ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
ஆலம்பாக்கம் ஊரைச் சேர்ந்த முத்துக்குமரன் சிலம்பாட்டத்தில் மிகுந்த தேர்ச்சிபெற்றவன். ஊர் திருவிழாவில் சிலம்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக தன் குழுவினரோடு குதிரையில் செல்லும் வெள்ளைக்காரன் எட்வர்ட் மக்கின்ஸி, முத்துக்குமரனுடன் வம்பிழுத்து மோதுகிறான். தோற்ற மக்கின்ஸி அவமானத்தில் முத்துக்குமரனை கொல்ல முயல எதிர்பாராதவிதமாக முத்துக்குமாரனின் தந்தையைக் கொன்று விடுகிறான். தன் அப்பனுக்கு அழையா எமனாக வந்த மக்கின்ஸியை பழிவாங்கும் எண்ணத்தில் அவனை தேடி அலைந்து பல முயற்சிகள் செய்யும் முத்துக்குமரன் இறுதியில் பழிதீர்த்தானா என்பதுதான் நாவலின் கரு. இதில் எங்கே சிப்பாய் கலவரம் வருகிறது என உங்களுக்குத் தோன்றலாம்.
வித்தைக்கார குழுவினரோடு சேர்ந்து சென்னை வரும் முத்துக்குமரன் தன்னுடைய முதல் பழிவாங்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவுகிறான். வெள்ளையர்களின் மாட்டிக்கொண்டவனை மற்றுமொரு அதிகாரி ஆஷ்லி தப்பிக்க வைக்கிறான். வித்தைக்கார குழுவினைச் சேர்ந்த பூஞ்சோலைக்கு முத்துக்குமரன் மீது ஒரு ஈர்ப்பு. பைராகி என்பவனிடம் சென்று தற்காப்புக் கலைகளின் நுணுக்கங்களை கற்று மீண்டும் மக்கின்ஸியை கொலை செய்ய முயற்சி செய்கிறான். இதனிடையே வட இந்தியாவில் சிப்பாய் கலவரம் தீவிரமடைய அதனை முறியடிக்கச் சென்னையிலிருந்து செல்லும் படையில் மக்கின்ஸி மற்றும் ஆஷ்லியும் செல்கிறார்கள். மக்கின்ஸி துரத்திக்கொண்டு கான்பூர் செல்லும் முத்துக்குமரன் தன் லட்சியத்தை நிறைவேற்றினானா? சிப்பாய் கலவரம் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதுதான் நாவலின் முடிவு.
ராகுல சாங்கிருத்தியானின் "வால்கா முதல் கங்கை வரை" குறிப்பிட்ட மாதிரி என்பீல்ட் நிறுவனத்தின் புதிய துப்பாக்கியில் பயன்படுத்திய கொழுப்பு தடவிய குண்டை பற்றி வேண்டுமென்றே சதி எனச் செய்தி பரப்பப்பட்டது சிப்பாய்களை ஆங்கில அரசுக்கு எதிராகத் தூண்டுவதற்காக. சிப்பாய் கலவரத்தை முன்னிறுத்தி காழ்புணர்வு கொண்ட ஆங்கிலேய அதிகாரிகள் செய்ததை மட்டுமில்லாமல் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்களையும் முன்வைக்கிறார். நல்மனம் படைத்த ஆண் மீது ஒரு பெண் காதல் வயப்படுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாகிறாள். நாவலில் வரும் முத்துக்குமரன் - பூஞ்சோலை - ராக்கன், ஆஷ்லி - எமிலி - மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே கோணத்தில் பயணிக்கிறது. கல்கத்தா கரையோரமாக ஒரு 'சதி' (உடன்கட்டை) நிகழ்வை விரிவாக எழுதியுள்ளார். அது வாசிக்கும் அனைவரையும் பதைபதைப்பு அடையச்செய்யும். மேலும் அதனைப் போன்ற சம்பவங்களைப் பற்றி வெள்ளையர்கள் கொண்டிருந்த வேறுபட்ட கருத்துக்களையும் சொல்லுகிறார்.
என்னதான் சரித்திர உண்மை சம்பவங்களைப் பின்னியாகக் கொண்டு எழுதியிருந்தாலும் நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போலத்தான் நகர்கிறது ரத்தம் ஒரே நாவல். அதுவும் முத்துக்குமரன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். பைராகி என்கிற சித்தர் போன்ற கதாபாத்திரம் நம்ப முடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். வட இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய் கலவரத்தில் அந்த மக்களே கணிசமாக அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றுப் பயணித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம்தான் நாவலின் சிறப்பு.
இறுதியாக :
ரத்தம் ஒரே நிறம் நாவலை முதலில் குமுதத்தில் "கருப்பு சிவப்பு வெளுப்பு" எனும் பெயரில்தான் எழுதியுள்ளார். ஆனால் மூன்று வாரத்திற்குப் பின் ஒரு இனத்தவர்களின் கடுமையான எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தைச் சுஜாதா குறிப்பிடும் போது "எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது திட்டு வார்த்தைகள் எனக்குப் பாடமாயின. தொலைப்பேசியில் கொலை மற்றும் வலது கையை வெட்டி விடுவேன் மிரட்டல் விடுத்தார்கள்"... இது இப்பொழுது ஒருவருக்கு நடந்தால்... சமூக வலைத்தளங்களில் அவரின் குடும்பத்தையே இழுத்திருப்பார்கள். அதுவும் பலர் என்னவென்றே சரியாகத் தெரியாமல் புரியாமல் forward செய்வார்கள் 😒...
சுஜாதாதாசர்களால் கொண்டாடப்படும் இந்த சரித்திர நாவல் நான் வாசித்தபோது மிகப்பெரிய தாக்கத்தை எனக்குத் தரவில்லை. கான்பூர் சிப்பாய் கலவர நிகழ்வுகளைத் தவிரச் சரித்திரத்தைத் தேடத்தான் வேண்டியதிருந்தது. நீங்கள் குறிப்பிட்டது போல மசாலா சினிமாவுக்கு திரைக்கதை எழுதியது போலத்தான் இருந்தது ரத்தம் ஒரே நிறம். இதற்கு ஏற்பட்ட எதிர்ப்புதான் என்னை வியக்கவைத்தது..
ReplyDeleteNice as always! Hope it added much needed ‘spice’ to your reading :)
ReplyDeleteOverrated novel! Exaggeration of sadism! Poor narration
ReplyDelete