக்கும் பரிசாகத் தந்த நகைகளை அரண்மனைக்காரர்கள் மற்றும் வெள்ளைக்காரர்கள் மீதான பயத்தின் காரணமாக வீட்டுக்குள்ளே புதைத்து வைத்து தலைமுறை தாண்டியும் மீட்டெடுக்க முடியாமலே போவது எழுதப்பட்ட விதம் நகைச்சுவை. தாழ்த்தப்பட்ட மக்களின் ஊருக்குள் எப்படி பள்ளிக்கூடங்களும், சர்ச்சுகளும் நுழைந்தது. மதமாற்றம், கடவுள் மறுப்பு மற்றும் திராவிட அரசியலைப் பற்றிய கூரிய விமர்சனங்களை முன் வைக்கிறார்.
நாவலில் பேசும் நிகழ்வுகளின் கால வேறுபாடுகள் நாவலின் ஆவணத் தன்மையைக் கொஞ்சம் நிலைகுலையச் செய்கிறது. எடுத்துக்காட்டாகக் கட்டப்பொம்மன் தப்பிச் செல்லும் போது வரும் ரயில். அவர் தூக்கிலிடப்பட்டுக் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழித்தே இந்தியாவில் முதல் இரயில் சேவைத் துவங்கியது. சுச்சி நாயக்கர் என்னும் ராமசாமி நாயக்கர், சின்னாத்துரை, மற்றும் சின்னாத்துரையின் சாவுக்குப் பின் பஞ்சாயத்துத் தலைவராகும் மூக்காண்டி (மூக்கா) கதாபாத்திரங்கள் யாரை மனதில் கொண்டு பின்னப்பட்டவை என வாசிக்கும் எவருக்கும் எளிதில் புரிந்துவிடும். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சீமை உடை மரம், ஜிலேப்பி கெண்டை மீனை இவர்கள் கொண்டு வந்ததாக எழுதியிருப்பது.
ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்ற பொழுது 39,640 கண்மாய்கள் இருந்தனவாம். நம் முன்னோர்கள் அன்று மழை நீரைச் சேமித்து எளிதாக மேலாண்மை செய்த கண்மாய்களை இன்று வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, வனத்துறை எனப் பலதுறைகளை ஏற்படுத்திச் சிக்கலாக்கி நாம் அடைந்தது என்ன? அவற்றின் தற்போதைய நிலைமை? அவையனைத்தும் எங்குச் சென்றன? எப்படிக் காணாமல் போயிற்று?. போன்ற பல கேள்விகளை நம்முள் எழுப்புகிறது. நீருக்காகப் பல இன்னல்களைச் சந்திக்கும் இன்றைய சூழலில் நீர் மேலாண்மையின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் இந்த சூல் நாவல் தவறவிடாமல் அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்.
இறுதியாக :
சூல் நாவல் வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதினையும் பதறச்செய்யலாம். நமது சமுகத்தின் மீது கடுமையான கோபத்தினை ஏற்படுத்தலாம்.. அடுத்து என்ன ???
அரசாங்கம் : அருமையான கருத்துள்ள நாவல்... இந்தாப் பிடி சாகித்ய அகாடமி விருதை.
"பாலம் கட்டி ரோடு போட்டால் பட்ஜெட் அதிகமாகி கமிஷன் கம்மியாகி விடும். மண்ணை அள்ளிப்போட்டு குளத்தை நிரப்பி ரோடு போடுங்கள்".. 😛
நாம் : எப்படி இருந்த ஊரை இப்படி ஆக்கிவிட்டார்கள் பாவிகள்... விளங்குவார்களா அவர்கள்... அதனால்தான் இப்படி தண்ணீர் பஞ்சம்..
"எப்பா அந்த குளத்துக்குள்ளே போகும் ரோடுக்கு பக்கத்தில் ரெண்டு பிளாட் ரொம்ப சீப்பா கிடக்கு எனத் தரகன் சொன்னான். ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்து விடுவோமா?" .. 🙈
நீர் மேலாண்மை பற்றி நம் முன்னோர்கள் கொண்டிருந்த இயற்கை சார்ந்த அறிவை, நவீனமயமாதலின் பயணத்தில் தொலைத்துவிட்ட நம் சமூகத்தைக் கேள்வி கேட்கும் நாவல் சூல். இயற்கையோடு இயைந்த வேளாண்மை, முன்னோர்களின் பாரம்பரியங்கள், ஏரி, குளம், கண்மாயென நீராதாரங்களைப் பராமரித்த முறைகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிவது மட்டுமல்லாது நாவலில் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ள சொலவடைகளும், கிராமத்து நையாண்டிகளும் வாசிப்பவர்களுக்கு இந்த நாவல் நிச்சயம் திருப்தியைத் தரும். இருப்பினும் நாவலின்மீது சில விமர்சனங்களுமுண்டு. வாசித்து முடிக்கையில், இந்நாவல் மறைமுகமாகக் குலத்தொழில் முறையை ஆதரிப்பதுபோன்று, மக்களாட்சி முறை நடைமுறைக்கு வந்ததும்தான் எல்லாமே சீர்குலையத் துவங்கியது போன்றும் ஒரு பிம்பம் உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை.
ReplyDeleteவிமர்சனத்தின் முடிவில் உங்களது பஞ்ச் அருமை.... அதான் நிதர்சனமும் கூட...
Super as always! Lookslike sad trivia and depressing reality! Reflection of how much we have fallen as a country and as a race from our glory days and worst part is that things continue to fall! Its possible that someone in 50years from today might actually think this is a better time to live. Life goes on....
ReplyDelete