Saturday, 26 December 2020

ரத்தம் ஒரே நிறம்

 

                       ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா


    புத்தக வாசிப்பைத் தாண்டி அவரின் பன்முகத்தன்மையால் பலருக்கும் அறிமுகமானவர் சுஜாதா. அவரது பல கதைகள், கட்டுரைகளைச் சிறுவயது முதலாகவே வாசித்து வந்துள்ளேன். சரித்திர கதைகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.  ரத்தம் ஒரே நிறம் சரித்திர நாவலைக் குமுதம் வார இதழில் எழுதினார். சரித்திர நாவல் என்றவுடன் தின் தோள்களை கொண்ட மன்னர்களையும் அவர்களின் அழகான இளவரசிகளையும் பற்றி பேசி மிக அதிக தூரம் நம்மை அழைத்துச் செல்லாமல்  1857'ஆம் நடந்த சிப்பாய் கலவரம் (முதலாவது சுதந்திரப் போர்) நடந்த காலகட்டத்தின் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கதையைப் பின்னியுள்ளார். 

                     ஆலம்பாக்கம் ஊரைச் சேர்ந்த முத்துக்குமரன் சிலம்பாட்டத்தில் மிகுந்த தேர்ச்சிபெற்றவன். ஊர் திருவிழாவில் சிலம்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக தன் குழுவினரோடு குதிரையில் செல்லும் வெள்ளைக்காரன் எட்வர்ட் மக்கின்ஸி,  முத்துக்குமரனுடன் வம்பிழுத்து மோதுகிறான். தோற்ற மக்கின்ஸி அவமானத்தில் முத்துக்குமரனை கொல்ல முயல எதிர்பாராதவிதமாக முத்துக்குமாரனின் தந்தையைக் கொன்று விடுகிறான். தன் அப்பனுக்கு அழையா எமனாக வந்த மக்கின்ஸியை பழிவாங்கும் எண்ணத்தில் அவனை தேடி அலைந்து பல முயற்சிகள் செய்யும் முத்துக்குமரன் இறுதியில் பழிதீர்த்தானா என்பதுதான் நாவலின் கரு. இதில் எங்கே சிப்பாய் கலவரம் வருகிறது என உங்களுக்குத் தோன்றலாம். 

                                வித்தைக்கார குழுவினரோடு சேர்ந்து சென்னை வரும் முத்துக்குமரன் தன்னுடைய முதல் பழிவாங்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவுகிறான். வெள்ளையர்களின் மாட்டிக்கொண்டவனை   மற்றுமொரு அதிகாரி ஆஷ்லி தப்பிக்க வைக்கிறான். வித்தைக்கார குழுவினைச் சேர்ந்த பூஞ்சோலைக்கு முத்துக்குமரன் மீது ஒரு ஈர்ப்பு. பைராகி என்பவனிடம் சென்று தற்காப்புக் கலைகளின் நுணுக்கங்களை கற்று மீண்டும் மக்கின்ஸியை கொலை செய்ய முயற்சி செய்கிறான்.  இதனிடையே வட இந்தியாவில் சிப்பாய் கலவரம் தீவிரமடைய அதனை முறியடிக்கச் சென்னையிலிருந்து செல்லும் படையில் மக்கின்ஸி மற்றும் ஆஷ்லியும் செல்கிறார்கள். மக்கின்ஸி துரத்திக்கொண்டு கான்பூர் செல்லும்  முத்துக்குமரன் தன் லட்சியத்தை நிறைவேற்றினானா? சிப்பாய் கலவரம் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதுதான் நாவலின் முடிவு. 

                                        ராகுல சாங்கிருத்தியானின் "வால்கா முதல் கங்கை வரை" குறிப்பிட்ட மாதிரி என்பீல்ட் நிறுவனத்தின் புதிய துப்பாக்கியில் பயன்படுத்திய கொழுப்பு தடவிய  குண்டை பற்றி வேண்டுமென்றே சதி எனச் செய்தி பரப்பப்பட்டது சிப்பாய்களை ஆங்கில அரசுக்கு எதிராகத் தூண்டுவதற்காக. சிப்பாய் கலவரத்தை முன்னிறுத்தி காழ்புணர்வு கொண்ட ஆங்கிலேய அதிகாரிகள் செய்ததை மட்டுமில்லாமல் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்களையும் முன்வைக்கிறார். நல்மனம் படைத்த ஆண் மீது ஒரு பெண் காதல் வயப்படுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாகிறாள். நாவலில் வரும் முத்துக்குமரன் - பூஞ்சோலை - ராக்கன், ஆஷ்லி - எமிலி - மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே கோணத்தில் பயணிக்கிறது. கல்கத்தா கரையோரமாக ஒரு 'சதி' (உடன்கட்டை) நிகழ்வை விரிவாக எழுதியுள்ளார். அது வாசிக்கும் அனைவரையும் பதைபதைப்பு அடையச்செய்யும். மேலும் அதனைப் போன்ற சம்பவங்களைப் பற்றி வெள்ளையர்கள் கொண்டிருந்த வேறுபட்ட கருத்துக்களையும் சொல்லுகிறார்.

                                     என்னதான் சரித்திர உண்மை சம்பவங்களைப் பின்னியாகக் கொண்டு எழுதியிருந்தாலும் நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போலத்தான் நகர்கிறது ரத்தம் ஒரே நாவல். அதுவும் முத்துக்குமரன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். பைராகி என்கிற சித்தர் போன்ற கதாபாத்திரம் நம்ப முடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். வட இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய் கலவரத்தில் அந்த மக்களே கணிசமாக அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றுப் பயணித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம்தான் நாவலின் சிறப்பு.

 இறுதியாக :

           ரத்தம் ஒரே நிறம் நாவலை முதலில் குமுதத்தில் "கருப்பு சிவப்பு வெளுப்பு" எனும் பெயரில்தான் எழுதியுள்ளார். ஆனால் மூன்று வாரத்திற்குப் பின் ஒரு இனத்தவர்களின் கடுமையான எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தைச் சுஜாதா குறிப்பிடும் போது "எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது திட்டு வார்த்தைகள் எனக்குப் பாடமாயின. தொலைப்பேசியில் கொலை மற்றும் வலது கையை வெட்டி விடுவேன் மிரட்டல் விடுத்தார்கள்"...  இது இப்பொழுது ஒருவருக்கு நடந்தால்... சமூக வலைத்தளங்களில் அவரின் குடும்பத்தையே இழுத்திருப்பார்கள். அதுவும் பலர் என்னவென்றே சரியாகத் தெரியாமல் புரியாமல் forward செய்வார்கள் 😒... 


Thursday, 10 December 2020

பாண்டியன் மகள்

 

                   பாண்டியன் மகள் -  விஷ்வக்சேனன்

     

     கல்கி வார இதழின் பொன்விழா பரிசுப் போட்டியில் 1993'ஆம் ஆண்டு முதல் பரிசு வென்ற சரித்திர நாவல் விஷ்வக்சேனன் எழுதிய பாண்டியன் மகள். எனது அன்னை வாசித்து விட்டு பரிந்துரையும் செய்ததால் எங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்தேன்.

          பாண்டியன் மகள் என்று நாவலின் பெயர் இருந்தாலும் சோழர்களின் வீரத்தை, புகழைப் பாடும் மற்றுமொரு நாவல்தான். நாவலின் கதைக்களம் இராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப் பேரன் குலோத்துங்க சோழன் அரியணையேறிய காலம். குலோத்துங்க சோழன் வடக்கே சாளுக்கியர்களை எதிர்த்துப் போர்புரியப் பெரும்படையுடன் செல்ல அந்த சூழ்நிலையையே சாதகமாகப் பயன்படுத்தி பாண்டியன் மார்த்தாண்டன் மதுரையை மீண்டும் கைப்பற்றி தன் மருமகன் மாறவர்மனை அரியணையில் ஏற்ற முயற்சி செய்கிறான். இத்திட்டத்திற்குப் பிரிந்தது கிடக்கும் பாண்டியர்களை எல்லாம் ஒன்று சேர்ப்பதுடன், சேர மற்றும் ஈழ மன்னர்களிடமும் படை உதவி கேட்கிறான். போரில் வென்றால் மாறவர்மனுக்கு ஈழத்து இளவரசி அஞ்சனாதேவியை மணமுடித்து பாண்டிய நாட்டில் தங்களது செல்வாக்கு நிலைநாட்டலாம் என ஈழ மன்னனும், வென்றால் தங்களுக்குக் கிடைக்கும் நிலப்பகுதிகளுக்காகச் சேர மன்னனும் சம்மதிக்கிறார்கள்.

                         சேர இளவரசி அம்மங்கை தேவியை கடத்தி சென்று மேலைமங்கல கோட்டையில் அடைக்கிறான் மாறவர்மன். ஒரே இரவில் இளவரசியை மீட்டு மேலைமங்கல கோட்டையையும் கைப்பற்றுகிறான் கவி நாராயண பட்டரின் சீடன் அரையன் மதுராந்தகன். இதனால் சோழ இளவல் விக்கிரமனின் நட்பையும் அம்மங்கையின் காதலையும் பெறுகிறான். அதன்பின் பொதிகைக்கு வரும் அரையன் அங்கு ஜடாவர்மா பாண்டியனின் மகள் கயல்விழியை மீட்டு சோழ நாட்டிற்கு அனுப்பி விட்டுச் சேர நாட்டின் விழிஞ்சம் கடற்படைத் தளத்திற்குச் சேர ஒற்றன் சமுத்திரபந்தன் என்னும் மாறுவேடத்தில் செல்கிறான். பாண்டியன் மகளைப் பற்றிய ரகசியங்களை சேரலாதன், ஈழத்து தண்டநாயகன்,  இளவரசி அஞ்சனாதேவியிடம் கூறி பாண்டியர்களுக்கு உதவி செய்வதில் தயக்கமேற்பட வைக்கிறான். சில காலத்திற்கு முன்பு மார்த்தாண்டனின் துரோகத்தால் ஜடாவர்மா பாண்டியன் கொல்லப்பட அரசி மங்கையையர்கரசியை,  நாராயண பட்டர் காப்பாற்றிப் பாதுகாப்பு கொடுக்கிறார். சிறுமி கயல்விழியை ஓர் சேர படைத்தலைவன் தூக்கிச்சென்று அவள் யாரென்ற உண்மையைச் சொல்லாமலே வளர்க்கிறான்.

                          குலோத்துங்க மன்னனைச் சந்திக்கச் சோழ ஒற்றன் ஜெயந்தனுடன் செல்லும் அரையன் மதுராந்தகன் வழியில் நவிலைக் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட சோழ இரண்டாவது இளவல் ராஜராஜனை சாளுக்கிய ஜெயதுங்கனுடன் வாட்போரிட்டு வென்று மீட்கிறான். இதனிடையே மாறவர்மனிடம் நம்பிக்கை இழக்கும் ஈழத்து இளவரசன் பராக்கிரமபாகு, கொங்குப்பாண்டிய இளவல் குலசேகரனை மதுரை அரியணையில் அமர வைத்து அஞ்சனாதேவியை மணமுடித்து  வைக்கச் சதித்திட்டம் ஈடுகிறான். மதுரை அரியணையனைக்கு உரிமையுடைய பாண்டிய இளவரசி கயல்விழியைக் கொல்ல மதுரைக்கு வரும் ஈழத்து மார்க்கீயன், பாண்டிய மார்த்தாண்டனிடமிருந்து  காப்பாற்றிப் பாதுகாப்பு தரும் விக்கிரமன் மீது அவள் காதல் கொள்கிறாள். குலோத்துங்கனின் அன்புக்குப் பாத்திரமாகும் அரையனின் போர் வியூகங்களால் பாண்டியர்கள் மற்றும் அவர்களின் நேசப்படைகள் எவ்வாறு ஒடுக்கப்பட்டது.   அம்மங்கை மற்றும் கயல்விழியின் காதல் கை கூடியதா என்பதே நாவலில் சுகமான முடிவு. 

                              எல்லா சரித்திர ( மன்னர்களைப் பற்றிய) நாவலைப் போலத்தான் இதிலும் கதாநாயகனே அனைத்தையும் அறிந்தவன். அவனது வீரம், மதிநுட்பம் எல்லோராலும் போற்றி புகழப்படும். எங்குப் பிரச்சினை தோன்றினாலும் அவன் அங்கு வந்து தனியொருவனாக அதனை முறியடிப்பான். கல்கி மற்றும் சாண்டில்யனின் பாணிகளைக் கலந்து சுவாரசியமாகப் பாண்டியன் மகள் நாவலை விஷ்வக்சேனன் படைத்துள்ளார். பொதுவாகச் சரித்திர நாவலுக்கென்றே சில எழுதப்படாத விதிகள் உள்ளன. மிக அழகான ராஜகுமாரிகள் அவர்களைப்பற்றிய வருணிப்புகள், எதிரிகளை எளிதில் மாறுவேடம் பூண்டு ஏமாற்றி விடும் ஒற்றர்கள், யவன வியாபாரிகள், பாண்டிய/சோழர்களின் வீரம் இவையெல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்குமெனில் உங்களுக்கான நாவல்தான் இந்த பாண்டியன் மகள். 

இறுதியாக :

         பாண்டியன் மகளைத் தவிர இன்னும் சில சரித்திர நாவல்களையும் விஷ்வக்சேனன் எழுதியுள்ளார். அவர் எழுதிய இந்திர தனுசு நாவலையும் எங்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்தேன். ஆனால் சரித்திரத்தை மட்டுமே பேசாதே இதுபோன்ற நாவல்கள் என்னை இப்போதெல்லாம் மிகவும் கவர்வதில்லை. ஆதலால் அந்த நாவலை இப்போதைக்கு வாசிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.