Thursday, 22 April 2021

உடையார்

 

                           உடையார் - பாலகுமாரன்

 

                பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலை வாசிக்க சில நண்பர்களும், நாவலைக் கொடுத்து எனது சகோதரரும் பரிந்துரைத்தார்கள். ஆறு பாகங்களுடன்  (புத்தகங்கள்) சுமார் 2600 பக்கங்களைக் கொண்ட பெரிய நாவல். ஒரு வார இதழில் முதலிரண்டு பாகங்களை எழுதியுள்ளார். சில காரணங்களால் அவர்கள் நாவலைத் தொடர மறுக்க, இதர பாகங்களைத் தனிப் புத்தகங்களாக எழுதியுள்ளார்.  நாவலின் பிரமாண்டம்தான் வாசிப்பைத் தொடங்க பெரிய தயக்கத்தைத் தந்தது. இறுதியில் வாசிக்கத் தொடங்கி விட்டேன். நான் வாசித்து முடிக்கச் சிறிது அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட நாவல் இதுதான். ஆனால் அதற்குக் காரணம் நாவலின் நீளம் மட்டுமே  அல்ல..

              இராஜராஜசோழன் தஞ்சை பிரகதீஸ்வர் பெரிய கோவிலை எவ்வாறு கட்டினார், அதில்  அவர் சந்தித்த சவால்களை எல்லாம் எப்படி எதிர்கொண்டு முறியடித்தார் என்பதுதான் நாவலின் மையக்கரு. நாவலின் பலமே பாலகுமாரனின் வசனங்கள் தான். அதுவும் உறவுகள் குறித்து கதாபாத்திரங்கள் பேசும், விவாதிக்கும் வார்த்தைகள் அனைத்தும் எக்காலத்திலும் ஏற்ற வகையில் உள்ளது. மன்னரைப் பற்றி மட்டுமே பேசாமல் அக்காலத்தில் வாழ்ந்த பல்வேறுபட்ட குடிமக்களையும், கோவில் கட்டுமானத்தில் பங்கேற்று உறுதுணையாக இருந்த பலதரப்பட்ட சமூகத்தினரின் பங்கையும் அவர்களிடையே இருந்த மோதல்களையும் பாலகுமாரன் நம் கண்முன்னே காட்டிவிடுகிறார் அவரின் எழுத்துக்களால்.

            செம்பியன் மாதேவி, பஞ்சவன் மாதேவி, இராஜராஜீ, சீருடையாள், பரவை நாச்சியார், குமுதினி, குந்தவை, கரிய மாணிக்கம், எச்சுமண்டை, உமையாள், குந்தவை (இராஜராஜனின் மகள்), மாதேவடியார், முத்தான பொன் நங்கை, அம்மங்கை, கடுவன்காரி, கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர், அருண்மொழி, மலையனுர் சாம்பான்,  வந்தியத்தேவன், விமலாதித்தன், கருவூர்த்தேவர், ஈசான சிவபண்டிதர், ராஜராஜ பெருந்தச்சர், நித்த வினோத பெருந்தச்சன், இலத்தி சடையன், சீராளன், சாவூர் பரஞ்ஜோதி, வைணவதாசன், குணசீலன், வீணை ஆதிச்சன், பரசு நம்பூதிரி, தொண்டை நாட்டு அந்தணர்கள் இப்படிப் பல கதாபாத்திரங்களை வடிவமைக்கப் பல பக்கங்களை ஒதுக்கி தேவரடியார்கள், அதிகாரிச்சிகள், ஒற்றர்கள், கருமார்கள், அந்தணர்கள், மெய்க்காவல் படை வீரர்கள், வேளாளர்கள், சிற்பிகள், ஓவியர்கள் என எல்லோரைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லுவதின் மூலமாக அவர்களின் வாழ்க்கை முறையையும் சொல்லுகிறார்.

                    கோவிலைக் கட்டுவதற்கான மண்டப வரைபடங்களைக் கொண்டுவரும் தேவரடியார் இராஜராஜீயின் வண்டி காவிரி ஆற்றின் வெள்ளத்தில் மாட்டிக்கொள்ள அதனை மீட்கும் படலத்துடன் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது நாவல். அந்த காலத்தில் இவ்வளவு உயரமான கோவிலைக் கட்ட மன்னருக்குத் தோன்றியது என்பதே வியப்புதான்.  அதனை மக்கள் எப்படியெல்லாம் எதிர் கொண்டிருப்பார்கள், பேசியிருப்பார்கள், அவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும், என்னென்ன குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும், அரசன் எப்படி இருந்திருப்பான் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களின் பங்கு என நிறைய விபரங்களை விரிவாகவும் எளிதாகவும் சொல்லியுள்ளார். நாம் படித்த வரலாற்றுப் புத்தகங்களில் எல்லாம் இந்தியக்கண்டத்தைச் சேராத அல்லது வேற்று மத மன்னர்களின் படையெடுப்பை மட்டும் பெரும் படையுடன் வந்து கொள்ளையடித்துச் சென்றார்கள் என எழுதியிருப்பார்கள். ஆனால் அக்காலத்தில் குறிப்பாகத் தென்னகத்திலிருந்த மன்னர்களின் படையெடுப்புகள் எல்லாமே பொதுவாகக் கொள்ளையடித்துச் செல்வத்தை அவர்கள் நாட்டிற்குக் கவர்ந்து வருவது மட்டுமே காரணமாக இருந்தது என்ற உண்மையை நேர்மையாக எழுதியுள்ளார் பாலகுமாரன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்காக மேலை சாளுக்கியத்தை வென்று நிறையப் பொருட்களைக் கொள்ளையடித்து வருகிறது இராஜராஜனின் படை. 

                                            நாவலை வாசித்து முடித்தவுடன் என் மனத்தில் தோன்றிய சில கேள்விகளை, சந்தேக எண்ணங்களை வரிசையாகத் தந்துள்ளேன்.

செம்பியன் மகாதேவியை ரவிதாசனின் வாரிசுகள் கடத்திக்கொண்டு செல்வது, இராஜேந்திர சோழனுக்கு எழுதப்பட்ட ஓலை மேலை சாளுக்கியர்களிடம் சிக்கிக்கொள்வது போன்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் சம்பவங்கள் எழுதிவிட்டு அதன் ஓட்டிய சம்பவங்கள் நாவலில் மீண்டும் சொல்லப்படாமல் இருப்பது இவ்வளவு பெரிய நாவலை விறுவிறுப்புடன் ஆர்வம் குறையாமல் வாசிக்கத் தடையாக உள்ளது.

 நாவலின் தலைப்பை உடையார் என்பதற்குப் பதில் பஞ்சவன் மாதேவி என்றே வைத்திருக்கலாம் போல. நாவல் முழுவதுமே அவள்தான் நிறைந்திருக்கிறாள். பஞ்சவன் மாதேவி ஒரு தேவரடியார். தேவாரம் பாடும்போது கேட்ட இராஜராஜன் அதில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கிடையே உள்ள காதல் நெருக்கம், வேதியலை ரொம்ப உருக்கமாக, உயர்வாக எழுதியுள்ளார். மன்னர் அன்பு செலுத்தியிருக்கலாம் ஆனால் ஒரு தேவரடியாருக்கு (அனுக்கி)  பட்டமகரிஷிக்கள் இருக்க அரசவையில் பாலகுமாரன் எழுதியிருக்கும் அதிகாரம் எல்லாம் கிடைத்திருக்க வாய்ப்பேயில்லை.

பட்டத்து அரசியான உலகமகா தேவி, பஞ்சவன் மாதேவி காலில் விழுந்து என் மகன் இராஜேந்தினை கொன்று விடாதே என்று வேண்ட, பஞ்சவன் மாதேவியோ தன் கர்ப்பப்பையை மலடாக்கிக் கொள்கிறாள்.  பிற்காலத்தில் இராஜேந்திர சோழன், பஞ்சவன் மாதேவிக்குப் பள்ளிப்படை கோவில் எழுப்பியுள்ளார். இதில் இரண்டு கேள்விகள் எழுந்தது என் மனதில். 1. இராஜேந்திரனின் தாயார் உலகமகா தேவி அல்ல வானதி தேவி என்றுதான் பல புத்தகங்களில் படித்திருக்கிறேன்.  2. இராஜராஜனுக்கு பல மனைவியர், ஏன் வேறு யாருடனும் குழந்தை பிறக்காதா?.   

கோவிலைச் சுற்றி அமைத்த மண் சாரத்தை நீக்கும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளை விளாவாரியாக விளக்குபவர் அதைவிடக் கஷ்டமான பணியான மண் சாரத்தை அமைத்த நிகழ்வைப் பற்றி அதிகம் பேசவில்லை.

கால அளவுகளில் பல குழப்பம் உள்ளது. தேவரடியார் இராஜராஜீ கோவில் கட்ட துவங்கும் பொழுதுதான் அருண்மொழி (பிரம்மராயரின் மகன்) அறிமுகம் ஆகிறாள் ஆனால் இருவரும் 11 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்வதாகப் பாகம் 6'ல் வருகிறது. 

பெரிய கோவிலின் வாசலில்  கணபதி (பிள்ளையார்) சிலையை வைப்பதாக வருகிறது ஆனால் நான் படித்த/வாசித்த வரலாற்று ஆராய்ச்சி புத்தகங்களில் எல்லாம் மராட்டியர்களின் ஆட்சிக் காலத்திலே பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டதாக உள்ளது.

அரசு கணக்குகளைப் பார்க்கும் அந்தணர்கள் பொய்க் கணக்கு எழுதுகிறார்கள். அரசு சொத்தை எப்படியெல்லாம் சந்தேகம் வராமல் கொள்ளையடிப்பது என வகுப்பெடுக்கிறார்கள். பாலகுமாரன் சொல்ல வருவதென்ன? அரசு வேலை செய்பவர்கள் அப்போதிலிருந்தே கறை படிந்தவர்கள்தான் என்கிறாரா?

ஒற்றர்களால் நாவல் நிரம்பி வழிகிறது. யாரும் யார் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் ஒற்றர் வைத்துள்ளார்கள். ஒற்றரை ஒற்றறிய இன்னொரு ஒற்றர். கணக்கு பார்த்தால் படைவீரர்களை விட ஒற்றர்களின் எண்ணிக்கை அதிகம் போலத் தோன்றுகிறது.

சரித்திர கதைகளில் பெரும்பாலும் ஆசிரியரின் கற்பனையே நிரம்பியிருக்கும். வரலாற்று நிகழ்வுகளில் கற்பனை கதாபாத்திரங்கள் கதையின் போக்கைத் தீர்மானிப்பதைத் தவிர்த்திருப்பதாக முன்னுரையில் கூறும் பாலகுமாரன் சில மந்திர தந்திரங்கள் செய்யும் கருவூர்த்தேவர் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலமாக எதனை மாற்ற விரும்புகிறார்?. இறுதியில் இராஜராஜன் மற்றும் பஞ்சவன் மாதேவியின் ஆன்மாவும் தஞ்சை பிரகதீஸ்வர் பெரிய கோவிலின் கோபுரவாசலிலிருந்து இன்னும் நம்மை வரவேற்பதாக வேறு எழுதியுள்ளார். 

நாவலில் முழுவதுமே தேவரடியார்கள்தான் அதிகாரம் செய்கிறார்கள். நாவல் முழுவதும் முக்கியத்துவம் பெற்று கதையை நகர்த்துவதே அவர்கள்தான். மன்னர், இளவரசர், சேனாதிபதி, சிற்பி, ஓவியன் என அனைவரும் அவர்களுக்குள்ளே மூழ்கிக் கிடக்கிறார்கள். தேவரடியார்கள்தான் நாட்டின் கண்கள் என வசனமே எழுதிவிட்டார். யாருடைய மனைவியர் பாத்திரமும் நாவலில் இம்மியளவும் வடிவமைக்கப் படவேயில்லை. 

மிக முக்கியமாக என் மனதை நாவல் முழுவதும் உறுத்திக்கொண்டே இருந்தது  நாவலின் கதை நிகழ்வுகள் ஏதோ 10 வருடங்களுக்கு முன்பு நடந்த மாதிரியே பல சம்பவங்களை எழுதியிருப்பது. மன்னரைச் சுற்றி நிற்கும் மெய்காவல் படையின் நடவடிக்கை, மன்னர் அவர்களை மீறி செயல் படுவது..... பல லட்சங்களில் வீரர்களின் கணக்கைச் சொல்லுகிறார்.  அவர்கள் அனைவரும் எப்பொழுதும் நெல் சோறுதான் சாப்பிடுகிறார்கள். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கூட  அனைவருக்கும் நெல் சோறு கிடைத்ததில்லை. மன்னரின் இரண்டாவது மகள் மாதேவடியார் காதல் கதையில் இப்போதைய டேட்டிங் மாதிரியான சம்பவங்கள் எல்லாம் வருகிறது. இதர சமூகத்தினர் அந்தணர்களுக்கு இணையான உரிமையெல்லாம் கேட்பது..

        பல இடங்களில் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிச் சலிப்புடைய செய்வதால் நாவல் மிக விரைவிலே வாசிப்பு சுவாரசியத்தை இழக்கிறது. மொத்தமே இரண்டு பாகங்களாக எழுதவேண்டிய நாவலை ஆறு பாகங்களாக எழுதி (5 பாகம் நாவலை முறியடிக்கவோ)  நீண்ட கதை சொல்லலாக  வளர்ந்து உலகின் மிகச்சிறந்த கட்டுமானத்தைப் பேசும் நாவல் தனது நேர்த்தியான கட்டுமானத்தை இழந்து நிற்கிறது.

இறுதியாக :

              நாவலை வாசித்து முடித்த பின் மீண்டும் ஒருமுறையேனும் தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று அதனை உயரத்தைப் பார்த்து ஒவ்வொரு சிலையாக ரசிக்க வேண்டும், சோழர்களின் காவல் தெய்வம் நிசும்ப சூதனி கோவிலுக்குச் சென்று வழிப்பட வேண்டும் எனத் தோன்றியது. இதுவரை தஞ்சை பிரகதீஸ்வரரைத் தரிசனம் செய்ததற்கும் நாவலை வாசித்தபின் செய்வதற்கும் நிச்சயம் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கும் ஆனால் பலரும் கூறியதால் உடையார் நாவல் மீது ஒரு பிரமிப்பு, மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.. நாவலை வாசிக்காமலே இருந்திருந்தால் அந்த பிரமிப்பு, எதிர்பார்ப்பு அப்படியே மனதிலிருந்திருக்கும்.

                              சோழம்!!    சோழம்!!   சோழம்!!

6 comments:

  1. வாழ்த்துக்கள் முதலில்!! காரணம் முதன்முறையாக உடையார் நாவல் பற்றிய விமர்சனத்தில் பொன்னியின் செல்வன் நாவல் பற்றிச் சொல்லாததற்கு. நூலின் முதன்மை நோக்கம் இராசராச சோழன் காலம் பற்றியும் குறிப்பாகத் தஞ்சை பெரிய கோவில் கட்ட பட்ட விதம் அதன் பெருமை மற்றும் தமிழர்களின் பெருமை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளச் செய்வது. அதில் பாலகுமாரன் வெற்றி பெற்றிருந்தாலும் நாவல் வாசித்து முழு திருப்தி அடையாமல் போவதற்குக் காரணம் அவர் கொஞ்சம் நீட்டி முழங்குவதுதான். உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் இவ்வளவு நீளம் தேவையேயில்லை. பஞ்சவன் மாதேவி, இராசராசனோடு அன்னியோன்மையாகவே இருந்திருக்கலாம். இராஜேந்திரனுக்கும் அவர்களைப் பிடித்திருக்கலாம் பள்ளிப்படை அமைத்திருக்கலாம். அதை ஒன்றை வைத்துக் கொண்டு அந்த தேவரடியார்கள் அனைவரையும் மட்டும் உடையாரில் கதையின் நாயகிகள் போல் அமைத்திருப்பதைப் படிக்கத்தான் மனம் வரவில்லை. பாலகுமாரன், வரலாற்றைச் சொல்லி, நம் பண்பாட்டைக் காட்டி, பற்பல சாதனைகளை, நெறிமுறைகளை விளக்கி நம் உணர்ச்சிகளைத் தூண்டிவிட முயற்சி செய்துள்ளார் அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றுள்ளார்.

    ReplyDelete
  2. Nicely written! May be I should read this before going தஞ்சை பெரிய கோவில்

    ReplyDelete
  3. Thirunavukkarasu Sivagnanam13 May 2021 at 14:30

    Aazhamana nutpamana paarvai arumai.

    ReplyDelete
  4. வித்தியாசமான சரித்திர நாவல்.எந்த தீடிர் திருப்பங்களோ மிகையான கற்பனைகளோ இல்லாமல் யதார்த்துக்கு மிக அருகில்...வெகு நிச்சயமாய் ராஜராஜரையோ பஞ்சவன்மாதேவியையோ ரொம்ப காலத்துக்கு மறக்க முடியாது. படித்ததும் ராஜராஜன் நடமாடிய இடங்களுக்கு போக வேண்டும் என்ற ஆசையை அடக்க முடிய வில்லை. அதுவும் பஞ்சவன்மாதேவி பள்ளி படைக்கோவிலுக்கு கண்டிப்பாக போய் விளக்கேற்ற வேண்டும் என தணியாத தாகம்...சரித்திர நாவல்கள் என்னதான் வரலாற்றை கொஞ்சம் பேசினாலும் நாவலுக்கு உயிர் நாடியாய் இருப்பது கதை நாயகனின் காதல்தான். உடையார் காதல் கதை இல்லையென்றாலும் கணவன் மனைவி உறவின் சிறப்பை நாயகனை வைத்து மட்டுமில்லாமல் சிறிய கதாபாத்திரங்களின் மூலமும் வெகு அழகாய் காட்டியிருப்பது பாலகுமாரனால் மட்டுமே சாத்தியம்...தஞ்சை பெரிய கோயிலை ஏற்கனவே பார்த்திருந்தாலும் இன்னொரு முறை போய் காண வேண்டும். இந்த முறை ரசிக்கும் தன்மை நிச்சயமாய் மாறியிருக்கும்..

    ReplyDelete
  5. அருமை. பொறுப்புடன் கூடிய தங்கள் ஆய்வு ஞானத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete