சுளுந்தீ - இரா. முத்துநாகு
சில நண்பர்களின் பரிந்துரையால் சுளுந்தீ நாவலை வாங்கி வாசித்தேன். கதைக்களம் 18'ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் காலத்தில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு பின்னப்பட்டிருந்தாலும் ஆண்ட மன்னர்களைப் பற்றிப் பேசாமல் சாமானிய, ஒதுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கிறது. அதுவும் அரண்மனை சூழ்ச்சிகள், அதிகார வர்க்கத்தைப் பேசும் நாவலில் நாவிதனை மையமாகக் கொண்டு கதை நகர்வது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
18'ஆம் நூற்றாண்டில் மதுரை மன்னரின் கீழ் உள்ள கன்னியவாடி (இப்போதைய தேனி மாவட்டம்) அரண்மனையார் கதிரியப்ப நாயக்கர். அரண்மனை நாவிதனான ராமன் பன்றிமலை சித்தருக்குச் சீடனாகி மருத்துவத்தைக் கற்று மகாபண்டுவனாகிறான். அதனால் கன்னியவாடி அரண்மனையில் தவிர்க்க முடியாத அங்கமாகும் அவன் மீது தளபதி முத்து இருளப்ப நாயக்கர் எரிச்சல் கொள்கிறார். ராமன் தனது மகன் மாடனை நாவிதத்திலிருந்து விலக்கி அரசுப்படை வீரனாக்க முயல அதற்குத் தளபதி ராமனின் முட்டுக்கட்டை போடுகிறார். இளைய ராணியின் உள்ளங்கை தோல் வெடிப்புக்கு மருந்து தயாரிக்கும் பொழுது நடக்கும் விபத்தில் ராமன் இறக்க, அவன் மனைவி வல்லத்தாரையோ பார்வையை இழக்கிறாள். அதன் பின்பும் அடங்காமல் படை வீரனாக முயலும் மாடன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அரண்மனை சதிகள், உள்குத்துக்களை முறியடித்தானா என்பதே நாவலின் முடிவு.
குலவிலக்கானவர்களை ஒன்று சேர்த்து கிணறு வெட்டி, அந்த பாசனத்தைக் கொண்டு விவசாயத்தை விரிவாக்கும் மருதமுத்து ஆசாரி, மாடன் மீது மெல்லிய காதல் கொண்டு அதனை வெளிப்படுத்தாமலே அவனுக்கு உதவிகள் செய்யும் அனந்தவல்லி, கன்னிவாடி மடத்தின் குலகுரு அருணகிரி, ஏசு சபை ஊழியரான பாதிரியார் ஆல்வரேசு. எல்லாவற்றுக்கும் மேல் பன்றிமலை சித்தர் என்று வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் நம்மைக் கதையோடு கட்டிப்போடுகின்றன. பண்டுவத்தில் செந்தூரம் தயாரிக்க உதவும் பொருட்களைப் பயன்படுத்தி அதிகாரத்தை இழந்த பாண்டிய அரசு பிரதிநிதிகள் வெடிமருந்து தயாரிப்பதை அறிந்த நாயக்கர் அரசு பல பண்டுவர்களை கொன்று குவித்தது வரலாற்றுச் சோகம். நாயக்கர் அரசர்களின் குல மரமான புளியமரத்தின் கொட்டைகளை மக்கள் பஞ்சகாலத்தில் உண்டு திடகாத்திரமாக இருந்ததை அறிந்த ராணி மங்கம்மா சாலை ஓரம்தோறும் புளியமரத்தை நடவு செய்யச் சொல்லியுள்ளார். கிடாரிக்குப் பிறக்கும் முதல் கன்றுவை ஏன் கோவிலுக்கு நேர்ந்து விட்டு விடுகிறார்கள் என்பதை அருமையான கிளைக்கதை மூலம் ஆசிரியர் விளக்குகிறார்.
செந்தூரம் தயாரிக்கும் முறை, வெடிமருந்து தயாரிக்கும் முறை, அந்தக் கால பண்டுவ குறிப்புகள் மட்டுமில்லாது பல்வேறு நுண் தகவல்கள் நாவலெங்கும் படர்ந்து விரிந்து கிடக்கிறது. பண்டுவம் என்னும் வைத்தியமுறை நுணுக்கங்களை அந்த காலத்தில் நாவிதர்களே அறிந்துள்ளனர். அவர்களின் மனைவிகள் மருத்துவச்சியாக வேலை செய்துள்ளனர். காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு ஒதுக்கப்பட்ட மக்கள் ஆகிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் இரா. முத்துநாகு. நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் விஜயநகர குடிகள் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டில் குடியேற அதனால் தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள். பூர்விக குடிகள் பலர் குலநீக்கம் செய்யப்பட்டுத் துரத்தப்பட்ட நிகழ்வுகளைக் குறிப்பிடும் கீழ்க்கண்ட வரிகளைக் கடப்பதற்கு மனம் கனக்கிறது.
"அரண்மனை அதிகாரப் போட்டிக்குக் குடிகள் பலிகடா ஆவதும், அரசுக்கு வேண்டியவர்களைக் குடியமர்த்துவதும், பூர்விகக் குடிகளை அழித்தொழிப்பதும், வரலாறு தொட்டு நீதியாகவே இருக்கிறது"
நாவலின் முடிவு கொஞ்சம் யதார்த்தத்தை விட்டு விலகிச் சென்றது போல் எனக்குத் தோன்றியது. ஆண்டவர்களின் பெருமையைப் பேசாமல் நாவல் சாமானியர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசினாலும் இதில் எவ்வளவு வரலாற்று உண்மைத்தன்மை கலந்துள்ளது என்பது இது போன்ற அனைத்து நாவலுக்குள்ள பிரச்சினைதான். மிக அதிகமான நுண்ணறிவு தகவல்கள் ஆரம்பத்தில் வாசிக்கக் கொஞ்சம் அயர்வைத் தந்தாலும் இறுதியில் ஒரு நல்ல நாவலை வாசித்த உணர்வையே தருகிறது.
இறுதியாக :
எண்ணெய் துணியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தீவட்டிப் பயன்பாட்டுக்கு முன்பே சுளுந்து மர குட்சியையே வெளிச்சம் தரப் பயன்படுத்தியதாக ஆசிரியர் கூறுகிறார். நெருப்புவை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சுளுந்தீக்கு நாயக்கர்களின் அரசு தடை விதித்துள்ளது. முற்காலத்தில் வெளிச்சம் தந்து இன்று பலருக்கும் தெரியாமல் போன சுளுந்தீக்கு ஆசிரியர் வெளிச்சம் கொடுத்துள்ளார்.
விகடன் விருது இந்த நாவலுக்குக் கிடைத்துள்ளது எனக் கேள்விப்பட்டுள்ளேன். வாசிக்கக் காலம் அமையவில்லை. உங்களின் விமர்சனமும், கதையின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் வாசிக்கத் தூண்டுகிறது. அருமை.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteArumai bro, as always
ReplyDeleteஅருமையான பதிவு ...
ReplyDelete