பயணங்கள் தொடங்கியது...
வாட்ஸாப் குழுவில் இந்த மிதிவண்டி பயணத்தைப் பற்றிய தகவல் வந்த பொழுது அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவேயில்லை. நாம் எப்படியும் போகப் போவதில்லை. போகாத பயணத்தைப் பற்றி ஏன் யோசிக்க வேண்டும்?. ஒருநாள் சிவராமன் சாரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது 400 கிலோமீட்டர்ஸ் ரைட் போக வேண்டும், கூட சேர்ந்து போகச் ஒருசிலரிடம் கேட்டிருப்பதாகக் கூறினார்கள். நானும் சிலரின் பெயர்களைச் சிபாரிசு செய்தேன். சில நாட்கள் கழித்து சிவராமன் சார், யாரும் செட் ஆகவில்லை, நாம் சேர்ந்து போகலாமா என்று கேட்டார்கள். நானூறு கிலோமீட்டரா?. நானா?? அதிர்ச்சி அடையாத குறைதான்.. இதுவரை 135 கிலோமீட்டர் தான் ஒருநாளின் அதிகபட்ச தூரமே. என்னால் எப்படி?
சில மாற்றங்கள் நம்மை அறியாமலே எப்படியோ, எங்கேயோ நடந்துவிடுகிறது. முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று தலைதூக்கிய நப்பாசை, ஓகே சொல்ல வைத்துவிட்டது. பயணத்திட்டத்தை வகுத்து சிவராமன் சாருக்கும், ஜெயசுதனுக்கும் அனுப்பி வைத்தேன். இரண்டாம் நாள் வழியில் பல ஏற்ற இறக்கச் சாலைகள் இருப்பதால் முதல்நாளில் முடிந்த வரை நிறையத் தூரம் ஓட்டும் வகையிலும், சிவராம் சாரின் ஆசைக்காக மதிய உணவு பாவூர்சத்திரம் சந்தை கடையில் சாப்பிடும் படியும் அமைத்தேன். இதனிடையே கங்காதரன் சாரும் பயணத்தில் கலந்து கொள்ள மிகவும் ஆசைப்பட்டார்கள், ஆனால் சில காரணங்களால் கடைசியில் நேரத்தில் வரமுடியாமல் போனாலும் பயணத்திற்கான பலச் சிறந்த ஆலோசனைகளை அளித்தார்கள்.
திட்டமிட்ட நேரத்திற்கு ஒரு நிமிடம் முன்னாலே பயணம் அருமையாகத் தொடங்கிய பயணத்தை வருணபகவான் சில இடங்களில் இளைப்பாற வைத்தார். கங்காதரன் சாரும் போன் செய்து பயணம் வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். கல்லிடைக்குறிச்சி வழியாக முதலில் மணிமுத்தாறு அணையைச் சென்றடைந்தோம். அங்கிருந்து அணையை ஒட்டியே பயணம் செய்து பாபநாசம் சென்றோம். பாபநாசத்திலிருந்து தொடங்கிய பயணத்தில் கடையத்தைத் தாண்டி, பாவூர்சத்திரம் வரும் வரை அது ரோடு அல்ல.. ரோடு மாதிரி அதனால் ரோடு வண்டி வைத்திருந்த நம்ம ஜெயசுதன் படாதபாடு பட்டுவிட்டார். பயணத்தின் ஒரு (முக்கிய) நோக்கமான சந்தை கடை மட்டன் சாப்பாட்டை ஒரு பிடிப் பிடித்தோம். உண்ட மயக்கம் மற்றும் வருண பகவானின் ஜாலத்தால் ஒரு மணித்துளிகள் ஓய்வு எடுத்தோம். ஓய்வு எங்கப்பா எடுத்தோம் ஜூஸ் குடிக்க நடக்க வைத்து விட்டீர்களே என்பார் சுதன்.
மட்டன் சாப்பாட்டைச் சாப்பிட்ட பின் நம்ம சிவராமன் சாரின் வண்டி எங்கேயும் நிற்கவே மாட்டேங்குது. மட்டன் சாப்பாட்டுக்கு அவ்வளவு பவரா?.. எப்படி இப்படிப் போகிறது??? அப்புறம்தான் தெரிந்தது வண்டியில் பிரேக் வேலை செய்யவில்லை. இந்த சமதள ரோட்டிலே இப்படியெனில் நாளைக்குத் தென்மலையில், சாரை பிடிக்கவே முடியாதே. இது சரிவராது எனச் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைகளை வழிநெடுக தேடினோம். பலரிடமும் விசாரித்தோம், சைக்கிளில் வந்த ரெண்டு (ரொம்ப) சின்ன பசங்களையும் விடவில்லை. அவர்கள், பக்கத்தில் ஒரு கடையிருப்பதாக சிவராமன் சாரை கூட்டிச்சென்றார்கள். அங்கே போய் கடைக்காரரைப் பார்த்து இந்த சைக்கிளுக்குக் காற்று அடைக்க வேண்டுமென்று சாரின் சைக்கிளைக் காட்ட... முடியலயப்பா😂.. பாவூர்சத்திரத்தில் தொடங்கிய பயணம் சுரண்டை வழியாக சங்கரன்கோவிலைச் சென்றடைந்தது. சங்கரன்கோவில் கோபுர தரிசனம் கோடி புண்ணியமோ இல்லையோ எங்களுக்குச் சைக்கிள் கடை கிடைத்து விட்டது. எப்பா கடைசியில் ஒருவழியாக சிவராமன் சாரின் வேகத்தைக் கட்டுப்படுத்தினோம்.
சூரியபகவானை பணியைச் செய்யவிடாமல் தடுத்த சூல் கொண்ட மேகங்களால் எங்களது பயணம் சாரலில் நனைந்த படியே இனிமையாக நகர்ந்தது. சங்கரன்கோவிலிருந்து, புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி வழியாகக் குற்றாலத்தைச் சென்றடைந்தோம். எந்தொரு பயணமாக இருப்பினும் நம்மை வரவேற்க இன்முகத்துடன் ஒருவர் இருந்தால் அந்த பயணம் தந்த அலுப்பும், சலிப்பும் அப்படியே கரைந்து போகும். நண்பன் பாபுவேலன் என்றும் போல் அன்றும் தந்த உபசரிப்பால் உள்ளம் குளிர்ந்து போனோம். வெள்ளியை உருக்கி விட்டதுபோல் பொங்கி விழுந்த அருவியைத் தூரத்தில் நின்றுதான் ரசிக்க முடிந்தது. வெள்ளம் அதிகமானதால் குளிக்கத் தடை. தடை அதை உடை என்றெல்லாம் முயலாமல் நமக்கு எப்பவும் போல பாத்ரூம் குளியல்தான் சரியெனக் குளித்து முடித்தோம். அதற்குள் எங்கள் மிதிவண்டியையெல்லாம் அழகாக, பத்திரமாக எடுத்து வைத்திருந்தனர் நண்பனின் குடும்பத்தினர். கொசுவின் ரீங்காரம் தாலாட்டாக எனக்குக் கேட்க நான் நித்திரையில் ஆழ்ந்து போனேன். காலையில் தான் தெரிந்தது சுதனும், சிவராமன் சாரும் கொசு தாலாட்டு பாடினால் தூங்க மாட்டார்களாம். அப்போ யார் பாடினால் தூங்குவார்கள்??..😛 இன்னும் எனக்குப் புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் கருத்துரை பகுதியில் பதிவிடுங்கள்.
ஆதவன் தன் பணியை ஆரம்பிப்பதற்குள் மீண்டும் எங்களது பயணத்தை ஆரம்பித்தோம். அதிகாலையிலே தேநீரெல்லாம் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள் பாபுவேலன் குடும்பத்தினர். அந்த அன்பு தந்த உற்சாகம் தென்மலையினை எளிதாகக் கடக்க உதவியது. பசுமை போர்த்திய மலைகள், மலை மேட்டில் காலூன்றப் பார்த்த மேகங்களை ரசித்த படியே, இதமான தென்றல் ஆரத்தழுவ எங்கள் பயணம் தென்மலை அணையைச் சென்றடைந்தது. மலைப்பாதையின் ஏற்ற இறக்கங்களைக் கடந்து தொடர்ந்த பயணத்தில் திடீரென உக்கிரமாக நுழைந்தான் சூரியன். அவன் எங்களிடமிருந்து உறிஞ்சிய நீரையெல்லாம் உடம்பில் மீட்டெடுக்க லெமன் வாட்டர், இளநீர், ஜூஸ் எனப் போட்டிப் போட்டுக்கொண்டு குடித்து அவனுக்குச் சவால் விட்டுக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம். சில இடங்களில் கொஞ்சம் வழி தடுமாறக் கூகிளை உதவிக்கு அழைத்துக்கொண்டோம்.
இறுதியாக:
பலர் இதைவிடப் பெரிய மிதிவண்டி பயணங்களை மேற்கொண்டிருக்கலாம். எனினும் முதல் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள் தான் நம்மை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். அந்த முதல் பயணத்தைப் பற்றியே அதிகம் சிகாலிப்பார்கள். பாவூர்சத்திரம் முதல் தென்காசி வரும் வரையில் வழிநெடுகிலும் பலரின் அன்பான விசாரிப்புக்கும், ஆச்சியத்துக்கும் உள்ளானோம். என்னுடன் பயணித்த, நாங்கள் வழியெங்கும் சந்தித்த மனிதர்களால் மீண்டும் ஒரு பயணம் எப்பொழுது என மனம் ஏங்குகிறது😍. பயணங்கள் தொடங்கியது......
யதார்த்தமான பதிவு அருமையான பகிர்வு.. ❤
ReplyDeleteawsm . next time don't forget to pick me up
ReplyDeleteஅருமை.. உங்களுடன் நானும் பயணித்த உணர்வு..
ReplyDeleteஅருமையான பயணம்... தொடர்ந்து பயணிப்போம்
ReplyDeleteஇன்னும் இதை விட அதிகமா எதிர்பார்க்கிறேன் ..
ReplyDeleteஉங்களின் பயணக்கட்டுரை அருமை நண்பரே.. நீண்ட பயணத்தைத் தொடங்குபவர்களுக்கு ஒரு உத்வேகத்தைத் தரும் வகையில் உள்ளது. சிறப்பு. இன்னும் பயணியுங்கள் 👍.
ReplyDeleteசொந்த கதையில் அடுத்து எந்த தேவதையோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு இது அதிர்ச்சிதான்😀
Very nice and inspiring bro 😎 keep up the good work and best wishes for more 👍
ReplyDeleteFantabulous 👏👏👏👏
ReplyDelete💪💪💪💪🌺🌸💐💕
ReplyDeleteArumai thalaivarai ..........
ReplyDeleteThanks for sharing your experience 😊🙂
அழகான இயல்பான நடை ..யதார்த்த சொல்லாட்சி. எந்த சிறு செய்தியையும் சுவையாக சுகமாக சொல்ல முடியும் என்பதற்கு உங்களது சொல் ஆளுமை முறையே சான்று. சைக்கிளை வைத்துக் கொண்டு நகைச்சுவை யை வெளியிட்ட முறை மகிழ்வுக்குரியது நண்பர்களை வெளிப் படுத்திய முறை நன்று வாழ்த்துக்கள் வளர்க வாழ்க தொடர்க...
ReplyDeleteஅசத்தலான பயணம், அழகான நடை… ஒன்ஸ் மோர் போலாமே
ReplyDeleteSuper ride and excellent narrations too..
ReplyDelete