Wednesday, 11 September 2019

கோவேறு கழுதைகள்



                              கோவேறு கழுதைகள் - இமயம்


சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்பு இமயம் எழுதிய நாவல். அவரின் முதல் நாவல். படித்த, இன்றைய நகரத்து மக்களின் பார்வைகளுக்கு எட்டாத ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் இலக்கியம். கொஞ்சம் பொறுமை தேவை நாவலை வாசித்து அதனுடன் பயணிக்க. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை என்பதை விட ஒதுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை சூழ்நிலை எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும். நான் அவ்வாறு சொல்லக் காரணம் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட காலணிக்கும் அப்பால்,
காலணிவாசிகளாலும் ஒடுக்கப்படும் 
வண்ணான்களான சவுரி, ஆரோக்கியம் தம்பதியினரின் வாழ்வின் சில பக்கங்கள்தான் கோவேறு கழுதைகள் நாவல். கதையின் நாயகியான ஆரோக்கியமே நாவல் முழுவதும் நிறைந்திருக்கிறாள். 

அவர்களுக்கு மிகவும் இயல்பாகி விட்ட, அவர்களின் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள்,  இந்த காலகட்டத்தில் நாவலை வாசிக்கும் யாவரையும் அதிரவைக்கும். சாவு, சடங்கு, திருமணம், பேறுகாலம் என காலணி மக்களின் ஒவ்வொரு நிகழ்விலும் அவர்கள் நிறைந்து இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியமோ (சோறு, தானியம்....) அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மிகவும் சொற்பமாக உள்ளது. பகலில், ஊரில் உள்ள வீடுகளுக்குச் சென்று அழுக்குத் துணிகளை வாங்கி வந்து வண்ணான் குட்டையில் துவைக்கிறார்கள் (தொரப்பாட்டை). இரவில் அதே வீடுகளுக்குச் சென்று, மிச்சம் மீதி உள்ள சாப்பாட்டை வாங்கிவந்து சாப்பிடுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்த வாழ்க்கை அவர்களுக்கு இயல்பாகிப்போனதும், இதிலிருந்து விலகி வேறு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு கூட  தோன்றாத அளவுக்கு இந்த அடிமைத் தன்மை அவர்கள் வாழ்வாகவே மாறியிருப்பதுமான அவலம்தான் நாவலின் அடிநாதம். 

ஆரோக்கியம், சவரி, மேரி, சகாயம்  ஆகியோரின் பாத்திரங்கள் நம் கண்முன்னே நிற்கிறது. அதுவும் ஆரோக்கியம் அடிக்கடி சொல்லும் "வண்ணாத்தி மவ வந்திருக்கிறேன் சாமி",  "இந்த வண்ணாத்தி மகளை மறந்திடாதீர்கள் சாமி"  வார்த்தைகள் நாவலைப் படித்து முடித்த பின்பும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தோனியார் கோவிலுக்குச் செல்ல கொஞ்சம் பணம் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் உச்சக்கட்ட லட்சியம். மேரி, பாலியல்ரீதியான துன்பம் அனுபவித்து, அதனை ஆரோக்கியம் மட்டும் மேரி அணுகும் முறையைப் படிக்கும் போதே மனம் கசிகிறது. ஆரோக்கியம் தன்னுடைய இயலாமையை நினைத்து எப்பொழுதும் அழுது கொண்டே இருப்பது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் அவர்களின் நிலைமை அதனை நியாயப்படுத்தவும் செய்கிறது. 

சவரி சின்னப் பிள்ளையாக இருந்தபோது 'ஒலவத்துல சண்ட ஆரம்பிச்சிக்கிச்சி' என்று மீசை முளைக்காத, படிக்கத் தெரியாதவர்களையெல்லாம் இழுத்துப் போனார்கள். அவன் எப்போதாவது உலகச் சண்டை பற்றி நினைப்பான். 'இந்த ஊருக்கு வெளுக்க ஆள் இல்லாமல  பூடுமே!' என்று வருந்துவான். இந்த வரிகளைப் படிக்கும் போது சவரியின் அப்பாவித்தனத்தை நினைத்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. 

வேலை எதுவும் செய்யாமல் மினுக்கிக் கொண்டு இருக்கும் மருமகள் சகாயத்தை ஆரோக்கியத்துக்குப் பிடிக்கும். சமயம் கிடைக்கும் போது எல்லாம் சகாயத்தின் தோலின் நிறம், வடிவம், முடி  பற்றியெல்லாம் ஊராரிடம் பெருமையாகச் சொல்லுவாள். ஆனால் தனக்குப் பிடித்திருக்கும் விசயம் சகாயத்திற்க்குத் தெரிந்துவிடுமோ அஞ்சியே சில நேரம் அவளிடம் சண்டை போடுவாள். இந்த வரிகள் எனக்குத் தெரிந்த ஒருவரை ஞாபகம் வரச் செய்தது. சிறுவயதில் நானும் இவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்திருந்தாலும் நிகழ்வுகள் அதிகம் ஞாபகம் இல்லை. 


இறுதியாக:

பொதுவாக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை கதையின் நாயகர்களாக நாவல்களில் முடிவிலோ அல்லது இடையிலோ  அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தீர்வாக ஆசிரியர் தன் புரட்சிக் கருத்துக்களைப் புகுத்தி விடுவார். அதுவே அரசியலாக்கப் பட்டுவிடும். அவ்வாறு ஏதுவும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக  நாவலை முடித்து இருப்பது மாறுபட்டு உள்ளது. எனினும் அவர்களது பிள்ளைகள் இந்த வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் வழியைத் தாமே அமைத்துக் கொள்வதாகச் சித்தரித்திருந்தது இந்த அவலங்களுக்கு நேர்மையான ஒரு தீர்வை முன்வைப்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். 


Tuesday, 27 August 2019

ரோமாபுரிப் பாண்டியன்



                  
                              ரோமாபுரிப் பாண்டியன் 



   இடையிடையே கொஞ்சம் எளிமையான நடை மற்றும் கதைக் களங்கள் கொண்ட  நாவல்களையும் வாசிக்கலாம் எனச் சிலவற்றை வாங்கினேன் அதில் ஒன்று கருணாநிதி எழுதிய ரோமாபுரிப் பாண்டியன். வெவ்வேறு எழுத்தாளர்களின் பாணி மற்றும் கருத்து நடைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் ஒரு காரணம். கருணாநிதி எழுதிய ஏதாவது ஒரு நாவலை மட்டும் முதலில் வாங்கலாம் என முடிவு செய்தேன் ஆனால் எதை வாங்குவது என்பதில்தான் குழப்பம் பின்பு எனது மாமாவின் சிபாரிசினால் ரோமாபுரிப் பாண்டியன் நாவலைத் தேர்ந்தெடுத்தேன். 


மற்றுமொரு சரித்திர கதை... கி.மு 20-ஆம் ஆண்டில் நடப்பதாகக் கதை உள்ளது. கரிகால்சோழனும், பெருவழுதிப்பாண்டியனும் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். கரிகாலனால் தோற்கடிக்கப் பட்ட குறுநில மன்னனான இளங்கோவேள் அவனை வீழ்த்த செய்யும் முயற்சியை முறியடிக்கிறான் பாண்டிய வீரன் செழியன். காயம்பட்ட செழியனை இளங்கோவேளின் ஆட்கள் சிறைப்படுத்த அவனை மீட்கப் புலவர் காரிக்கண்ணாரின் மகள் முத்துநகை ஆண் வேடம் அணிந்து புறப்படுகிறாள்.

     மாறுவேடத்தில் இருக்கும் இளங்கோவேளிடம், முத்துநகை காதல் வசப்படுகிறாள். சிறையில் இருக்கும் செழியன்,  இளங்கோவேளின் தங்கை தாமரைதான் முன்பு தனக்காகப் பார்த்த பெண் என்பதனை தெரிந்து கொண்டு அவள் மீது ஆசைப் படுகிறான். ஆண் வேடத்தில் இருக்கும் முத்துநகையிடம் தாமரை மயங்குகிறாள். ஒரு கட்டத்தில் இளங்கோவேளின் மனைவியே கரிகாலனைக் கொல்ல முயற்சி செய்ய பல குழப்பங்களுக்கு இடையே இளங்கோவேள் முத்து நகையால் கொலை செய்யப் படுகிறான். 

     இதுவரை கொஞ்சம் சுவாரசியமாகச் சென்ற கதை தடம்புரள்கிறது. தாமரை மீது பாண்டிய இளவரசன் இளம்பெருவழுதியின் காதல்... செழியனின் ரோமாபுரிப் பயணம்...  அங்கு உள்ள ஜூனோ... அவளைப் பற்றிய ரகசியம் என. இளங்கோவேளின் பழிவாங்கும் படலத்தை  மட்டுமே இன்னும் கொஞ்சம் சுவாரசிய படுத்தி நீட்டி எழுதியிருந்தால்,  ஒரு நல்ல நாவல் படித்த உணர்வைத் தந்திருக்கலாம். என்ன ரோமாபுரிப் பாண்டியன் கிடைத்திருக்க மாட்டான்.  

     பிறப்பின் ரகசியங்களே பொதுவாகச் சரித்திர கதைகளின் மூலமாக உள்ளது. இதிலும் அது இருந்தாலும்... அது சொல்லப்பட்ட விதம் பெரிய உணர்வுகளை ஏற்படுத்தவில்லை. ரோமாபுரிப் பாண்டியன் என்னை ரொம்பக் கவராமல் போனதற்குக் காரணம், கொஞ்சக் காலமாக நான் யதார்த்தமான நாவல்களுக்கு மாறி விட்டது கூட இருக்கலாம். இந்த நாவலில்  ஒரு சதவீதம்தான் வரலாறு  மீதியெல்லாம் கற்பனை என நினைக்கிறேன். 


இறுதியாக:

நாவலாசிரியர் கருணாநிதி, அந்நிய மொழியைச் சிலர் புகுத்த நினைப்பதைத் தடுத்துப் போராடுவது. சுயாட்சி, கூட்டாட்சி தத்துவங்கள், பகுத்தறிவு தத்துவங்கள் போன்ற தன்னுடைய கருத்துக்களையும் நாவலில் அழகாக ஆங்காங்கே அள்ளி தெளித்துவிட்டார்.   மேலும் தளபதி நெடுமாறன், மன்னருக்குப் பின் அவரது மகனைத் தள்ளிவிட்டு தான்தான் அரியணையில் ஏற வேண்டும் என சில வேலைகளைச் செய்கிறான்.. அது யாரை மனதில் வைத்து எழுதப்பட்டதோ....😜


Thursday, 8 August 2019

கடல்புரத்தில்



                            கடல்புரத்தில் - வண்ணநிலவன்




       கதைக்களம் மணப்பாடு என்று
தெரிந்தவுடன் இந்த நாவலை வாங்கிவிட்டேன். நமக்குக் கொஞ்சம் பரிட்சியமான  இடம்  என்பதால். இதுவும் சிறிய நாவல்தான். கதையில் வரும் ஊர்களான உவரி, உடன்குடி, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் என எல்லாம் நமக்கு மிகவும் தெரிந்த பழகிய இடங்களாக இருப்பது ஒருவிதமான நெருக்கத்தை நாவல் வாசிக்கும்போது கொடுக்கிறது. மீனவ குடும்பங்களின் வாழ்க்கை அந்த வட்டார மொழியில் சொல்லப்பட்டுள்ளது.

மிக்கேல் குருஸினை அவரது மகன் செபஸ்தி, அவரின் வல்லம் மற்றும் வீட்டை விற்று விட்டு, ஆசிரியர் வேலை பார்க்கும் ஊரில் தன்னுடன் வந்தது இருக்குமாறு அழைக்கிறான். குருசுக்கு அதில் விருப்பம் இல்லை கடைசிவரை தன் வல்லத்தை விடப் போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறான். கடைசி மகள் பிலோமியோ தன் தந்தைக்குப் பிடிக்காத லாஞ்சிகாரர் ஒருவரின் மகன் சாமிதாஸை காதலிக்கிறாள். தான் விரும்பும் சாமிதாஸ்வுடன் தனக்குத் திருமணம் நடக்க வாய்ப்பில்லை எனத்  தெரிந்தும் அவன் மீது மாறாத அன்பு கொண்டு ஒரு கட்டத்தில் தன்னையே இழந்தாலும்,  பின்பு அவனின் பலவினங்களை தன் தோழி ரஞ்சியின் உதவியினால் யதார்த்தமாக ஏற்றக் கொள்கிறாள். தோழி ரஞ்சி மற்றும் அவளது அண்ணன் செபஸ்தி  காதலும் நிறைவேறவில்லை அந்த காரணம் கதையில் சொல்லப்படவும் இல்லை. அந்த ஊரில் உள்ள வாத்திக்கும், தன் தாய் மாரியம்மைக்கும்  இடையேயான நட்பினால்  பிலோமி அந்த வாத்தியை வெறுக்கிறாள். ஆனால் குடிபோதையில் தடுக்கிவிழுந்து தாய் உயிரிழக்க, ஒரு கட்டத்தில்  மன உளைச்சலில் இருக்கும் பிலோமிக்கு அந்த வாத்தியுடன் நட்பு ஏற்படுகிறது. கதையின் இறுதியில் பிலோமி நாளை வாத்தியின் வீட்டுக்கே போய்விடப் போகிறாள் என்ற வரிகள், இருவருக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதை நமது ஊகத்திற்கே ஆசிரியர் விட்டுவிடுகிறார். 

நாவலில் கடற்கரை கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த தொழில் முறை சார்ந்த மாற்றத்தின்  (வல்லம் - லாஞ்ச்)  விளைவுகள் ஏற்படுத்திய பாதிப்புகள், உரசல்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கதாபாத்திரங்கள் பேசும் மொழியும் அவர்களின் இயல்புக்கு ஏற்ப உரையாடலாக உள்ளது. மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையே ஆன பந்தம், வலத்தின் மீது அவர்களுக்கு உள்ள பாசம்  என அவர்களின் வாழ்க்கையைக் கண் முன்னே காட்டுகிறார். ஒரு சமயத்தில் தன் மனைவியைப் பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றொரு சமயம் அவளை நினைத்து பெருமை கொள்கிறான். இந்த உண்மைக்கு அருகிலான சித்தரிப்பு நாவலுக்கும் நமக்கிடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

எனக்கு நாவலில் சில நெருடல்களும் தோன்றியது... மிக்கேலின் நண்பன் ஐசக் தன் மனைவியை விரட்டி விட்டு பிலோமியை அடைய நினைப்பது, ஒரு சூழ்நிலையில் மிக்கேலிடம் கையாளாக இருக்கும் சிலுவையடியான் அவள் மீது ஆசைப் படுவது. மேலும் பிலோமிக்கு தான் வெறுக்கும் வாத்தியுடன் நெருக்கமான நட்பு ஏற்படச் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு மிகவும் அழுத்தமானதாக  இல்லை. ஆண்களுக்கு உள்மனதில் தோன்றும் சலாப ஆசைகளைத்தான் ஆசிரியர் வெளிச்சம் படுத்தியுள்ளார் எனவும் சிலரின் கருத்து உள்ளது. 

இறுதியாக :

     இந்த நாவல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செந்தாமரை, சோ, லிவிங்ஸ்டன் போன்றவர்கள் நடித்து தொடராக வந்துள்ளது. எனக்கும் பார்த்த ஞாபகம் கொஞ்சம் உள்ளது. மீண்டும் அதைப் பார்க்க வீடியோக்களை தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை யாருக்காவது கிடைத்தால் தெரியப்படுத்தவும்.