Friday, 25 September 2020

அன்னா கரீனினா

 

            அன்னா கரீனினா  - லியோ டால்ஸ்டாய்


   எவ்வளவு நாட்கள்தான் உள்ளூர் நாவல்களையே தேடிப்பிடித்து வாசித்துக்கொண்டிருப்பது சற்று வெளியையும் சென்று பார்க்கலாமே என்ற எண்ணத்தினால் உலக இலக்கியத்தைத் தெரிந்தவர்களின் பேச்சில் சரளமாகப் புரளும் லியோ டால்ஸ்டாயின் உலகத்தின் மிகச்சிறந்த நாவலாகப் பெரும்பான்மையானவர்களால் கொண்டாடப்படும் அன்னா கரீனினா நாவலை வாங்கி விட்டேன்.  ஆனால் வாங்கிய பின் நாவலின் நீளம்தான் (மொத்தம் எட்டு பாகங்கள்) கொஞ்சம் தயக்கத்தைக் கொடுத்தது அதனை வாசிக்கத் தொடங்க.... லியோ டால்ஸ்டாய் இந்த நாவலை 1873' ஆம் ருஷ்ய மொழியில் எழுத ஆரம்பித்துள்ளார். நான் வாசித்தது நா. தர்மராஜனின் மொழிபெயர்ப்பு.

    தனது சகோதரன் ஆப்லான்ஸ்கி மற்றும் அவரது மனைவி டாலிக்கும் இடையே ஏற்பட்ட ஊடலைத் தீர்த்துவைக்க அன்னா பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து மாஸ்கோ நகருக்கு வருகிறாள். அவளோடு இரயிலில் இராணுவத்தில் வேலை செய்யும் பிரபு விரான்ஸ்கியின் தாயாரும் ஒரே பெட்டியில் பயணிக்கிறாள். தாயை வரவேற்க வந்த விரான்ஸ்கியை அன்னா சந்திக்கிறாள். கண்களோடு கண்கள் பேசி ஒருவித ஈர்ப்பில் இருவரும் விழுகிறார்கள். டாலியின் சகோதரி கிட்டி மீது கொண்ட காதலால் கிராமத்திலிருந்து மாஸ்கோ வரும் லெவின் அவளிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்க அவளோ, அவளது தாயின் விருப்பத்தின்படி விரான்ஸ்கியை மணக்கும் நோக்கத்தோடு மறுத்து விடுகிறாள். ஆனால் விரான்ஸ்கியோ அன்னாவை பார்த்தபின் அவள் மீது கொண்ட மோகத்தால் கிட்டியை மறந்து அன்னாவை துரத்திக்கொண்டு பீட்டர்ஸ்பர்க் செல்லுகிறான். அன்னாவோ தனக்கு அரசாங்கத்தில் முக்கிய வேலையிருக்கும் கரீனின் என்பவருடன் திருமணமாகி எட்டு வயதில் செரோஷா என்ற மகனும் இருப்பதைக்  கூறி அவனிடமிருந்து விலகுகிறாள்.

          அன்னாவை விடாமல் துரத்தி அவளது மனதையும் கரைத்து அவளையும் அடைகிறான் விரான்ஸ்கி.  இதனால் கர்ப்பம் அடையும் அன்னா, கரீனினனிடம் அனைத்தையும் கூறித் தான் விரான்ஸ்கியோடு வாழ விவாகரத்து தருமாறு வேண்டுகிறாள். கரீனினனோ தன்னுடைய சமூக அந்தஸ்தைப் பறிகொடுத்து விடாமலிருக்க அவளை மன்னித்து ஏற்றக்கொள்வதாகக் கூறுகிறான். மகப்பேறு தொடர்பான கடுமையான காய்ச்சலில்  உடல் குன்றியிருக்கும் பொழுது அன்னா இறந்துவிடுவாள் என நினைத்து விரான்ஸ்கி தற்கொலைக்கு முயன்று தோற்கிறான். அதிலிருந்து மீளும்  விரான்ஸ்கி இராணுவத்தில் தனக்குக் கிடைக்கும் பதவி உயர்வைத் துறந்து அங்கிருந்து வெளியேறி அன்னாவுடன் வெளிநாடு செல்கிறான்.

          விரான்ஸ்கியால் நிராகரிக்கப்பட்ட கிட்டி  அதனால் மனம், உடல் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறாள். அங்குக் கிடைக்கும் அனுபவங்களால் மனப்பக்குவமடைபவள் மீண்டும் ருஷ்யா வந்து தன் சகோதரி டாலியின் உதவியால் லெவினை மணக்கிறாள். வெளிநாட்டிலிருந்து மீண்டும் ருஷ்யா திரும்பும் விரான்ஸ்கி மற்றும் அன்னா ஒரு கிராமத்தில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அன்னவோ தன்னுடைய மகன் செரோஷாவை எண்ணி வாடுகிறாள். கரீனின் அவளுக்கு விவாகரத்து தர மறுக்க, அவளுடைய சமூக அங்கீகாரத்தை எண்ணி வருந்துகிறாள். அவளில் மனதில் அமைதி தேய்ந்தது கொண்டே வருகிறது. அதனால் அவள் மனதில் ஐயம் குடி கொண்டு விரான்ஸ்கி மீதும் நம்பிக்கை இழந்து சந்தேகிக்கிறாள். அனாவசியமாக விரான்ஸ்கி அவள் கட்டுப்படுத்த முயல அவர்களிடையே சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனஸ்தாபம் நிகழ்கிறது. அதுபோல் ஒரு சிறிய ஊடலுக்குப் பின் தன் தாயைப் பார்க்கச் சென்ற விரான்ஸ்கியை தொடரும் அன்னா உச்சக்கட்ட மனக்குழப்பத்தில் வெறுப்பின் உச்சத்தில் எடுக்கும் முடிவுதான் நாவலின் முடிவும் கூட. 

                   அன்னாவை மட்டுமே நாவல் முன்னிலைப் படுத்தாமல் லெவின், கிட்டியின் காதல் வாழ்வும் இணையாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் லெவினின் சகோதரர்களின் கிளைக்கதைகளும் உள்ளது. வெறும் காதல் கதையாக மட்டுமில்லாமல் கதை நகரும் தளத்தினை பயன்படுத்தி அன்றைய  மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் நகரங்கள், ருஷ்யாவின் கிராமங்களை கண்முன்னே நிறுத்துகிறார். அரசியல் சூழ்நிலை, நகர மற்றும் கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்திற்குள்ள வேறுபாடு, சமய நம்பிக்கைகள், விவசாயிகளின் பிரச்சினைகள் என நாவல் அலசும் விஷயங்கள் எண்ணிலடங்காதவை. பெண்களின் நுட்பமான உணர்வுகளை, உணர்ச்சிகளை, அவர்களின் மனவோட்டங்களை டால்ஸ்டாய் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். கதையின் ஊடாக பயணிக்கும் லெவினின் பழக்க வழக்கங்களாக, கருத்துக்களாகத் தனது எண்ணங்களைப் பதிவுசெய்வதாகத் தோன்றியது. கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஆண், பெண்களின் உளவியலை நாவல் பேசினாலும் இன்னும் பல ஆண்டுகள் கடந்து யார் வாசித்தாலும் அவரின்  நெஞ்சையும் நெருடும். 

  நாவலின் பரந்த பின்னணி, நிகழ்வுகளின் விசாலமான சித்தரிப்பு, யதார்த்தமான உரையாடல்கள், கதாபாத்திரங்களின் பன்முகத்தன்மை, விவாதிக்கும் சமூகப் பிரச்சினைகள் என லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவல் நிலையிலிருந்து விலகி அமரகாவியமாகிறது. குடும்பத்தில் தோன்றும் ஒரு சிறிய பிரச்சினை குடும்ப உறவுகளுக்கிடையே புயல், சூறாவளியெல்லாம் தோற்றுவித்து எவ்வாறு சின்னாபின்னமாக்குகிறது. டால்ஸ்டாய்  பேசும் மனித உறவுகள், மனித நேயம் அன்னா கரீனினாவை வாசிக்கும் அனைவரையும் முதல் வாசிப்பிலே கவரும்படி உள்ளது. வாசிப்பின்போது நீங்கள் அறிந்த, பழகிய மனிதர்களைப் பற்றிய எண்ணங்கள் மனதில் தோன்றலாம். காரணம் மனிதர்களின் குணநலன்கள், செயல்பாடுகள், உறவின் சிக்கல்கள்  பல நூற்றாண்டுகளைத் தாண்டியும், புவியியல் எல்லைகளைக் கடந்தும் இன்றும் மாறாமல் இருப்பதுதான். வாசிப்பை நேசிக்கும் அனைவரும் தவற விடாமல் கட்டாயம் வாசித்தனுபவிக்க வேண்டிய காவியம் அன்னா கரீனினா.  

        வாசித்து முடிக்கும் போது பொதுவாகப் பெரிய நாவல்கள் ஒருவித ஆழ்ந்த அமைதியை, நெகிழ்வை, கனத்த மனதை உண்டாக்கிவிடும். நாவலின் கதாபாத்திரங்களுடன் ஒன்றாய் பயணித்து, அவர்களின் வாழ்க்கையின் ஊடே கூடி வாழ்ந்து விட்டு, சட்டென்று அவர்களைப் பிரிவதைப் போன்ற உணர்வின் விளைவாய் இருக்கலாம். அன்னா கரீனினா என் மனதில் ஏற்படுத்திய தாக்கம் விலக சில நாட்கள் என்ன?  சில வாரங்களே ஆகலாம். 

இறுதியாக :

     அன்னா கரீனாவை திரைப்படமாக இதுவரை  பத்திற்கும் மேற்பட்ட முறை பல்வேறு மொழிகளில் எடுத்துள்ளார்கள். ஆனால் எதுவுமே வெற்றி பெறவில்லையாம். டால்ஸ்டாயின் நயமிக்க இலக்கிய சுவையை, அழகான கவித்துவத்தை யாராலும் திரையில் முழு உணர்வுப்பூர்வமாகக் கொண்டு வர முடியாது என்பதே என் எண்ணம். 


3 comments:

  1. லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா பற்றி மிகவும் கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் வாசிக்க வாய்ப்பு இதுவரை அமையவில்லை. உங்களில் விமர்சனம் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நன்றி.

    ReplyDelete
  2. One of the best novel.. Must read one

    ReplyDelete