Saturday, 25 September 2021

குருதிப்புனல்

 

                          குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

         

       சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவல்களை வாசிக்கும் வரிசையில் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை வாங்கினேன். 1968'ல் கீழவெண்மணி என்ற கிராமத்தில் நடந்த கொடூர சம்பவத்தை உள்வாங்கி அவர் எழுதிய நாவல். 1977'ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றாலும் சில விமர்சனங்களையும் ஒருங்கே பெற்ற நாவல் குருதிப்புனல்.

                 டெல்லியில் ஒன்றாக இருந்தது விட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில், தஞ்சை பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்துவிட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி சிவா வருவதுடன் தொடங்குகிறது நாவல். கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடுவுக்கும், காம்ரேட் ராமையாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை. கண்ணையா நாயுடுவின் வயலில் வேலை செய்யும் தொழிலாளிகளின் கூலியை உயர்த்தி தர ராமையா போராடுகிறார். ராமையாவின் வீட்டில் தங்கியிருந்து கண்ணையா நாயுடுவின் வைப்பாட்டியின் மகன் வடிவேலு நடத்தும் டீக்கடையில் சாப்பிட்டு வருகிறான் கோபால். கோபாலைச் சந்திக்கும் சிவா அவனுடன் சிலநாட்கள் தங்கிச் செல்ல நினைக்கிறான். வடிவேலுவின் மீதுள்ள கோபத்தினால் அவனுடைய டீக்கடையை காலி செய்யும் முயற்சிகளைக் கண்ணையா நாயுடு முன்னெடுக்க அவனுக்காக அவரிடம் பேசுகிறான் கோபால். 

                கண்ணையா நாயுடு அவனின் சமாதான முயற்சிகளை ஏற்றக்கொள்ளாததால் கோபத்தில் அவரின் ஆண்மை பற்றிப் பேசிவிடுகிறான் கோபால். அதனால் மிகுந்த கோபம் கொள்ளுபவர், கோபாலை ஆள் வைத்து அடிக்கிறார். பாப்பாத்தி என்னும் ஹரிஜன பெண்ணை கடத்தி பழியை கோபால் மீது சுமத்துகிறார். பாப்பாத்தியைப் பற்றித் துப்பறிய பங்கஜத்தம்மாள் வீட்டிற்குச் செல்லும் பொழுது ஏற்படும் தகராற்றில் கண்ணையா நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படப் பழியை ராமையா மீது போட்டு கைது செய்கிறது போலீஸ். நாயுடு தன் வயலில் வேலை செய்ய வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வர அதில் கோபம் கொண்டு பழனி என்பவன் அவரை அடித்து விடுகிறான். உயர்சாதியில் பிறந்த தன்னை ஒரு பறையன் அடித்து விட்டானே என்று வெறிகொள்ளும் நாயுடு, போலிஸ் துணையோடு பெண்களும், குழந்தைகளும் நிரம்பியிருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறான். அந்த சம்பவம் கோபாலை வன்முறை பாதையை நோக்கிச் செல்லவைக்கிறது. 

                  பொத்தாம் பொதுவாக வெண்மணி படுகொலைகள் கூலியை உயர்த்திக் கேட்டதால் நடந்த நிகழ்வாகச் சொல்லப்பட்டாலும் என்னால் அவ்வாறு பார்க்க முடியவில்லை. அதற்கான மூலகாரணங்கள், அங்கே வாழ்ந்த மக்களிடம் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒற்றுமையை ஏற்படுத்தியது, அவர்கள் பண்ணைகளை எதிர்த்து கேள்வி கேட்டது, அவர்களுக்கு எதிராக ஒன்றாக அணிதிரண்டது மற்றும் அரசியில் விழிப்புணர்வுகளும்தான் பண்ணைக்குக் கோபத்தையும் கூடவே பயத்தையும் தந்திருக்க வேண்டும் அதன் எதிர்விளைவே இந்தப் படுகொலைகள். 

                            நாவலின் கரு பலராலும் பாராட்டப்பட்டாலும், ஆசிரியர் சேர்த்துள்ள உளவியல் காரணத்திற்காக விமர்சிக்கவும் பட்டது. ஆண்மைக் குறைவு என்ற காரணத்தை முன்னிலைப் படுத்தியிருப்பதால், சில சமயம் வாசிப்பவர்களுக்கு ஆண்டவன் தந்த குறையைத் திருப்பி திருப்பி சொல்லிச் சீண்டியதால், கடுப்பில் தீ வைத்து விட்டார் என்றும் தோன்றலாம் அது ஆசிரியரின் எண்ணம் இல்லையெனினும். டெல்லியிலிருந்து அந்த கிராமத்திற்கு வரும் இரு  படித்த இளைஞர்களின் கண்களின் வழியாகப் பெரும்பகுதி பிரச்சினைகள் பார்க்கப்படுவது இந்திரா பார்த்தசாரதி வசதியாக இருக்கிறது. காரணம் அவரும் அதே பின்னணியில் உள்ளவரென்பதால். நாம் செல்ல வேண்டிய பாதைகள் இன்னும் அதிகம் இருப்பினும், நாம் கடந்து வந்த பாதைகளை அறிய வாசிக்க வேண்டிய நாவல்தான்.

இறுதியாக :

        கீழவெண்மணியில் 44 தலித்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குருதிப்புனல் தவிரச் சோலை சுந்தரப்பெருமாளின் "செந்நெல்", பாட்டாளி எழுதிய "கீழைத்தீ" ஆகிய நாவல்களும் வந்துள்ளது. மேலும் குருதிப்புனல் நாவலைத் தழுவி ராஜேஷ், பூர்ணிமா நடிப்பில் 1983'ஆம் ஆண்டு "கண் சிவந்தால் மண்  சிவக்கும்" என்ற திரைப்படமாகவும் வந்துள்ளது.

4 comments: